மறுபடியும் அதே காங்கிரஸில் உள்ளவரும், அதே பதவியில் அமர்ந்தவருமான திரு. காமராசரை ஆதரித்தது ஏன்? காரணம் அவருடைய செய்கைகள் நம்முடைய கொள்கைகளுக்கு ஏற்றவையாய் இருந்தன. வெகு சுலபத்தில் நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றினார். பெரும் நஷ்டத்தை அடைந்து சாதிக்க வேண்டிய காரியத்தை மிக எளிதில் செய்து முடித்தார். வருணாசிரமத்தைக் காப்பாற்ற, ஜாதிப்பாகுபாடுகளை நிலைக்கச் செய்ய - மக்களை மேன்மேலும் அறியாமையிலேயே ஆழ்த்த சூழ்ச்சி முறையால் ஏற்படுத்தப்பட்ட இராஜகோபாலாச்சாரியாரின் புதுக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்.
எனவேதான் நான் வலியச் சென்று அவரை ஆதரித்தேன். அவரின் ஆட்சிக்குப் பங்கம் ஏற்படாவண்ணம் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகி விட்டது.
மற்றும் அவருக்குத் 'தான் தமிழன்' என்ற உணர்ச்சியுண்டு. எதையும் தமிழ் மக்களின் நன்மைக்கென்று இன்றுவரை செய்துவருகிறார். நம் மக்களுள் கல்வி கற்கும் ஒரு சிலரும் எட்டாம் வகுப்பு வரைதான் படிக்கின்றனர்.
இதன்றியும் இராமராஜ்யத்தில் (வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டவே உண்டாக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியில்) இருந்து கொண்டே, "சமுதாயத்தில் ஜாதி வித்தியாசம் ஒழிந்தால்தான் உண்மைச் சுதந்திர நாடாகிச் சாந்தியடைய முடியும். ஜாதி ஒழியவில்லையேல் இரத்தக்களறி ஏற்படும்" என்று பச்சையாக ஜாதியை ஒழிக்கத் துணிந்து கூறுகிறார். இப்படி காந்தியார் கூடக் கூறியதில்லையே! காந்தி ராமராஜ்யத்தை உண்டாக்க வந்தவராயிற்றே! எப்படிக் கூறமுடியும்? இவ்விதம் இன்றைக்கு நாம் சொல்லுவதும் திரு. காமராசர் சொல்லுவதும் ஒன்றாகத்தான் இருக்கிறது.
எனவே நான் சொல்கின்ற இடங்கள்தோறும் அவர் நமக்குச் செய்துள்ள நன்மைகளை எடுத்துக்கூறி ஆதரிப்பதன் அவசியத்தை விளக்கி வருகிறேன்.
இதைக் கண்ட பார்ப்பனர்கள் அவருடைய ஆட்சிக்குக் கேடு செய்யச் சூழ்ச்சிகள் பல செய்கின்றனர். வெளிப்பகட்டுக்காகிலும் ஒரு சில பார்ப்பனர் அவரை வார்த்தை அளவில் புகழ்ந்து பேசுகின்றனரே தவிர, மனதிற்குள் எலியும், பூனையும் போல் எதிரியாக இருக்கின்றனர். இன்றைய நிலையில் சிறு பார்ப்பனச் சமுதாயமே எதிரியாகிவிட்டது.
நமக்குப் பார்ப்பனர்கள் எதிரியாக உள்ளதைப் போன்று அவருக்குப் பார்ப்பனர்கள் எதிராக இருக்கின்றனர். நாமும் அவருடைய ஆட்சிக்கு ஆதரவு அளிக்கவில்லையேல் பார்ப்பனர்கள் எண்ணம் தான் நிறைவேறும். குடியாத்தம் தேர்தலிலேயே அவருடைய ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்திருப்பர்.
ஆகவே நம்முடைய கொள்கைப்படி நம் மக்களுக்கு யார் நன்மை செய்தாலும் அவர்களுக்கு நம் நன்றியறிதலைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
பார்ப்பனர்களின் மதம், சாஸ்திர, புராணங்களையும், கடவுள்களையும் நாங்கள் எதிர்ப்பது திராவிட மக்களின் நன்மைகென்றேயாகும்.
இவைகள் ஒழிக்க வேண்டும் என்று கூறுவதும், ஆதாரங்கள் பலவற்றையும் காட்டியே பார்ப்பனர்கள் இருப்பதால்தான் நாம் பகுத்தறிவற்றவர்களாக, இரண்டாயிரம் ஆண்டுகளாக மூடர்களாக, மிருகத்தினும் கேடானவர்களாக பார்ப்பனர்களின் அடிமைகளாக வாழுகிறோம்.
இங்குள்ளதைப் போன்று இவ்விதப் பார்ப்பனர்களும், பார்ப்பனப் புரட்டுகளும் வெளிநாடுகளில் இல்லாததால்தான், அந்நாடுகளெல்லாம் ஒரு காலத்தில் நம்மைவிட காட்டுமிராண்டி நாடுகளாக, நாம் அப்பொழுது அவர்களைப் பார்த்து ஏளனமும் பரிகாசமும் செய்யும் முறையில் இருந்திருந்தாலும், இன்றைக்கு எவ்வளவோ நாகரிகம் கண்டவர்களாக, கல்வியறிவுள்ளவர்களாகத் திகழ்கின்றனர். தடையேதுமின்றி மூடப்பழக்க வழக்கத்தில் தங்கள் மனதைப் பறிகொடுக்காத காரணத்தால், சுதந்தர அறிவுள்ள அவர்கள், தங்கள் பகுத்தறிவை நாளாவிதங்களிலும் செலுத்தி அதிசயிக்கத்தகும் பற்பல விஞ்ஞான சாதனங்களைக் காணுகின்றனர்.
ஆனால் இங்குள்ள கம்யூனிஸ்டுகள் கூறுவதைப் போன்று பணக்காரனை ஒழிப்பதால் நாம் பகுத்தறிவு பெறமுடியாது. நம் இழிநிலை நீங்கி மனிதத்தன்மையுடன் வாழ முடியாது - அயல்நாடுகளில் எல்லாம் பணக்காரர்களும் மிராசுதார்களும் இருக்கின்றனர். ஆனால் அங்கு மனிதத்தன்மையற்றவன் இல்லை. இழிஜாதி மகன் கிடையாது. மூடப்பழக்க வழக்கங்கள் இல்லை. இதற்கெல்லாம் காரணம் என்னவெனில் பார்ப்பான் என்ற ஒருவன் மட்டும் அங்கு இல்லாததால்தான் அவ்விதக் கொடுமைகள் இல்லை.
ஆனால், பார்ப்பனப் புழுக்களால் இவ்விதத் தொற்று நோய்கள் உண்டாக்கப்பட்டன. அப்புழுக்கள் உள்ளவரை இந்நோய்கள் நம்மைவிட்டகலாது என்பதை உறுதியுடன் கூறலாம். எனவே அவைகளை அப்புறப்படுத்தும் காரியத்தில் நாம் எதையும் செய்யத் துணிவு கொள்ள வேண்டும்.
------------------------------
சேலம் சிவதாபுரத்தில் 17.04.1955-இல் தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை", 29.04.1955
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (