jaibhim suryaநீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்த்திரை உலகில் ஓர் உண்மை சம்பவத்தைக் கருத்தாக எடுத்துக் கொண்டு வந்திருக்கிற தரமான படம் 'ஜெய்பீம்'.

படத்தோட ஆரம்பக் காட்சி இப்படித்தான் தொடங்கிறது. கடலூர் மாவட்டத்தில் இருக்கிற சிறைச்சாலை. ஆரம்பமே சாதிப்பாகுபாடு. மக்களை பிரித்துக் காட்ட ஒரு மாதிரி குரூர எண்ணம் கொண்ட காவல்துறை அதிகாரிகள் உடைய மனோநிலை. குறவர், இருளர் என பல்வேறுபட்ட சாதியினரைக் காட்டுகிற முதல் காட்சி. தங்களுடைய வழக்குகளுக்கு ஆட்கள் இல்லை என்பதற்காக குறவர், இருளர் இன மக்களை மையமிட்டு கைது செய்து அழைத்துச் செல்வது படத்தினுடைய ஆரம்பக் காட்சியிலேயே காட்டி சாட்டையடி கொடுக்கிறார் இயக்குனர் ஞானவேல்.

பழங்குடியின மக்களின் வாழ்வியலை சரியான கதை பின்புலத்தோடு வழி நடத்துகிற விதம் அருமையிலும் அருமை. எலி பிடித்து உண்ணுகிற காட்சி, காட்டுப்பன்றியை உணவாக உட்கொள்ளுதல், பாம்பு பிடிப்பதாக இருந்தாலும் சரி, பாம்பு கடித்தவர்களுக்கு விஷத்தை முறிக்கக் கூடிய இடமாக இருந்தாலும் சரி அவர்களுடைய பழங்குடியின வாழ்க்கையை மிகச் சரியாக பதிவிட்டு இருக்கிறார் இயக்குனர்.

சாதியப் பாகுபாடு என்பதில் மேல் சாதி, கீழ் சாதி என்பது நகர்ப்புறத்தில் தான் இருக்கும் என்று பார்த்தால் அது பழங்குடி இன மக்களிடையேயும் இருக்கிறது என்பதை பிரதிபலித்துக் காட்டுகிறது 'ஜெய்பீம்' திரைப்படம்.

படத்தில் அரை மணி நேரத்திற்குப் பிறகு தான் சூர்யாவின் கதாபாத்திரமே வருகிறது.

"போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்" - படத்தோட கதையை அப்படியே சொன்ன மாதிரியான கோஷம் அவருடைய ஆரம்பக் காட்சி.

அதற்கு முன்னதாக அந்த படத்தில் தலைமை கதாபாத்திரமாக இடம் பெறுகிற ராஜாக்கண்ணு, செங்கேணி ஆகியோரின் அழகான நடிப்புத் திறமை. அதுமட்டுமல்லாமல் மொசக்குட்டி , இருட்டப்பன் இந்த கதாபாத்திரங்களும் சரியான கதாபாத்திரங்கள்.

இந்தக் கதையில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ஒவ்வொருவரும் தரமாக நடித்திருக்கிறார்கள். ஒரு சிறு குழந்தைக்குக் கூட எவ்வாறு நடிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் எனப் பார்க்கும்போது மெய் சிலிர்கிறது.

வழக்கு ஆரம்பிக்கும் நேரத்தில் இரண்டு குழந்தைகள் அங்குமிங்குமாக ஓடுகிற காட்சி எல்லாம் இயக்குனர் ஞானவேல் அவர்களுடைய உச்சபட்ச காட்சித்திறமை.

துணை கதாபாத்திரங்களாக நடித்திருக்கிற இளவரசு, பவா செல்லதுரை, காவல்துறை கதாபாத்திரங்களாக இடம்பெற்றிருந்தவர்கள், பழங்குடி இன மக்களாக இடையிடையே வந்து போகிறவர்கள் இவர்கள் எல்லாம் தங்களுடைய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பெருமாள் சாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற பிரகாஷ்ராஜ் காவல்துறை அதிகாரிகளில் கவனிக்கப்பட வேண்டியவராக நடித்திருக்கிறார். அந்த மக்களுடைய குறைகளைக் கேட்கிற இடத்தில் கண் கலங்கி நிற்கும் போது கல்லுக்குள் ஈரம் என்பதைப் போல காவல்துறை அதிகாரிகளிலும் இப்படி சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நிலைநாட்டி இருக்கிறார்.

மணிகண்டன் இந்த படத்தில் அவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார். தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை எப்படி வெளிக்காட்டுவது என்பதில் ஜெயித்திருக்கிறார் ஒரு சிறந்த நடிகராக வலம் வருவார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது அவருக்கு கொடுக்கலாம்.

நீதி கேட்டுப் போராடி அலையும், சிலப்பதிகார கண்ணகியைப் போல செங்கேணி கதாப்பாத்திரத்தில் வரும் லிஜோமோல் ஜோஸ் ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல் பெறுகிறார். கணவனுடைய பெயரில் வரும் பாடல் கேட்கும் போது பாமரப் பெண்ணாகவே பவனி வருகிறார்.

"ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு" எனும் பாடல் வரும் போது சிறப்பாக நடித்திருக்கிறார்.

வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் சூர்யா. வழக்கறிஞர் சந்துரு அவர்களின் நிஜ வடிவம் அது. சூர்யாவின் நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய நடிப்பின் முதிர்ச்சியை வெளிக்காட்டுகிறது.

"பள்ளிக்கூடங்களில் காந்தியையும் நேருவையும் காட்டுகிற இடத்தில் ஏன் அம்பேத்கரை காட்டுவதில்லை" என்று சொல்லுகிற காட்சி எல்லாம் இந்த சமூகத்திற்குத் தேவையான கருத்து.

"ஒருத்தர் கிட்ட இருக்கிற திறமை எதுக்கு உதவுதோ அத வச்சு தான் உங்களுக்கு மரியாதை"

இது மாதிரியான வசனம் எல்லாமே ஒவ்வொரு இடத்திலேயும் கைத்தட்டல் பெற வைத்திருக்கிறது.

"தலை கோதும் இளங்காத்து செய்தி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்"

"நீலவண்ணக் கூரை இல்லாத நிலமிங்கு ஏது
காலமென்னும் தோழன் உன்னோடு தடைகளை மீறு"

என வருகின்ற பாடல் வரிகளும், பிரதீப் குமாரின் மயக்கும் குரலும் அப்படி ஒரு ஈர வலி அது.

படத்தினுடைய இறுதிக்காட்சியில் நீதிமான்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார். சிலப்பதிகாரத்தில் கண்ணகி எப்படி தன் கணவனை இழந்து விட்டு கையில் சிலம்போடு நீதி கேட்டு நின்றாளோ, அதைப் போலவே இந்த பெண் நிற்கிறாள் என்கிற காட்சியை மையப்படுத்தி காட்டுவது கதையின் மிகப்பெரிய பலம்.

இறுதிக் காட்சியில் பழங்குடியின மக்களிடையே கல்வி வளர்கிறது என்பதை கனகச்சிதமாக காட்டி இருக்கிறார். அந்தக் குழந்தை செய்தித்தாளை எடுத்துப் படிக்க, ஒரு கண் சைகையில் கால் மேல் கால் போட்டு அமர்வது என வரும் காட்சி எனக்குப் பிடித்த அத்தனை காட்சிகளிலும் மிக அருமையான காட்சி.

இந்த படத்திற்குக் கோஷம் போட வேண்டுமென்றால் "ஜெய்பீம்" என்று முழங்குவதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

- முனைவர் மு.முத்துமாறன், பெரம்பலூர் மாவட்டம்