என்னைப் பெரிய புரட்சிக்காரன் என்று சொன்னார்கள். புரட்சி என்றால் எதிலே புரட்சி? என்ன புரட்சி செய்கிறேன் நான்? என் மனதிலே நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் நான் ஒரு பகுத்தறிவுவாதி என்பதுதான்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்ற அளவில் எந்தக் காரியத்தையும் அறிவைக் கொண்டு சிந்திப்பவன் அவ்வளவுதான். எல்லோரும் பொதுவாழ்வில் ஒரு காரியத்தை எதிர்ப்பதால் நம்ம காரியம் பார்த்து விட்டுப் போவோம் என்று விட்டு விட்டார்கள். ஆகவே, மற்றவர்களால் என்னைப் போல் சொல்ல முடியவில்லை. நம்மால் ஏன் சொல்ல முடிகிற தென்றால் நான் ஒன்றும் எதிர்பார்க்காமல் சொல்வது தான். சொல்வதிலே கடவுளைப் பற்றிச் சொல்கிறேன். கடவுள், ஆண்டவனை என்பதெல்லாம் முட்டாள்தன மான மூடநம்பிக்கை; அறிவுக்கேற்ப ஏற்றுக் கொண்ட சாதனம் அல்ல. அது ஒரு பயத்தினால் ஏற்பட்டது.

பகுத்தறிவுவாதி என்ற முறையில் இப்படி சொல்கிறேன். மதத்தையும் அப்படித்தான் சொல்கிறேன். மதம் முட்டாள்தனமானது, சாஸ்திரத்தை குட்டிச் சுவரான சங்கதி; ஏமாற்றும் சதி; சூழ்ச்சி. இந்து மதம், சாஸ்திரம், புராணம், கடவுள், ஜாதி எல்லாம் முட்டாள்தனமானது. திருட்டு கூட்டத்திற்கு கன்னக்கோல் எப்படியிருக் கிறதோ அந்த மாதிரி அயோக்கியர்களுக்கு இவை உபயோகமாகிறது.

இந்த மாதிரி சில விஷயங்களை எடுத்துச் சொல்கிறேன். இதைப் புரட்சி என்கிறார்களே, எந்த ஒரு காரியத்தையும் அறிவைக் கொண்டு பயன்படுத்தப் பயப்படுகிறார்கள். நான் அதை எடுத்துச் சொல்கிறேன். என்றாலும் மக்கள் எல்லோருக்கும் அது ஒரு திடுக்கிடும்படியான சங்கதி. ராமசாமி தங்கமான மனிதர். அவர் மாத்திரம் கடவுள் இல்லை என்று சொல்லாமல் இருந்தால், நாம் அவரைக் கூடக் கடவுளாகக் கும்பிடலாம் என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி எண்ணம் ஜனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நான் பெரும்பாலும் வெறுக்கப்படுகிறேன். ஆகவே தான், என்னைப் பற்றி மக்களிடத்தில் ஒரு வெறுப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட புரட்சிக்காரனாகிய எனக்கு இந்த மாதிரியான ஒரு பாராட்டுதல், கொண்டாடுதல், பணம் கொடுத்தல் ஆகியவை நடக்கிறது என்றால் உள்ளபடியே என்னைப் போல் உள்ளவன் என்ன நினைப்பான்? இவர்கள் என்னைப் பாராட்டுகிறார்களே; போற்றுகிறார்களே; நாம் ஏதாவது நம் கொள்கையிலிருந்து கீழே போய்விட்டோமா? இல்லாவிட்டால் இவ்வளவு கொண்டாடுவதற்கு என்ன காரணம்? நாம் கொள்கையிலிருந்து மாறவில்லை என்பது உறுதியானால் ஜனங்கள் புத்திசாலிகள் ஆகிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

இந்த இரண்டையும் பார்த்தால் நான் மாறவில்லை; ஜனங்கள்தான் புத்தியைக் கொண்டு வளர்ந்து விட்டார்கள். எங்கே போனாலும் மக்களிடத்தில் பகுத்தறிவில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதுதான் இந்த நாட்டில் புரட்சியாக 40 வருஷங்களாக நடந்தது. வேறு எந்தக் காரியமும் கிடையாது இந்த நாட்டிலே.

இந்த நாட்டில் எதன்பேரிலாவது கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றால் ஒன்றுக்கும் இடம் இல்லை. அந்த நிலைமையில் கிளர்ச்சி இருக்கிறது; போராட்டம் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? அது அரசியல் என்ற பெயரில் இருந்தாலும், சமுதாயம் என்ற பெயரில் இருந்தாலும் அந்தப் போராட்டத்தில் அடிப்படை இந்த மாறுதல்களே இருக்கக் கூடாது என்பதுதான்.

இந்த நாட்டிலே அரசியலுக்கு என்ன குறை? யாராவது சொன்னால் அவர்களிடம் புத்தி படித்துக் கொள்ளுகிறேன். நாட்டில் தான் என்ன குறை? மக்களுக்குத்தான் என்ன குறை? யாராவது சொல்லட்டுமே, 30, 40 வருடங்களாக அறிவைப் பயன்படுத்தி எல்லாத் துறைகளிலும் இந்த நாடு மாறுதல் அடைந்திருக்கிறது. சும்மா வயிற்றுப் பிழைப்பிற்காக இன்று சிலர் அதிலே ஓட்டை, இதிலே ஓட்டை என்று சொல்லுவார்கள். சிலர் அரசாங்கத்தில் அது தப்பு, இது தப்பு என்று சொல்லுகிறார்கள். எந்த ஒரு நபராவது காரியத்தில் இது தப்பு, அது தப்பு என்று சொன்னால், நான் அவர்களுக்கு சிஷ்யனாகி விடுகிறேன்.

ஜனங்களுக்குப் புத்தியில்லாததால்தான் அவர்கள் சொல்கிறார்கள்.

1920அய்யும், 1930அய்யும் எடுத்துக் கொள்ளுங்கள். காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்கத்தில் ஆரம்பித்து இன்று 30 வருடங்கள் ஆகிவிட்டன. நான் எதிர்க்க ஆரம்பித்து என்ன ஆகியிருக் கிறது? காலப்போக்கில் மாறி விட்டது. இப் போதுதான் காலப்போக்கு வந்ததா? 50 வருடங்களாக என்னவாயிற்று? அப்போது வெள்ளைக்காரன் இருந்தான். விஞ்ஞானம் இருந்தது. அப்போதெல்லாம் வராத காலப்போக்கு இப்போதுதான் வந்ததா? அந்த 30 வருடத்தில் என்ன நடந்தது? 30 வருடத்தில்தான் உணர்ச்சி இருக்கிறது என்று ஏற்பட்டிருக்கிறது. அது எவ்வளவு மாறியிருக்கிறது யாருக்குத் தெரியும்? 40 வருடக் கதை சொன்னால் 20 வயசுப் பசங்களுக்கு என்ன தெரியும்?

-----------------------------------
தந்தை பெரியார் - “விடுதலை” 24.9.1961
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It