காஞ்சிபுரம் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்று பார்ப்பனர்கள் ‘குடுமி’பிடிச் சண்டை போட்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு இலண்டனில் உள்ள ‘பிரிவீ கவுன்சில்’ வரை போனது. ஒரு வாரம் வடகலை நாமத்தையும் மறுவாரம் தென்கலை நாமத்தையும் மாற்றி மாற்றிப் போடுமாறு தீர்ப்பு வந்தது. இதே போல் திருவரங்கம் கோயில் யானைக்கும் பிரச்சினை வந்தது. யானைக்கு நாமத்தை மாற்றி மாற்றிப் போட்டதால் நெற்றிப் புண் உண்டாகி யானையே மரணமடைந்து விட்டது என்ற செய்தியும் உண்டு. இந்த ‘நாம’ப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை.

திருப்பதி ‘ஏழுமலை’யானுக்கும் இதே பிரச்சினைதான்! தென்கலை நாமம் (‘ஒய்’ எழுத்து), வடகலை நாமம் (‘யு’ எழுத்து). இரண்டுமே ஏழுமலையானுக்கு சாத்துவதுஇல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பொது அடையாளத்தை ‘நாமமாக’ போடுகிறார்கள். தமிழில் ‘ப’ எழுத்து வடிவத்தில் போடப்படுகிறது.

இந்த முடிவில் இப்போது மீண்டும் குழப்பம் வந்துள்ளதாம். கடந்த நவம்பர் 4ஆம் தேதி ஏழுமலையான் நெற்றியில் ‘வடகலை’ நாமத்தைச் சாற்றி விட்டார்கள். அப்படிப் போட்டவர் முதன்மை பார்ப்பன அர்ச்சகரான இரமண தீச்சலு.

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாட வந்த ‘ஜீயர்’ பார்ப்பனர்கள் இதை கண்டுபிடித்து, கோயில் நிர்வாகியிடம் புகார் தந்தனராம். இதைத் தொடர்ந்து இரமண தீச்சலுக்கு விளக்கம் கேட்டு நிர்வாகம் தாக்கீது அனுப்பியிருக்கிறது. ஏற்கெனவே இந்த தீச்சலுவின் மகன் ஒரு முறை ‘வடகலை’ நாமத்தை ‘ஏழுமலை’யானுக்கு போட்டதாக அவர் ‘அபிஷேக சேவை’ செய்வதற்கு 6 மாதம் தடைவிதிக்கப்பட்டதாம்.

ஏழுமலையான் வடகலைக்கு சொந்தமானவனா? தென்கலைக்கு சொந்தமானவனா? அல்லது இரண்டும் ‘பொதுவானவனா?’ என்ற பிரச்சினை இன்னும் முடியவில்லை. ஆனால், அவன் பார்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டவன் என்பது மட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் உறுதியாகிவிட்டது.

தூக்குமேடை நாடகத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா நாமத்தோடு வரும் பார்ப்பனரைப் பார்தது ‘இது என்னப்பா ‘சிங்கிள் ரெட்; டபுள் ஒயிட்’ என்று கேட்பார். அதற்கு அந்த பக்தன் இது ஏழுமலையான் திருப்பாதம் என்று பதில் சொல்வான். நடிகவேள் திருப்பிக் கேட்பார். ‘அப்படீன்னா அந்த ஏழுமலையான் நெற்றியில் இருக்கிறதே; இது யாருடைய பாதம்? என்னுடையதா?” என்று.

இப்படிச் சொன்னால் பக்தர்கள் உணர்வை புண்படுத்துவதாகக் கூப்பாடு போடுகிறவர்கள்; இப்போது ‘ஏழுமலையானையே’ கேலிக் குள்ளாக்கும் இந்தப் பார்ப்பனர்களைப் பற்றி என்ன கூறுவார்கள்?

Pin It