kakkoos documentary

ஆரம்பமாகி ஒரு பத்து நிமிடங்களிலேயே பார்க்க சகிக்க முடியவில்லை.! துப்புரவுத் தொழிலாளிகள் manual scavenging செய்கிறார்கள் என இதுவரை ஆங்கில மொழியில் சொன்ன போது, கேட்ட போது உணராத வலியை தன் கையால் "பீ" அள்ளும் மனிதர்களை பார்க்கும் போது தான் உணர முடிந்தது.

நீ பொதுவெளியில் மலம் கழித்தாலும், பொது கழிப்பறையில் மலம் கழித்தாலும், உன் வீட்டின் கழிவு தேக்க தொட்டியில் அடைப்பு ஏற்பட்டாலும் நிரம்பினாலும் உடனடியாக ஒரு மனிதன் வந்து உள்ளிறங்கி நாம் அசிங்கமாக, அருவறுப்பாக கருதும் நம் உடம்பிலிருந்து வெளியேறிய கழிவுகளுக்குள் கை போட்டு சுத்தம் செய்த பின் வாசலோடு வைத்து அனுப்பப்படும் தொழிலாளிகளுக்கு, மனிதனுக்கு என்ன பிரச்சனை இருந்தால் என்ன?.. நாம் தான் நாகரிகமானவர்கள் ஆயிற்றே நம நம்பும் கீழ்மட்ட சமூகத்தில் தான் இன்றும் பயணிக்கிறோம்...

பதினைந்து வயது சிறுவன் தொடங்கி 70 வயதான மூத்த கிழவி வரை கையால் மலம் அள்ளுவதை டிஜிட்டல் போன்களில் பார்க்கும் போதே நாற்றத்தில் ஒரு நிமிடம் ஒதுங்கி விட்டு தான் தொடர முடிகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த 48 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஒரு மனிதன் கையால் மலம் அள்ளுவது தடுக்கப்பட வேண்டும் என சட்டமே இயற்றப்பட முடிந்தது. 2013ல் இதற்கான திருத்தச் சட்டம் வேறு. ஆனாலும் இந்த அவல நிலையை இன்று வரை யாராலும் மாற்ற முடியவில்லை என்பதே நிதர்சனம்.

பெரும்பாலான வீடுகளில் தாய் தந்தையர்களே 'டேய் சக்கிலிய பைய மாறி நடந்துக்காதடா' என வீட்டிலிருந்தே வெறுப்பை விதைத்து விடுவதால் சக்கிலியர், தாழ்த்தப்பட்ட சாதி குறிப்போடு வரும் மாணவர்களில் எத்தனை பேர் சமமாக படித்து முன்னேற முடியும்?..

துப்புரவுத் தொழில், Manual scavenging என்ற நவநாகரிக வார்ததைகளை உபயோகப்படுத்திக் கொண்டு சக்கிலியப் பயலே உள்ள இறங்கி 'பீ அள்ளுடா' என நிர்பந்திக்கும் சமூக கட்டமைப்பில் வாழும் நாமெல்லாம் நாகரிக சமூகம் என கூறிக்கொள்ள கூச்சப்படுவதே இல்லை.

தலித்கள், ஹரிஜன்கள் என பெயர் கொடுத்து விட்டு தாழ்த்தப்பட்ட சக்கிலிய, பறைய, பட்டியலின பயலே என தனி மனிதன் முதல் ஆளும் அரசாங்கம் , கட்சிகள் வரை கூறியும் விட்டு ஏன் அவர்கள் முன்னேறவில்லை என கேள்வி கேட்கும் யோக்கியர்களை அவன் அள்ளும் அதே கழிவு கொண்டு அடித்தால் தான் என்ன?..

இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக பேசிக் கொண்டே வேறு வழியில்லாமல் மலம் அள்ளும் பெண், வேலை முடிச்சு எவ்ளோ சுத்தம் பண்ணிட்டு போனாலும் அம்மா நாறுதுமா என்ன தூக்காதனு என் மகள் சொல்றானு அழும் பெண், அய்யா ரெண்டு குவாட்டரும் 300ரூபாயும் கொடுத்தா என்ன வேணும்னாலும் செய்வாய்ங்கனு நினைக்கிற ஆள் தானய்யா அவய்ங்க என ஒட்டுமொத்த இந்திய சமூகத்தை நோக்கி கேள்வி கேட்கும் ஆண்,.. என அவர்களின் வலியின் ஒரு பகுதியையும், தாழ்ந்த சாதில பிறந்துட்டோம்ல அதான் இப்டி!, தலித் புள்ளைங்க கக்கூஸ் தான் கழுவனுமா!, டீக்கடைல டீ கூட தர மாட்டாய்ங்க, நாங்க பக்கத்துல வந்தா அவங்களுக்கு தீட்டு!, இன்னும் அவர்களிடமிருந்து வரும் இப்படியான ஆதங்கங்களையும் அப்படியே எடுத்து காட்டியிருக்கிறது 'கக்கூஸ்' ஆவணப்படம்.

ஒரு சமூகத்தை, கர்ப்பபை இல்லாத பெண்களாக அவர்களை மாற்றியிருக்கிறோம், அவர்களை கல்வியறிவு பெற முடியாத அளவுக்கான சமூக கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறோம். விஷவாயுவால் துப்புரவு தொழிலாளிகள் பலி எனும் செய்திக்கு பின்னால் செப்டிங் டேங் இருக்கும் என தெரியாமல் செய்தித் தாள்களை திருப்பியிருக்கிறோம்.

எங்க காலத்திலேயே இவங்க பாவம் இப்படித்தான் என என் தாத்தா சொன்னார். என் காலத்திலும் இப்படித்தான் என அப்பா சொன்னார். இன்று எனது காலத்திலும் இப்படித்தான என நான் சொல்கிறேன். அடுத்த தலைமுறைகளும் இப்படி சொல்வதாக இருந்தால் நமக்கு ஒரு தலைமுறைகளே கூடாது என்றே இறைவனிடம் வேண்டுகிறேன்.

BigBoss என்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் பரணி எனும் மனிதன் தனிமைப்படுத்தப்பட்டதற்கு கதறி, தனிமைப்படுத்திய 14 பேரை திட்டி தீர்த்த நாம்! பல லட்சம் மனிதர்கள் கொண்ட சமூகத்தை எல்லாவற்றையும் பிடுங்கி விட்டு தினம் தினம் இப்படி செயல் வன்முறைகளால் கொடுமைப்படுத்துகிறோமே நமக்கான தீர்ப்பு எவ்வளவு கொடுமையாக அமைய வேண்டும்!

'கக்கூஸ்' ஆவணப்படம் இதையெல்லாம் ஒரு மணி நேரம் படம் பிடித்ததற்காகவே பாராட்டும் மனங்கள் இங்கேயே புரண்டு வாழும் மனிதர்களை கவனிக்க மறக்கிறது.

குடும்பத்துடன் பார்க்கப்பட வேண்டிய யதார்த்தமான குடும்ப படம். ஒரு நிமிடம் கழிப்பறையில் நின்று மலம் கழித்து விட்டு ஒரு நிமிடம் அதை வேடிக்கை பார்த்து விட்டு நகர்வோம். அந்த அருவருப்பில் தான் ஒரு சமூகம் வாழ்கிறது என்ற கவலையும் கொள்வோம்.

வாழ்த்துக்களும் அன்பும் 'கக்கூஸ்' ஆவணப்பட குழுவுக்கு.

Pin It