puthum reviewஅஞ்சு கதைகள். 

அஞ்சும் வேறு வேறு கதைகள். ஆனால் எல்லாமே லாக் டௌன் என்ற ஒற்றைப் புள்ளியில் வீட்டுக்குள் அடைபட்ட நாட்களை காட்டுகிறது. 

லாக் டௌன்.. சைனா பூச்சி... தனிமை... இடைவெளி... நம்பிக்கையின்மை என்று கிட்டத்தட்ட ஒரு மூன்றாம் உலகப்போரின் சாயலைத்தான் உலகம் உருவகித்துக் கொண்டிருக்கிறது.

அதிலிருந்து மெல்ல எழும்... இன்னொரு வகை நம்பிக்கையை பெரும்... ஒரு அற்புதமான விடியலை நோக்கி தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் சந்தர்ப்பத்தை இந்த ஐந்து படங்களும் செய்து பார்க்கின்றன. இசையும் அன்பும்.. பிரிவும் புதுப்பித்தலும்... காதலும் தேவையும்... உண்மையும் நேர்மையுமாக... 

நமக்கும் நடக்கும் சம்பவங்களாகத்தான் இந்த படங்கள் நம்மை வந்தடைகின்றன. ஆனால் அந்த நமக்கும் என்பதில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது மாறுபடும் வர்க்க ரீதியிலான வாழ்வுமுறை குறித்தது. அவர்கள் எடுத்துக் கொண்ட கதைக் களத்துக்கு நியாயம் செய்ததாகத்தான் பார்க்கிறேன்.

முதல் படத்தில் ஜெயராம் ஊர்வசி என்ற நடிப்பு பட்டறைகள்.. சும்மா.. போகிற போக்கில் வெளுத்து வாங்குவது... படத்தின் ஆரம்பத்தை மிக நேர்த்தியாக கொண்டிருக்கிறது. வயதான பிறகு வரும் 'தான்' பற்றிய சிந்தனையாலோ... தனிமையின் சூழலாலோ... சமூகம் வெறுமனே கால காலமாய் போர்த்தி இருக்கும் கட்டுகளை உடைக்கும் கதையின் கருவே.. அசாத்தியம். 'உள்ளத்துக்கு' உள்ளே வைத்த அந்த காட்சி டிரீட்மென்ட் பிரமாதம். 

காளிதாஸ் என்ற இன்னொரு அழகான நடிகனை இனி இனம் கண்டு கொள்ளலாம்.

இருக்கின்ற இருப்புகளை வைத்துக் கொண்டு இல்லாதவைகளைக் கூட இயக்கி விட ஒரு படைப்பாளியால் முடிகிறது. சைனா பூச்சி காலத்தில்.. நிறைய கூட்டம் சேர்க்க இயலாது. பொது இடங்களுக்கு செல்ல முடியாது. ஆக, கதையே வீட்டுக்குள் நடப்பது போல செய்து மிக துல்லியமான வசனங்களால்... அலைபேசி... லேப்டாப்... என்ற இன்றைய நவீன வஸ்துக்களின் உதவியோடு... ஒவ்வொரு படத்தையும் செய்தது... சினிமா புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கருத்தை நம்பிக்கையோடு சொல்லி செல்வதைப் பாராட்டத்தான் வேண்டும்.

கடைசி படம்.. வேற ரகம். அதுவும் கூட நம்பிக்கை வேறு. மூட நம்பிகை வேறு என்ற மெல்லிய கோட்டில்... நகைச்சுவையோடு கடந்து செல்கிறது. இங்கு எது வேண்டுமானாலும்... எப்போது வேண்டுமானாலும்... எப்படி வேண்டுமானாலும் நடக்கும்.

அதற்கு லாக் டவுன் ஒரு பொருட்டே இல்லை. நிகழ்வதில் நாம் இருக்கிறோம். அப்போது புளியோதரை கூட ப்லிஸ் தான். காமெடியோடு.. ஆச்சரியத்தோடு அர்த்தம் மாறும் அட்டகாசம் அந்த ட்விஸ்டில் இருப்பது.... சம்திங் ஸ்பெஷல். (அது அவருடையதாக இருப்பின் பாராட்டுக்கள்) 

மகளுக்கும் அப்பாவுக்குமான பாசம் பிரிவு... என்று M.S பாஸ்கர் நிகழ்த்தியது... அப்பாக்களுக்கு மட்டுமே வாய்த்த வலி. அசராமல் மனிதர் அசர அடிக்கிறார். அந்த பேத்தியை கண்ணுக்குள் பொத்தி வைத்துக் கொள்ளலாம். ஒற்றை மூக்குத்தியில் ஜொலிக்கும் அவளை படம் முடிந்த பிறகும் காதலிக்க தோன்றியது.

அம்மாவின் நிலை... தூர தேசங்களில் பிள்ளைகள்... என்று அடுத்த கதை முழுக்க முழுக்க உறவுகளின் உள்ளார்ந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளது. வழக்கமான கதை தான். சிலிர்க்க வைக்கும் அன்பின் நம்பிக்கை... சித்திர வெளிப்பாடு... ஒவ்வொரு பாத்திரத்திலும். உறவு சிக்கலின் ஒவ்வொரு முரணும் வீட்டுக்கு வீ டு வாசல்படி தான்.

கடைக்குட்டிகள் எப்போதும் வழி தப்பும் ஆடாகவே இருப்பது வாழ்வின் திருப்பம் தான் போல. அம்மா என்ற பேரன்பு வீட்டையே சுத்திகரிக்கும். அப்பா எனும் பெரும் நம்பிக்கை தான்... எப்போதும் வீட்டுக்கு அஸ்திவாரம். சில இடங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக இருந்தாலும்... உள்ளுக்குள் வாழ்வின் அடுத்தடுத்த கட்டம் சிந்திக்க வைக்கிறது.

ஆண்ட்ரியா கதையில் வரும் அந்த டாக்டர் கதாபாத்திரம்... கதவைத் தட்டிக் கொண்டு பாடுவதில்... பட்டென்று நம்முள் நெருங்கி விடுகிறது. ஒரு படிப்ஸ் பையனின் நெடுநாளைய சொல்லொணா காதல்.. மிக அற்புதமாக இறுதிக் காட்சியில் வெளிப்படுகையில் நமக்கு கூட இப்படி ஒரு அனுபவம் இருக்கிறதே என்று தோன்றும். இடையே ஆண்ட்ரியா செய்யும் அளப்பரை கொஞ்சம் ஒட்டவில்லை என்று தான் தோன்றுகிறது. ஆனால் வாய்ப்பிருக்கிறது. வாழ்வின் அடுத்த முனை யாரும் அறிந்திராதது.

அந்த அம்மா.. எப்பவும் போல... நவீன அம்மா. கொடுத்த பாத்திரத்தில் அளவாய் நிறைந்து நிற்கிறது.

இந்த படங்களில் ஒரு கட்டுடைப்பு நடக்கிறது. வழக்கமான முகமூடிகள் கலையப்படுகின்றன. வழக்கமான அவநம்பிக்கைகள்... சமூகம் சார்ந்த வழக்கமான குருட்டு நம்பிக்கைகள் உடைபடுகின்றன. ஆனால்.. கடைசி கதையைத் தவிர மற்ற நான்கு கதைகளுமே மேட்டுக்குடி வாழ்க்கையின் வரம்பில் நிகழ்வதாகவே படுகிறது. சரியா தவறா என்று யோசிக்கவில்லை. ஆங்கில உரையாடல்கள் அத்தனை இருக்கிறது. ஆனால் அது தான் அவர்கள் சூழ் உலகின் வெளிப்பாடாக இருக்கிறது என்றும் புரிகிறது. 

முதல் படத்தில் பாடல் மிக நெருக்கமான குரல். அன்பும் ஆசையும் காதலும் காமமும் காலத்துக்கும் வரும். வயதெல்லாம் உடலுக்குத்தான். மனசுக்கு ஒரு நூறு ஜென்மம் கூட போதாது. பிரபஞ்ச துகள்களில்.. பித்து பிடித்து அலைவது தான் உயிர்களின் உற்சாகம். அது நிரம்ப நிகழ்கிறது.

இருக்கும் மன இறுக்கத்தில் இருந்து வெளி வந்து எட்டிப் பார்க்கையில்... ஓர் ஆக்கபூர்வமான வடிவமாகத்தான் இந்த "புத்தம் புது காலை" இருக்கிறது. ஆனால் டைட்டில் உள்பட ஒவ்வொரு படத்தின் டைட்டிலும்.. மறுபரிசீலனை செய்திருக்கலாம்.

கிடைப்பதை வைத்துக் கொண்டு நடப்பதை நடத்திக் காட்டும் கிரியேட்டிவிட்டி அமேசான் பறவையால் வீ ட்டுக்குள்ளும் கூடு கட்டுகிறது. விருப்பம் உள்ளோர் எட்டிப் பார்க்கலாம். 

- கவிஜி 

Pin It