கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

டாக்டர். அம்பேட்கர் 1956 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான மக்களுடன் புத்த மதம் தழுவினார். இந்த நிகழ்வின் 60 ஆம் ஆண்டினை நினைவு கூறும் விதமாக நாடு முழுவதும் ஆங்காங்கே பட்டியிலின மக்கள் குழுக்களாக இந்து மதத்தை துறந்து பௌத்தம் ஏற்று வருகின்றனர். இதனை ஒட்டி சென்னையில் கடந்த அக்டோபர் 16 அன்று '47 டாக்டர்கள்' மற்றும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மொத்தமாக பௌத்தம் தழுவினர். சிறப்பான இந்த நிகழ்வில் மதிப்பிற்குரிய தலித் முரசு ஆசிரியர் திரு. புனித பாண்டியன் அவர்கள் 'நான் இந்துவாக சாகமாட்டேன்' என்ற தலைப்பில் டாக்டர். அம்பேட்கரின் பல்வேறு கட்டுரைகளை மொழியாக்கம் செய்து புத்தகமாக வெளியிட்டார். மேலும் பாபாசாகேபின் புத்தக தொகுதிகளை தமிழில் படிக்க ஏதுவாக மக்கள் மருத்துவர்கள் அமைப்பின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட 'BLUE BUDDHA' என்ற ஆன்டிராய்டு செயலியும் வெளியிடப்பட்டது. இந்திய அளவில் அறிவுச்சமூகத்தில் பெரும் தாக்கத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது.

மேற்கண்ட நிகழ்வு தொடர்பாக 'விடுதலை' இதழ் குழப்பமான பொருள் படும்படி தலையங்கம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இக்கட்டுரையானது அந்த தலையங்கத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலும் சரியான புரிதலை ஏற்படுத்துவதன் மூலம் குழப்பங்களை நீக்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது.

1. இந்தியாவில் தற்போது பட்டியல் சாதியினர் என்று அறியப்படும் மக்கள் உண்மையில் யார் என்ற கேள்வி மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் அவர்கள் யார் என்றே தெரியாமல் அவர்களுடைய பிரச்சினைக்கான தீர்வினை யாரும் முன் மொழிய இயலாது. மனிதன் குழுக்களாக வாழ ஆரம்பித்த பின்பு தீடீரென ஒரு பிரிவினரை மட்டும் பிரித்து ஊருக்கு வெளியே அனுப்பி இருக்க இயலுமா? அப்படி பிரித்து இருந்தாலும் எந்த எந்த காரணிகளை வைத்து அவ்வாறு அவர்களை பிரித்து இருக்க இயலும் ?

இதனையே வேறு வகையில் கேட்டால் ஒரு குறிப்பிட்ட பிரிவினை மட்டும் இந்த இந்த வேலைகளை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்து இருக்க இயலுமா? அப்படியே பிரித்து இருந்தாலும் எந்த காரணிகளை (factor) வைத்து அவர்களை மட்டும் தனியாக பிரித்து இருக்க இயலும் ? கூடுதலாக இது இந்தியா முழுவதும் எப்படி ஒரே மாதிரி ஒவ்வொரு கிராமத்திலும் முறையாக நடந்து இருக்க இயலும் ?? இந்த கேள்விகள் தீண்டாமை ஒழிப்பு குறித்து சிந்திக்கும் ஒவ்வொருவரும் அவசியம் சிந்திக்க வேண்டியதாகும்.

2. பாபாசாகேப் டாக்டர். அம்பேட்கர் இதனை ஆராய்ந்து கண்டறிவதில் மிகவும் தீர்க்கமாகவும் உறுதியாகவும் இருந்தார். இதனை ஒட்டி அவர் பல ஆராய்ச்சி கட்டுரைகளை பல்வேறு தலைப்புகளில் வெளியிட்டும் உள்ளார்.

அவைகளின் படி இந்தியாவின் பட்டியிலின மக்கள் என்று இப்போது வகைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் அனைவரும் கி. பி இரண்டாம் நூற்றாண்டு வரை புத்தரின் தம்ம வழியை பின்பற்றி வந்தவர்கள் என்பதை அவர் நிறுபித்துள்ளார்.

3. புத்தர் கி. மு ஐந்தாம் நூற்றாண்டில் அரச வம்சத்தில் பிறந்தவராவார். அவர் அப்போது இந்திய சமூகத்தில் நிலைபெற்று இருந்த சதுர்வர்ண கேட்பாடு முறைகளையும், ஆண் பெண் சமத்துவமற்ற நிலையையும் தீவிரமாக எதிர்த்தார். மேலும் யாகம், சடங்குகள், விலங்குகளை கடவுளுக்கு யாக குண்டத்தில் பலியிடுதல், பார்பன உயர்வு நிலை ஆகியவற்றை எதிர்த்தார். அதனை நாடு முழுவதும் பிரச்சாரமும் செய்தார். சமூகத்தை நல்வழிப்படுத்தும் பஞ்சசீல கொள்கையையும் பகுத்தறிவை மேம்படுத்தும் எட்டு வழி பாதையுயும் (8 fold path) பிரச்சாரம் செய்தார். எதனையும் ஆய்வறிந்து மட்டுமே ஏற்க வேண்டும் என்பதே அவரின் உறுதியான கருத்தாக இருந்தது. மேலும் ஆன்மா மறுபிறப்பு ஆகியவற்றையும் மறுத்தார். கர்ம வினைகளை மறுத்ததன் மூலம் ஒருவர் ஒரு சாதியில் பிறப்பது அவரின் பூர்வ கர்மத்தின் அடிப்படையில் தான் என்ற மோசடியான கருத்தையும் மறுத்தார்.

4. புத்தரின் காலத்திற்கு பிறகு அவரின் கருத்துக்கள் உலகம் முழுவதும் பல்வேறு மன்னர்களால் எடுத்து செல்லப்பட்டது. மேலும் பௌத்தமே நாட்டின் சிவில் சட்டமாகவும் இருந்தது. சதுர்வர்ணம் , பார்பணிய உயர்வு நிலை ஆகியவை ஏறக்குறைய அழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. மௌரிய பேரரசு தான் இந்தியாவின் பொற்காலம் என்று டாக்டர். அம்பேட்கர் இதனை விளக்கும் போது குறிப்பிடுகிறார்.

5. இந்நிலையில் கி்பி இரண்டாம் நூற்றாண்டில் மௌரிய பேரரசின் வழியில் வந்த அரசரை புஷ்யமித்திர சுங்கன் எனும் அவரின் சொந்த பார்பன படைத்தளபதி கொன்று ஆட்சியை வஞ்சகமாக கைப்பற்றி கொள்கிறான்.

6. சுங்கனின் ஆட்சி காலத்தி்ல் மீண்டும் சதுர்வர்ணம் சிவில் சட்டமாக ஆக்கப்படுகிறது. புத்த விகார்கள் இந்து கோவில்களாக ஆக்கப்படுகின்றன. புத்தர் சிலைகள் வேடமிடப்பட்டு விஷ்ணுவாக சித்தரிக்கப்படுகிறது. பார்பன உயர்வு நிலையும் சதுர்வர்ண கேட்பாடுகளும் மீண்டும் நாட்டில் நிலைநிறுத்தப்படுகிறது. புத்த பிக்குகள் கொல்லப்படுகின்றனர். புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள சிலை புத்தர் சிலையாகும். ஐயப்பன் கோவில் உண்மையில் ஒரு புத்தவிகார் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒப்புகொண்டுள்ளது.

7. இந்த சூழலில் சுங்கனின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று சதுர்வர்ணத்தை ஏற்றுகொண்டு ஊருக்குள் வாழ்வது இல்லையெணில் சமத்துவத்தை ஏற்றுகொண்டு புத்தரின் வழியில் ஒதுக்கப்பட்டு வாழ்வது.

8. இவ்வாறு சதுர்வர்ணத்தை ஏற்க இயலாது என்று இந்தியா முழுவதும் உரக்க கூறியவர்கள் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டனர். தாக்கப்பட்டனர். தொழில்கள் புரிய அனுமதி மறுக்கப்பட்டனர். முடிவில் தீண்டதகாதவர்களாக ஆக்கப்பட்டனர்.

சதுர்வர்ணத்தை ஏற்று கொண்டோர் மீண்டும் பார்பணிய உயர்வை ஏற்றுகொண்டு ஊருக்குள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களே தற்போது பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அறியப்படுவோர் ஆவர்

9. நான்கு வர்ணத்தில் கூடுதலான ஒன்றாக ஐந்தாவதாக இவர்கள் பஞ்சமர்கள் என்று சேர்க்கப்பட்டனர். பஞ்மர்கள் என்பவர்கள் பஞ்ச சீலத்தை பின்பற்றி வாழ்ந்தவர்கள் என்று பொருள்படுகிறது. அவர்ணா என்றும் வட இந்தியாவில் அழைக்கப்படுகின்றனர். அதாவது வர்ணங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பொருள்படுகிறது.

10. காலப்போக்கில் தங்களது சொந்த அடையாளங்கள் முழுவதும் அழிந்த நிலையில் பஞ்சமர்கள் இந்துக்களை சார்ந்து வாழ வேண்டியதாகிவிட்டது. இவ்வாறான கலாச்சார சார்பு நிலை வெளிப்புறமாக (objective) அவர்கள் மீது தீண்டாமையை கொண்டு வந்தது.

கோவிலுக்கு வரமாட்டோம் என்பது காலப்போக்கில் கோவிலுக்குள் விடமாட்டோம் என்பதாக ஆகியது.

11. பிரிட்ஷ் ஆட்சிகாலத்தில் பட்டியல் சமூகத்தினரை பல கேள்விகளை கொண்டு அடையாளம் கண்டு வகைப்படுத்தினார்கள். அவற்றில் முக்கியமானது பார்பன உயர்வு நிலையை ஏற்று கொள்ளாதவர்கள் என்பதும் பசு மாடு புனிதமானது என்பதை மறுத்தவர்கள் யார் யார் என்பதாகும்.

12. மேற்கண்டவாறே பட்டியல் சாதியினர் என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. ஆக இவர்கள் அனைவரும் பூர்வீக பௌத்தர்கள் தான் என்பது தெளிவான உண்மையாகும். மேலும் இவர்கள் பௌத்த மதத்தை சார்ந்தோர் என்பதால் தான் இழி தொழிலுக்கு தள்ளப்பட்டார்களே ஒழிய மாறாக இழி தொழில் செய்ததால் தான் தீண்டதகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்பது வடிகட்டிய பொய் ஆகும். ஏனெனில் எப்படி ஒரு பிரிவு மட்டும் நாடு முழுவதும் இழி தொழிலை விரும்பி ஏற்றுகொண்டிருக்கும் என்பது சாதாரணமான கேள்வியாகும்?? 

13. ஆக இந்த வரலாற்றை நிறுபித்த டாக்டர். அம்பேட்கர் தீண்டாமை ஒழிய மீண்டும் புத்த மதம் திரும்புவதே ஒரே வழி என்று பிரகடணப்படுத்தினார்.

கலாச்சாரத்திற்கு இந்துக்களை சார்ந்திருக்கும் வரை தீண்டாமை தொடரும் என்பதால் பூர்வீக கலாச்சாரத்தை கட்டமைக்க கோரினார். அவ்வழியில் பௌத்தம் திரும்பினார்.

14. பௌத்த மதமாற்றம் என்பது ஒவ்வோரு பட்டியலின மனிதனையும் இந்து சதுர்வர்ண கோட்பாடுகளிலிருந்து மனதளவில் விடுவித்து உற்சாகத்தை வழங்குகிறது. மேலும் இந்துக்கள் வேறு ஒரு மதத்தை சார்ந்தவர்களை உயர்வாகவே தாழ்வாகவே கருத இயலாது எனும் அடிப்படையில் தீண்டாமையிலிருந்து விடுவிக்கிறது. மேலும் இந்து மதத்தில் எந்த ஆதரவும் இல்லாமல் நிற்கும் அவர்களுக்கு உலகம் முழுவதுமுள்ள பௌத்தர்களின் ஆதரவையும் பெற்று தருகிறது.

15. தேசிய குற்றபதிவுகளின் படி ஒவ்வொரு வருடமும் இரண்டு லட்சம் வன்முறைகள் தலித்துகளுக்கு எதிராக நடைபெறுகிறது. இவர்கள் அனைவரும் இந்துக்களாக இருப்பதால் சர்வதேச சமூகம் அதனை கண்டு கொள்வதில்லை. ஏனெனில் இது இந்து மதத்தின் உட்சாதி பிரச்சினை. குடும்ப தகராறு. ஆனால் இந்திய பட்டியல் சமூகத்தினர் மொத்தமாக புத்த மதம் திரும்பினால் ஒவ்வொரு வருடமும் இரண்டு லட்சம் வன்முறைகளை இந்துக்கள்-பௌத்த  மதத்தினருக்கு எதிராக நடத்த இயலுமா எனில் சத்தியமாக முடியாது என்பதே பதில். அவ்வாறு ஒரு வேளை நடந்தால் அதற்கு அரசு சர்வதேச சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டும்.

அதற்கு ஒரு முடிவு கிட்டும்.

இவ்வாறு ஏன் பௌத்தம் திரும்ப வேண்டும் என்பதை பாபாசாகேப் ஆயிரக்கணக்கான பக்கங்களில் விவரித்துள்ளார். அவை அனைத்தையும் இந்த கட்டுரையில் வெளிப்படுத்திவிட வேண்டும் என்பது ஆசையாக இருந்தாலும் அது நடைமுறை சாத்தியமில்லாமல் இருக்கிறது. சாதி இந்துக்கள் மதம் என்ற பலத்தில் நிற்கின்றனர். பட்டியிலின மக்கள் அதனை எதிர்கொள்ள அவர்களுக்கு தேவை அதே பலம் தான். அது வேறு ஒரு மதம் தான். எதிர் தரப்பு மதம் எனும் ஆயுதத்துடன் நிற்கும் போது பட்டியலின மக்களை மட்டும் மதங்களை துறக்க சொல்வது அவர்களை நிராயுதபாணியாக மாற்றுவதே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.

17. இவ்வாறு தீண்டாமை என்ற பிரச்சினையில் எந்த ஆய்வும் செய்யாமல் விடுதலை இதழ் கட்டுரையை தீட்டியுள்ளது வருந்ததக்கது. மதம் வேறு மார்க்கம் வேறு என்று பாடம் எடுக்கிறது. அதற்கான வித்தியாசத்தை தயவு செய்து அவர்களே விளக்க வேண்டும் என்று நாங்கள் பணிவுடன் கோருகிறோம்.

18. நாத்திகம் என்பது எவ்வகையிலும் பட்டியிலின மக்களுக்கு பயன்படாது. பல மதங்களை சார்ந்த நாத்திகர்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் அந்த அந்த மதத்தை சார்ந்தவர்களவே அறியப்படுகின்றனர். பட்டியிலின மனிதன் ஒருவன் தன்னை நாத்திகராக அடையாளப்படுத்தி்கொள்வது அவர் தன்னை ஒரு இந்து என்றே சமூகத்தில் அடையாளப்படுத்தி கொள்வதாகும். அவர் தீண்டாமையிலிருந்து அதன் மூலம் ஒரு போதும் தப்ப இயலாது. மேலும் கடவுள் இல்லை என்பதை பரப்புவது முக்கியமா அல்லது தீண்டாமையிலிருந்து விடுபடுவது முக்கியமா எனில் தீண்டாமையிலிருந்து விடுபடுவதே ஒவ்வொரு பூர்வீக பௌத்தருக்கும் முக்கியமான ஒன்றாகும் . அதற்கு இந்து கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு சொந்த கலாச்சாரத்தை கட்டமைப்பது முக்கியமாகும். தலித் மக்கள் முழுவதும் இந்து மதத்திலிருந்து வெளியேறும் போது தங்களுக்கு கீழ் யாரும் இல்லாமையால் பிற்படுத்தப்பட்டவர்கள் தங்களுக்கு மேல் யாரும் இருக்க இயலாது என்று பார்பன உயர்வை மறுப்பார்கள். இது ஒன்றே சாதியை அழித்தொழிக்க ஒரே வழி. மாறாக இந்துவாக இருந்து கொண்டே அதனை சீர்படுத்த முயல்வது தலித் மக்களுக்கு தேவையற்ற ஒன்றாகும்.

19. உலகில் நாத்திகர்கள் அதிகமாக உள்ளது ஸ்கேண்டிநேவியன் நாடுகளில் ஆகும். இங்கு குறிப்பிட தக்க விடயம் அங்கெல்லாம் யாரும் நாத்திகத்தை பரப்பவில்லை என்பதும் அதற்கென ஏதும் அமைப்புகள் அங்கு இயங்கவில்லை என்பதும் ஆகும்.

அங்கு கடவுள் மறுப்பு தானாக மலர்ந்துள்ளது. ஏனெனில் மனித வளர்ச்சி குறியீட்டில் (human developmental index) அந்த நாடுகள் முதல் பத்து இடத்தில் உள்ளன. மனிதனின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி பிரச்சினையற்ற சமூகம் உருவாகும் போது கடவுள் அங்கு தானாக தேவையில்லாமல் போய்விட்டார் 

ஆனால் இதற்கு மாறாக இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் கடவுள் மறுப்பை திணிப்பது பிரச்சாரம் செய்வது தோல்வியில் தான் முடியும். சில தலைமுறைகளாக பெரியாரிய அமைப்பில் உள்ள எங்கள் அமைப்பை சார்ந்த மருத்துவர் ஒருவர் புதிய தலைமுறைகள் வரும் போதும் குடும்பத்தில் திருமணம் நடந்து புதிய நபர்கள் வீட்டுக்கு வரும் போதும் இந்து கடவுள்கள் தானாக தங்கள் வீட்டுக்குள் வந்து விட்டதாகவும் அதனை தங்களால் தடுக்க இயலவில்லை என்றும் எங்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதற்கு காரணம் நாத்திகம் என்பது வெறும் எதிர்ப்பு நிலை ஆகும். அதற்கென ஏதும் பண்பாடு இல்லை. மாறாக இந்து பண்பாடுகளை எதிர்ப்பதில் அது முடிவடைந்து விடுகிறது. ஆனால் மனிதனின் இயல்பான தேவை குழுவாக உணர்வதாகும். அவர்களுக்கு பண்பாடு , கலாச்சார நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் இயல்பாக தேவைப்படுகிறது. அண்ணல் அம்பேட்கர் மனிதனுக்கு மதம் தேவை என்று ஒரே வரியில் இதனை பிரகடணபடுத்துகிறார். மேலும் அந்த மதம் மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் வாழ்க்கையை சுலபமாக்க வேண்டும் என்றும் கூறுகிறார் . இவ்வாறான காரணத்தினால் பாபாசாகேப் புத்த மதம் தழுவினார். அனைத்து பட்டியின மக்களையும் புத்த மதம் தழுவ கோரினார்.

20. விடுதலையின் தலையங்கத்தில் தேவையிலாமல் இலங்கை பிரச்சினையை குறிப்பிட்டு உள்ளார்கள். அது ஒரு மதப்பிரச்சினை அல்ல மாறாக இனப்பிரச்சனை. இல்லை எனில் சிங்களர்களை பௌத்தர்களாக காணும் திராவிடர் கழகம் தமிழர்களை இந்துவாக காணுகிறதா என்பதையும் விளக்க வேண்டும். அப்படியெனில் இந்துக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கிறதா என்பதையும் விளக்கவேண்டும். !

கூடுதலாக இலங்கையில் தமிழ் பேசும் பட்டியிலன மக்களை தமிழ் பேசும் சாதி இந்துக்கள் கொடுமைபடுத்துவதை எப்படி தடுப்பது என்பதையும் விளக்க வேண்டும். பெரும்பாலான ஆயுத போராட்டங்கள் இவ்வாறே முடிந்து போனதே உலகின் வரலாறு. அதற்கு விடுதலைப்புலிகளும் விதிவிலக்கல்ல. எனவே இதில் மதத்தை இட்டுகட்டி இழுப்பது வஞ்சகமானது. இந்து முண்ணனி தமிழர் பகுதிகளை பௌத்தமயமாக்குவதை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. ஆனால் இங்கு இந்தியாவில் புத்தமதம் இந்துமதத்தில் அடங்கியது என்று கதை விடுகிறது. இது குறித்தும் தி. க தங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டும். உலகில் இதுவரை 5000 போர்கள் ஏறக்குறைய நடந்துள்ளன. இவற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கை பி்ரச்சினையை மட்டும் மதத்தோடு தீவிரமாக தொடர்பு படுத்துவது இந்துத்துவ சதியாகும்.

மேலும் ஒன்னறை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு திராவிடமே காரணம் எனும் தமிழ் தேசியவாதிகளின் அவதூறு குற்றச்சாட்டுக்கும் விடுதலை ஏடு பதில் அளித்தால் மகிழ்ச்சி.

இலங்கை இனப்பிரச்சினையை விட ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் வன்முறைகளை சந்திக்கும் தலித்துகளின் பிரச்சினை மிக மிக மிக மிகப்பெரியது என்பதையும் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இலங்கை இனப்பிரச்சினை சில லட்சம் மக்களுக்கானது. எனினும் அதனை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அப்பாவி மக்கள்  கொல்லப்பட்டது கண்டிக்க தக்கது. ஆனால் இந்திய பூர்வீக பௌத்தர்களின் பிரச்சினை 30 கோடி மக்களுக்கானது என்பதை மறந்துவிட கூடாது. இவ்வாறு 30 கோடி தலித்மக்கள் தினம் தோறும் சந்திக்கும் தீண்டாமையை பாபாசாகேபின் வழியில் எதிர்கொள்ளும் போது அதனை இந்த பிரச்சினைக்கு சிறிதும் தொடர்பற்ற இலங்கை பிரச்சினையோடு இணைந்து பேசுவது, குறுக்கே நிற்பது சிறிதும் நியாயமற்றது. பட்டியலின மக்கள் இந்தியா முழுவதும் வாழ்கின்றனர் பல்வேறு மொழி பேசுகின்றனர். இவர்கள் அனைவருக்குமான தீர்வாக பௌத்தம் முன் வைக்கப்படும் போது ஒரு பிராந்திய பிரச்சினையை மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் தோள்களின் மீதே ஏற்றி அதற்கும் பதில் சொல் என்று கேட்பது சிறிதும் நியாயமற்றது. ஆகவே பகுத்தறிவாளர்கள் இதன் பின் உள்ள நியாயத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்

2009 க்கு பிறகு 2013 ல் நடந்த சர்வதேச புத்த மாநாட்டிற்கு சென்ற ஆசிரியர். திரு. வீரமணி அவர்கள் பௌத்ததை பகுத்தறிவாளர்கள் ஏற்பதாக உரையாற்றி வந்துள்ளார். ஆனால் இப்போது விடுதலை ஏடு பௌத்த மத மாற்றத்திற்கு எதிராக கட்டுரை எழுதுவது முரணாக உள்ளது. அண்ணல் அம்பேட்கரை புகழ்ந்துவிட்டு அவரின் வழியை ஏற்க மாட்டோம் என்பது பல்வேறு அமைப்புகளின் நிலைப்பாடு ஆகும். அதே வழியில் திராவிடர் கழகமும் செயல்பட கூடாது.

இந்துத்துவ அடிப்படைவாதம் நம்மை சுழ்ந்து  மொத்தமாக வீழ்த்த காத்திருக்கும் சூழலி்ல் முற்போக்கு அமைப்புகளுக்குள் விரிசலை ஏற்படுத்தும் வேலையை நாம் அனைவரும் செய்யாமல் இருப்பதே நம் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதாகும். அதுவே மக்கள் மீது அக்கறையுள்ள தேசபக்தி்யாளர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதும் ஆகும்.

- டாக்டர் சட்வா சாக்யா