இந்த நிகழ்ச்சி புதிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பழைய முறையை மாற்றிப் புதிய முறையை மாற்றிப் புதிய முறையைப் புகுத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டதென்றால், பழைய முறையிலிருந்த அறியாமை - மூடப் பழக்க வழக்கம் - ஜாதி இழிவு, பெண்ணடிமை இவை ஒழிக்கப்பட வேண்டுமென்பதற்காகவே பழைய முறையை விட்டு, புதிய முறையில் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. அரசாங்க முறையில் செய்யப்படும் பதிவுத் திருமண முறைப்படியே இதுவும் நடைபெறுகிறது. என்றாலும், இதில் இருவரும் சம உரிமை உடையவர்கள் என்பது உறுதி செய்யப்படுகிறது.

periyar 342இதுவரை பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் இம்முறையில் நடைபெற்று வந்திருக்கின்றன. நடைபெற்று வருகின்றன என்றாலும், இதுவரை இருந்த அரசானது பெரிதும் பார்ப்பனர்களின் - பார்ப்பன சார்புடையவர்களின் அரசாக இருந்த காரணத்தால், இம்முறைத் திருமணம் சட்டப்படிச் செல்லுபடி அற்றது என்று சட்டம் செய்து வைத்திருந்ததை, இப்போது அமைந்திருக்கும் தமிழர்களின் பகுத்தறிவாளர்களின் ஆட்சியான தி.மு.க ஆட்சி அதனை மாற்றிச் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று சட்டமியற்றி இருக்கிறது.

அதனை நாம் பாராட்டுகின்றோம். இந்தியாவிலேயே இந்த மாறுதலைப் பற்றிச் சிந்திக்காதவன் நான் தான். இந்தப் பெண்களை வேலைக்காரியாக ஆண்களுக்குச் சேர்த்து வைக்கும் தரகர்களாக இருப்பது பெரிய கொடுமை. பெண்கள் ஆசைகளைப் போன்ற ஜீவன்; அவர்களுக்கும் ஆண்களைப் போன்று எல்லா உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டுமென்பதற்காக இம்முறையைத் துவக்க வேண்டியதாயிற்று.

நம் நாட்டிலிருக்கிற நம் இலக்கியத்திலோ, புராணத்திலோ, நீதி நூல்களிலோ எதை எடுத்துக் கொண்டாலும் சரி, பெண்களுக்கு அறிவுரை கூறுவதாகப் பெண்களை அடிமைப்படுத்துவதாக இருக்கின்றனவே தவிர, ஒன்று கூட பெண்களைப் பெருமைப்படுத்துவதாக இல்லை. பெண்கள் அப்படி நடந்து கொள்ள வேண்டும், இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு செய்தது போல, ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று கட்டுப்பாடு விதிக்கவில்லை. நான் இவற்றையெல்லாம் குறை கூற வேண்டுமென்பதற்காகச் சொல்லவில்லை. இவை ஏற்பட்ட காலம் பெண்ணடிமையாக இருந்த காலம். அதற்கேற்றாற் போல அக்காலச் சூழ்நிலைக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.

திருமணம் என்பதே ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்துவது என்பது தான் பொருள். நீங்கள் இன்னும் பத்தாயிரக்கணக்கில் நகை போட்டாலும் அந்தப் பெண் ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டுமென்பது, "தெய்வம் தொழா அள் கொழுநன் தொழு தெழுவாள்" என்கிறான் வள்ளுவன். நாம் கடவுளே வேண்டாமென்று சொன்னால், அப்புறம் கணவன் என்ன வெங்காயம், எதற்காக ஒரு பெண் தன் கணவனை வணங்க வேண்டும்? அவன் என்ன அவ்வளவு உயர்ந்தவனா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பொதுவாக ஏன் இராமாயணம், பாரதம், வடமொழி சம்பந்தமான இலக்கியம் கடவுள்? எதை நம்பினாலும் அவன் பெண்களை அழுத்தி அடிமையாக்கத்தானே செய்வான். அத்தனையும் பெண்ணடிமையை நிலைநிறுத்தக் கூடிய வகை தானே!

மரியாதையாகக் கண்டித்தால் நம் மக்களுக்கும் புத்தி வருமோ இல்லையோ என்பதால் மிகக்கடுமையாகக் கண்டிக்க வேண்டியதாயிருக்கிறது. அப்போது தான் கொஞ்சம் ரோஷம் - உணர்ச்சி வருகிறது.

ஆணும் பெண்ணும் ஜீவனில் ஒன்று தான். ஒன்றுக்கொன்று உயர்வு - தாழ்வு கிடையாது. இரண்டும் மனித ஜீவனேயாகும். உலகிலிருக்கிற மற்ற எந்த ஜீவராசிகளிடத்தும் இந்தப் பேதத்தைக் காண முடியாது. அந்த ஜீவன்களையெல்லாம் விட உயர்ந்த பகுத்தறிவினை உடைய மனித ஜீவனில் மட்டும் எதற்காக ஆண் - பெண் என்பதில் உயர்வு - தாழ்வு இருக்க வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். முட்டாள்தனத்தினால் தான் பிடிவாதமாக அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, வேறில்லை. கொஞ்ச நாளைக்கு முன்னே 30, 40- வருஷங்களுக்கு முன்வரை கிராப்பு வைத்தவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க மாட்டார்கள். வீட்டிலேயே கூடக் கிராப்பு வைத்துக் கொண்டால் சண்டை போடுவார்கள். நான் எங்கள் வீட்டாருக்குத் தெரியாமல் கிராப் செய்து கொண்டேன். என் தந்தையார் நாவிதனைக் கூட்டி வந்து மொட்டையடிக்கச் சொல்லி விட்டார். அது மாறி இன்று யாரைப் பார்த்தாலும் கிராப் தலையாக இருக்கிறது. குடுமி வைத்தவனைக் கண்டால் கேலி செய்கிறார்கள். சவுகரியத்தை முன்னிட்டாவது இதே காரியத்தைப் பெண்களுக்கும் செய்திருக்கலாம். ஆனால், அதை அவர்கள் அழகாகக் கருதுகின்றனர். ஆண்களை அவர்கள் அடிமை கொள்வதற்காக நகையையும், துணியையும் இலஞ்சம் கொடுத்து அவர்களை அடக்கி வைத்திருக்கிறார்கள். பெண்கள் அவற்றைக் கண்டு ஏமாந்து தாங்களாகவே அடிமையாகச் சம்மதிக்கின்றனர். காரணம், நம் பெண்களுக்குப் போதுமான கல்வி அறிவு இல்லாததேயாகும்.

நம் மக்களுக்கு எது படிப்பு என்று தெரியவில்லை! பள்ளிக் கூடத்தில் படிப்பதைப் படிப்பு என்று கருதிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் படிப்பு அறிவாகாது. அறிவிற்குரிய படிப்பு பள்ளிகளில் இல்லை. உலகத்தைப் படிக்க வேண்டும். வளர்ச்சியைப் படிக்க வேண்டும். நம் கண் முன்னே நடைபெறும் விஞ்ஞான அறிவு அற்புதங்களைப் பார்த்துப் படிக்க வேண்டும். அதுதான் அறிவை வளர்க்கும். பள்ளிப் படிப்பு உத்தியோகத்திற்காகப் பயன்படும் தன்மையில் அமைந்திருக்கிறதே தவிர மக்கள் அறிவை வளர்க்கக் கூடிய வகையில் அமையவில்லை. நம் கல்வித் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.

நம் நாட்டிலிருக்கிற பெரிய அறிவாளிகள், மேதைகள், விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர்கள், பரிசு பெற்றவர்கள் எல்லாம் பழைமையைப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றார்களே தவிர, அறிவோடு சிந்திப்பவர்களாக இல்லை. சாம்பலை அடித்துக் கொள்வதும், மண்ணைக் குழைத்துப் பூசிக் கொள்வதும், எல்லாம் அவன் செயல், அவனின்றி அணுவும் அசையாது என்று சொல்லக் கூடியவர்களாக இருக்கின்றார்களே தவிர சிந்தனை அறிவு உடையவர்களாக இல்லை. நம் கல்வி முறையில் உள்ள கேடுதான் இதற்குக் காரணமாகும்.

பெண்களுக்கு மட்டும் தாலி கட்டுகிறாயே, ஏண்டா என்றால், பெண் திருமணமானவள் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு என்கின்றான். அப்படியானால் திருமணமான ஆம்பளையைப் பார்த்து எப்படிக் கண்டுபிடிப்பாய் என்றால், நம்மை நாத்திகன் என்று ஏசுகிறான்.

நெடுஞ்செழியன் தங்கைக்கு என் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அந்தப் பெண்ணிற்கு மணமகனாக இருப்பவரின் தாய், என் காலை வந்து கட்டிப்பிடித்துக் கொண்டு, "எதை வேண்டுமானாலும் செய்து கொள், தாலி கட்டுவதை மட்டும் நிறுத்தி விடாதே" என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். தாலி என்றால், அது என்னமோ பெரிய "இதாக"ப் பெண்கள் கருதுகின்றனர்! தோழர்கள் சிந்திக்க வேண்டும். நமக்குத் தாலி எதற்குப் பயன்படுகிறது? புருஷன் செத்தால் அறுத்தெறிவதற்கு, தன்னை "முண்டச்சி", சகுனத் தடையானவள் என்பதைக் காட்டிக் கொள்வதற்கு அல்லாமல், அதனால் வேறு என்ன அவசியம் என்பதை நம் பெண்கள் உணர வேண்டும். நம் இயக்கத்தில் உள்ள குடும்பங்களில் பல பெண்கள் தாலி கட்டிக் கொள்ளவில்லை. சில பெண்கள் கட்டியிருந்த தாலியை அவிழ்த்து விட்டார்கள். அதனால் அவர்கள் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லையே! பெண்களுக்குத் துணிச்சல் வரவேண்டும். நமக்கு மட்டும் எதற்காக இந்தத் தாலி என்ற உணர்வு வரவேண்டும்.

மனுதர்மப்படி பார்த்தால் நமக்குத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையே கிடையாது. நமக்குத் திருமணமிருந்ததாக 3,000-வருடங்களுக்கு முன்னுள்ள எந்த ஆதாரமும் கிடையாது. பார்ப்பான் புளுகுவான். நாரதனுக்கு, வசிஸ்டனுக்கு மனைவி இருந்ததாக. அவையெல்லாம் 3,000- வருடங்களுக்குப் பின் எழுதப்பட்டவையே யாகும். தமிழர்கள் புருஷன் பெண்டாட்டியாக வாழ்ந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இந்நிகழ்ச்சியினைக் குறிப்பிட்டுக் காட்டும்படியான சொல்லோ, வார்த்தையோ தமிழில் இல்லை. இதுபோன்ற நிகழ்ச்சியானது நம்மிடையே இருந்திருக்குமானால், அதற்காகத் தமிழில் பெயர் இல்லாமல் இருக்குமா என்பதைச் சிந்திக்க வேண்டும். பார்ப்பான் வந்து குடியேறிய பின் அவனுடைய சவுகரியத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்தது தான் இத்திருமண முறையாகும். அதற்கு முன் தமிழர்கள் வாழவில்லையா என்றால், வாழ்ந்தார்கள். காதலன் - காதலியாக, சம உரிமையுடையவர்களாக வாழ்ந்திருக்கின்றனர். மற்ற மேல்நாடுகளில் பெற்றோர்கள் பார்த்துத் திருமணம் செய்விப்பது கிடையாது. ஆணும், பெண்ணும் தாங்கள் யாரை விரும்புகின்றார்களோ, அவர்களோடு இருந்து வாழ்கின்றனர். பிடிக்கவில்லையென்றால் தாங்களாகவே விலகிக் கொள்கின்றனர்.

நாம் இப்போது மாறுதல் காலத்தில் இருக்கின்றோம். அறிவின் எல்லை இன்னும் முற்றுப் பெறவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அற்புதங்களைப் பார்க்கின்றோம். விஞ்ஞானத்தின் மூலம் எது எது மனிதனால் முடியாது என்று இதுவரை கருதி வந்தோமோ, அவையெல்லாம் நடைபெற்றுக் கொண்டு வருவதைக் கண்ணால் பார்க்கிறோம். நாமும் மாறுதலுக்குத் தகுந்தவாறு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான் மனிதன் பகுத்தறிவு உடையவன் என்பதற்குப் பொருளாகும்.

மணமக்கள் தங்கள் தகுதிக்கு மேல் ஆடம்பரமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படக் கூடாது. எளிமையான வாழ்வு வாழ வேண்டும். தங்கள் வாழ்வில் முட்டாள்தனமான மூட நம்பிக்கைக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கோயில், குளம், தேர், திருவிழா, உற்சவம், பண்டிகை என்று தங்கள் பொருளையும், நேரத்தையும், அறிவையும் பாழாக்கிக் கொள்ளக் கூடாது. கடைசியாகக் குழந்தைகளே பெறாமல் இருந்தால் நல்லது. இல்லை ஒன்று மிஞ்சினால் இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

------------------------

16.06.1968- அன்று பொத்தனூரில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை', 08.07.1968
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It