சென்ற வாரம் நமது பத்திரிகையில் இதே தலைப்பின் கீழ் வெளிவந்த விஷயத்தை நேயர்கள் அறிவார்கள். அதில் எல்லைப்புற மாகாண சீர்திருத்தத்தைக் கோரிய சுயராஜ்யக்கக்ஷியைச் சேர்ந்த முகம்மதியர்களின் பிரேரணையை, பண்டித நேரு முதலிய சுயராஜ்யக்கக்ஷியைச் சேர்ந்த தலைவர்கள் சில மொண்டிச்சமாதானங்களைச் சொல்லி முகம்மதியர்கட்கு விரோதமாய் அரசாங்கத்தார் சார்பில் வோட்டுக்கொடுத்து அத்தீர்மானத்தை வீழ்த்தியதினால் சுயமரியாதையுள்ள முகமதியர்கள் சுயராஜ்யக் கக்ஷியினின்று விலகிக் கொண்டனர் என்று எழுதியிருந்தோம். அக்க்ஷியிலுள்ள முகமதிய பிரதமருள் ஒருவரான மௌல்வி மகமது ஷாபி அவர்கள், தான் சுயராஜ்யக் கக்ஷியிலிருந்து விலகிக் கொண்டதோடல்லாது இந்தியா சட்டசபை ஸ்தானத்திலிருந்தும் விலகிக் கொண்டதாகத் தெரிகிறது. இது நாம் கூறியதை பலப்படுத்தும். தன் காலில் நிற்கக்கூடிய சுயமரியாதையுள்ள எவரும் இனி அக்கக்ஷியிலிருக்க மாட்டாரென்பது துணிபு.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 25.04.1926)

Pin It