திரைப்படம் ஒரு சக்திவாய்ந்த ஊடகம், பொழுதுப்போக்கிற்காக தொடங்கிய இந்த வெள்ளித்திரை சமூகபோக்கிற்கும் காரணமாயிற்று, சமூக அவலங்களை பிரதிபலிக்கவும், பல சமயம் அந்த அவலங்களுக்கு விதையாகவும் இருக்கிறது. இயல்பான நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பே சினிமா, அதையே சில நேரங்களில் சினிமாத்தனத்துடன் சற்று மிகைப்படுத்தி காண்பிக்கப்படுகிறது. அவற்றை சீர் பிரித்து நல்ல செய்திகளை உள் வாங்கினால் தவறில்லை. ஆனால் நம்மில் பலருக்கு அதை சீர்பிரிக்க நேரமும் இல்லை அதற்கான எண்ணமும் இல்லை.
இந்த சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு நம் சமூகத்தில் கொடுக்கபட்டுள்ள இடம், மிகைப்படுத்தி காண்பிக்கப்படுகிற அந்த சினிமாவை விட மிகைபடுத்தப்பட்ட இடம். ஆம் அவர்களை ஏதோ சொர்க்கலோக வாசிகளைப் போலவும், காணக்கிடைக்காத ஒரு உன்னதப் பொருளைப் போலவும் காண்கிறோம். இதற்கெல்லாம் அவர்கள் உரியவர்களா என்றால் நிச்சயம் இல்லை. அவர்களும் நம்மைப் போல் சாதாரண மானிடப் பிறவிதான். பின்னெதற்கு அவர்களை பார்க்கும் போதுமட்டும் ஒரு அசாதாரணப் பார்வை. நாம் பார்க்கும் இந்த பார்வையை அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். நான் அனைத்து சினிமாத்துறை நண்பர்களையும் சுட்டிகாட்டவில்லை, ஆனால் அதில் சராசரியை விட அதிகமானோர் சந்தர்ப்ப சுயநலவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்.
ரசிகர் மன்றம் என்ற பெயரில் நம் இளைஞர்கள் முடக்கப்படுகிறார்கள் / முடங்கியிருக்கிறார்கள். அவனுடைய முழுமூச்சும், கனவும் தன் அபிமான நடிகர்/நடிகையைப் பற்றித்தான் சுழன்று வருகிறது. நம் முதல் குடிமகன் காணச் சொன்ன கனவை இப்படியா காண்பது?. அவன் தன் நாட்டிற்கும், சமூகத்திற்கும் குறைந்தபட்சம் தன் வீட்டிற்கும் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தடம்புரண்டு கிடக்கிறான்.
தன் வீட்டிற்கு பால் வாங்க நேரமும், பணமும் இல்லாத இளைய தலைமுறை, "இளையதளபதி" படத்தின் முதல் நாள் அன்று "கட்அவுட்டிற்கு" பால் அபிஷேகம் செய்ய தன் உழைப்பையும் பணத்தையும் விரயம் செய்கிறது. இன்னும் சில இடங்களில் தன் வீட்டில் சோறு இல்லையெனினும் "தல" படத்திற்கு 'பீர்' அபிஷேகம் செய்வது இதன் உச்சகட்ட அவலநிலை. அவனது அகராதியில் சமூகப்பொறுப்பு என்பது தன் அபிமான நடிகர்/நடிகை முதல் நிலையை அடையச் செய்வது ஆனால் இதனால் அவன் சமூகத்தில் கடைசி நிலைக்குத் தள்ளப்படுவதை அறியாமல் இருக்கிறான்.
புதிய குளிர்பான அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை, தான் குடித்து வைத்த பாதி குளிர்பான பாட்டிலுக்கும், அதன் அடைப்பானிற்கும் ரசிகர்களிடையே நடந்த போட்டியைப் பார்த்து, தன் வீட்டில் தான் உபயோகித்த பழைய பொருட்களை ஏலம் விடப்போவதாக சொன்னார். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்த நடிகையின் பங்கு நம்மை பிரமிப்படைய வைக்கிறது.
சமூக நிகழ்வுகளின் கண்ணாடியாகவும், மக்களின் விழிப்புணர்ச்சிகாகவும், செயல்படவேண்டிய பத்திரிக்கைத்துறை, வியாபார நோக்கத்திற்காக சினிமாவை ஒரு கருவியாக்கி மக்களை சிறிய வட்டத்தினுள் அடைத்துள்ளது. நடிகர்/நடிகைகளின் திருமணம் என்றால் ஒரு முழுப்பக்க செய்தி, அடுத்து அவர்கள் தேனிலவுக்கு எங்கு செல்வார்கள் என்று புதிர்ப்போட்டி, அவர்களே கருத்தரித்தால் அதற்கும் ஒரு போட்டி, அவர்கள் விவாகரத்தும் செய்தி, இந்த அளவிற்கு இன்றைய பத்திரிக்கைகள் செயல்படுகிறது. சமீபத்தில் நடந்த உலக அழகியின் திருமணச் செய்தியை சிங்கை பத்திரிக்கை ஒன்று, ஒரு வாரம் தொடர்ந்து ஒருப்பக்க செய்தியாக வெளியிட்டது. நடிகையின் நிச்சயம், திருமணம், தேனிலவு, அவர்கள் திருப்பதி சென்றது, அங்கு லட்டு வாங்கியதும் ஒரு செய்தி..
நமது கவிஞர்களின் கவிதைத் தொகுப்பிற்கும், எழுத்தாளர்களின் எழுச்சிமிகு சிறுகதைகளுக்கும் ஒதுக்கப்படுவது வாரம் ஒரு பக்கம் ஆனால் நடிகைகளுக்கு வாரம் முழுவதும் ஒவ்வொரு பக்கம். நடிகர்/நடிகைகளின் ஒரு இயல்பான வாழ்க்கை நிகழ்வும் இங்கு செய்தியாக்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சியிலும் இதே அவலநிலைதான், சுதந்திர தின நாள் அன்று கவர்ச்சி நடிகையின் போட்டி, தமிழர் திருநாளில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தமிழ் தெரியாத தமிழ் நடிகையுடன் உரையாடல் நிகழ்ச்சி. என அனைத்திலும் சினிமாத்தனம்.
அவர்களிடம் கேட்டால் மக்களுக்காக என்கிறார்கள், மக்களோ அவர்கள் திணிப்பதால் தான் பார்க்கிறோம் என்கிறார்கள். ஆக சமூகம் சீரழிவை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்பயணத்தை நிறுத்த நடிகைகளுக்காக ஒதுக்கப்படும் பக்கங்கள் சமூக விழிப்புணர்ச்சிக்காக ஒதுக்கப் படவேண்டும். அப்படியும் சினிமாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பக்கங்களும், நிகழ்ச்சிகளும் மக்களால் ஒதுக்கப்படவேண்டும்.
இந்த சீரழிவை நோக்கிய பயணத்தைத் தடுக்க, நானும் பயணிக்கிறேன். தற்பொழுதையப் பயணம் தனிமையில் ஆனாலும் ஒரு ஊர்வலம் வந்துகொண்டிருக்கிறது எனும் நம்பிக்கையில்...
- இரா.பிரவீன் குமார்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
வெள்ளித்திரை
- விவரங்கள்
- இரா.பிரவீன் குமார்
- பிரிவு: கட்டுரைகள்