உண்மையில் அப்பாக்கள் முன் மகன்கள் ஒன்றுமே இல்லை. எந்தக் கோபமாக இருந்தாலும் அது காலப்போக்கில் வெற்றுக் கோபமாக ஆகி விடும். பெரிதாக ஒன்றுமே செய்ய வேண்டாம். வா ன்னு கூப்பிட்டு அணைத்துக் கொண்டால் போதும். அது எந்த வயதாக இருந்தாலும் மகன்கள் உடைந்து விடுவார்கள்.

ஒரு வீடியோ பார்த்தேன்.

ஒரு குடும்பம் குடும்ப போட்டோ எடுக்க நிற்கிறார்கள். வலது மூலையில் அப்பா. இடது மூலையில் பெரிய மகன்... இடையே சின்னவனும் அம்மாவும். பெரியவனுக்கு என்னவோ பிரச்சனை. அவன் அப்பாவோடு பேசுவதில்லை போல. அவன் அந்த குடும்பத்தில் இருந்தே விலகி நிற்கிறான். நால்வர் முகத்திலுமே அது தெரிகிறது.

father and sonதம்பி.... பக்கம் வா என்றழைத்தும்.. பெரியவனுக்கு என்னவோ தடுமாற்றம். நெருங்க மறுக்கிறான். இவன் ஒரு பக்கம் நிற்க அவர்கள் மூவரும் ஒரு பக்கம் நிற்கிறார்கள். மூத்தவனுக்கும் குடும்பத்துக்கும் இருக்கும் ஆதி தொட்ட கலவரங்கள் தான் அது. வீட்டுக்கு வீடு பெரியவனுக்கு இருக்கும் சிக்கல்தான் அது. தயக்கமும் சங்கோஜமும் அவன் உடல்மொழியில் தவியாய் தவிக்கிறது. அப்பா சூழலை சமாளிப்பதாக கேமராவையே பார்த்து ரெடி என்பது போல பாவிக்கிறார். இந்த பக்கம் கணவன்... அந்த பக்கம் பையன் என்று இருதலைக் கொள்ளி அன்பாக தகிக்கிறார் அம்மா. தம்பி தான் தூதுவன். வா வந்து பக்கம் நில்லு என்று ஜாடை மாடையாக கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனாலும் இடைவெளி அங்கே இதயங்களை தள்ளியே வைத்திருக்கிறது.

கேமராமேனுக்கு போட்டோ வியூவில் சிக்கல் வருகிறது. கேமராவை விட்டு கண்களை எடுத்து நேராக பார்க்கிறார். அவருக்கு வியூவில் இருக்கும் சிக்கலும் புரிகிறது. வாழ்வில் இருக்கும் சிக்கலும் புரிகிறது. இரண்டுக்குமான முடிவாக.. இன்னும் நெருங்கி நில்லுங்கள் என்று நால்வரையும் ஒரு சேர நெருக்குகிறார். அப்போதும் நெருங்கி நிற்க.... இந்த குடும்ப புகைப்படத்தில் இருக்க அவன் யோசிக்கிறான். ஆழமாய் பார்த்த கேமராமேன் ஒரு கட்டத்தில் அவனை இந்த பக்கம் வந்து அப்பா அருகே நிற்குமாறு சொல்கிறார்.

நால்வருக்குமே அது அதிர்ச்சி தான். அம்மாவுக்கு என்ன செய்வான் என்ற தவிப்பு. தம்பிக்கு... போய் நில்லு என்ற ஆர்வம். அப்பாவுக்கு... இந்த சங்கடமான சூழலை எப்படி நகர்த்துவது என்ற போராட்டம். வேறு வழியின்றி அருகே வந்தும் விலகி நிற்கிறான். மூவருக்கும் அவன் விலகி நிற்பது புரிகிறது. மனதுக்குள் கஷ்டமும்.. உடல்மொழியில் சாமாளிப்புமாக தடுமாறுகிறார்கள். அவனும் கூட தர்ம சங்கடமாக உணர்கிறான். ஒரு கணம் மூவரும் தங்களை இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள். அம்மாவுக்கு சங்கடத்தை கடக்க வேண்டிய பரிதவிப்பு. அப்பாவுக்கு அவர் நிலை. தம்பி கண்களில் ஒளி. நமக்கு படபடப்பு. உணர்ச்சி பெருகும் தருணம் அது.

"இன்னும் கொஞ்சம் நெருங்கி" என்று கேமராமேன் சொல்ல... தயங்கி தயங்கி.... நெருங்கவும் முடியாமல்.... விலகியே இருக்கவும் முடியாமல் அவன் தடுமாறி நிற்க.. நிலைமையை உணர்ந்து கொண்டு சட்டென அப்பாவின் கை அவனை தோளோடு அணைத்து தன்னோடு நெருக்கிக் கொள்கிறது.

அந்தக் கணத்தை தாங்காத இதயம் பட்டென திறந்து விடுகிறது. சட்டென முகத்தை திருப்பிக் கொண்டு உடைந்து கண்ணீர் விடுகிறான். விலகி இருந்த உறவின் இறுக்கம் உடையும் தருணம்... எத்தனை வயதானாலும் கண்ணீரைக் கொட்டி விடும். நிமிர்ந்து நின்று.... "பாத்துக்கலாம்" என்ற எந்தத் தோரணையும் உடைந்து சுக்கு நூறாய் மாறி விடும். அவன் தடுமாற்றமும் தவிப்பும் அப்பாவின் அரவணைப்பில் உடைந்து கண்ணீராய் மாறி விடுகிறது. அவன் இலகுவாகி விடுகிறான். நாமும் கூட சட்டென நெகிழ்ந்து விடுகிறோம்.

புரிந்து கொண்டு.... சரி சரி என்று இன்னும் இறுக்கமாய் அப்பாவின் கை தோளோடு அணைய.. இதுவரை இருந்த அந்த இடைவெளி சட்டென விலகி விடுகிறது. புது மூச்சில் முகம் பூரிக்க அவரோடு தோளோடு தோள் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறான். அவன் உடல்மொழியில் என் அப்பா எனும் நம்பிக்கை. அம்மாவுக்கும் தம்பிக்கும் கண்களில் பிரகாசம். முகத்தில் தேஜஸ். அப்பாடா என்ற நிம்மதி.

காலம் காலமாக இருக்கும் அப்பா மகன் சண்டைகள் எல்லாம் இப்படி ஒரு மெல்லிய கோட்டில் தான் தங்களை கோபக்காரர்களாக...சண்டைக்காரர்களாக காட்டிக் கொண்டிருக்கும். இடையில் புகுந்த ஒரு கேமராமேன் கட்டளையில் கூட அந்த கோடு அழிந்து கண்கள் நிறைந்து விடும். முதலில் அணைக்கும் கைகளுக்கு தான் எந்த சண்டையும் காத்திருக்கிறது.

உறவுகளை பஞ்சு மிட்டாய் ஆக்கி போவதும்... பெரும்பாறை ஆக்கி போவதும் அவரவர் கையில் தான்.

- கவிஜி

Pin It