எதுவெல்லாம் அப்படி இருந்ததோ அதுவெல்லாம் அப்படி இல்லை. எதுவெல்லாம் இப்படித்தானோ அதுவெல்லாம் அப்படித்தான் என்றில்லை. கதை சொல்லும் முறையில் அதே கதைகளைக் கூட காட்சிக்கு காட்சி மாற்றலாம். மாற்றி இருக்கிறார்கள்.

ஒரே மாதிரியான உடல்மொழி.... அதுவே விஜய் ஆண்டனிக்கு கூடுதல் சிறப்பென்று நான் நம்புகிறேன். எந்த இடத்திலும் எனக்கு போர் அடிக்கவில்லை. சினிமாத்தனமான கதை நகர்த்தல் என்றால் கூட ரசிக்க முடிகிறது. ஒவ்வொரு காட்சியும் மிகத் தீர்மானமாக கையாளப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு காட்சியும் மிகத் தீர்மானமாக கையாளப்பட்டிருக்கிறது.

Thimiru Pudichavanபோலீஸ் ஸ்டேஷன் என்றாலே நாம் பார்த்த படங்களில் இதுவரை நாம் கண்டது தான் நமக்கு நினைவில் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் வரும் போலீஸ் ஸ்டேஷன் வேறு. இப்படி எல்லாம் நடக்க முடியுமா நின்ற கேள்விக்கு நான் செல்லவில்லை. நடந்தால் நலமே. பொதுமக்களோடு ஒரு சுமூகமான உறவு, எனக்கு தெரிந்து எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கும் இருந்ததில்லை. படத்தில் ஒரு வசனம் வரும். "ஊர் மக்கள் ஒருவராவது காவல் நிலையத்துக்கு சென்று போலீஸ்காரருக்கு பத்திரிக்கை வைத்திருக்கிறார்களா...?" என்று. சிந்திக்க வேண்டிய ஒன்று. போலீஸ்காரர்கள் பிம்பம் காரண காரியத்தோடு ஓர் இடைவெளியோடு தான் நம்மோடு எப்போதும் இருந்திருக்கிறது. இருக்கிறது.

இந்தப் படத்தில் அந்த இடைவெளி சற்று ஆசுவாசப்படுகிறது.

அந்த நிவேதா பொண்ணு....இத்தனை நாள் எங்கிருந்தது என்று தெரியவில்லை. அழகே அந்த அமுந்த மூக்கு தான். குரல் யார் என்று தெரியவில்லை. சும்மா அள்ளுது. புள்ளையும் செம அழகு. போலீஸ் உடையிலும் சரி.. இடைவெளிக்கு பின் வரும்...பாடலில் புடவை கட்டிக் கொண்டும் சரி..... காதல் வந்தாலும் வந்து விடும்.... காண்பவருக்கு. அலட்டலான உடல் மொழியும்... அசரடிக்கும் குரல் மொழியும், பெண் போலீஸ் என்றாலே கட்ட குரல்ல கருப்பா தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. தேவதையும் போலீஸாகலாம். ஒரு காட்சியில்......நிஜமாகவே அழ நேரும் சூழலுக்குள் சென்று விடும் போது பட்டென்று கண்ணாடி எடுத்து மாட்டிக் கொள்ளும் பாங்கில்.. சின்ன சின்ன ரசனைகள் நம்முள் ஆனந்த கண்ணீர் சொட்ட வைக்கிறது. காதலை தனியா பீல் பண்ணி மொட்டை மாடியில் கத்தி அழுகையில்..... "பாறை பூ பூக்குதே..... ஓ....." இசைதேவன் எனக்குள் என்ட்ரி.

18 வயதுக்கு கீழே இருக்கும் சிறார்களின் குற்றப் பின்னணிதான் கதை என்றாலும் இன்னும் ஆழமாக செல்லவில்லை என்பது குறை என்றெல்லாம் கூறமுடியாது. எல்லா நெருப்பையும் அவர்களாகவே பற்ற வைக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருப்பது நெருப்புக்கு செய்யும் துரோகம். ஒரு தீ குச்சி விஜய் ஆண்டனி என்றால் மறு தீ குச்சியை நாம் தான் தேட வேண்டும். விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் அவருக்கென்றே கச்சிதமாக அளவெடுத்து தைக்கப்பட்டிருக்கிறது. இந்த பிபி ஏறி இறங்கி... சமநிலைக்கு வந்து என்று ஹீரோயிசம் இல்லாத ஹீரோயிசம் என்னமோ பிடிக்க வைத்து விடுகிறது. முருகன் சாமி மேட்டர் எல்லாம் உள்ளே வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் சினிமாவில் சாமி பாட்டு. பார்க்க சுவாரஷ்யம். எல்லாரையும் போட்டு பொளந்து விட்டு சாமி பேரை சொல்லி இருக்கலாம். அந்த சண்டைக்கு பின் நிஜமாகவே சாமி வந்தது போல காட்டியது... ராமராஜன் காலம் என்றாலும்.... சாமிக்கு வயதாகவே இல்லை என்ற காலத்தத்துவம் எதையோ நம்முள் கிளறி விடுகிறது.

விஜய் ஆண்டனியின் தம்பியின் கதாபாத்திரம் முழுமை அடையவில்லை என்றாலும் அந்த மாதிரி அரைவேக்காடுகளை வீதிக்கொருவனைக் காணலாம் என்ற சான்று என்னிடம் இருக்கிறது. ஆனால் அந்த பையன் நடிப்பு அமர்க்களம். அவன் குரலும் நடிக்கிறது.

இந்த சிறார்களின் குற்றப்பின்னணி மிக பயங்கரமான நிழல் உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வாரத்தில் கூட நாலைந்து சிறுவர்கள் சேர்ந்து ஒருவரை கொலை செய்த செய்தி நமக்கு செய்தியாக வந்து சேர்ந்ததை நினைவு கூறுவோம். சிறார்களின் உலகப் பார்வையும் உலகப் பார்வையில் சிறார்களும் மிக சிக்கலான உடன்படிக்கையைக் கொண்டவை. நமது சட்ட திட்டங்களும் அப்படித்தான் குளறுபடிகளால் நிறைந்தவை. அதில் இருக்கும் ஓட்டைகளில் விட்டு சொருகி செல்கின்ற சிறார் ஒருவனின் கை பிடித்திருக்கும் கத்தி யாரோ ஒரு சக்தி வாய்ந்தவனின் முடிவாக இருக்கிறது...

திமிரு புடிச்சவன்... தலைப்புக்கும் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரத்துக்கு ஏக பொருத்தம். திமிரு என்பது காட்டுக் கத்து கத்துவதில்லை. எடுத்த காரியத்தில் விடா முயற்சியொரு தொடர்ந்து போராடிப் பயணிப்பது. அது தான்.. திமிரின் ஆழமான அர்த்தம். அது இந்தப் படத்தில்... அந்த ஷூ லேஸ் கட்டி விடும் இடத்தில் பலமாக ஆணி அடித்து நிற்கிறது. வில்லனுக்கு கட்டி விட போகும் சூழல் கொண்ட காட்சியில் சேவலை விட்டு கதையை திருப்பியது..... புத்திசாலித்தனம். அங்கே முருகனின் சேவல் வேல் கொண்டு நிற்பது சாமி தத்துவம். எல்லா நேரத்திலும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும் ஹீரோக்களின் மத்தியில் விஜய் ஆண்டனி.. சினிமாவை நன்றாக புரிந்து கொண்ட ஒரு கலைஞன் என்பதில் துளியும் ஐயமில்லை. அவர் பயணம் இன்னும் நீளும். இறுதிக் காட்சியில் அப்படி ஒரு சண்டையை எந்த ஹீரோவும் விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்.

கடை நிலையில் வேலை செய்யும் காவல் அதிகாரிகளுக்கு எப்போதும் உள்ளே கனன்று கொண்டேயிருப்பது அங்கீகாரம் என்ற பெரும் சுமை தான். அது இல்லாத போது தான் அவர்களின் முகமும் அகமும் எப்போதும் கடுகடுப்புடனே போட்டி போட்டுக் கொண்டும்... புகைந்து கொண்டும்.... பொல்லாங்கு சுமந்து கொண்டுமிருக்கிறது. அதன் தாக்கம் மரியாதை குறைவாக மற்றவர்களை பேசி நடத்துவதில் வெளிப்பட்டு தனக்கான வடிகாலைத் தேடிக் கொள்கிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில் கான்ஸ்டபிலை கொடி ஏற்ற வைக்கும் போது அவரின் மனதுக்குள் ஏற்படும் ஆனந்தமும் அங்கீகாரமும்.. நிம்மதியும்.. இங்கே பெரும்பாலானோருக்கு தேவை.

"திமிரு புடிச்சவன்" சூப்பரான்னா.......எனக்கு தெரியவில்லை. ஆனால் ஓரிடத்தில் கூட எனக்கு போர் அடிக்கவில்லை. நிறைய காட்சிகள் யூகம் பண்ணக் கூடியவை என்றாலும்.. நமக்குள் இருக்கும் ஹீரோ அதை கை தட்டி ஆரவாரப் படுத்துகிறான். உதாரணத்துக்கு தம்பியை பின் மண்டையில் சுட்டு வீழ்த்திய பிறகு...தள்ளு வண்டிக் கடையில் பிரியாணி ஆர்டர் செய்வார் என்று அந்த காட்சிக்கு முன்னமே நான் சொல்லி விட்டேன். அது தான் நடந்தது. "தப்பு பண்ணினது அம்மாவா இருந்தாலும் சரி ஆண்டவனா இருந்தாலும் சரி.... விட மாட்டேன்" போன்ற வசனங்கள் எத்தனை முறை கேட்டாலும் நன்றாகத்தான் இருக்கும். அதற்கான வெற்றிடங்கள் இங்கே இப்போதும் இருக்கின்றன. தூக்கமில்லாமல் அலையும் நேர்மைக்கு எப்போதும் தூக்கம் இல்லை. அதில் தான் அதன் பாசாங்கு அழிக்கப்படுகிறது.

சமீபத்தில் வந்த மிகப் பெரிய ஒரு படத்தை விட இந்த "திமிரு புடிச்சவன்" எனக்கு ஒரு படி மேல் என்று சொன்னால் நானும் நம்பித்தான் ஆக வேண்டும்.

நான் அடிப்படையில் ரசிகன்.

- கவிஜி

Pin It