நம் மக்கள் என்றென்றும் ஊழியம் செய்யும் சூத்திரராய் இருப்பதா?

எனக்கு 78-வயது முடிந்து 79-வது பிறந்ததைப் பாராட்டுவதற்காக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. எனக்கும் வாழ வேண்டுமென்ற ஆசைதான். ஏன்? ஏதோ எழுபத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்தோம் இன்னும் கொஞ்சம் காலம் இருப்போம் என்றல்ல; நான் ஈடுபட்டுள்ள பணியை மேலும் தொடர்ந்து செய்யவே. நான் பொதுவாழ்வில் ஈடுபட்டு இன்றைக்கு 37, 38 ஆண்டகளாகின்றன. நான் காங்கிரசில் சேர்ந்தது 1920-இல். அதற்கு முன் முனிசிபாலிட்டி, தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு முதலிய ஸ்தாபனங்களில் இருந்தாலும் அவையெல்லாம் சொந்தப் பெருமைக்கு, மதிப்புக்கு என்றுதான். பொதுவாழ்வு என்றால் முன்பெல்லாம் பெருமைக்கு என்று இருந்தது. ஆனால் இன்று காந்தி வந்தபிறகு அது பித்தலாட்டத்திற்கு என்று மாறிவிட்டது.

பொது வாழ்வில் ஈடுபட்டு 37 ஆண்டுகள் ஆனாலும் எனக்கு உலக அறிவும், அனுபவமும் என்னுடைய 10 வது வயதிலிருந்தே உண்டு.

இந்தக் காலத்து மாணவர்களுக்குப் பொது அறிவே இருப்பதில்லை. அதிலும் ஒரு மாணவன் அதிக மார்க் (மதிப்பெண்) வாங்குகிறான் என்றால் பொது அறிவு இன்னமும் மோசம், வெறும் புத்தகப் பூச்சி என்றுதான் அர்த்தம். அவர்கள் பழகுவதெல்லாம் அந்தப் புத்தகங்களோடும் ஆசிரியர்களோடும் தான். பொது மக்களோடு பழகுகின்ற வாய்ப்பிருக்கிறவர்களுக்குத்தான் பொது அறிவும், அனுபவமும் பெற வாய்ப்பிருக்கிறது.

உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் பெங்களுர் போயிருந்தேன். மைசூர் அரசாங்கத்தில் Chief Justice (தலைமை நீதிபதி) ஆக இருந்து ரிட்டையர் (ஓய்வு) ஆகிவந்தவர் ஒருவர். அவருக்கு நம்முடைய கொள்கையில் நிரம்பப் பற்று உண்டு. அவரைச் சந்திக்க நேரிட்டபோது அவர் சொன்னார்: "நீ பொது நலத்திற்காக வேலை செய்கிறாய். ஆனால் உனக்குப் போதுமான ஆதரவு இல்லை. வேறு நாடாயிருந்தால் உன்னைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள்" என்றார். அதற்கு, "ஆதரவில்லாமல் போனாலும் போகட்டும், குழியல்லவா பறிக்கிறார்கள்!" என்று நான் சொன்னேன்.

மேலும் பேசிக்கொண்டிருந்தபோது, "பார்ப்பன ஆதிக்கம் உங்களுடைய ஊரில் மிகவும் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் சென்னை அய்கோர்ட்டில் (உயர் நீதிமன்றம்) ஒரு தீர்ப்பு ஆனது; மிகவும் அநியாயமான தீர்ப்பு. நீங்கள் பண்ணி வைத்த திருமணங்களை யாரும் குறை சொல்ல முடியாது. நான் இருந்திருந்தால் என்னிடம் அந்த வழக்கு வந்திருந்தால் வேறு விதமாக தீர்ப்பளித்திருப்பேன்" என்று சொன்னார்.

அது என்னவென்றால் சுயமரியாதைத் திருமணம் சம்பந்தமாக அய்க்கோர்ட்டில் ஒரு வழக்கு வந்தது. சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று இரண்டு பார்ப்பன ஜட்ஜீகள் (நீதிபதிகள்) தீர்ப்பளித்தார்கள்;

"சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்வதுதானே" என்று அவர் கேட்டதற்கு நான் சொன்னேன், அங்கு இருப்பவரெல்லாமும் பார்ப்பனர்கள்தானே அவர்கள் மேலும் பலமாக ஆணி அடித்து விடுவார்கள்" என்றேன்.

இதேபோல் மற்றொரு வழக்கு ஒன்றும் உண்டு. திரு. முத்தையா முதலியார் காலத்தில் கம்யூ G.O (அரசு ஆனை) உத்தரவு போட்டார். அதன் மூலம் (வகுப்புவாரி உரிமை) நம்முடைய மக்களுக்கு அரசு வேலைகளில் இடம் ஒதுக்கி வைத்தார்கள். இந்திய அரசமைப்புச் சட்டம் செய்யும் போது வகுப்புவாரி உத்தரவு செல்லாது என்று சட்டம் செய்து வைத்துக் கொண்டார்கள். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் சட்டம் செய்தவர்களுள் ஒருவர். அவரே வக்கீலாக (வழக்குரைஞராக) வந்து வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு செல்லாது என்று வாதாடினார். அந்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பாகிவிட்டது.

"இந்தத் தீர்ப்பைப் பார்த்ததும் எனக்கு வருத்தமாயிருந்தது. என்னிடம் இந்த வழக்கும் வந்திருந்தால் கட்டாயம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஆதரித்திருப்பேன். அந்த மாதிரியிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு அர்த்தம் பண்ணியிருப்பேன்" என்று மைசூர் ராஜ்ஜியத்தில் ரிடையர் ஆன அந்த சீஃப் ஜஸ்டிஸ் (தலைமை நீதிபதி) சொன்னார்.

"இந்த மாதிரி உணர்ச்சியுள்ளவர்கள் நாலுபேர் உதவியாக இருந்தால் உங்களுடைய அனுபவமெல்லாம் பயன்பட்டால் எவ்வளவோ சாதிக்கலாம்," என்றேன் நான்.

அதற்கு அவர் "எனக்கு என்ன அனுபவம் இருக்கிறது? முப்பது வருஷமாக ஜட்ஜாக (நீதிபதியாக) நான் இருந்தேன். கோஷா பெண் மாதிரி! நான் கிளப்புக்குப் போகக்கூடாது. யாரிடமும் பழகக்கூடாது; கல்யாணங்களுக்கும் போகக்கூடாது; பொது இடங்களுக்கும் போகக் கூடாது; ஏனென்றால் பழகினால் யாரேனும் ஏதாவது சிபாரிசுக்கு வந்துவிடுவார்கள். இந்த வகையில் பொதுமக்களோடு பழகாத கோஷாப் பெண்போல் இருந்த எனக்கு என்ன அனுபவம் இருக்கப்போகிறது? வக்கீல்கள் சொல்லும் பொய்யிலிருந்து மெய்யைக் கண்டுபிடிப்பதிலேயே என் காலம் எல்லாம் கரைந்து விட்டது" என்று சொன்னார்.

எதற்குச் சொல்லவந்தேன் என்றால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பொது அறிவு பெற, அனுபவம் பெற வாய்ப்பு இருப்பதில்லை.

என்னுடைய நிலைமை அப்படியில்லை. 60, 80-வருஷமாக (ஆண்டாக) எனக்கு உலகம் தெரியும். அப்போது இவ்வளவு பித்தலாட்டம், ஏமாற்றம் எல்லாம் மக்களுக்குத் தெரியாது. கடன்கூட வாய்ப் பேச்சில்தான்.

மோசடி என்பதே அன்று கிடையாது. வழக்கு ஏதும் ஏற்படாது. ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. கையொப்பம் வாங்கினாலும் முடியவில்லை. அடமானம் வைத்துப் பணம் கொடுத்தாலும் திருப்பி வாங்க முடியவில்லை. இதெல்லாம் சொந்த வாழ்க்கையில் காந்தி வந்தபின் மோசடிகள்.

காந்தியார் வந்தபிறகு பொது வாழ்க்கையில் பித்தலாட்டம் பெருகிவிட்டது. அதைவிட ஆச்சரியம் பித்தலாட்டத்தை மக்கள் தவறு என்று நினைப்பதில்லை. சாமர்த்தியம், கெட்டிக்காரத்தனம் என்று நினைக்கிறார்கள்! சட்டசபைக்குப் போவதற்கோ பதவிக்குப் போவதற்கோ இன்று அயோக்கியத்தனம் செய்தால்தான் முடிகிறது. எவன் உண்மை பேசுகிறானோ எவன் உள்ளபடி சொல்லுகிறானோ அவனை ஒழிப்பதுதான் மற்றவர்களுடைய வேலை! இதுதான் பார்ப்பன தருமம்.

உலகத்திலேயே இரண்டு மூன்றுபேர் உண்மை பேசி நடந்திருக்கிறார்கள். முதலாமவர் புத்தர்; இரண்டாமவர் இயேசு; மூன்றாமவர் கொஞசம் தைரியமாகக்கூடச் சொல்லியிருப்பவர் முகமதுநபி!

ஆனால் இந்து சாஸ்திரத்தில் புத்தன் என்றால் அயோக்கியன் என்று பொருள். அயோக்கியன் கொலைக்காரன் அவனைச் சித்திரவதை செய்ய வேண்டும் என்று சொல்கிறது. இராமாயணம் அவனை ஒழிக்க வேண்டும் அவன் பெண்டு பிள்ளைகளைக் கற்பழிக்க வேண்டும். ஒழிக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார்கள்! அவர்களைக் கொன்றால் புண்ணியம் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். தேவாரம், திருவாசகம், நாலாயிர பிரபந்தத்தில் முஸ்லிம்களைத் தொட்டால் தீட்டு; முஸ்லிமைத் தொட்டால் துணியை எல்லாம் எடுத்துப் போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு வேறு துணியை உடுத்த வேண்டும்!

அன்பைப் போதித்த முகமது நபியை, இயேசுவைப் பின்பற்றுகிறவர்களை இந்த வகையில் நடத்தினார்கள்! இந்தப்படியாக நாட்டில் உண்மைக்கு, நியாயத்திற்குத், தத்துவத்திற்குப் பாடுபட்டால் அவர்களுக்கு மரியாதைக் குறைவு. 1957-ஆம் ஆண்டிலும் பித்தலாட்டத்திற்கும் அயோக்கியத்தனத்திற்கும் தான் சிறப்பு.

எங்களைப் பொருத்த வரையில் அடிப்படையில் பித்தலாட்டம் செய்து பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் சொல்கிறோம். "உண்மையை அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து கேட்டால் கேள், கேட்காவிட்டால் போ" என்று இப்படி சொல்லக்கூடிய நிலைமை இந்தியா பூராவும் எங்களுக்குத் தான் இருக்கிறது. ஒரு பஞ்சாயத்து போர்டு எலக்க்ஷனுக்குக் கூட நாங்கள் போவதில்லை.

சுத்த முட்டாள் சட்டசபைக்குப் போனால் கூட மாதம் ரூ.150/- படிதினம் 15/- (1957-ல்) கிடைக்கிறது! பர்மிட், லஞ்சம் எல்லாம் கிடைக்கிறது ஆகவே எந்தப் பித்தலாட்டம் செய்தாவது, எந்தக் கொள்கையை - எதைவிட்டுக் கொடுத்தாவது சட்டசபைக்குச் செல்ல வேண்டும். யாரை நினைத்தாலும் நினைத்துக் கொள்ளுங்கள்.

எங்களோடு இருந்தவரை வணக்கம் என்று சொன்னவன் இப்போது நமஸ்காரம் என்று சொல்கிறான்.

சமஸ்கிருத துவேஷம், பார்ப்பன துவேஷம் என்று பார்ப்பனர் நினைப்பர். வோட்டுக்குப் போகின்றவன் எல்லாம் நமஸ்காரம் என்று சொல்லுகிறான்! இந்த சின்ன சங்கதிக்கே இப்படி! அந்த அளவுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது.

எங்களோடு இருந்தவரை பார்ப்பான் என்று சொன்னான். இப்போது 'பிராமணன்' என்று சொல்கிறான்! பார்ப்பான் என்று சொன்னால் அவன் மனம் புண்படுமாம். பார்ப்பான் என்று சொல்லவே நடுங்குகிறார்களே?

இன்று எங்களுடைய அந்தஸ்து (செல்வாக்கு நிலை) உயர்ந்து வருகிறது. எந்த அளவுக்கு என்றால் காங்கிரஸ்காரர்கள் கூட எங்களுடைய தயவை விரும்புகிறார்கள். மக்கள் எங்களிடம் நம்பிக்கை வைத்துவிட்டார்கள். எங்கள் சொல்படி கேட்கிறார்கள் என்றால் நாங்கள் எந்த விதமான எங்களுடைய சொந்த சுயநலத்திற்கும் பாடுபடுவதில்லை. ஏதோ உழைக்கிறோம் என்றால் அது பொது நலத்தை உத்தேசித்துதான். எங்களுக்குச் சுயநல நோக்கம், எண்ணம் இல்லை என்பதை எல்லோரும் நன்கு உணர்ந்துவிட்டனர்.

திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை ஜாதியை ஒழிப்பது. சுதந்திரம் வந்து இன்றைக்குப் பத்து வருஷமாகின்றது. அது ஒழிவதற்குப் பதிலாக மேலும் மேலும் பலப்பட்டு வருகிறது. எங்களுடைய முயற்சிக்கு ராசகோபாலாச்சாரி முதல் எல்லோரும் எதிரிகள்; நாங்கள் இதை எளிதில் ஒழிக்க முடியுமென்று எண்ணினோம். "பிராமணன்" என்று போர்டு (பெயர்ப்பலகை) போடக்கூடாது பார்ப்பான் மணியடிக்கிற கோவிலுக்குப் போகக் கூடாது என்ற திட்டங்களை வைத்து, முதல் திட்டத்திற்குக் கிளர்ச்சி ஆரம்பித்தோம். இன்றைய தினம் வரை 650-பேர் சிறைக்குப் போயிருக்கிறார்கள். இந்தக் கிளர்ச்சி இந்த அளவிற்குப் பலப்பட்ட பின்பும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று யோசித்தேன். இராசகோபாலாச்சாரி சொன்னார் "நாங்கள் எப்போது சொன்னோம் ஜாதி ஒழிய வேண்டுமென்று எங்கே சொன்னோம்?" என்றார். உடனே நான் ஏதோ சூது இருக்கிறது என்று அரசமைப்புச் சட்டத்தை வாங்கிப் பார்த்தேன்.

அதில் அடிப்படை உரிமைகள் தந்திருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய ஜாதியை, மதத்தைக் காப்பாற்ற உரிமை தந்திருக்கிறான். ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளலாம். பிராமணன் என்ற தன்மையில் வாழலாம்; அதைக் காப்பாற்றித் தர அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருக்கிறது. இந்தச் சட்டம் இருக்கிறவரை - ஜாதியைக் காப்பாற்ற அரசமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கிறவரை, நம்முடைய நிகழ்ச்சி எந்த வகையில் பயன்படும்?

இந்தச் சட்டத்தை மாற்றும் உரிமை இந்தச் சென்னைச் சட்டசபைக்கு இல்லை. அந்த உரிமை மத்திய அரசாங்க - டெல்லி சட்டசபைக்குத்தான் (பாராளுமன்றம்) இருக்கிறது. அங்கும் மூன்றில் இரண்டு பங்கு மேஜாரிட்டி (பெரும்பான்மை வாக்களிப்பு) கொண்டு வந்துதான் மாற்ற முடியும். இது எவ்வாறு முடியும்?

நம்முடைய சூத்திரத் தன்மை என்றுமே இருப்பதா? இந்தக் காலத்தில் கூட நாம் இந்தத் தன்மையை மாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் இருப்பதா?

ஆதிக்கக்காரன் சட்டசபை ஆசை காட்டி விட்டான். அந்த சட்டசபைக்குப் போகின்றவர்களாவது சாதியை ஒழிக்கப் போகிறேன் என்று சொல்லுகிறார்களா? அப்படிச் சொன்னால்தான் முடியுமா?

ஆகவே இந்த நிலையில் ஜாதியை ஒழிக்க நான் அரசமைப்புச் சட்டத்தைச் - ஜாதியை, மதத்தைக் காப்பாற்றுகிற சட்டத்தைக் - கொளுத்தப் போகிறேன்.

ஜாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தூக்குக் கயிற்றுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள். இளைஞர்களாயிருப்பவர்கள் இரத்தத்தில் கையெழுத்துப் போட்டு அனுப்புங்கள், காந்தி சிலையை உடைக்கிறேன், பார்ப்பானை ஒழிக்கிறேன்' என்று!

ஒன்றுமில்லாத குப்பை சங்கதிக்கு முதுகுளத்தூரில் 30, 40-பேர் செத்திருக்கிறார்கள். 3000-வீடுகளுக்குத் தீ வைத்திருக்கிறார்கள்! வெட்டி நெருப்பில் எறிந்தார்கள்! வெட்டித் தலையைக் கொம்பில் சொருகிக் கொண்டு ஆடினார்கள்! ஒன்றுமில்லாத சப்பைச் சங்கதிக்கு இம்மாதிரி செய்திருக்கிறார்கள். நம்முடைய மக்கள் என்றென்றும் கக்கூஸ் (மலக்கழிவு) எடுக்க வேண்டியது; தெருக்கூட்ட வேண்டியது, உடலுழைப்பு செய்து சூத்திரராகவே இருப்பது, நாம் கைகட்டிக் கொண்டு சும்மாவே இருப்பதா?

நம்முடைய உயிரை நாம் பலி கொடுக்க வேண்டும். நான் வேண்டுமானால் வாய்தா (காலக்கெடு) கொடுக்கிறேன். ஆனால் ஏதும் செய்யாமல் நாம் எவ்வளவு காலம் சும்மாயிருப்பது? இவற்றையெல்லாம் முடிவு செய்து நீங்கள் எனக்கு எழுதுங்கள்! உங்களுடைய தைரியத்தை, வீரத்தை அறிந்துதான் நான் எதையும் செய்கிறேன். இரத்தத்தில் கையெழுத்துப் போட்டு எனக்கு எழுதுங்கள்!

நம்முடைய இன இழிவைப் போக்க வீட்டிற்கு ஒரு பிள்ளை வாருங்கள்!

-----------------------------------

08.1.1957-ல் வலங்கைமானில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: "விடுதலை" 20.10.1957

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It