திராவிடர் கழகத்தினுடைய கொள்கையை நீங்கள் ஒத்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் திராவிடர் கழகத்தினுடைய கொள்கை என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

உலகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பண்டைக் காலத்தில் எப்படி நடந்தன? அப்படி நடந்த இடத்தில் இரத்தம் சிந்தாமலும், ஒரு கலவரமும் இல்லாமல் நடந்து இருக்கின்றனவா? ஆனால் நாங்கள் இந்த 20, 30- ஆண்டுகளில் செய்கின்ற கிளர்ச்சிகளில் - காரியங்களில் - செயல்களில் எங்காவது சிறிது இரத்தம் சிந்தியது உண்டா? கலவரம் ஆனது உண்டா? எங்கள் காரியங்களால் மற்றவர்களுக்குத் தொல்லைகள் இடைஞ்சல்கள் ஏற்பட்டிருக்கின்றனவா? என்று பார்த்தால், ஒன்றும் இருக்காது. கூறுவார்கள், "காந்தி சத்தியாக்கிரம் - அகிம்சையில் நடந்தது" என்று. அவர் நடத்தியதில் எத்தனை பேர் சாவு - எவ்வளவு பேர்களுக்குச் சொத்து நஷ்டம் (இழப்பு) ஏற்பட்டது - பொருள் சேதம் ஏற்பட்டிருக்கிறது தெரியுமா?

மற்ற மற்ற அரசியல் கட்சிகள் கூட, பெரிய பெரிய கிளர்ச்சிகள் என்று நடத்துகிறார்களே - அவர்களால் சொத்துக்குச் சேதம் இல்லாமல் அடிதடி கலவரம் இல்லாமல் நடத்த முடிந்ததா? யாராவது நடத்தினார்களா?

ஒரு கொடி பிடிக்க எத்தனை பேர் அடிவாங்கினார்கள்! இரயில் சங்கிலியை இழுக்கப் போய் எத்தனை பேர் செத்தனர். யாரோ இழுக்க, சம்பந்தம் இல்லாதவன் செத்தான்! கம்யூனிஸ்ட், கண்ணீர்த்துளி, காங்கிரஸ் இவர்கள் நடத்தியது ஒன்றிலாவது பொருட்சேதம், அடிதடி இல்லாமல் நடந்ததா? கண்ணீர்த்துளி கொடிபிடிக்கப் போகிறேன் என்று போனான்; எழுந்திருக்க முடியாமல் படுக்க வைத்து நன்றாக முதுகில் அடித்தான். டால்மியாபுரம் என்பதைக் கல்லக்குடி எனப் பெயர் மாற்றப் போகிறேன் என்று போய் 5- பேர் செத்தானே தவிர, பெயர் மாற்றவில்லை. இந்தப்படி 5, 6- பேர்கள் செத்தார்களே என்று கூடக் கவலை இல்லை. தூத்துக்குடியில் சங்கிலியை இழுத்து அடி, உதை வாங்கினார்கள். சிலர் செத்தார்கள். கம்யூனிஸ்ட் வேலை நிறுத்தம், அறுவடைக் கூலிப் போராட்டம் செய்கிறான் என்றால், அதிலும் அடி, உதை, கலவரம் எல்லாம் ஏற்படுகின்றன. இல்லை என்று கூற முடியுமா? காங்கிரஸ்காரர்களின் கிளர்ச்சியிலும் அப்படியே.

நாங்களும்தான் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றை எதிர்த்தும் கிளர்ச்சிகள் செய்கிறோம். அடிதடி கலவரம் ஏற்பட்டது உண்டா? எங்காவது - யாருக்காவது சொத்து நாசம் உண்டா? விளையாட்டாக நம் திராவிடர் கழகத்தைக் கருத முடியாது. அப்படி நடத்தியதன் பலனாக நல்ல வெற்றி அடைந்து வருகிறோம். பலர் எவ்வளவு பேசியும் என்ன பலன்? நாங்கள் தோன்றிய பிறகு இந்த 10, 20- ஆண்டுகளில் தானே மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. மனிதர்களிடையே ஒரு உணர்ச்சி தோன்றியிருக்கிறது. பார்ப்பான் நிலை முன்பு எப்படியிருந்தது? இன்று அவன் நிலை என்ன? ஒரேயடியாக அவன் ஒழிந்து போகவில்லை நாட்டை விட்டு ஓடிப் போகவில்லை என்றாலும் நாட்டில் 20-ஆண்டுகட்குமுன் பார்ப்பானின் நிலை எப்படி இருந்தது. இன்று அவனது நிலைமை எப்படி உள்ளது என்று பார்த்தாலே தெரியும். சுத்தமாக ஈனம் இல்லாதவன் - மானங்கெட்டவன்தான் இன்றும் பார்ப்பானைச் சாமி என்கின்றான். ஓட்டு (தேர்தலில் வாக்கு) வாங்க வேண்டும் என்பவன்தான் பிராமணன் என்று கூறுகிறான். மற்றவர்கள் எல்லாரும் அவர்களை அய்யரே என்றுதான் கூப்பிடுகிறார்கள்; அவனும் கோபித்துக் கொள்வதில்லை.

மற்றும் கோயில் நிலைதான் என்ன வாழுது? சாமி போகிறது என்றால் பிணம் போகிற மாதிரி போகுது. கூட்டம் சேருவதில்லை. தோழர் டி.கே. சண்முகம் நடத்திய இராசராச சோழன் என்ற நாடகத்திற்குத் தலைமை வகித்துப் பேசும்படி நேரிட்டது. அந்தக் கதை சப்பையானது. ஆனால், நடித்தது - உடுப்பு - சீன் (காட்சி) பேச்சு எல்லாம் திறமையாகவும், ஆடம்பரமாகவும் இருந்தன. ஆனால், அறிவு உணர்ச்சியில்லை. நான் பேசும்போது, நடிப்பு - ஆடை அலங்காரம் பற்றிப் பாராட்டிவிட்டு, "இந்தக் கதை சுத்த உபயோகமில்லாதது; இதைத் தோழர்கள் (டி.கே.எஸ். கம்பெனி) நடித்ததால் பாராட்டத்தக்க மாதிரி நடித்திருக்கிறார்கள். இந்த அரசர்களைப் பற்றிப் பேசவே தகுதியில்லை; அவன் எந்தக் காரியமும் நமக்கு நல்லதாகச் செய்தான் நாம் அனுபவிக்கிறோம் என்று கூறமுடியாது" என்றேன். தோழர் டி.கே. சணமுகம் பேசுகையில் நான் கூறியதைக் கூறிச் சமாதானம் கூறுகையில், "அப்படிக் கூறக் கூடாது. தஞ்சையில் அருமையான கோயில் இருக்கிறது. இதைக் கட்டியவன் இராசராசன்தான்" என்றார். நான் வழிமறித்துக் கேட்டேன். கோயில் பெரியதுதான், இன்று அதனால் யாருக்குப் பிரயோசனம். வவ்வால் தானே அடைகிறது. குச்சிக்காரிகளும், காலிகளும் தானே அங்குக் குடியிருக்கின்றனர்?" என்று.

அடுத்தபடியாக குன்றக்குடி அடிகளார் பேச எழுந்தார். அவர், "பெரியாரிடம் எனக்குப் பற்றும் பாசமும் உண்டு. அவர் கூறினார், கோயிலில் வவ்வால் அடைகிறது என்று. நான் கேட்டேன், யாரால் வவ்வால் அடையும்? கோயிலை இந்நிலைக்குக் கொண்டு வந்தது யார்" என்று கூற ஆரம்பித்தார். (அதாவது நான் தான் அதற்குக் காரணம் என்றும், என் பிரச்சாரத்தின் பயனால்தான் என்பதாகவும் கூறினார்) இதில் அவரே ஒத்துக் கொண்டார், கோயில் வவ்வால் அடையும் நிலைக்கு வந்துவிட்டது என்று.

இங்குத் தலை மயிரைக் காணிக்கையாக வாங்கும் சாமிகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றில் பிரசித்தமானது சிறீரங்கம் ஆகும். சிறீரங்கம் (பெருமாள்) கோயிலில் மொட்டை அடிக்க என்று ஏலத்திற்கு விடுவார்கள். அப்படி மொட்டை அடித்து விடுவதை 1938-ஆம் ஆண்டில் 1,500-ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அந்த ஆண்டிலேயே 15-ஆயிரம் பேர்களுக்கு மேல் மொட்டை அடித்துக் கொண்டனர். அது இருக்கும் போது குறுகி வந்து 1959-லே கணக்குப் பார்த்தால் 3,000- பேர்தான் மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். 57, 58, 59- ஆகிய மூன்று ஆண்டுகளிலே இந்தக் கணக்கு. ஏலம் எடுத்தவருக்கு 900-ரூபாய் நஷ்டம் (இழப்பு) ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஒரு தலை மொட்டை அடிக்க அரை அணா - ஒரு அணா என்றால், இப்போது ஆறு அணா - எட்டு அணா என்று ரேட் (கட்டணம்) இருக்கிறது. இப்படி வாங்கியும் ரூ.900- நஷ்டம். இப்போது இதைவிட இன்னும் குறைவு. யாரும் மொட்டை அடித்துக் கொள்வதில்லை - சிறிது கத்திரித்துக் கொள்கிறார்கள். இதற்குப் பூமுடி என்று பெயர் கூறுகிறார்கள். இம்மாதிரி ஒவ்வொரு திட்டமும் குறைந்துதானே வருகிறது. "உங்களால்தான் (பெரியாரால் தான்) எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. மொட்டை அடிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது" என்று அதை ஏலத்திற்கு எடுத்த காண்டிராக்டர் இந்தக் கணக்கை எழுதிக் கொண்டு வந்து கொடுத்தார்.

இன்று பொம்பளையைப் பார்க்க ஆண்களும் ஆண்களைப் பார்க்கப் பெண்களும் கோயிலுக்குப் போகிறார்களே தவிர வேறு சாமி கும்பிடப் போகிறார்கள் என்று கூற முடியுமா?

இந்நிலைக்குக் காரணம் நம் இயக்கம்தான். ஆச்சாரியார் சுதந்திராக் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்றால் எதற்காக? "இன்னும் 10- வருடத்திற்குள் திராவிடர் கழகம் போகும் போக்கை மாற்றாவிட்டால், கூடவே காமராசர் மந்திரி சபையை மாற்றாவிட்டால், பார்ப்பான் மண்வெட்டி எடுத்துக் கொத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். பார்ப்பனத்திகள் களை எடுக்க நேரிடும். இதுதான் ஆச்சாரியாரின் கண்டுப்பிடிப்பு ஆகும். பார்ப்பான், கடவுள், சாஸ்திரம், சாதி, மதம் இவற்றைக் காப்பாற்றி ஆகவேண்டும். அதற்கு இந்த நாட்டிலே கட்சி இல்லை. இந்த அரசாங்கமும் அதற்கேற்றாற்போல், பார்ப்பானை - சாதியை ஒழிக்கும் காரியங்களைச் செய்கிறது. திராவிடர் கழகம் வேறு மக்களைத் தன் பக்கம் திருப்பி நம்மை (பார்ப்பனர்களை) ஒழிக்கப் பாடுபடுகிறது. இவை இரண்டையும் ஒழிக்காவிட்டால் நாம் செத்தோம், தப்பினோம். இன்று பார்ப்பன ஆட்சியாக இருந்தும் நமக்குப் (பார்ப்பனருக்கு) பாதுகாப்பு இல்லை என்பதால்தான், இந்தப் புதிய கட்சி தோன்றியிருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை. பச்சையாக - தர்மம் கெட்டுப் போச்சு, மைனாரிட்டியாருக்குப் பாதுகாப்பு இல்லை, தனியார் சுதந்தரம் பறிக்கப்படுகிறது."

தர்மம் என்றால் என்ன? வருணாஸ்ரம தர்மம்தானே! சூத்திரனுக்கு எதுக்குப் படிப்பு? அவன் தகப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்பதுதானே அது. மைனாரிட்டி (சிறுபான்மை) வகுப்பார் என்பவர்கள்தானே கல்வி - உத்தியோகம் பூராவிலும் நிறைந்திருக்கின்றனர். நம்மாள் 100-க்கு 10, 15- பேருக்குக்கூடப் படிப்பு இல்லை அவர்கள் (பார்ப்பனர்) 100-க்கு 100- மொட்டு, முளை, குஞ்சு முதல் படித்து விட்டிருக்கின்றனர்.

மற்ற எந்தக் காரியமும் நம்மால் முடியாவிட்டாலும், இந்த 5, 6 வருடங்களாக காமராசர் மந்திரி சபையைக் காப்பாற்றி இருக்கிறோம். அதனால் இன்று கல்வித் துறையிலே பெரிய புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டு, நம்மக்கள் அதிக அளவில் கல்வி கற்று, உத்தியோகம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பார்ப்பானுடைய பிழைப்பு - கோயில் மணி அடிப்பது, புரோகிதம் செய்வது, உத்தியோகம் செய்வது இவை தான். இப்போது மணி அடிப்பதும் ஒழிந்து, புரோகிதமும் இல்லை என்று ஏற்பட்டு, உத்தியோகத்திற்கும் ஆபத்து என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு அணை போட வேண்டும் என்று கருதித்தான் நம் ஆள்களில் சில துரோகிகளைச் சேர்த்துக் கொண்டு தங்களுடைய கட்சிக்கும் ஆதரவு இருக்கிறது என்று கூறிக்கொண்டு காமராசர் ஆட்சியை ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

சிலர், என்ன இது? பெரியாரும் திராவிடர் கழகமும் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று ஆகாயத்திற்கும், பூமிக்கும் குதித்தார்கள். இப்போது காங்கிரசுக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று பெரியார் சொல்லுகிறாரே என்று கருதுகிறார்கள். நான் ஒன்றும் இரகசியமாகக் கூறவில்லை. நாளைக்கு வரப் போகிற தேர்தலில் காங்கிரசை ஆதரித்து ஓட்டுப் போடணும் என்றுதான் கூறுவேன். அதற்காக நான் வெட்கப்படுவதில்லை. உங்களுக்கு வேண்டுமானால் ஆச்சாரியமாக இருக்கலாம். காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே அதை விட்டு வந்தவன் நான். இன்றுநான் காங்கிரசில் இருந்தால் மந்திரியாகியிருப்பேன். நான் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று கூறியபோது - அது பார்ப்பானுடைய நலத்திற்காகவே இருப்பதால் ஒழிக்க வேண்டும் என்றேன். அப்போது பார்ப்பனர்கள் காங்கிரசைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி வேலை செய்தனர். காங்கிரசில் பார்ப்பானை அசைக்க முடியாத நிலை அப்போது. காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்கிற நம் பிரச்சாரத்தாலே நம் வசத்திற்கு அது வந்துவிட்டது. காங்கிரசைக் காப்பாற்றணும் என்று பார்ப்பான் கூற வேண்டியது போய், நாம் காப்பாற்றணும் என்றும், அவன் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று கூறியும், அதற்காகப் படையெடுக்கும்படியும் ஆகிவிட்டது.

ஆச்சாரியார், "காந்தி கர்கிரசை ஆதரிக்கிறேன். காந்தியார் இருந்தால் இப்படி ஆகியிருக்காது" என்கிறார். அதாவது காந்தி இருந்தபோது காங்கிரஸ் முழுக்க முழுக்க சாதி, மதம், கடவுள், புராணம் இவற்றைப் பாதுகாத்தது. அப்படிப்பட்ட காங்கிரஸ் இன்று சாதி, மதம், கடவுள், புராணம் ஆகியவற்றைக் கவனிக்கமாட்டேன் என்கிறது.

எப்படியென்றால் இராமசாமி (நான்) சொல்கிறபடிதான் நடக்கிறது என்கிறார்கள்.

காந்தி கண்ட இராமராஜ்ஜியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து "எல்லோரும் படித்தால் வேலைக்கு எங்கே போவது? தகப்பன் தொழிலை மகன் செய்யட்டும் - இரண்டு நேரம் படிப்பு எதற்கு? ஒரு நேரம் படித்தால் போதும்" என்றார். சாதிகளில் பார்ப்பனச் சாதி மைனாரிட்டியாக (சிறுபான்மையானதாக) இருந்தும் அவரை அசைக்க முடியவில்லை. 6,000 பள்ளிகளை மூடினார். ஹைஸ்கூலே (உயர்நிலைப் பள்ளியே) இனி வேண்டாம் என்றார். காலேஜில் (கல்லூரியில்) இண்டர்வியூ மார்க் (நேர்முகத் தேர்வு மதிப்பெண்) மூலம் நம் மாணவர்கள் சேர முடியாமல் செய்தார்.

பிறகு நம்முடைய நல்வாய்ப்பாக காமராசர் (முதலமைச்சராக) வந்தார். உடனே குலக்கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டினார். அவர் மூடிய 6000- பள்ளிகளைத் திறந்ததோடு மேற்கொண்டும் 6000- பள்ளிகளைத் திறந்தார். ஹைகூஸ்லே வேண்டாம் என்று ஆச்சாரியார் எழுதி வைத்தார். இவர் பல ஹைஸ்கூல்களைப் புதிதாகத் திறந்தார். 12- கல்லூரிகளைத் திறந்து "எங்கள் காலேஜில் இடம் இருக்கிறது விண்ணப்பிக்கலாம்" என்று விளம்பரம் வரும்படியாகச் செய்தார்.

எங்கள் இயக்கத்தின் பலன் இன்னும் என்ன என்று கேட்டால், இந்தக் குடந்தையை எடுத்துக் கொள்ளுங்கள். 5, 6- கோயில்கள் இருக்கின்றன. அங்குப் பக்தியோடு இப்போது யாராவது போகிறார்களா? இங்கே இந்தக் கூட்டத்தில் 6- ஆயிரம் பேர்களுக்குமேல் இருக்கிறீர்கள். யாருடைய நெற்றியிலாவது நாமம் - விபூதி - பட்டை இருக்கிறதா? இல்லை. தப்பித்தவறி ஒருவர் இருவர்களுக்கு இருந்தால் அவர்களும் கடைசியில் மறைவாக இருக்கிறார்கள். சிலர் துணிவாக தைரியத்துடன் அழித்துவிட்டு முன்னாடி வந்து உட்கார்ந்து விடுகிறார்கள்.

தமிழர்களாகிய நாம் காமராசருக்கு நன்றி செலுத்த வேண்டும். நம் பிள்ளைகளுக்குச் சம்பளம் இல்லை - சோறு - புத்தகம், உடைகள் இலவசம் என்று இப்படிப் பல நன்மைகள் செய்து வருகிறார்கள். தமிழர்கள் என்பவர்கள் இவற்றுக்கெல்லாம் நன்றி கூறாமல் - மாறாக இப்படிச் செய்தவரையும் திட்டிக்கொண்டு, இதன் மூலம் வயிறு வளர்க்கிறார்கள். தமிழர்களுடைய தற்குறித் தன்மையை நீக்க - அவர்கள் முன்னேற - நீ என்ன செய்தாய் என்றால், ஒன்றும் இல்லை. காமராசர் தான் செய்கிறார். அவருடைய அருமையான பொற்காலத்தில் - (தங்க ஆட்சிக் காலத்தில்) நாம் இருக்கிறோம் இப்படிப்பட்ட காலம் இதற்கு முன் இருந்ததில்லை. காமராசர் (ஆட்சியிலிருந்து) ஒழிந்தால் பிறகும் இருக்காது.

உத்தியோகத்தை எடுத்துக்கொண்டால் நமக்கு 100-க்கு 100- பியூன் வேலை - மசால்ஜி வேலை கட்டுவது இதுதான். மேலே எல்லா உத்தியோகமும் பார்ப்பானுக்கே. இந்த வேலை தான் நம் (திராவிட) இனத்திற்கு முத்திரை போட்டதாகும். இதில் ஒருவனையாவது பார்ப்பான் இருக்கின்றான் என்று காட்ட முடியுமா?

1927-இல் சுயமரியாதைச் சங்கம் இருந்த காலம். அப்போது பஞ்சாயத்து போர்டு (ஊராட்சி மன்ற) உறுப்பினர்களை ஜில்லாபோர்டே (மாவட்டக் கழகம்) நியமிக்கும். பட்டுக்கோட்டைப் பகுதியில் ஓர் ஆதிதிராவிடரை உள்ளே உட்கார வைக்க மறுத்துவிட்டார் தலைவராக இருந்த நாடிமுத்துப் பிள்ளை. வெளியில் உட்கார வைத்து அந்த ஆதிதிராவிட உறுப்பினரிடம் கையெழுத்து வாங்கி வந்தார். இந்தக் கொடுமையை எதிர்த்து - திராவிடர் கழகத் தோழர்கள் பஞ்சாயத்துக் கூட்டம் நடக்கும்போது - அந்த அரிஜன மெம்பரை (உறுப்பினர்) வலுக்கட்டாயமாக உள்ளே இட்டுச் சென்று நாற்காலியில் அமர்த்தினார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை அவரால். அந்த ஊர் திராவிடர் கழகக் கோட்டை என்பதால் - நம் கழகக் கோட்டை என்பதால் - நம் தோழர்கள் துணிந்து செய்தனர். இன்று அந்த அரிஜனனுடைய நிலை என்ன? கலெக்டராகவும் (மாவட்ட ஆட்சியராகவும்), மந்திரியாகவும் (அமைச்சராகவும்), பெரிய உத்தியோகங்களிலும் ஆதிதிராவிடன் இருக்கிறான். கோயிலில் அவனுக்குப் பூரண கும்ப மரியாதை செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது இருக்கிறதைவிட இன்னும் அதிசயமாக ஆதிதிராவிடன் மேலே வந்துவிடுவான் போல் இருக்கிறதே என்று பார்ப்பான் நடுங்குகிறான்.

தாசி ஒழிப்புப்பற்றி சட்டசபையிலே சட்டம் கொண்டு வந்தபோது சத்தியமூர்த்தி என்ற பார்ப்பனர், "பொட்டுக் கட்டுவது என்பது கடவுள் காரியம் - புண்ணிய காரியம். இதிலே பிரவேசிக்கக் கூடாது, இதை ஒழிக்கக் கூடாது" என்று எதிர்த்துப் பேசினார். அப்போது முத்து லெட்சுமி ரெட்டி என்ற அம்மையார் எழுந்து, "இது புண்ணிய காரியம்தான் - கடவுள் காரியம்தான். இத்தனை நாள்தான் நாங்கள் (திராவிடர்) செய்து வந்தோம். இனி இந்தக் கடவுள் காரியத்தை நீங்கள் (பார்ப்பனர்) பொட்டுக் கட்டிக் கொண்டு செய்யுங்களேன்" என்று சுடச்சுடப் பதில் கூறினார்.

-------------------------------------
30.01.1960- அன்று குடந்தையில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு- "விடுதலை" 19.02.1960
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா
Pin It