subburayul book 450இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தின் சாதிமுறை பற்றி இரண்டு ஆய்வு நூல்கள் வெளிவந்தன. ஒன்று, நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு ஆகியோர் எழுதிய “தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொது ஆண்டு 800-1500)” என்ற புத்தகம். மற்றொன்று, ஆ.சிவசுப்பிர மணியன் எழுதிய “பிராமண போஜனமும் சட்டிச் சோறும்” என்ற புத்தகம்.

இந்த இரண்டு நூல்கள் 86பக்கங்களே உள்ள சிறிய புத்தகங்கள்தாம். ஆனால் இதுகாலம்வரை, சாதி உருவாக்கம் பற்றி நாம் கொண்டுள்ள கருத்துகளை இவ்விருநூல்களின் வாசிப்பு மாற்றியமைக்கிறது; துல்லியப்படுத்துகிறது; தெளிவு படுத்துகிறது. ஆதலால் இந்நூல்களை வாசிப்பதும் விவாதிப்பதும் அவசியம். இந்த கட்டுரையில், “தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொது ஆண்டு 800-1500)” என்ற நூலைப் பற்றிய எனது புரிதலைப் பகிர்ந்துகொள்கிறேன்.

கராஷிமாவும் சுப்பராயலும் அவர்களது ஆய்வுகளும்

முதலில் நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு ஆகியோர் பற்றி சில சொற்கள். இவர்கள் இருவரும் இணைந்து தென்னிந்தியச் சமூக வரலாறு தெளிவடை வதற்கான ஆய்வுகள் மேற்கொண்டவர்கள். ஆய்வுகள் என்றால் ஏதோ ஒன்றிரண்டு ஆண்டுகளில் மேற் கொண்ட ஆய்வுகள் அல்ல.

சுமார், 20-30 ஆண்டு காலமாக, தென்னிந்தியக் கல்வெட்டுகளை முழுவது மாகப் படித்து, சொல்லடைவுகளை உருவாக்கிக் கொண்டு, புள்ளியியல் முறையில் விவரங்களை நோக்கி, நிதானமான முறையில் முடிவுக்கு வந்து, பல்வேறு சமூக வரலாற்றியல் வாத விவாதப் போக்கில் எடுத்துரைக்கும் ஆய்வுகளை மேற்கொண்டவர்கள். இவர்கள் எழுதியுள்ள ஆய்வுநூல்களும் கட்டுரைகளும் மிக முக்கியமாவை.

அத்தோடு பல்லாண்டு கால உழைப்பில் இவர்கள் உருவாக்கியுள்ள கருவிநூல்கள் தென்னிந்திய, தமிழகச் சமூக, வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்வோர்களுக்குப் பெருஞ்செல்வங்கள்; இனிவரும் காலத்திலும் பல நற்பயன்களை அளிக்க இருப்பவை.

தமிழகத்தின் அரசியல் நிலவியல், நிலத்தில் தனியுடைமை உருவாக்கம், அரசு உருவாக்கம், சமூக உருவாக்கம், வணிகம் இவை பற்றியெல்லாம் இவ் விரண்டு பேராசிரியர்கள் இணைந்தும் தனித்தும் தம் குழுவோடும் செய்த ஆய்வுகள் தென்னிந்திய வரலாற்று ஆய்வுத்துறையில் புதிய தடத்தை உருவாக்கியுள்ளன.

“தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்” என்ற நூலில், தமிழ்நாட்டில் தீண்டாதார், சோழர் காலச் சமூக மாற்றத்தின் சில தன்மைகள், புதிய ஓம்படைக் கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும், பதினைந்தாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் ஓர் உழவர் கிளர்ச்சி ஆகிய நான்கு ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன.  இவற்றில் இரண்டு கட்டுரைகளை கராஷிமாவும்,  ஒன்றை சுப்பராயலும்,  மற்றொன்றை இருவரும் சேர்ந்து எழுதியுள்ளனர்; இவற்றை 30 ஆண்டு கால இடை வெளியில் எழுதியுள்ளனர்.

இந்த நூலின் கட்டுரைகளில் பேசப்படும் விஷயங்களை இந்தச் சிறு அறிமுகத்தில் தனித்தனியாக எடுத்துரைத்து, விவாதிக்க இயலாது. அதனால் இந்நூல்களின் மூன்று முக்கியமான ஆய்வு முடிவுகளைச் சுருக்கமாகக் காணலாம்.

தமிழகத்தில் சாதிமுறை பற்றி மூன்று புதிய ஆய்வுக் கருத்துகள்

கராஷிமா - சுப்பராயலு நூலில் கவனத்தை ஈர்க்கக் கூடிய முதல் கருத்து: இன்று தீண்டாத சாதிகளாக இருக்கக் கூடிய எவையும் சோழர், விஜயநகர காலக் கல்வெட்டுகளில் தீண்டாதார்களாகக் குறிப்பிடப் படவில்லை. அவர்கள் உழவர்களாக, பண்ணை அடிப் பவர்களாக, நெசவாளர்களாக, விலைக்கு வாங்கவும் விற்கவும் பட்ட அடிமைகளாக மட்டுமே குறிப்பிடப் படுகின்றனர். அந்தக் காலத்தில் வேளாளர்கள் கூட விலைக்கு வாங்கவும் விற்கவும் பட்ட அடிமைகளாக இருந்துள்ளனர் என்றும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

அந்தக் காலத்தில் தீண்டாதார் எனச் சுட்டப்பட்ட புலையர், பாணர் முதலான சமூகங்களைச் சமகாலத் தமிழ்ச் சமூகத்திற்குள் அடையாளம் காணமுடிய வில்லை. குறிப்பாக, பெரியபுராணத்தில் நந்தன் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாத புலையர் சமூகத்தைச் சேர்ந்தவராகவே குறிப்பிடப்படுகின்றார். ஆனால், காலனிய காலத்திலும் அதற்குப் பின்னும் அவர் பறையர் என அடையாளப்படுத்தப்படுகின்றார். இந்த விவாதக் கருத்தின் தொடர்ச்சியாக, நாம் பின்வரும் கருத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றோம். இந்தக் காலத் தமிழகத்தில் உள்ள தீண்டாத சமூகங்கள் என அழைக்கப்படுகின்ற குழுமங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை அண்மைக்காலத்தில் சுமத்தப்பட்டதே.

இரண்டாவது கருத்து பின்வருவது ஆகும். இடைக்காலத் தமிழகத்தில் சமூகக் குழுமம் சார்ந்த தகுநிலை, பொருளாதாரம் சார்ந்த தகுநிலை, தொழில் சார்ந்த தகுநிலை ஆகிய மூன்றுவிதமான சமூக மதிப்புறுநிலைகள் இருந்தன; இவை நிலைபெற்றவை யாக அல்லாமல், மாறும் தன்மையுடையவையாக இருந்தன. குறிப்பாக, வேளாளர் சமூக மதிப்புறு நிலையைச் சமூக மாறுதல் போக்கில் பல பழங்குடிகள் கோரிப் பெற்றனர்; அவர்கள் சோழர் காலத்தில் போர் மரபு இனமாக மாற்றமுற்று, அதன்மூலம் நிலபுலன்களைப் பெற்று, வேளாளர் ஆயினர். இதைக் கீழ்க்காணும் சுப்பராயலு கூற்று மிகத் தெளிவாகக் காட்டுகிறது.

“ஐஞ்சுநாட்டார், பள்ளிநாட்டார் அல்லது பன்னாட்டார், திரு வாய்ப்பாடி நாட்டார் முதலிய பெயர்களில் உள்ள நாட்டார் என்ற பின்னொட்டு, இவ்வினங்கள் இப்போது வேளாண் நாட்டாரைப் போல் தாங்களும் நிலவுடைமையாளர் என்ற தகுதியுடையவர்கள் என்பதை நிலைநிறுத்தச் செய்த முயற்சியின் ஒரு வெளிப்பாடாகும். இந்த வகையில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு உடைந்த கல்வெட்டில் காணப்படும் அகம்படி வேளானும் பள்ளிவேளானும் என்ற சொற்றொடர் முக்கியத்துவம் வாய்ந்தது(இக.1915:416). அதாவது வேளாளர் தகுதிக்கு அகம்படியாரும் பள்ளிகளும் உரிமை கொண்டாடினார்களென்று இதை விளக்கலாம்.” (பக். 19-20)

அதாவது இடைக்காலத்தில் மாற்றத்திற்கே சிறிது இடமில்லாத சாதி சார்ந்த சமூக மதிப்புறுநிலைகள் இல்லை; மாறும் தன்மையுடைய, அசைவியக்கமான சமூக மதிப்புறு நிலைகளே நிலவின.

மூன்றாவது, சாதி உருவாக்கம் பற்றிய பின்வரும் கருத்து ஆகும். சோழர் வீழ்ச்சியாலும் பின்னிடைக் காலத்தில் நிலவிய அரசியல் நிலையற்ற தன்மையாலும் சமூகக் குழுமங்கள் இறுக்கமடைந்தன. வலங்கை-இடங்கை என்ற இரு படுகிடையான பிரிவுகளாக அமைத்துக் கொண்டு சமூகப் பொதுவெளி உரிமை களுக்காக மோதிக்கொண்டன; அல்லது பேசித் தீர்த்துக் கொண்டன. இந்தச் சமூகக் குழுக்களை வகைப்படுத்தும் உள்ளூர் கருத்துப் போக்குடன், சமூகக் குழுமங்களை மேல்-கீழ் என வகைப்படுத்தி நோக்கும் பார்ப்பன வருணச் சட்டகம் மோதுகிறது. இந்த மோதல் காலனிய காலம் வரை நீடிக்கின்றது. இந்த மோதல் முடிவு பெற்றதன் விளைவாகவே மேல்-கீழாக அடுக்கப்பட்ட படிநிலைச் சமூக அமைப்பும், அப்படிநிலையில் இறங்குமுகமாக அதிகரித்துச் செல்லும் தீண்டாமையும் அடிப்படையிலான மாற்றமில்லாத சமூக மதிப்புறு நிலைகளை வழங்கும் சாதிமுறை உருவானது. இந்தச் சாதி உருவாக்கம் காலனிய காலத்தில்தான் நிறைவுற்றது. இதுவே மூன்றாவது கருத்து.

சாதிமுறையின் நிலைத்த தன்மையும் மாறும் தன்மையும்

தமிழகத்தில் சாதிமுறையின் உருவாக்கம் பற்றிய மேலே கண்ட மூன்று கருத்துகளும் முக்கியமானவை. சாதிமுறை மாறாமல் இருந்து வரும் முறை அல்ல; அது சமூக மாற்றங்களின் ஊடே பெரிய மாற்றங்களுக்கு ஆளாகிவந்த முறை எனத் தெரிகிறது. ஆனால் ‘சாதிச் சமூகம்’ நிலைத்த ஒன்று. இதுவரை காலமும் சாதிமுறையில் மாற்றம் ஒன்றும் நடைபெறவில்லை. அல்லது காலனியம் வந்த பிறகுதான் சின்னச்சின்ன மாற்றங்கள் சாதிமுறையில் ஏற்பட்டுள்ளன. இப்படி சாதி முறை மாற்றமில்லாதது என்று பார்ப்ப்பதே பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோர் பார்வை. இதனை கராஷிமா, சுப்பராயலு ஆய்வுகள் அவர்களின் பார்வையை  மறுக்கின்றது என ஒருவர் நினைக்கலாம். ஆனால், அது உண்மை அன்று. இந்த ஆய்வுக்கருத்துகள் அயோத்தி தாசர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் பார்வை களை வலுப்படுத்துகின்றன. சாதிமுறையைப் பார்ப்பனர்களும் அவர்களது வைதிகக் கருத்துநிலையுமே உருவாக்கின என்பதும், அந்த முறையை அந்தப் பார்ப்பன நலனைக் கட்டிக் காப்பாற்றும் இந்து மதமும் இந்து தேசியமும் பாதுகாக்கின்றன என்பது அவர்களது வாதம்.

இரண்டாயிரம் ஆண்டு மாறா புகழ்பூத்த பொற்கால வரலாறு, இந்திய வரலாறு என்பது பார்ப்பன வாதம். இதற்கு எதிர்வாதமே, அது பொற்கால வரலாறு அல்ல, சாதி இழிவு வரலாறு என்ற சாதி ஒழிப்புவாதிகளின் வாதம். இவ்விவாதம் சாதிமுறை மாறாத் தன்மை கொண்டதாக வாதிடவில்லை. அதற்கு மாறாக சாதிமுறையில் நடந்த மாற்றங்களை, அதற்கு எழுந்த எதிர்ப்புகள் குறித்து ஆழ்ந்த கவனம் செலுத்தியது. சாதி முறையை எதிர்த்த பௌத்த சமத்துவத்தை அயோத்தி தாசர் சமகால மக்கள் வழக்காறுகளில்தான் தேடினார். பெரியார் பார்ப்பனரல்லாத சாதிகளிடம் காணப்படும் பார்ப்பன எதிர்ப்பு வழக்காறுகளைக் கவனமோடு பயன்படுத்தினார்.

தமிழகத்தில் ஐயங்கார்கள் சாதி உருவாக்கம் குறித்தும், சாதிப் பட்டங்கள் குறித்தும் பெரியார் தனது அனுபவங்கள் அடிப்படையில் எழுதிய கட்டுரைகள், அவர் சாதிமுறையை அசைவியக்கம் உடையதாகவே கருதினார் என்று காட்டுகின்றன. அம்பேத்கர் நவீன புலமைத்தளங்களில் பயிற்சி பெற்ற சிறந்த புலமையாளர். அவரின் “சூத்திரர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு நான்காம் வருணத்தினர் ஆயினர்” என்ற நூலும் “மகர்கள் என்பவர்கள் யார் ? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்” என்ற நெடுங்கட்டுரையும் வருண, சாதி முறைகள் நிலைத்த தன்மை கொண்டவையல்ல;மாறும் தன்மை கொண்டவை என்று கருதியதற்குச் சான்றுகள் ஆகும்.

இறுதியாக, கார்ல் மார்க்ஸ் இந்தியச் சமூகத்தை மாறாத் தன்மையுடையது என்றும், அதற்குக் காரணம் எளிய வேலைப்பிரிவினைகளைக்கொண்ட இந்தியச் சாதிமுறை என்றும் கருதினார் என்ற வாதம் பற்றிச் சில சொற்கள். இந்தியச் சமூகம் தேக்கமடைந்த மாறாத் தன்மையுடையது என்பது மார்க்ஸ§டைய கருத்தல்ல; அவர் இந்தியச் சமூகத்தில் நீண்டகாலமாகச் சில பொதுப் பண்புகள் நிலவி வருகின்றன என்று கருதினார். அதில் ஒன்று, இந்தியாவில் ‘சமூகக் கட்டமைப்பில் பலம் வாய்ந்த சக்தியாக புரோகித வகுப்பான பார்ப்பனர்கள்’ இருந்து வருகின்றனர் என்பது ஆகும். அதற்குக் காரணம் நிலத்தில் தனியார் உடைமை இல்லாமையே என்று வாதிட்டார். “இங்கு, அரசே தலைமைப் பிரபு ஆகும்.

இங்கு, இறைமை என்பது நாடளாவிய முறையில் குவிக்கப்பெற்ற நிலவுடைமை ஆகும். ஆனால், மறுபுறம் நிலத்தைத் தனியாராகவும் பொதுவிலும் வைத்துக் கொள்வதும் பயன்படுத்திக் கொள்வதும் உண்டென்றாலும் தனியார் நிலவுடைமை என்ற ஒன்றே இல்லாமற் போகிறது” என்பது மூலதனத்தின் மூன்றாம் பாகத்தில் மார்க்ஸின் கூற்று. சமூகக் குழுமமாக நிலத்தில் வேளாண்மை செய்வதும் துய்ப்பதும், திட்டமிட்ட வேலைப் பிரிவினைகளும், எல்லைக்குட்பட்ட பண்டப் பரிவர்த்தனையும் பார்ப்பன ஆதிக்கத்தின் நிலைத்த தன்மைக்குக் காரணம்.

பார்ப்பனர்கள் கட்டிக்காத்து வரும் சாதிமுறை சமூகப் பழக்கவழக்கங்களை இடித்துரைக்கும்,நையாண்டி செய்யும் எண்ணற்ற குறிப்புகளும் மார்க்ஸின் நூல்களிலும் கையெழுத்துப் படிகளிலும் உண்டு. இந்தியாவைப் பற்றிய மார்க்ஸின் குறிப்பேடுகளில் இந்தியச் சமூகத்தை மாறும் தன்மை யுடையாதகவே காண்கின்றார். இந்தியச் சமூகத்தில் மாற்றத்தின் உந்து சக்திகளாக, ‘சூத்திர’, ‘பஞ்சம’ உழுகுடிகளின் போராடங்களைக் குறித்துள்ளார். இவ்வகைப்பட்ட ஓர் உழவர் கிளர்ச்சி பதினைந்தாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் நடந்துள்ளதை கராஷிமாவும் சுப்பராயலுவும் இந்நூலில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

ஆகவே இந்தப் புதிய நூல் சாதிமுறை பற்றிய புரிதலை மட்டுமல்ல, சாதிமுறையை எதிர்த்த சாதி ஒழிப்புவாதிகளின் பார்வைகளையும் ஆழமாகக் கற்று, மறுஒழுங்கு செய்துகொள்ள நம்மைக் கட்டாயப்படுத்துகின்றது.

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்

நொபொரு கராஷிமா

எ.சுப்பராயலு

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098

தொடர்புக்கு : 044 - 26251968, 26359906

விலை: ` 70/-

Pin It