கழகத் தொண்டு காரணமாக இந்த ஜெயங்கொண்டம் நகருக்கு வரநேர்ந்த சமயத்தில் இப்படி வரவேற்பு அளித்த பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஜெயங் கொண்டம் நகரம் நமது கழகத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் ஊராகும். உங்கள் வரவேற்பிதழில் தொண்டிலே சிறந்தது அறிவூட்டுதல் என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.

நம்நாட்டில் எல்லா வாய்ப்பும், எல்லா வளமும் இருக்கின் றது. ஆனால், அறிவு ஒன்றுதான் இல்லை. இதனை உணர்ந்து தான் கடந்த 40 ஆண்டுகளாக பகுத்தறிவுத் தொண்டு செய்து வருகின்றேன். அப்படித் தொண்டாற்றுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் நீங்கள் வரவேற்பு அளித்து பாராட்டியுள்ளீர்கள் என்று கருதுகின்றேன்.

அறிவுத் தொண்டு செய்வது என்பது மற்ற காரியம் போல அல்ல. பகுத்தறிவுத் தொண்டு செய்கின்றவனுக்கு எந்தவிதமான பற்றும் இருத்தல் கூடாது. அறிவுப்பற்று ஒன்றுதான் இருக்க வேண்டும். அறிவுப் பற்று என்றால் அறிவு கொண்டு ஆராய்வது. ஆராய்ந்து முடிவு கட்டுவது ஆகும். ஏன் எந்தவிதமான பற்றும் கூடாது என்கின்றேன் என்றால் நீதிபதியானவருக்கு நீதிப் பற்றைத் தவிர மற்றைய பற்று இருந்தால் அவரை சறுக்கி விட்டுவிடும். அதுபோலத்தான் பகுத்தறிவுவாதிக்கு கடவுள் பற்றோ, ஜாதிப் பற்றோ இருக்கக் கூடாது. இவை காரணமாக பகுத்தறிவு ஆராய்ச்சியில் இருந்து வழுவிவிட ஏதுவாகும். இது போலத்தான் அறிவுவாதிக்கு தேசப்பற்றோ, மொழிப்பற்றோ கூட இருத்தல் கூடாது. எம் மொழி, எம் நாடு என்று ஆரம்பித்து நடுநிலைமையில் இருந்து பிறழ்ந்து விடுகின்றான்.

நமது அரசாங்கம் மேற்கொண்டு உள்ள சமதர்மத்தைப் பற்றிக் கூட நான் கூறுவது உண்டு. சமுதாயத் துறையில் சமத்துவம் வேண்டும் என்று கூறப்படுவதிலிருந்தே நம்மிடையே சமத்துவம் இல்லை. காட்டுமிராண்டிகள் பகுத்தறிவு இல்லாதவர்கள்நாம் என்பது புலனாகின்றது அல்லவா!

கடவுளை, மதத்தை, சாஸ்திரத்தை, முன்ஜென்மம், மறு ஜென்மத்தை நம்பிக் கொண்டு சமதர்மம் கொண்டு வருகின்றது. இல்லாவிட்டால் பித்தலாட்டம் என்பதுதான் பொருள்

எப்படி ஜாதி என்பது செயற்கையோ அதுபோல பொருளாதாரத்தில் பெரியவனாக இருக்கின்றதும் செயற்கையேயாகும். எவனும் பிறக்கும்போதே பூணூலுடன் பிறக்கவில்லை. அதுபோல எவனும் பிறக்கும்போதே பணத்தைக் கொண்டு வரவில்லை. எல்லாம் செயற்கையில் வந்ததுதானே? எனவே, மக்களுக்கு பகுத்தறிவுதான் லட்சியம். மாறானவைகளை எல்லாம் ஒதுக்கித் தள்ள வேண்டும். பொருளாதார சுதந்திரத்தை அறிவுப் போரால்தான் பெற முடியும். சமுதாய சுதந்திரமோ பொருளாதாரச் சுதந்திரமோ வேண்டும் என்று போராட வேண்டுமானால், பகுத்தறிவு கொண்டு போராடியாக வேண்டும். சாஸ்திர, புராணங்களை பார்த்தால் அறிவை ஆதாரமாகக் கொண்டு தர்க்கம் பண்ணுபவன் நாத்திகன். அவன் முகத்தில் விழிக்கக் கூடாது என்று எழுதி வைத்து இருக்கின்றார்கள்.

இதற்கு பயந்து கொண்டு எவரும் இந்தத் துறையில் பாடுபட வரவே இல்லை. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தன் என்ற ஒரு ஆள்தான் தோன்றினான். அவனுடைய இயற்பெயர் சித்தார்த்தன் என்பது அவன் புத்தியை ஆதாரமாகக் கொண்டு வாதம் செய்தமை காரணமாக புத்தன் என்று அழைக்கப் பட்டான். அவன் இந்த நாட்டையே அறிவு கொண்டு சிந்திக்கச் செய்து விட்டான். எப்படியோ தந்திரமாக அந்த அறிவுக் கொள்கையினை தந்திரக்காரர்கள் அழித்துப் போட்டார்கள். அறிவுப் பிரச்சாரம் என்பது எல்லாவற்றிற்கும் தாய். அதற்கு சுதந்திரம் கொடுத்து சிந்திப்பது மூலம்தான் எதையும் அடைய முடியும்.
-------------------

6.7.1965 அன்று ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 6.8.1965
அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா

Pin It