“இன்று உலகில் எந்த மதத்திற்கும் உயிர் கிடையாது. எல்லா மதங்களும் செத்துப் போய் விட்டன செத்தப் பிணங்களே சடங்கு ரூபமாகவும் வேசரூபமாகவும் நாற்றமெடுத்து அதனால் மனித சமூகத்திற்குப் பிற்போக்கு என்னும் வியாதியைக் கொடுத்துக் கொண்டு வருகின்றன.”

“மலத்தில் இருக்கின்ற புழுக்கள் எப்படி மல நாற்றத்தை வெறுக்க முடியாமலும் மற்ற புழுவை இழிவாகக் கருத முடியாமலும் இருக்கின்றனவோ அது போல் எல்லா மனிதர்களுமே மதப் பிண நாற்றத்தில் புரளுவதால் உண்மை உணர முடியாமல் அழுந்துகின்றனர்.”

1930 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் குடியரசு இதழில் ‘மதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே’ என்கிற சித்திரபுத்திரன் கட்டுரையில்தான் பெரியார் மதங்களைக் குறித்து மேற்கண்ட கருத்தைப் பதிவு செய்கிறார்.

Periyar 264இந்தப் பெரியாரைக் குறிப்பிட்ட இந்து மதத்திற்கு மாத்திரம் எதிரி என்பது போலவும், இந்து மதம் நீங்கலாக ஏனைய மதங்கள் அனைத்திற்கும் பெரியார் அனுகூலமாகவே நடந்து கொண்டார் என்பது போலவும் பார்ப்பனர்களும், பார்ப்பனர்களின் கருத்துக்கு ஏதேனும் ஒரு வகையில் ஆதரவு திரட்டும் வகையில் நடந்து கொள்வோரும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

பெரியாரின் நோக்கம் ‘சமத்துவ சமூகம்’. அதுவும் பகுத்தறிவு வழிப்பட்ட, மனிதநேய சிந்தனை கொண்ட சமூகம். இந்த மாதிரியான சமத்துவ சமூகம் அமைவதற்கு எவையெல்லாம் தடையாக இருக்கின்றனவோ அவை அனைத்தும் எந்தவித சமரசமும் இன்றி அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் பெரியார் இறுதிவரையிலும் மாறுபட்டதே இல்லை.

இந்தியச் சமூக அமைப்பு ‘வர்ணாஸ்ரம தர்ம’ முறைப்படியான ஜாதீயச் சமூக அமைப்பு என்பதால் ஜாதிப் பிரிவினைக்கும், ஏற்றத்தாழ்வுக்கும், தீண்டாமை போன்ற வன்கொடுமைகளுக்கும் எதிராகப் பெரியார் தமது சுயமரியாதை வாளைச் சுழற்றினார்.

பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு ஆகிய பெரியாரின் வலிமையான முழக்கங்களின் நோக்கம் சமத்துவத்திற்கு வலிமை சேர்ப்பது, ஜாதி ஒழிப்புக்குப் படை திரட்டுவதுதான். ஆனால் , ஜாதி ஒழிந்த ஒரு சமூகம் மீதி எல்லா வளங்களையும் தாமாகப் பெற்றுவிடும் என்று கருதிப் பெரியார் வெறும் ஜாதி ஒழிப்பை , பார்ப்பன எதிர்ப்பை மட்டுமே பேசிக் கொண்டு காலம் கழிக்கவில்லை.

பெண் அடிமைத்தனத்தைக் கடுமையாக எதிர்த்தார். மூடநம்பிக்கைகளைத் தோலுரித்தார். பகுத்தறிவைப் பரப்புரை செய்தார். நடப்பு அரசியலோடு தமது கொள்கையைப் பொருத்தி, சமூக அரசியலைப் பேசினார். பெரியாரின் கொள்கைகளுக்குப் பெரிதும் பொருந்திப் போகாத தேர்தல் அரசியலிலும் கூட பெரியாரின் பங்கு முக்கியமானதாகவே இருந்தது.

ஜாதி, மதம், கடவுள், சடங்கு, சம்பிரதாயம், வேதம், புராணம், இதிகாசம், தத்துவம், கலை, இலக்கியம், அரசியல், அறிவியல், புனிதம், தீட்டு, தீண்டாமை, பெண்ணியம், பொதுவுடமை, பொது உரிமை, சுயமரியாதை, முதலாளி, தொழிலாளி, உழைப்பு, சுரண்டல், சேமிப்பு, ஊதாரித்தனம், கஞ்சத்தனம், கொடை, சுயநலம், பொதுநலம் இப்படிப் பெரியார் பேசாத, விவாதிக்காத தலைப்புகளே இல்லை.

தமது 95 ஆண்டு கால நெடிய வாழ்வில் பெரியார் ஒரு ‘மானுடவியல் தத்துவஞானி’யாகவே பயணித்திருக்கிறார். அவரது நெடும் பயணம் ஏற்படுத்திய மாற்றம் தான் இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழர்களை, தமிழ்நாட்டை மாறுபடுத்திக் காட்டுகிறது.

ஜாதி சங்கத் தலைவர்களில் இருந்து பக்தசிரோன்மணிகள் வரை பெரியாரின் அடிப்படை நோக்கமான சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, மனித நேயம் கொண்ட சமத்துவ சமூகம் என்கிற கொள்கையோடு உடன்பட்டவர்களே.

சத்திரிய குல வன்னியர் சங்க மாநாட்டிலும், நபிகள் நாயகம் விழாவிலும் கூட பெரியார் அழைத்து பேச வைக்கப் பட்டிருக்கிறார்.

ஒரு மதம் இன்னொரு மதத்தை அடிமைப்படுத்துமானால் நான் அடிமைப் படுத்தப்படுகிற மதத்தை ஆதரிப்பேன்!

அடிமைப்பட்ட மதத்திற்குள் ஒரு ஜாதி இன்னொரு ஜாதியை அடிமைப்படுத்தினால் நான் அடிமைப்பட்ட ஜாதிக்கு ஆதரவாக நிற்பேன்! அடிமைப்பட்ட ஜாதியில் ஒரு முதலாளி ஒரு தொழிலாளியை வஞ்சிப்பானேயானால் நான் வஞ்சிக்கப்படும் தொழிலாளிக்கு ஆதரவாகவே இருப்பேன்!

அதே நேரம் அந்தத் தொழிலாளி, தான் ஓர் ஆண் என்கிற ஆதிக்கத்தோடு தன் வீட்டில் தனது மனைவியை அடிமைப்படுத்துவானென்றால். நான் அந்தப் பெண்ணுக்குப் பக்கத்தில் நின்று, அந்த சின்ன ஜாதித் தொழிலாளியையும் எதிர்த்துப் போராடுவேன்! என்று பிரகடனப் படுத்திய தலைவர் பெரியாரை , அவரது பரந்துபட்ட மனிதநேயப் பகுத்தறிவுப் பெரும்பணியை, சமத்துவ சமூகத்திற்கான நெடிய போராட்டத்தை, நீண்ட பயணத்தை சுருக்க முடியாமல், இன்றளவும் இந்த மண்ணில் நிலைத்து நின்று வினையாற்றிக் கொண்டிருக்கும் பெரியாரின் தாக்கத்தைத் தடுக்க முடியாமல் தடுமாறுகிற பார்ப்பனக் கூட்டம் பெரியாரை ‘ இந்து மதத்தின் எதிரி ‘ என்பதாகச் சுருக்கிக் காட்டி மக்களிடையே விச விதைகளை விதைக்க முயற்சிக்கிறது. இது நீண்ட கால முயற்சிதான் என்றாலும்கூட இப்போது இது தீவிரமடைந்திருக்கிறது.

அதாவது தீவிரமான மதவாதப் பிரச்சாரங்கள், ஓயாத வேலைத் திட்டங்கள், அதற்காகவே கொட்டப்படும் பெரும் பொருட்செலவு, அரசதிகார செருக்கோடும், அரசமைப்பு சட்டப்படியும், பெரும்பான்மை மக்களை எல்லாம் இந்துக்களாக்கி, பெரும்பான்மை இளைஞர்களை இந்துத்துவவாதிகளாக்கிக் காட்ட வருகிற பார்ப்பன சூழ்ச்சிக்குப் பெரியாரின் ஜாதி ஒழிப்பும், பெண் விடுதலை முழக்கமும், பார்ப்பன எதிர்ப்பும், கடவுள் மறுப்பும், பகுத்தறிவுப் பரப்புரையும் பெரும் அச்சுறுத்தலாக, தடைக்கல்லாக இருக்கிறது. இதை மடை மாற்றுவதற்காகவே ‘அவர் இந்துக் கடவுளை மட்டுமே எதிர்த்தார், அவர் இந்து மதத்தை மட்டுமே எதிர்த்தார் ‘ என்று பார்ப்பனர்கள் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இப்போது அம்பேத்கரின் பெயரிலும் ஜாதி ஒழிப்பு என்ற பெயரிலும் கூட சிலர் பார்ப்பனர்களின் பித்தலாட்ட அரசியலுக்கு ஆதரவான கருத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இது காதுடைந்த ஊசி முனையளவும் கூட ஜாதி ஒழிப்புக்கோ பார்ப்பன எதிர்ப்புக்கோ பயன்படாது. மாறாக இந்துத்துவ மதவாதப் பொய்ப் பிரச்சாரத்திற்கே பெரிதும் தூபம் போடுவதாக அமையும் என்கிற எச்சரிக்கையை மேசைகளில் உட்கார்ந்து கொண்டல்ல, களங்களில் நின்று ஓங்கிச் சொல்கிறோம்.

பெரியார் ஒரு சமத்துவ சமதர்மி என்பதைப் போலவே பெரியார் ஒரு நாத்திகர்! பெரியார் மதங்களின் விரோதி! எல்லா மதங்களின் எதிரி!

- காசு.நாகராசன்

Pin It