மனிதனுக்குத் திருமணம் தேவையில்லை!
 
periyar_with_dogஇந்த நிகழ்ச்சியானது நம்மிலே நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த மூடநம்பிக்கைக்காரர்கள் நடத்தி வைக்கப்பட்ட முறைக்கு மாறாகப் பகுத்தறிவோடு நடைபெறுகிறது. இம்முறையானது இதுவரை நம் நாட்டில் பர்ர்ப்பன ஆதிக்க அரசாங்கமாக இருந்தபடியால் இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியற்றதாக இருந்தன.
இப்போது வந்துள்ள ஆட்சியானது பகுத்தறிவாளர்கள் ஆட்சியானதால், இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்று சட்டமியற்றி இருக்கின்றது. அதற்காக நாம் இந்த அரசாங்கத்திற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
இம்முறையானது நம்மால் தோற்றுவிக்கப்பட்டது என்றாலும், இதுபோன்ற முறையானது அரசாங்கத்தால் ரிஜிஸ்டர் திருமணம் என்கின்ற பெயரில் நீண்ட நாட்களாக நடைபெற்றுக் கொண்டு வந்ததேயாகும். ரிஜிஸ்டர் திருமணத்திற்கும் இங்கு நடைபெறும் திருமணத்திற்கும் உள்ள பேதம் என்னவென்றால், ரிஜிஸ்டர் திருமணத்தில் மணமக்கள் நான் இன்னாரைக் கணவனாக மனைவியாக ஏற்றுக் கொண்டேன் என்று சொல்ல வேண்டும்.

அது எஜமான் - அடிமை என்கின்ற தன்மையை வலியுறுத்தக் கூடியதாகும் என்பதால் அதனை மாற்றி இங்கு நடைபெற்ற இத்திருமணத்தில் மணமக்கள் ஒருவரையொருவர் துணைவராக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்கள். இதன் மூலம் எஜமான் - அடிமை என்பது கிடையாது. ஒருவருக்கொருவர் நண்பர்கள் என்பது வலியுறுத்தப்படுகிறது.

நண்பர் நஞ்சய்யா அவர்கள் நம் இயக்கத்தில் 20, 30-வருடங்களாக இருந்து தொண்டாற்றி வருகிறவர்கள் என்றாலும், அவர் இதுவரை தனது குடும்பத்தில் நடந்த எந்தக் காரியத்தையும் செய்வதில் இயக்கக் கொள்கைப்படி நடந்து கொள்வதில்லை. தனது ஜாதியைக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் கருதி, தனது ஜாதியைப் பார்த்தே பெண் கொடுப்பதும், எடுப்பதுமாகக் கொண்டிருக்கின்றாரே தவிர, வேறு ஜாதியில் இதுவரைத் திருமணம் செய்தது கிடையாது. நண்பர் நஞ்சய்யாவைப் போலவே நாகரசம்பட்டியில் உள்ள சம்பந்தம் அவர்கள் குடும்பமும் எனக்கு மிக வேண்டிய குடும்பமாகும்.

சென்ற ஆண்டு அவர்கள் குடும்பத் திருமணத்திற்குச் சென்றிருந்த போது, ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்வதைக் கண்டித்துப் பேசினேன். இந்த வருடம் சம்பந்தம் அவரது தம்பி ஏகாம்பரம் என்பவர் அஸிஸ்டெண்ட் இன்ஜினியராக இருப்பவர். அவர் தனது திருமணத்தை நான் சொன்னபடி வேறு ஜாதியிலேயே செய்து கொண்டார். மேலும் அவர் திருமணம் செய்து கொண்டது எங்கள் 4, 5-பேருக்குத் தான் தெரியும். திருமணம் முடிந்து சில நாட்களுக்குப் பின்தான் பாராட்டு, விருந்து என்று எல்லோருக்கும் கொடுத்தார்.

அந்தப் பெண் டாக்டருக்குப் படித்து டாக்டராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. இரண்டு பேருக்கும் நல்ல வருவாய் வருகிறது. எது பற்றியும் அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. நல்வாழ்வாக அமைந்து விட்டது. இனிமேல் நடக்க இருக்கிற திருமணத்தையாவது நண்பர் நஞ்சய்யா அவர்கள், தனது ஜாதியை விட்டு வேறு ஜாதியில் செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் அவர் சுயமரியாதை இயக்கத்தில் இருப்பதற்கு அர்த்தமாகும்.

பொதுவாகத் திருமணம் என்பது ஓர் ஆணிற்குப் பெண்ணை அடிமையாக்குவது என்கின்ற அடிப்படையைக் கொண்டதே ஆகும். இங்கு நடைபெற்ற இம்முறையில் இருவரும் சம அந்தஸ்து உடையவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு, ஆணிற்குள்ள உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கும் உண்டு என்பதையும், இருவரும் சரிசமமானவர்கள் என்பதையும், பெண்கள் விடுதலையை நிலை நிறுத்துவதுமானதே இம்முறையாகும். பெண்கள் திருமணத்தின் மூலமாக ஆணிற்கு அடிமைப்படுத்தப்பட்டு விடுவதால் மனித சமுதாயத்தில் பகுதியுள்ள பெண்கள் சமுதயத்திற்குப் பயன்பட முடியாமலே போய் விடுகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை இத்திருமணமே மனிதனுக்குத் தேவையற்றது என்ற கொள்கையுடையவனாவேன். எதற்காக மனிதன் தானே வலுவில் போய்த் தொல்லையில் சிக்கிக் கொண்டு தொல்லைப்பட வேண்டும்?

சுதந்திரமாக, இன்பமாக கவலையற்ற வாழ வேண்டிய மனித ஜீவன், குடும்பம் - இல்லறம் என்கின்ற மடமையில் சிக்கிப் பெண் தனது சுதந்திரத்தை இழப்பதோடு ஆணும் தனது வாழ்நாள் பூராவும் குடும்பம், பிள்ளைக் குட்டி என்று அதற்குப் பாடுபடுவதையே தன் வாழ் நாளெல்லாம் கொண்டிருக்க வேண்டியதாகிறது. இதனால் சமுதாயத்திற்கு இவர்களால் எந்தப் பயனுமே கிடைக்காமல் போய் விடுகின்றது.

நம்மிடையே இருக்கும் சாமி கேட்பது, சகுனம் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, குறி பார்ப்பது, தாலிக் கட்டுவது போன்றவை யாவும் முட்டாள்தனமான மூட நம்பிக்கையே யாகும். இதனால் சில பேர் பிழைக்கிறார்கள் என்பதோடு, சிறுபான்மையாக இருக்கிற சிலர் பெரும்பான்மையான மக்களை முட்டாள்களாக்கி, மூட நம்பிக்கைக்காரர்களாக்கி, அடிமைகளாக்கி, இழி மக்களாக நாலாம் ஜாதி மக்களாக, கீழ் மக்களாக ஆக்கி வைத்திருக்கிறனர்.

உலகில் 300-கோடி மக்கள் இருக்கிறார்கள் என்றால் 270-கோடி மக்களுக்கு இந்த நல்ல நேரம், சகுனம், ஜாதகம் என்பதெல்லாம் கிடையாது. இம்மாதிரி காரியங்களெல்லாம் மனிதனை மடையனாக்க சூழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டவையேயாகும். நம்மிடமிருக்கின்ற முட்டாள்தனம், மூட நம்பிக்கையின் காரணமாக நாம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை அடைய முடியாதவர்களாக இருக்கின்றோம்.

மனித சமுதாயம் மற்ற நாடுகளில் விஞ்ஞான அதிசய அற்பதங்களையெல்லாம் காணும்போது, நம் நாட்டு மக்கள் இன்னமும் மடமையில் ஆழ்ந்து காட்டு மிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நம் மதத்தினால் முன்னுக்கு வந்தவன் பார்ப்பானே தவிர, நாம் அல்ல. நாம் இந்த மதம், கடவுள் ஆகிய இவற்றில் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகளாக சூத்திரனாக இருக்கின்றோம் நம் தாய்மார்கள் சூத்திச்சிகளாக இருக்கின்றார்கள். இதையெல்லாம் மாற்ற வேண்டுமென்பதே நமது இயக்கத்தின் தொண்டாகும்.

தாய்மார்கள் பெண்களை நன்கு படிக்க வைக்க வேண்டும். எதுவரை படிக்க வைக்க வேண்டுமென்றால், அது தன் கணவனைத் தானே தேடிக் கொள்ளும் பக்குவம் அடைகிற வரைப் படிக்க வைக்க வேண்டும். தானே பிழைக்கக் கூடிய அளவுக்கு ஒரு தொழிலைப் பயிற்றுவிக்க வேண்டும்.

சென்ற காமராசர் ஆட்சி எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவசக் கல்வியைக் கொடுத்தது. இன்றைய பகுத்தறிவாளர்கள் ஆட்சியானது பி.யூ.சி. கல்லூரி வகுப்பு வரை இலவசமாக்கியுள்ளது. சாதாரண ஏழை எளியவர்கள் கூட கல்லூரி வரைப் படிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பாராட்டுவது நம் கடமையாகும்.

மணமக்கள் மத சம்பந்தமான பண்டிகைகள் மத சம்பந்தமான கோயில்களுக்குப் போகக் கூடாது. யோக்கியமாக இன்னொருத்தனை ஏமாற்றாமல் தன்னால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வதே பக்தியாகும்.

என்னத்துக்குக் கோயில் என்றால் முட்டாள்களுக்கு. என்னத்துக்கு உருவம் என்றால், மடையர்களுக்கு என்று வேதமே சொல்கின்றது. கோயிலுக்குப் போவதால் புத்திக் கெடுமே ஒழிய, அறிவு வளர்ச்சியடையாது. முட்டாள்தனம் தான் பெருகும். கோயிலுக்குப் போவதை விட்டு நெய்வேலி, பம்பாய் போன்ற தொழில் நகரங்களுக்குப் போய் இயந்திர சாலைகளில் இயந்திரங்கள் வேலை செய்வதைப் பார்த்தால் அறிவு வளர்ச்சியடையும்.

சினிமாவைப் பார்ப்பதால் நம்முடைய அறிவும், நேரமும், பொருளும் நாசமாவதோடு மனித ஒழுக்கமும் கெடுகிறது. குச்சிக்காரிகளும், அயோக்கியர்களும் சேர்ந்து ஆடும் களியாட்டங்களைப் பார்க்க நாம் ஏன் நமது காசைச் செலவு செய்ய வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சினிமாவில் இருக்கிறவர்களில் எவரும் யோக்கியர்கள் கிடையாது.

இந்த சினிமாவினால் விளையும் கேடு மிக அதிகமாகும். 10-வயது நிரம்பாத பெண்கள் எல்லாம் அவற்றைக் காண்பதால், உணர்ச்சி வயப்பட்டு மிகக் குறைந்த வயதிலேயே ஆளாகி (பருவமடைந்து) விடுகின்றனர். நீங்கள் கண்டிப்பாய் சினிமாவிற்குப் போகக் கூடாது. கண்காட்சிகளைச் சென்று பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, இத்திருமணத்தை இம்முறையில் ஏற்பாடு செய்த மணமக்களின் பெற்றோர்களையும், மணமக்களையும் பாராட்டுகிறேன்.

---------------------------

02.03.1969 அன்று நடைபெற்ற சேலம் திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை.--------- "விடுதலை" 08.03.1969)

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It