ஒரே ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் (Use and Throw) பழக்கம் நமது பண்பாட்டிற்கு புதியது. மறுசுழற்சி என்பது நம் நாட்டு மக்களிடமும், இயற்கையிலும் காலங்காலமாக இருந்து வரும் செயல். ஒரு முறை பயன்படுத்தும் மேல்நாட்டுப் பண்பாடு உலகம் முழுமைக்கும் பரவி ஒட்டுமொத்தப் பழக்கவழக்கங்களையும் வாழ்க்கையையும் சீரழித்து வருகிறது.

இன்று அது உலகையே குப்பைமேடாக்கி, நீர் நிலைகள், வாய்க்கால்கள், சாலைகள், சாக்கடைகள், அனைத்து கழிவுகளிலும் நீக்கமற நிறைந்து, எந்த வகையிலும் அப்புறப்படுத்த முடியாத அணுக்கழிவுகளைப் போல் மாறிவிட்டன.

இதனிடையே நடுவண் அரசு சுற்றுச்சுழல் மற்றும் காடு (வனத்) துறையின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 இன் கீழ், மறுசுழற்சி செய்யப்படும் ஞெகிழி உற்பத்தி மற்றும் பயன்பாட்டு விதி, 1999 என்ற விதிமுறைகளை 19.01.1999 அன்று வெளியிட்டது. பின்னர் அதில் திருத்தங்களை செய்து ‘மறுசுழற்சி செய்யப்படும் ஞெகிழி உற்பத்தி மற்றும் பயன்பாட்டு (திருத்த) விதி, 2003யை 17.06.2003 அன்று வெளியிட்டது. இந்த விதிமுறைகளைப் பின்பற்றி இமாசலப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜம்மு கஷ்மீர், மகாராஷ்டிரம், கோவா, ஒன்றிய ஆட்சிப் பரப்புகளான தில்லி, சண்டிகர், தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் என மாநில அரசுகளும், அவற்றின் கீழ் உள்ள மாவட்ட நிர்வாகங்களும் விதிகளை வெளியிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன.

புதுச்சேரி பூவுலகின் நண்பர்கள் இயக்கம் மறைந்த நெடுஞ்செழியன் அவர்களின் எண்ணத்தின்படி தொடங்கப்பட்டு தொடந்து செயல்பட்டு வருகிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேல், தொடங்கப்பட்ட காலம் முதல் ஞெகிழியைப் (Plastic) பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என்று தற்போது வரை போராடி வருகிறோம்.

முதலில் 01.01.1997 அன்று புதுச்சரி அரசு நலத்துறை வெளியிட்ட ஆணையில் தேநீர், காபி கடைகளில் ஞெகிழிக் குவளைகள் தான் பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்தது. இதற்குக் காரணம் அன்றைய ஆளுநருக்கு வேண்டபட்ட ஞெகிழித் தொழிலதிபர்தான். இதையும், ஞெகிழியின் பயன்பாட்டால் கழிவுகள் அதிகமாகிக் கொண்டே போவதை தடுத்து எச்சரிக்கை செய்யவும், செப்டம்பா 1998 ‘சூழல்’ முதல் இதழிலிருந்து, 9 இதழ்களில் விரிவான விளக்கங்களைக் கொடுத்தோம். இதோடு பல கடிதங்கள் மூலமும், நேரிலும் ஞெகிழிப் பயன்பாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தோம். 03.01.2001 அன்று தேநீர், காபி கடைகளில் ஞெகிழயைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆணை திரும்ப பெறப்பட்டது.

புதுச்சேரி பூவுலகின் நண்பர்கள் சார்பில் 28.04.2002 அன்று சவகர் சிறுவர் இல்லத்தில் அப்போதைய முதல்வர் ந. அரங்கசாமி, அப்போதைய அமைச்சர் இலட்சுமிநாராயணன் கலந்து கொண்ட நான்கு நூல் வெளியீட்டு விழாவில், சுற்றுச்சுழலை முதன்மைப்படுத்தி 11 கோரிக்கைகளை கொடுத்தோம். அவற்றில் முதல் கோரிக்கையே, “புதுச்சேரியில் ஞெகிழியைத் தடைசெய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனை செய்வர், பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஞெகிழிக்கு மாற்றாக கண்ணாடி, தாள், மண்ணாலான பொருட்கள், துணி, இலைகள், பட்டைகள் ஆகியவற்றைச் சிறுதொழில் முயற்சியாக அரசு மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தோம். அதற்குப் பிறகு "பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தினர்" பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஆதரவான விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர். இடையில் தடை உத்தரவு வரும் என்று முதல்வர் அறிவித்திருந்தாலும் எதுவும் நடக்கவில்லை.

மது விற்பனைக்குப் பெயர்பெற்ற புதுச்சேரி குடித்து விட்டுத் தள்ளாடுவதைப் போல், ஞெகிழிக் கொள்கையிலும் மீண்டும் தள்ளாடி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுற்றுச்சுழல் அமைச்சர் வல்சராசு “சூலை 1 ஆம் தேதி முதல் ஞெகிழி தடை ஆணை முற்றிலும் செயல்படுத்தப்படும்” என அறிவித்தார். இதற்காக கல்வித் துறைக்கு கணிசமான அளவு நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி மாணவர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று வரை நடந்து வருகின்றன.

அமைச்சர் அறிவித்தபடியே 04.06.2009 அன்று புதுச்சேரி அரசு சுற்றுச்சூழல் துறை மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் “பாலித்தீன் பிளாஸ்டிக் தூக்குப் பைகள், ஒரு முறை பயன்படுத்தும் குவளைகள் மற்றும் தட்டுகள் மட்காதவை என்பதாலும், எதிர்காலத்தில் வெள்ளம் மற்றும் கடும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப்பரப்பு முழுவதும் தூக்குப்பை, குவளை, தட்டுகளை பயன்படுத்த கூடாது" என உத்தரவிட்டது. அந்த அறிவிப்புக்கு 15 நாள் காலக்கெடுவும் விதித்திருந்தது.

இந்த அறிவிப்பை எதிர்த்து "பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கமும்", "வணிக சங்கமும்" சேர்ந்து தடையை நீக்கக் கோரி 25.06.2009 அன்று பேரணி நடத்தி, முதல்வரிடம் மனு கொடுத்தனர். கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இத்தடை அறிவிப்பை இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக தள்ளி வைப்பதாக உடனடியாக அவர் அறிவித்தார். இதை எதிர்த்து சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை அமைப்புகள் 03.07.2009 அன்று பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தின. அத்துடன் புதுச்சேரி மக்கள் இயக்கங்களுடன் பூவுலகின் நண்பர்களும் இணைந்து "புதுச்சேரி சுற்றுச்சூழல் கழகம்" என்ற பெயரில் 29.06.2009 மற்றும் 10.07.2009 அன்று தலைமைச் செயலர், சுற்றுச்சூழல் துறை செயலாளரிடம் கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் அளித்துள்ளனர்.

பிளாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களோ குப்பைகளை அகற்றும் நகராட்சி முறைப்படி செயல்படாததால் தான் பிரச்சினை ஏற்படுவதாகவும், ஞெகிழித் தடையால் தங்கள் வாழ்வாதாரம் பறி போவாதாகவும், மரத்தை வெட்டாமல் சுற்றுச்சூழலைக் காக்க இத்தொழில் உதவுகிறது என்றும் சாக்குபோக்குகள் கூறி வருகின்றனர். இது பற்றி பிரபலப்படுத்துவதற்காக விரைவில் வீராம்பட்டினம் தேர் திருவிழாவில் ‘குலுக்கல் முறையில் 10 பேருக்கு ஒரு கிராம் தங்க காசு பரிசாக வழங்க உள்ளதாகவும்’ அறிவித்துள்ளனர். ஞெகிழித் தடைக்கு எதிராக இவர்கள் செய்யும் செப்படி வித்தைகள் இனிமேலும் தொடர்ந்தாலும் ஆச்சரியமில்லை.

இந்த நேரத்தில் தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு தடை செய்யப்பட்ட நிலையை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வளவுக்கும் புதுச்சேரி அரசு ஞெகிழியை முற்றிலும் தடை செய்யவில்லை. ஒரே ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாலித்தீன் தூக்கு பைகள், குவளைகள் மற்றும் தட்டுகள் ஆகியவற்றைத்தான் தடை செய்வதாக உள்ளது. இதை ஏற்க மறுப்பது அறிவியல்பூர்வமற்றது. பை நிரம்பினால் போதும், பணம் தான் வாழ்க்கை என்று மாறிப்போன சில தன்னல வெறியர்களுக்கு அறிவியல் உண்மைகள் உரைக்காமல் இருக்கலாம். இந்த மண்ணின் மேல், மக்களின் மேல், உயிரினங்களின் மேல், வருங்காலச் சந்ததி மேல் இவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை.

பிரச்சினையைப் புரிந்து கொண்டு மாற்றத்தை உருவாக்க அடுத்த தலைமுறையினர் நினைத்தாலும், வணிகக் கொள்ளையர்கள் அதற்கு வழிவிட மறுக்கும் நிலையை நாம் மாற்றியே தீருவோம்.

- இளங்கோவன், பூவுலகின் நண்பர்கள் (புதுச்சேரி) 

Pin It