கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று, முல்லைநிலப் பணிகளுக்கான (Indian Forest Service) தகுதி பெற்று, அனைத்து இந்திய அளவில் சிறப்பு இடம் பெற்றுத் தேர்வு பெற்ற இரண்டு இளைஞர்கள் என்னைச் சந்திக்க வந்தனர் (26.3.2014). நண்பர் ஒருவர் அழைத்து வந்தார். இந்த ஆண்டும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று, நேர்காணலுக்குச் செல்கின்றனர். தமிழக, இந்திய அரசியல் குறித்துச் சில கேள்விகளுடன் வந்தனர்.

அவர்கள் கேட்ட சில கேள்விகள்:

1. தமிழக முதல்வர்களுள் சிறந்தவர் யார் என்று நீங்கள் கருதுகிறீர்கள் ?

தமிழக முதல்வர் பொறுப்பை வகித்த அனைவருமே சாதனையாளர்களே. அதனால்தான் அவர்கள் முதல்வர் பொறுப்பை அடைந்தார்கள். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் முதல்வர் ஆனவர்கள் ஜானகி எம்.ஜி.ஆர், ஓ. பன்னீர்செல்வம். அவர்கள் பொறுப்பு வகித்த காலமும் மிகக் குறைவு.

karunanidhi 333கலைஞர் கருணாநிதி பொறுப்பு ஏற்பதற்கு முன்பு, 1969 ஆம் ஆண்டு வரை முதல்வர்களாகப் பொறுப்பு வகித்தவர்கள் தன்னலம் அற்ற தலைவர்கள். தூய பொது வாழ்வுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்கள். சொத்துக் குவிக்கும் எண்ணம் இல்லாதவர்கள். விளம்பரத்துக்கு மயங்காதவர்கள். வீண் ஆடம்பரங்களைத் தவிர்த்தவர்கள். அவர்களுள் சிலர் குறுகிய காலமே பொறுப்பு வகித்தனர். ஓரிருவருக்கு மட்டுமே கூடுதல் வாய்ப்புகள் கிடைத்தன. அவர்களுடைய சாதனைகளைப் பட்டியல் இடப் பல பக்கங்கள் தேவை.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், நீதிக்கட்சித் தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான விடுதி, மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குப் பகல் உணவு, இட ஒதுக்கீடு, அறநிலையத்துறை, தேவதாசி முறை ஒழிப்பு என அனைத்து இந்திய அளவில் பல சட்டங்களை முதன்முறையாக இயற்றி, சமுதாயச் சீர்திருத்தங்களை நிறைவேற்றி, இந்தியாவுக்கே வழிகாட்டினர்.

ராஜாஜி இந்தியாவிலேயே முதன்முறையாக, 1937 இல் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கைக் கொண்டு வந்தார். தமது அறிவுக்கூர்மையால் அனைத்து இந்திய அரசியலில் புகழ் பெற்று, இந்தியாவின் முதலாவது கவர்னர் ஜெனரல் என்ற சிறப்பையும் பெற்றார். ஆந்திர கேசரி பிரகாசம் ஒரு சாதனையாளர். சென்னை மாகாணத்தின் ஆந்திரப் பகுதிகளில் கல்விக்கூடங்கள், அணைக்கட்டுகள் எனப் பல திட்டங்களைச் செயல்படுத்தினார்.

எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்து, விவசாய நலத்திட்டங்களை வகுத்தவர் ஓமந்தூரார்.

பள்ளிகளைப் பரவலாகத் திறந்து, கடைகோடி மக்களுக்கும் கல்வியைக் கொண்டு சென்றவர் காமராசர். தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம், இம்மாநிலத்தில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே ஆட்சிமொழிகள், இந்தியாவிலேயே முதன்முறையாக, சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட ஒப்புதல் தந்து சிறப்புப் பெற்றவர் அண்ணா.

இந்திய விடுதலைத் திருநாளின்போது, கோட்டையில் கொடி ஏற்றும் அதிகாரத்தை மாநில முதல்வர்களுக்குப் பெற்றுத் தந்தது, மகளிருக்குச் சொத்து உரிமை, குடிசை மாற்று வாரியம் கொண்டு வந்தவர் கருணாநிதி. ஆனால், மகன்கள், மகள், பேரன்கள் என அனைவரையும் அரசியலுக்குக் கொண்டு வந்து, பதவிகளில் அமர வைத்து, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், பல்லாயிரம் கோடி சொத்துக்களைக் குவித்து, அனைத்து இந்திய அளவில் அவப்பெயர் பெற்றார்.

சத்துணவுத் திட்டத்தால் புகழ் பெற்றார் எம்.ஜி.ஆர். இந்தியாவில் முதன்முறையாக மகளிர் காவல் நிலையங்கள் அமைத்துப் பெயர் பெற்றார் ஜெயலலிதா.

2. சரி. தமிழக முதல்வர்களுள் மோசமானவர் யார்?

இதில் கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும்தான் போட்டி. அறிவியல் நுணுக்கங்களோடு ஊழல் புரிந்தவர் என சர்க்காரியா ஆய்வு ஆணையத்தால் சான்று அளிக்கப்பட்டவர்; தமிழக அரசியலில் ஊழலின் ஊற்றுக்கண் கருணாநிதி. இருப்பினும், தான்தோன்றித்தனமான போக்கு, கட் அவுட் விளம்பர வெறி, காலில் விழும் வழக்கத்தை ஊக்குவித்துத் தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் நாகரிகம், பண்பாடுகளைச் சிதைத்தது, 1991-96 காலகட்டத்தில் ஊழல் பேரரசை நிறுவியது என, ஐந்து மதிப்பெண்கள் கூடுதலாகப் பெற்று ஜெயலலிதா முதல் இடம் பெறுகிறார்.

3. நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும்?

பதில்: நான் அரசியலில் நடந்த உண்மை நிகழ்வுகளை, விருப்பு வெறுப்பு இன்றிப் பதிவு செய்வதைக் கடமையாகக் கொண்டு இருக்கின்றேன். அவ்வாறு தமிழ்நாட்டின் கதை (1850 முதல் 2013 வரையிலான தமிழக அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பு), கட்சிகள் உருவான கதை (அனைத்து இந்திய அரசியல்), கிழக்கின் கதை (22 கிழக்கு ஆசிய நாடுகளின் வரலாறு) உள்ளிட்ட பல நூல்களை எழுதி இருக்கின்றேன்.

எனது தந்தையார் உள்பட, அனைத்து இந்திய அளவில் அரசியல் கட்சிகளின் முன்னோடிகள் ஒன்றரை இலட்சம் பேர்களை, எவ்வித விசாரணையும் இன்றி 20 மாதங்கள் வரையிலும் சிறையில் அடைத்த இந்திரா காந்தியின் மீது இருந்த கோபத்தால், 1977 தேர்தலில் அவரும், சஞ்சய் காந்தியும் உறுதியாகத் தோற்பார்கள் என்று, பத்துப் பேர்கள் முன்னிலையில் பக்கத்து வீட்டுக்காரரிடம் 5 ரூபாய் பந்தயம் கட்டினேன். நான் சொன்னவாறே அனைத்து இந்திய அளவில் காங்கிரஸ் தோற்றது; ஜனதா ஆட்சி அமைந்தது. அப்போது எனக்கு 13 வயது. ஆனால், இந்தியா போன்ற பழமையான ஒரு நாட்டில் பிரதமர் பதவி ஏற்று, உலக அளவில் சாதித்த ஒரு பெண் என்பதால், இந்திரா அம்மையார் மீது மதிப்பு உண்டு.

1991 தேர்தல் வரையிலும், எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதை என்னால் துல்லியமாகக் கணிக்க முடிந்தது. அப்போதைய அரசியலில், காங்கிரஸ் முதன்மையாகவும், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே கட்சிகள் இருந்தன. எனவே, வெற்றி தோல்வியைக் கணிப்பது மிக எளிதாக இருந்தது. ஆனால் தற்போது, 1500 க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. வாக்குகள் பல முனைகளில் பிரிகின்றன.

இந்தியாவில் கருத்துக் கணிப்பைப் பொறுத்தவரையில், 1989, 1991 மற்றும் அடுத்த சில தேர்தல்களில், மிகத் துல்லியமாக வெற்றி தோல்வியைக் கணித்துப் புகழ் பெற்றவர் பிரணாய் ராய். அன்றைய கருத்துக் கணிப்பு வசதிகளைக் கொண்டு, சரியான, தெளிவான முடிவுகளைச் சொன்னார். 1989, 1991 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று அவர் சொன்ன எண்ணிக்கையே அந்தக் கட்சிக்குக் கிடைத்தது, என்னைப் போன்ற அரசியல் பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய வியப்பை ஏற்படுத்தியது.

இன்றைக்கு எவ்வளவோ வசதிகள் வந்து விட்டன. எத்தனையோ கணக்குகளைப் போடுகிறார்கள். புள்ளி விவரங்களைத் தருகிறார்கள். தகுதி இல்லாத, தங்களுக்கு வேண்டியவர்களைத் தூக்கி நிறுத்த முயல்கிறார்கள்.

jayalalitha 290கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்புதான் நடக்கின்றது. தொலைக்காட்சிகள் மற்றும் செய்தி ஏடுகள் என ஊடக பலம் மிகுந்த ஒருவர், கருணாநிதிக்கு அடுத்த வாரிசு எனத் தன்னைக் காட்டிக் கொள்ள முயன்று ஒரு கருத்தைத் திணித்தார். அதன் விளைவாக மதுரையில் அவர்களது செய்தித்தாள் அலுவலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மூன்று இளைஞர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். எனவே, கருத்துக்கணிப்புகளை நம்ப முடியவில்லை. சரியாகவும் இல்லை.

2000க்குப் பிறகு, ஒரு தேர்தலில் மிகச் சரியாகக் கணித்துச் சொன்ன நிறுவனம், அடுத்த தேர்தலில் தவறி விடுவதைப் பார்த்து இருக்கிறேன். தமிழ்நாட்டில், கருத்துக்கணிப்பு நிறுவனங்களின் துணையோடு, இந்து ஆங்கில ஏடு தந்த சில முடிவுகள் சரியாக இருந்தன. கேரளத்தைப் போலவே, கடந்த 1984 முதல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எனவே, 2011 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. உறுதியாகத் தோற்கும் என்று நான் கருதினேன்.

ஆனால், தமிழ்நாட்டில் தி.மு.க., அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு 120-110 இடங்கள் கிடைக்கும்; முடிவை உறுதியாகச் சொல்ல முடியாது என்று பல முன்னணிக் கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் கூறின. ஏதோ ஒரு வட இந்திய நிறுவனம் மட்டும் அண்ணா தி.மு.க. அணி 195 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறியது. அதுதான் நடந்தது. மற்றவர்கள் ஒரு கருத்தைச் சொல்லும்போது அவர்கள் மாற்றிச் சொன்னார்கள். அதாவது குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்ததுபோல.

இன்றைய அரசியல் சூழலில், வெற்றி தோல்விகளைக் கணிப்பது குழப்பமாக இருக்கிறது. எனவே, நான் கருத்துக்கணிப்புச் செய்திகளைப் படிப்பதையே விட்டுவிட்டேன். மனம் அமைதியாக இருக்கிறது. நிறைய எழுதிக் கொண்டு இருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை, விலாவாரியாக ஆராய்ந்து எழுதுவேன் என்றேன்.

சந்திக்க வந்த தம்பிகள் இருவரும், 22, 25 வயதில் சாதித்தவர்கள். இந்த ஆண்டு ஆட்சிப் பணித் தேர்வுகளில், முதல்நிலை, முதன்மைத் தேர்வு இரண்டிலும் வெற்றி பெற்று, நேர்காணலுக்குச் செல்கிறார்கள். உறுதியாகச் சாதிப்பார்கள். அவர்களுக்கு எனது கொடிவழி நூலைப் பரிசாகக் கொடுத்து, உங்கள் சார்பாக அவர்களை வாழ்த்தி அனுப்பினேன்.

4. 27.3.2014 அன்று இரண்டு தம்பிகள் என்னைச் சந்திக்க வந்தார்கள். ஒருவர் பி.டெக் பட்டம் பெற்ற பிறகு, அரசியல் ஆர்வத்தின் காரணமாக பி.ஏ. படிக்கின்றார். பி.இ. படித்தவர் பின்னாளில் மருத்துவப் பட்டமும் பெற்று, சென்னை அண்ணா நகரில் ஒரு மருத்துவமனையையும் நிறுவி, இளம் வயதில் இயற்கை எய்தினார். சாந்தி காலனியில் உள்ள சுந்தரம் நினைவு மருத்துவமனை. அதேபோல, பி.இ.படித்தவர்கள் வழக்கறிஞராகவும் ஆகி இருக்கின்றார்கள். ஆனால், பி.டெக் படித்தவர் பி.ஏ. படிப்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

உடன் வந்த மற்றொரு மாணவர் பி.இ. (மெகானிகல்) படித்து விட்டு, எம்.ஏ. (அரசியல்) படிக்கின்றார்.

முதலாவது தம்பியிடம், ‘உங்கள் முடிவால் பெற்றோர்கள் வருத்தப்படுவார்களே?’ என்றேன். எனக்கு இதுதான் பிடித்து இருக்கின்றது. இந்தத் துறையில் சாதிப்பேன் என்றார். உறுதி தெரிந்தது. சாதிக்க வாழ்த்துவோம்.

நடைபெற இருக்கின்ற தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கைகள் குறித்த ஒரு கருத்து அரங்கத்தை ஏற்பாடு செய்து இருக்கிறோம். கலந்து கொள்ள வேண்டும் என்றார்கள். எங்கள் தேர்தல் அறிக்கை தெளிவாக இருக்கிறது. படித்துப் பாருங்கள். மேலும் விளக்கங்கள் வேண்டுமானால் கேளுங்கள் தருகிறேன். ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை, குறிக்கோள், இலட்சியங்கள் இருக்கின்றன. அதை மக்களிடம் விளக்குகிறார்கள். அவர்கள் தேர்வு செய்கிறார்கள். கருத்துப் பரிமாற்றங்கள் என்ற பெயரில், தேவை அற்ற வாக்குவாதங்கள், நான் அதைச் சொல்லி இருக்கிறேன்; நீ இதைச் சொல்லவில்லை; என் அறிக்கைதான் சிறந்தது; உன் அறிக்கை மட்டமானது என்ற வகையிலான மோதல்கள்தான் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

கருத்து அரங்குகள், கருத்துப் பரிமாற்றங்கள் என்பதும், கருத்துக் கணிப்புகளைப் போலத்தான் என்றேன்!

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It