periyar 522

தமிழனுக்குள் இல்லாத இந்த முறையினைப் பார்ப்பான் எதற்காகப் புகுத்தினான் என்றால், மனிதனை அடிமையாக்கவும், முட்டாளாக்குவதற்கும், ஜாதி இழிவை நிலை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது தான் கல்யாணமாகும். இதைத் தான் வள்ளுவனும் சொன்னான். மற்றவனும் சொன்னான். எதற்காக அப்படிச் சொன்னானென்றால், பெண்ணடிமையை வலியுறுத்துவதற்காகவே யாகும். சீர்திருத்தத் திருமணம் செய்ய வேண்டுமென்கின்ற ஆசையால், ரூ.200 கொடுத்து என்னைக் கூப்பிடுகின்றான். அவனும் நேரம் பார்த்து, நாள் பார்த்துத் தான் செய்கிறான். அப்படி நம் இரத்தத்தோடு ஊறிவிட்டது. அதைப் போக்குவது கஷ்டம் தான்; என்றாலும் போக்கித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அதைப் போக்காமல் நம் இழிவை, சூத்திரத்தன்மையை, மானமற்றத் தன்மையைப் போக்க முடியாது. என்ன கஷ்ட, நஷ்டம் வந்தாலும் அதையெல்லாம் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் இதை மாற்றியாக வேண்டும்.

எவன் ஒருவன் பெண் விடுதலையை விரும்புகிறானோ, மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டுமென்று நினைக்கின்றானோ அவன் இந்த முறையில் தான் வாழ்க்கை ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள வேண்டும். மற்ற முறைகள் அனைத்தும் பெண்ணடிமை - மூட நம்பிக்கை - ஜாதி இழிவு ஆகியவற்றை நிலைநிறுத்தக் கூடியவையேயாகும். நமக்கிருக்கிற புராணங்கள், கடவுள் கதைகள், இலக்கியங்கள் யாவும் பெண்ணடிமையை வலியுறுத்தக் கூடியவையேயாகும். பெண்களுக்கு நீதி சொன்னவர்கள் அத்தனைப் பேருமே, பெண்களென்றால் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்கின்ற தன்மையோடு கற்புடையவர்களாக இருக்க வேண்டுமென்று தான் சொல்லியிருக்கிறார்களே ஒழிய, ஒருவர் பெண் சுதந்திரத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

வள்ளுவரே பெண்ணடிமையை வலியுறுத்துகிறார். வள்ளுவனை விளம்பரப்படுத்தியவன் நான். திருகுறளைப் பரப்பியவன் நான். புலவர்களை விட அவர் கொஞ்சம் பரவாயில்லை என்பது தானேயொழிய, அவர் கருத்துகள் அத்தனையுமே ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பதல்ல. "தற்கொண்டான்பேணி" என்கின்றார். தற்கொண்டான் என்றால் தன்னைக் கொண்டவன். அதாவது தன்னை விலைக்கு வாங்கியவன் என்று தானே பொருள். அப்படியானால் பெண்கள் விலைக்கு வாங்குகிற பொருள் என்று தானே அர்த்தம். அதுபோன்று ஆணைச் சொல்லவில்லையே. எழுதியவன் இரண்டு பேரையும் ஒன்றாக வைத்து எழுதி இருந்தான் என்றால் சரி. பெண் பதிவிரதையாக இருக்க வேண்டுமென்று சொன்னவன் ஆண் சதிவிரதத்தோடு இருக்க வேண்டுமென்று சொல்லவில்லையே. நான் வள்ளுவனைக் குற்றம் சொல்லவில்லை. அவன் வாழ்ந்த காலம் பெண்ணடிமை மிகக் கொடுமையாக இருந்த காலம். அதற்கேற்றபடி எழுதி இருக்கிறார். அது இன்றைக்கு எப்படிப் பொருந்தக் கூடியதாக இருக்க முடியும்?

தமிழ்நாட்டிலே குறளுக்கு அய்யாதான் சான்றாக இன்று இருக்கிறவர். அவரே சொல்லட்டுமே என்று அய்யா அவர்கள் சொன்னதும், திருக்குறளார் அவர்கள் "ஆண்களைப் பற்றியும் வள்ளுவர் சொல்லி இருக்கிறார்" என்று சொல்லி, ஒரு குறளை "பிறர்மனை நோக்கா சான்றாண்மை" என்பதை எடுத்துக் காட்டினார்.

உடனே தந்தை பெரியார் அவர்கள் குறுக்கிட்டு "பிறன் மனை என்று சொன்னால் அவள் இன்னொருத்தன் சொத்து என்பதால் பார்க்கக் கூடாது என்று சொன்னாரே தவிர, கல்யாணமாகாத பெண்களை நோக்கக் கூடாது என்று சொல்லவில்லையே." திருக்குறள் புத்தகத்தை எடுத்துக்காட்டி இந்த அதிகாரத்திலுள்ள 10-குறளும் பெண்ணைப் பற்றித் தான் சொல்கிறதே தவிர, ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைப் பற்றி ஒரு வரிகூட இல்லையே. அய்யா அவர்கள் எதையாவது எடுத்துக் காட்டினால் மன்னிப்போடு ஏற்றுக் கொள்கிறேன்" என்று சொன்னார்கள். திருக்குறளார் ஒன்றும் பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தார்கள். தந்தை பெரியார் அவர்கள் தொடர்ந்து பேசினார்.

பொதுவாகத் திருமணமென்றால் ஆண் - பெண்ணையோ பார்த்து ஏற்பாடு செய்வது கிடையாது. நீ பெண்ணுக்கு திருமணமென்றால் ஜாதகம் - ஜோசியம் - பொருத்தம் - நாள் - நட்சத்திரம் இவற்றைப் பார்க்கிறாய். நீ அன்னக்காவடி சீதையின் திருமணம் வசிஷ்டனை வைத்து ஜோசியம் பொருத்தம் பார்த்துச் செய்யப்பட்டது தானே. வசிஷ்டனை விட ஜோசியம் பொருத்தம் பார்க்கக் கூடியவர்கள் இல்லை. அப்படிப்பட்டவனை வைத்துப் பொருத்தம் பார்த்துச் செய்த திருமணத்தில் தான் சீதை இன்னொருவனுக்குச் சினையாகி கணவனால் அடித்து விரட்டப்பட்டிருக்கின்றாள். உண்மையாக நடக்கவில்லை என்றாலும், அவள் துன்பப்பட்டதாக எழுதி இருக்கின்றான். உண்மையாக நடந்தது என்று சொல்லவில்லை. இதற்காக எழுதிய கதையே இப்படி இருக்கிறது. ஜோசியம் பொருத்தம் இவை சக்தியுள்ளவையாக இருந்தால் இவ்வளவு (முண்டச்சி) விதவைகள் ஏன் இருக்கிறார்கள்? இதையெல்லாம் நம் மக்கள் சிந்திக்க வேண்டும். நம் இலக்கியங்கள், புலவர்கள் எல்லோருமே பொம்பளையைக் கெட்டுப் போனவள் என்பதற்கு 1000-சொற்கள் சொல்கிறான். ஆணைக் கெட்டுப் போனவன் என்று சொல்ல ஒரு சொல் கிடையாது.

மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் வரவுக்கு உட்பட்டுச் செலவு செய்ய வேண்டும்; ஆடம்பரமான வாழ்வு வாழ வேண்டுமென்று ஆசைப்படக் கூடாது. சாதாரண எளிய வாழ்வு வாழ வேண்டும். பிள்ளைகள் பெறுவதில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மனிதன் ஒழுக்கம் கெடுவதற்குக் காரணம் இந்தப் பிள்ளைக் குட்டிகளைப் பெற்றுக் கொள்வதால் தான். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கவனிக்கவே அவன் வாழ்நாள் பூராவும் சரியாகி விடும். அவர்களைப் படிக்க வைக்க வேலை வாங்கிக் கொடுக்க, இதற்கே அவனுக்குச் சரியாகி விடும். கர்ப்பத்தைக் தடுக்காதே என்று சொல்கிறானே அவனெல்லாம் தீரன். லஞ்சம் வாங்குவதிலே! இயற்கையாக மனிதன் ஒழுக்கமாக இருக்க வேண்டுமானால் பிள்ளைக் குட்டிப் பெறுவதைக் கூடிய வரை குறைத்துக் கொள்ள வேண்டும். மூட நம்பிக்கையான காரியங்களில் ஈடுபடக் கூடாது. கண்டிப்பாய்க் கோயில்களுக்குப் போகக் கூடாது. பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் வளர்ச்சி அடையாமல் போனதற்குக் காரணம், நாம் அவர்களை எதையும் செய்ய ஒட்டாமல் தட்டித் தட்டி அடக்கி வைத்திருப்பதேயாகும். 3.50 கோடி மக்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் என்றால், 1.45 கோடி பெண்கள் அடிமைகள் தானே! அவர்களால் சமுதாயத்திற்கு எந்தப் பலனும் கிடைக்க முடியாமல் போய் விட்டது. ஜப்பானில் 100-க்கு 50-பேருக்குக் கணவன் இல்லை. அவர்கள் எல்லாம் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லையே! மலையாளத்திலே இன்றைக்கு அனேகம் பேருக்குக் கணவன் கிடையாது - அவர்களெல்லாம் கெட்டுப் போய்விட்டார்கள் என்று சொல்ல முடியாது.

------------------------------------

18.08.1968 அன்று நடைபெற்ற கலியமூர்த்தி - இராசகுமாரி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 21.09.1968
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It