உங்களிடம் செல்லப் பிராணி இருக்கிறதா, குறிப்பாக வளர்ப்பு நாய்? அமெரிக்க உடல் நலக் கழகம் (National Institute of Health) செல்லப் பிராணி வளர்ப்பது நம் உடல் நலத்திற்குப் பயனளிக்குமா என்று 2008 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, அது நம் உடல் நலத்திற்குப் பயன் தரலாம் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

ஆய்வின் பயனாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்:

விஞ்ஞானிகள், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 421 இருதய நோயாளிகளை (இவர்களில் சிலர் செல்ல நாய் வளர்ப்பவர்கள், சிலர் செல்ல நாய் வளர்க்காதவர்கள்) மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஓராண்டுக்குப் பின் பரிசோதித்தனர். மேற்கண்ட நோயாளிகளில் - அவர்களுக்கு மாரடைப்பின்போது ஏற்பட்ட  தீவிரத்திற்கு சம்பந்தமின்றி - செல்ல நாய் வளர்க்காதவர்களை விட, செல்ல நாய் வளர்த்தவர்கள் மிகுந்த நலமாக இருப்பதாகத் தெரிய வந்தது.

வேறு ஒரு ஆய்வின்படி, 2000 நடுத்தர வயதினரைப் பரிசோதித்ததில், சொந்தமாக செல்ல நாய் இல்லாமலும், நாய்த் துணையுடனும் நடைப் பயிற்சி கொள்ளாதவர்களை விட, சொந்தமான செல்ல நாய்த் துணையுடன் நாள்தோறும் வழக்கமாக நடைப் பயிற்சி மேற்கொண்டவர்கள் உடல் பருமனின்றி நல்ல ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் இருப்பதாகத் தெரிந்தது. சற்று வயது முதிர்ந்தவர்களைப் பரிசோதித்த இன்னொரு ஆய்வின்படி, செல்ல நாயுடன் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் அவரவர் வீட்டிற்குள்ளும் தசையும், மூட்டும் பிடிப்பின்றி இயல்பாக நடமாட முடிந்தது என்றும் தெரிகிறது.

செல்ல வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்கள், நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்கிறார்கள். எனவே நாயுடன் நடைப் பயிற்சி செல்பவர்கள், நடைப் பயிற்சியின் போது, வீட்டிற்கு வெளியிடங்களில், அறிந்தவர்களிடமும், நண்பர்களிடமும் மனம் விட்டுப் பேசவும், நட்புறவை நீடிக்கவும் உதவுகிறது. இது மனதுக்கும் உடலுக்கும் சோர்வைப் போக்கி தெம்பளிக்கிறது. வயதாவதைப் பற்றிய கவலையின்றி நீண்ட நாட்கள் வாழ பிடிப்பைத் தருகிறது.

தாங்கள் நலமுடன் இருப்பதற்கு நடுத்தர வயதினரும், முதியவர்களும் தங்கள் செல்ல நாய்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறார்கள்.

செல்ல வளர்ப்பு நாய்  வைத்திருப்பவர்கள் நடை பயிற்சியை வழக்கமாக்கி கொண்டால், நடைபயிற்சியின் மூலம் அவர்களின் ரத்த அழுத்தம் குறைகிறது, சீராகிறது.

மன அழற்சியை சரி செய்கிறது. மருத்துவரிடம் செல்வதும், மருத்துவச் செலவும் குறைகிறது.

செல்ல வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்கள் அதற்காகவாவது நடைப் பயிற்சியைக் கட்டாயமாக்கி கொள்கிறார்கள். இருதய நோய் உள்ளவர்களும், முதியோர்களும் மத்திய தர மற்றும் சிறிய வகை நாய்களை நடைபயிற்சியின் போது பயன்படுத்தலாம் என்று கருதுகிறேன். எனவே நடைப் பயிற்சியின் அவசியத்தை யாவரும் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

குறிப்பு: அமெரிக்காவில் பயிற்சி பெற்ற நாய்களையே வளர்ப்பார்கள். எனவே நாமும் செல்ல நாய் வளர்க்க விரும்பினால், தகுந்த பயிற்சியும், நோய்த் தடுப்பு ஊசிகளும் (Immunisation), மருந்தும் கொடுத்து வளர்த்தால் நமக்கும் மற்றவர்களுக்கும் நல்லது. செல்ல நாயுடன் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் இருதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையுடன் செல்வது நல்லது.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It