தமிழருக்கு இன உணர்ச்சி இல்லையே!

இந்த ஊருக்கு முதல்முறையாக வரும்படியான வாய்ப்பு எனக்கு இப்போது கிடைத்துள்ளது. ஆனால் இனி அடிக்கடி எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும். காரணம் நான் இவ்வூருக்குக் காலையில் வந்தது முதல் எல்லோரும் வந்து தங்களது அன்பைச் செலுத்திவிட்டுப் போனார்கள். அவர்களுடைய அந்த அன்பையும், முகக்குறிப்பையும், மரியாதையையும் அவர்களுக்கு ஏதோ ஒரு பற்று ஏற்பட்டு இருக்கிறது என்று உணர்ந்தேன். ஆகவே இனி பார்க்கிற போது என்னிடத்தில் அடிக்கடி இந்த ஊருக்கு வருவேன் என்றுதான் நம்புகிறேன்.

நம்நாட்டில் என்னைப் பொறுத்தவரையில் நான் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிக்கு எதிர்ப்பு அதிகம்; ஏராளமான தொல்லை இருட்டடிப்பு. இதற்கிடையில் நான் என்னுடைய கொள்கைகளைச் சொல்லிக் கொண்டு வரவேண்டியிருக்கிறது. நம்நாட்டில் பத்திரிகைகள் ஏராளமாக இருந்தும்கூட அவை எல்லாம் மக்களை ஏய்த்து, வயிறு வளர்ப்பதற்காகவும், அவரவர்கள் சுயநலத்துக்கு ஆகவுமே உள்ளவையாக இருக்கின்றன. பெரும்பாலும் பத்திரிக்கைகள் பார்ப்பனர் கையில் உள்ளன.

பார்ப்பனர்கள் நமக்கு இயற்கையில் பிறவி விரோதிகள் - நாமும் அவர்களும் எலியும் பூனையும் போல அவ்வளவு கடுமையான விரோதிகள்! அவர்கள் கையில் மற்றத் துறைகளில் ஆதிக்கம் சிக்கிக்கொண்டு இருப்பதுபோலவே பத்திரிக்கை உலகமும் சிக்கிக் கொண்டு உள்ளது.

அவர்களது கவலையெல்லாம் நமது இழிவும் அவர்கள் உயர்வாழ்வும் தான். ஆகவே அவர்களது சாதி உயர்வு, வாழ்வுக்குக் கேடு பயக்கும் என்று அவர்கள் நினைக்கிற நம்முடைய காரியங்களை மறைப்பதையே பிரதானமாகக் கொண்டு உள்ளார்கள்.

பார்ப்பனரல்லாதவர்கள் சிலர் பத்திரிக்கை நடத்துகிறார்களே, அவர்களும்கூட யோக்கியமாக இல்லை. அவர்களது சுயநலம் சொந்தத்திற்குப் பணம் திரட்டல்தான் அவர்களுடைய குறிக்கோளாக இருக்கிறது. பார்ப்பனருக்கு உள்ள இன உணர்ச்சியில் 1000-இல் ஒரு பங்கு கூட நம்மவர்களுக்குக் கிடையாது. எனது நீண்ட நாளைய ஆசை நம் திராவிடர்களும் பத்திரிக்கை உலகில் நுழைய வேண்டும் என்று! ஆனால் என்ன ஆயிற்று?

மதுரையில் நாட்டுக் கோட்டை நகரத்தார் ஒருவர் ஒரு தினசரி நடத்துகிறார். "தமிழ் நாடு"; என்று அதற்குப் பெயர். அது போலவே கோவை சென்னையிலிருந்து ஒரு தினசரி " நவஇந்தியா"; என்ற ஒன்று வருகிறது. அவர் நாயுடு வகுப்பு. இவர்கள் போக்கைப் பார்த்தால் பார்ப்பானே மேல் என்று சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இருக்கிறது அவர்களுடைய போக்கு! பார்ப்பான் எதை இருட்டடிக்கிறானோ அதையே இவர்களும் இருட்டடிக்கிறார்கள்! பார்ப்பான் எதை விளம்பரப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறானோ அதையே இவர்களும் எழுதுகிறார்கள்! பார்ப்பானுக்காவது ஒரு கொள்கை உண்டு; அதாவது தன்னைத் தவிர தன் இனத்தைத் தவிர மற்றவர்கள் அழிய வேண்டும்; தலை எடுக்கக்கூடாது என்கின்ற ஒரு கொள்கை உண்டு. இவர்களுக்குத் தங்கள் இனம் என்கின்ற உணர்ச்சியானது இல்லை. இதைப் பார்க்கும்போது தமிழன் பத்திரிக்கை என்று சொல்லத் தோன்றுவதே இல்லை. ஏதோ தமிழனும் பத்திரிக்கை நடத்துகிறானே என்ற மகிழ்ச்சி; அவ்வளவுதான். நானும் ஒரு பத்திரிகை பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு உட்பட்டுப் பல வருடங்களாக நடத்திக் கொண்டு வருகிறேன். நான் போன மாதம் பேசிய பேச்சு இந்த மாதம் தான் அதில் வருகிறது. இதைக் கண்டு நான் ஒன்றும் ஆச்சரியப்படுவதில்லை. மாறாக இப்போதாவது வருகிறதே என்று மகிழ்ச்சிதான் கொள்ளுகிறேன்.

எனவே தான் பல புத்தகங்களை எளிய விலையில் அச்சுப்போட்டு விற்கிறோம். இந்த நாட்டுப் பத்திரிகைகள் என்பவைகளால் கடுகளவு கூட நமக்குப் பயனும் இல்லை. கடவுள் புரட்டைப் பற்றியோ, மதப்புரட்டைப் பற்றியோ, பார்ப்பான் விஷமத்தனத்தைப் பற்றியோ அவர்கள் நினைக்கவே மாட்டார்கள்.

இவ்வளவு ஆபத்துக்கிடையில் நான் ஒருவன் தான் வாழ்கிறேன். கடவுளை எரித்துக் கொண்டு, மதத்தை ஒழித்துக் கொண்டு, பார்ப்பானை ஒழிக்க முயற்சி செய்து கொண்டு, வாழும் கழகம் எங்கள் திராவிடர் கழகம் ஒன்றுதான். கடவுளால், மதத்தால், பார்ப்பானால் நாம் எல்லோரும் இழி மக்கள் ஆக்கப்பட்டும் இவற்றை ஒழிக்க வேறு ஒருவரும் இல்லையே இந்த நாட்டில்? மற்றவர்கள் இதை நினைத்தால் நெஞ்சு வெந்து போகும் என்று நினைக்கிறார்களே? இதை எடுத்துச் சொல்ல நடுங்குகிறார்களே? அவன் அடிக்கும் கொள்ளையில் இலாபத்தில் நமக்குப் பங்கு கிடைக்கிறது என்றுதானே மற்றவன் பார்க்கிறான்? திராவிடர் கழகம் ஒன்றுதான் பார்ப்பானை எதிர்த்துக் கொண்டு இந்த நாட்டில் வாழ்கிறது. மற்றவைகள் எல்லாம் பார்ப்பான் காலைக் கழுவி தீர்த்தம் சாப்பிட்டுக் கொண்டு வாழ்கின்றன. அவை அப்படி வாழ்வதில் என்ன ஆச்சரியம்? அது மிகமிகச் சர்வசாதாரணமாகப் போய்விட்டது. ஆனால் நான் சொல்லுகிறேன். சாதாரணமாக இந்த நாட்டில் காந்தியைத் தெரியாதவர்கள் எல்லோருக்கும் கூட என்னைப் பற்றித் தெரியும்.

எனக்கு என்னைப் பற்றி - என் காரியங்களைப் பற்றி விளம்பரப்படுத்த முடியவில்லை என்றாலும்கூட என்னுடைய எதிரிகளாலேயே நானும் என்னுடைய கொள்கைகளும் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு உதாரணம் சொல்லுகிறேன். ஒருமுறை திருவண்ணாமலைக்கு என்னுடைய காரில் போய்க் கொண்டிருந்தேன். கார் உளுந்தூர் பேட்டை அருகில் சென்றதும் ஒரு டயர் பங்ச்சர் ஆகிவிட்டது. அதற்காக வண்டி நிறுத்தப்பட்டு இருக்கும் போது ஒரு மாடு மேய்த்துக் கொண்டிருந்த பையன்; என்னிடத்தில் வந்தான். அவன் கிராமத்துப் பையன் "நீங்கள் எங்குப் போகிறீர்கள்" என்று என்னைக் கேட்டான். "நான் திருவண்ணாமலைக்குச் "சாமி தரிசனத்திற்காக"ப் போகிறேன்" என்று சொன்னேன். அவன் கேட்டான் "உங்களுக்குத்தான் சாமி - கிடையாதே!" என்றான். நான் ஏன் என்று கேட்டேன். அவன் "நீங்கள் பெரியார்தானே! ஆகவே உங்களுக்குச் சாதி கிடையாதே" என்று பதில் சொன்னான். அந்த அளவுக்கு என்னை விளம்பரப்படுத்தியுள்ளனர் எதிரிகள்.

இன்று பாருங்களேன் - எங்காவது திண்ணையில் இரு பார்ப்பனர்கள் அடித்துக் கொண்டு பேசினாலும் அது எங்களைப் பற்றிய பேச்சாகத்தான் இருக்கும்! இவ்வளவு இருட்டடிப்புத்தான் என்றாலும் எங்கள் எதிரிகளால் எங்களுக்குக் கிடைக்கும் விளம்பரத்தை யாராலும் தவிர்க்க முடியாதே? ஏன்? அந்தச் சரக்கு எங்களிடத்தில் தான் இருக்கிறது. மற்றவன் எவனும் அந்தச் சரக்கை விற்கக்கூட முன்வரமாட்டேன் என்கிறானே? விடுதலையானதிலிருந்து சுமார் 120- நாள் கிட்டத்தட்ட ஆகிறது. இதுவரை சுமார் 150- ஊர்களுக்குப் போய் இருக்கிறேன். சுமார் 200- கூட்டங்களில் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் ரூ.1000-2000 செலவு செய்து ஆடம்பரமான ஊர்வலங்கள்! ஏன் வீண்செலவு என்று நான் கேட்டால் உங்களுக்காக அல்ல! நம்முடைய கொள்கைகளை விளம்பரப்படுத்துவதற்கு இதுதானே நமது வழி" என்று எனக்குச் சொல்லுகிறார்கள்.

எனவே தான் சில புத்தகங்கள் மூலம் நாம் நம்முடைய கொள்கைகளை விளக்க வேண்டியிருக்கிறது. இவைகளின் விலை அணா கணக்கில் தான் இருக்கும்.

இன்று நாம் எவ்வளவு மாறுபாடு அடைந்துவிட்டோம்! நம் வசதிகளும் வாழ்வும் ஏராளமான அளவில் பெருகிவிட்டன. அதற்கு முன்பு கட்டை வண்டிதான். இன்று இரயில் மோட்டார் ஆகாய விமானம் மணிக்கு 300- மைல் 500- மைல் வேகத்தில் போகக் கூடிய அளவுக்கு வந்து விட்டன. முன்பெல்லாம் தீ உண்டாக்க சக்கிமுக்கிக் கல்லை உராய்க்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு பொத்தானை அழுத்தினால் ஆயிரக்கணக்கான விளக்குகள் எரிகின்றனவே!

ஆனால் நம் புத்தி மாத்திரம் 1000- ஆண்டுகளுக்கு முன்பு என்ன நிலையில் இருந்ததோ அதே நிலையில் உள்ளது. இந்த 1958- இல் உலகத்திலேயே காட்டுமிராண்டித்தனத்தில் உள்ள ஒருநாடு இருக்கிறதென்றால் அது நம் நாடுதான். காட்டுமிராண்டிச் சமூதாயம் என்றால் அது நாம்தான். வெள்ளைக்காரன் இருந்திருந்தால் இப்போது எப்படியிருந்திருக்கும்? இன்னும் நமக்கு ஒரளவு அறிவு வந்திருக்கம். நாம் இன்றைக்குப் பார்க்கிறோமே 5000- பேர் உள்ள இந்தக் கூட்டத்தில் 5- அல்லது 10- பேர் நெற்றியில்கூட சாம்பல் பூச்சு இல்லையே! 5000- பேர் வருவதில் 10,15- பேராவது குடுமி வைத்தவர்கள் உண்டா? அவன் சட்டம் போட்டு இதைச் செய்யவில்லை. அவனுடைய முறை அந்த அளவுக்கு நம் மக்களுக்கு அறிவை உண்டாக்கப் பயன்பட்டது. அவன் இருந்திருந்தால் இந்நேரம் பெண்கள் கூட கத்தரித்துக் கொண்டிருப்பார்களே! அவன் போய்விட்டான். "நீங்களெல்லாரும் பார்ப்பானிடத்தில் நன்றாக உதை தின்னுங்கள்! பட்டால்தான் தெரியும்!" என்று விட்டுவிட்டு போய்விட்டான். இல்லையென்றால் உலகில் வேறெந்த நாட்டிலாவது நாம் இன்று அனுபவிக்கும் கொடுமை இருக்கிறதா?

இது பச்சைப் பார்ப்பான் ஆதிக்க ஆட்சி என்பதற்கு எடுத்துக்காட்டு. பூணூல் போடுவதற்குச் சர்க்காரில் (அரசில்) லீவு (விடுமுறை) விடுகிறானே! பார்ப்பான் நாட்டில் இருப்பது 100-க்கு 3- பேர். அவர்களின் பூணூல் மாட்டுவது அநேகமாக ஒருவர் அல்லது இருவர். அந்த இனப்பெண்கள் எல்லாரையும் கழித்துப் பார்த்தால் இதற்காக எதுக்கு அத்தனை பேர்களுக்கும் விடுமுறை. இது அக்கிரமம் அல்லவா? அரசாங்கம் இப்படி இருக்கலாமா? என்று எங்களைத் தவிர யாரும் கேட்பதில்லையே? ஆனால் இதைக் கேட்காதவர்கள் கேட்க நடுங்குகிறவன் எல்லாரும் மக்களிடத்திலே வந்து அளக்கிறான்கள். சட்டசபையிலே பிளக்கிறேன் என்கிறார்கள்! நாங்கள் மந்திரிகளுடைய மூக்கிலே, நாக்கிலே விரலை விட்டு ஆட்டுகிறோம் என்கிறார்கள்! இது ஏன் என்று கேட்க ஒரு பயல் முன்வருவது கிடையாதே? ஓட்டு கேட்க மாத்திரம் வருவார்கள்.

--------------------------

மஞ்சை நாயக்கன் பட்டியில் 14-10-1958 அன்று பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ("விடுதலை" 19-10-1958)

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It