periyar 481

இந்நிகழ்ச்சியானது இதுவரை நம்மிடை நடைபெற்று வந்த கல்யாணம் - விவாகம் - தாராமுகூர்த்தம் என்னும் பெயரால் நடந்து வந்த நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் மாறான நிகழ்ச்சியேயாகும். இதுவரையிலும் நடந்து வந்த முறைகள் யாவும் மணமகன் சொன்னது போலக் காட்டுமிராண்டி முறைதான். அதையே பெரும்பாலான மக்கள் நடத்தி வருகின்றனர். அதை மாற்றி மானத்தோடு - பகுத்தறிவோடு, அறிவிற்கேற்ற முறையில் நடத்த வேண்டுமென்று தீர்மானித்தே இம்முறையினை ஏற்பாடு செய்தோம். பழைய முறை, விவாக முறை எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

திருமண முறை கல்யாண முறை, கணவன் - மனைவியாக வாழும் முறை தமிழனுக்கு இருந்தது கிடையாது. ஆணும், பெண்ணும் சம உரிமையோடு, நண்பர்களாக, காதலன் - காதலியாக வாழும் முறை தான் இருந்தது. இடையில் பார்ப்பான் வந்து புகுந்த பின்தான் தமிழன் அறிவு இழக்கவும், இதுபோன்ற முறைகள் பார்ப்பானால் புகுத்தப்பட்டது. நம் வாழ்க்கையில் பார்ப்பானுக்கு நிரந்தர அடிமையாக்க சூத்திரத்தன்மை எப்படிப் புகுத்தப்பட்டதோ அதேபோல, பெண்கள் ஆண்களுக்கு நிபந்தனையற்ற நிரந்தர அடிமைகளாக்க புகுத்தப்பட்டதே திருமண முறையாகும். அடுத்து அதன் பலன் என்னவென்றால் பகுத்தறிவுள்ள மனிதனை மடையனாக சிந்தனையற்றவனாக ஆக்க வேண்டுமென்பதற்காகவே இம்முறையானது புகுத்தப்பட்டு விட்டது. மூன்றாவதாக ஜாதி இழிவைப் பற்றி மனிதன் கவலைப்படாமல் பழைமையைக் காப்பாற்ற வேண்டுமென்கிற முறையில் புகுத்தப்பட்டதேயாகும். எவ்வளவு பெரிய பணக்காரன் மகளானாலும், அரசன் மகளானாலும், அவளை இன்னொருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தால் அவள் அவனுக்கு அடிமைதான். இதையெல்லாம் மாற்றியமைக்க வேண்டுமென்பதற்காக அறிவோடு அவசியத்திற்கு தேவையானவற்றைக் கொண்டு மனிதன் இழிவு நீங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டதே இம்முறையாகும்.

நான் கடவுள் மறுப்புக் கூறுவது மனிதனின் அறிவைத் தூய்மைப்படுத்தி அவனது அறிவைக் கொண்டு எதையும் சிந்திக்க வேண்டும். மனிதனின் அறிவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்கின்ற காரணத்திற்காகவே கூறுகின்றேன்.

இம்முறையில் இதுவரையில் பதினாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன என்றாலும், இதுவரை இருந்த அரசாங்கம் பார்ப்பன அரசாங்கமாகவும், பார்ப்பன அடிமை அரசாங்கமாகவும் இருந்ததனால் இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியற்றது என்று வைத்திருந்தது. இப்போது அமைந்திருக்கின்ற தமிழ்நாடு அரசானது பகுத்தறிவாளர் அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சியானதால், இதுவரை இம்முறையில் நடைபெற்ற திருமணங்களும், இப்போது நடைபெறும் திருமணங்களும், இனி நடக்க இருக்கும் திருமணங்களும் சட்டபடிச் செல்லுபடியாகும் என சட்டமியற்றி இருக்கிறது. இம்முறையில் திருமணம் செய்யும் நாம் முதலில் இவ்வரசுக்கு நம் நன்றியினையும், பாராட்டுதலையும் தெரிவிக்க வேண்டியது நம் கடமையாகும்.

நான் சொல்கிற விஷயங்களைப் பொறுமையாக இருந்து கவனியுங்கள். உங்கள் அறிவிற்கு, சிந்தனைக்குச் சரி என்று தோன்றுபவற்றை மட்டும் ஏற்று நடவுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒருவர் சொல்வதை இன்னொருவர் ஒப்புக் கொள்வது என்பது பகுத்தறிவாகாது. எனவே, நான் சொன்னதை உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்கு எது சரியென்று படுகின்றதோ அதனை ஏற்று அதன்படி நடந்து கொள்ள முயற்சியுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இத்திருமண முறை தமிழர்களான நமக்கு இல்லையென்று சொன்னேன். நண்பர்கள் சொன்னது போலப் பார்ப்பான் வந்த பின்தான் நமக்கு இம்முறையானது பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டு நம்மிடையே புகுத்தப்பட்டதாகும்.

நேற்று ஒரு புலவன் என்னிடம் பெருமையாகச் சொன்னான், "மற்றவனெல்லாம் இலக்கியத்தை வைத்துத் தான் இலக்கணம் செய்தான். ஆனால், தொல்காப்பியன் வாழ்க்கையை வைத்து இலக்கணத்தை அமைத்திருக்கின்றான். இது தொல்காப்பியனுக்குள்ள பெரும் சிறப்பாகும்" என எடுத்துக் கூறினான் அந்தத் தொல்காப்பியனே தமிழனுக்குத் திருமண முறை கிடையாது. பார்ப்பானுக்குத்தான் இம்முறை என்பதைப் பல சூத்திரங்கள் மூலம் விளக்கி இருக்கின்றார்.

"மறையோர் தேயத்து மன்றல் எட்டினும்" என்கின்ற சூத்திரத்தின் மூலம் பார்ப்பான், நாட்டிலுள்ள கல்யாண முறை எட்டு என்பதை விளக்கி இருக்கிறார். அடுத்து "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப" மேல் கூறிய முறைகளின்படி திருமணம் செய்து கொண்ட (பார்ப்பான்) மக்களிடையே ஒழுக்கக் கேடும், பொய்யும் அதிகமான பின் பார்ப்பான் சடங்குகளை ஏற்படுத்தினான் என்று குறிப்பிட்டிருக்கிறார். நம் தமிழ்ப் புலவர்கள் 'அய்யர்' என்பது பார்ப்பானைக் குறிப்பதல்ல, அறிவில் சிறந்தவரைக் குறிப்பிடும் சொல் என்று கூறுவார்கள். இதற்குப் பதில் சொல்வது போல, தொல்காப்பியனே இன்னொரு சூத்திரத்தில் "மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணங்கள் கீழோர்க்காகிய காலமும் உண்டே" என்ற சூத்திரத்தின் மூலம் மேல் ஜாதிக்காரர்களுக்காக ஏற்பாடு செய்த சடங்குகள், முறைகள் கீழ் ஜாதிக்காரர்களிடையே புகுத்தப்பட்ட காலமும் உண்டு என்று குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறார்.

நேற்றுக் கூட எனக்கு ரொம்ப வேதனை; நம் நாட்டின் மந்திரி பூம்புகார் பத்தினிக் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். நம் நாட்டிலிருக்கிற கோடிக்கணக்கான பெண்களில் அவள் ஒருத்திதான் பத்தினி என்றால் மற்ற பெண்கள் எல்லாம் யார்? உன் தாய், என் தாய், உன் தங்கை, என் தங்கை, மற்ற பெண்கள் அனைவரும் பத்தினித் தன்மை அற்ற விபசாரிகளா? இதை மக்கள் சிந்திக்க வேண்டும். எதற்காக ஒருத்தியை மட்டும் பத்தினி என்று புகழ வேண்டுமென்று கேட்கிறேன்.

என்ன காரியம் செய்தாவது நாம் அறிவு பெற வேண்டும். நம் பெண்களுக்கு அறிவைக் கொடுக்க வேண்டும். நம் மக்கள் மூன்று கோடி பேரும் அறிவாளியாக வேண்டும். நம் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. இத்திருமணங்களைக் கிரிமினலாக்க வேண்டும். இப்போது எப்படிப் பெண்களுக்கு பொட்டுக் கட்டுவது கிரிமினலோ அது போன்று தாலி கட்டுவதைக் கிரிமினலாக்க வேண்டும். இன்னும் கொஞ்சக் காலத்தில் நிச்சயம் திருமணம் கிரிமினலாக்கப்படுமென்று கருதுகின்றேன்.

நம் பெண்களுக்குத் தாலி எதற்குப் பயன்படுகிறது? 100-க்கு 90-தாலி அறுப்பதற்குத்தானே! பெண்ணை "முண்டச்சி"யாக்கவும், சகுனத் தடையாக்கவும், ஆண்கள் பெண்களை மிரட்டவும், அடிமைத்தனத்தை நிலைநிறுத்தவும் தான் பயன்படுகின்றன. ஆணை விட - பெண்ணிற்கு குறைந்த வயது இருக்க வேண்டும். அப்படித்தான் திருமணம் செய்கின்றார்கள். இரண்டு பேருமே 100 வயது வரை வாழ்ந்தாலும் அதின வயதான ஆண் தான் முன்னால் இறப்பான். அப்போது பெண் தாலியை "அறுக்க வேண்டியது" தானே!

இராமன் - சீதை, அரிச்சந்திரன் - சந்திரமதி, கோவலன் - கண்ணகி, திரவுபதை இத்தனை பேருக்கும் ஜாதகம், ஜோசியம், நேரம், காலம், நாள், நட்சத்திரம் எல்லாம் பார்த்துத் தான் திருமணம் செய்தார்கள். இவர்களில் யார் வாழ்வு உயர்ந்த வாழ்வாக இருந்தது? எல்லோரின் வாழ்வும் சீரழிந்த வாழ்வாக அமைந்தது என்று தான் எழுதி வைத்திருக்கின்றான். இதிலிருந்தாவது நம் முட்டாள்கள் இவையெல்லாம் பொய் என்பதை உணரவில்லையே!

நம் மக்கள் நமக்கு முன் நடப்பவற்றைப் பார்க்க வேண்டுமே ஒழிய, பழைமையைப் பார்க்கக் கூடாது. பின்னோக்கிப் பார்க்கக் கூடாது. மற்றவர்கள் அறிவைச் சுதந்திரமாக விட்டுச் சிந்திப்பதால் பல அரிய - அற்புத அதிசயங்களைக் கண்டவன்னமிருக்கின்றனர். மனிதனுக்கு ஏன் 100-வயது வரம்பு இருக்க வேண்டும். 200-வருடம் வாழக் கூடாது என்றெல்லாம் ஆராய்ந்து வருகின்றார்கள்.

மணமக்கள் வரவிற்குள் செலவிட வேண்டும். கோயில், குளங்களுக்குச் செல்லக் கூடாது. முட்டாள்தனத்தையும், ஒழுக்கக் கேட்டையும் வளர்க்கும் சினிமாவிற்குக் கூடச் செல்லக் கூடாது. அறிவிற்கு ஒவ்வாத முட்டாள்தனமான மூடநம்பிக்கையான காரியங்களைச் செய்யக் கூடாது. இருவரும் நண்பர்களைப் போல் பழக வேண்டும். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடப்பதற்குப் பெரிய காரணம் அவர்கள் வாழ்க்கைக்கேற்ற வருவாயைப் பெறக் கூடிய சக்தி இல்லாததால் ஆகும். அவளும் நன்கு படித்து ஒரு நல்ல உத்தியோகத்தில் இருந்தால் ஆண் அவளை அடக்கியாளவோ, அடிமையாகவோ கருத மாட்டான்.

--------------------------------------

10.11.1968 அன்று நடைபெற்ற நடராசன் - யசோதா திருமணத்தில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. ”விடுதலை”, 15.11.1968
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It