ஜட்டியுடன் சாக்கடையில் இறங்க நிர்பந்திப்பது மனித உரிமை மீறல் இல்லையா?

கையால் மலம் அள்ளும் தொழில் இந்த சாதியில் பிறந்த காரணத்தினால், நம்மீது திணிக்கப்பட்டது. எனவே, இத்தொழிலை ஒழிக்கப் போராடுகிறோம். இது, இந்து சாதி வர்ண முறையிலே நம் மீது திணிக்கப்பட்ட ஒரு தொழில். இன்னும் சொல்லப் போனால், இத்தொழில் சாதியோடு இணைக்கப்பட்டுள்ளது. எல்லா சாதிக்காரர்களும் இந்தத் தொழிலை செய்தால், நாம் ஒன்றும் கேள்வி கேட்கப் போவதில்லை. குறிப்பிட்ட சாதி மட்டுமே, அதாவது அருந்ததியர், சக்கிலியர் என்று சொல்லக்கூடிய நாம் மட்டுமே செய்ய வேண்டும் என வன்கொடுமையாக இத்தொழில் நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இதை ஏன் மாற்ற முடியவில்லை?

கோவையில் 2004 ஆம் ஆண்டு ஆதித்தமிழர் பேரவை கூடியபோது, தமிழகத்திலேயே முதன்முதலாக, “கையால் மலம் அள்ளும் தொழிலை தடை செய்து, அதில் உள்ளவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்'' என்று தீர்மானம் நிறைவேற்றினோம். தடை செய்வது என்பதுதான் ரொம்ப, ரொம்ப முக்கியம். இதற்கு முன்பிருந்த புரட்சி, முற்போக்கு பேசுகின்ற பல்வேறு இயக்கங்கள் ஆகட்டும், துப்புரவுத் தொழில் செய்கின்றவர்களிடையே இயக்கம் கட்டுகின்ற தொழிற்சங்கங்கள் ஆகட்டும், அவர்கள் சந்தா வாங்குவதில்தான் குறியாக இருந்தார்களே தவிர, இப்படி ஒரு இழிதொழிலை செய்கிறார்களே, இதை ஏன் தடை செய்யக் கூடாது என்கிற குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட இல்லாமல், அதையும் ஒரு தொழில் என்று கூறி, சங்கம் வைத்து, சந்தா வசூலிக்கிறார்கள்.

"தாட்கோ'வில் இருந்து அதிகாரிகள் வந்து பேசினார்கள், நிறைய செய்வதாக! இன்றுள்ள "தாட்கோ' நம்மை பிச்சை எடுக்கத்தான் வைக்கிறது. எத்தனை பேர் முன்னேறியிருக்கிறார்கள்? கர்நாடகாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு லோன் போட்டால், கறவை மாடு வீட்டில் இருக்கும். ஆனால் இங்கு கறவை மாட்டுக்கு லோன் போட்டா, ஆட்டுக்குட்டிதான் வந்து சேரும். இப்போது கலைஞர் செய்கிறார். நல்லதுதான். இப்போதுகூட அவர், அவரோட "பெண் சிங்கம்' என்கிற திரைப்படத்திற்கு கிடைத்த 61 லட்சம் ரூபாயை, அருந்ததியர் மாணவர்களுக்கு, ஒரு மாணவனுக்கு 5 ஆயிரம் என கொடுத்துள்ளார். நான் கேட்கிறேன், அவருக்குத் தெரியாதா? இந்த 5 ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று? அவர் எதற்கு தன்னுடைய சொந்தப் பணத்தை அளிக்க வேண்டும். முதல்வராக உள்ளார். மருத்துவம் படிக்கின்ற ஓர் அமைச்சரின் மகனுக்கு ஆண்டுக்கு ரூபாய் 5 ஆயிரம்தான் செலவாகின்றதா? ஏன் மாதம் 10 ஆயிரம் ரூபாய் அரசாங்கம் அளித்தால் என்ன?

adhiaman 2மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று நான் சொல்வது இதுதான். ஒரே மாதத்தில் தமிழகம் முழுவதும், ஏன் இந்தியா முழுவதும்கூட, கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிக்க முடியும். "பாடம்' நாராயணன் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போடுகிறார், இத்தொழிலை தடை செய்யச் சொல்லி. அரசாங்கம் 6 மாதம் அவகாசம் கேட்டது, அனைத்து மாவட்டங்களுக்கும் போதிய கருவிகள் வாங்குவதற்காக.

டிசம்பர் 10 ஆம் தேதி உலகெங்கும் மனித உரிமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது, மனித உரிமை மீறலா தெரியலையா? சாக்கடை அள்ளுவது; வெறும் ஜட்டியுடன் "மேன்ஹோலில்' இறங்கி உயிரோடு வரமுடியுமா என்று தெரியாது. இது இன்னிக்கும் இருக்குது. இத்தொழிலில் ஈடுபடுபவர்களின் மறுவாழ்விற்காக அரசு 35 கோடி ஒதுக்கி, வாரியம் அமைத்தது. அது என்ன ஆனது? எங்கிருக்கிறது? யாருக்கும் தெரியாது. இத்தொழிலை ஒழிக்க வேண்டும் என்பதில் முழு முனைப்பில்லை. அக்கறையில்லை.

அரசு நினைத்தால் இதை ஒரே மாதத்தில் ஒழிக்க முடியும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வீடுகளில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என்ற திட்டத் தைக் கொண்டு வந்தார். மழைநீர் சேமிப்பில்லாத வீடுகளுக்கு குடிநீர் கிடையாது, மின் இணைப்பு கிடையாது, சொத்துவரி வாங்க முடியாது என்று அறிவித்தார்கள். உடனடியாக தமிழகம் முழுவதும், மின்சாரம் இல்லாத சிறு குடிசைகளில்கூட மழை நீர் சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டதே! எவ்வளவு அவசர கதியில் செய்தார்கள்.

தமிழ் நாட்டில் தற்பொழுது உலர் கழிப்பிட ஒழிப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது. முன்னாள் முதல்வர் கடைசி நேரத்தில் இச்சட்டத்தை ஏற்று அறிவித்தார். இச்சட்டத்தில், இத்தொழிலை யார் செய்யச் சொல்கின்றார்களோ, அவர்களுக்கு சிறைத்தண்டனை, அபராதம் என்று உள்ளது. ஆனால், இதை யார் நடைமுறைப்படுத்துவது? இதுதான் இப்போதைய பிரச்சனை, கேள்வி. மாநகராட்சியில் ஒருவர் மலக்குழியில் இறங்கினார். புகைப்படம் எடுத்து, ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். வழக்குப் பதிய மறுத்தார்கள். இப்படி ஒரு சட்டமே இல்லை என்றார்கள். மலக்குழியில் இறங்கச் சொன்னது, மாநகராட்சி ஆணையர். அவர்தான் குற்றவாளி. ஆனால் வழக்குப் பதிவு செய்ய முடியவில்லை. ஆனால், வேலை செய்ய விடாமல் தடுத்ததாக எங்கள் மீது வழக்குப் போடுகிறார்கள். சட்டமும் உள்ளது, தடுக்க வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவும் உள்ளது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

உலகின் 190 நாடுகளில் இப்பிரச்சினை இல்லை. இந்தியாவில் மட்டும்தான் இந்தக் கொடுமை. ஏன் என்றால், இந்தியாவில்தான் இந்து மதம் உள்ளது. மதத்திற்கும், சாதிக்கும் இத்தொழிலுக்கும் தொடர்பு இருக்கிறது. சாதி எப்படி ஒழியும்? ஒழியாது. அப்ப மதமாவது மாறணும். நம்முடைய தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர், “நான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தேன். சாகும்போது இந்துவாக சாகமாட்டேன்'' என்று சொன்னார். சிலர் மேடையில, நீங்க என்ன வேணாலும் பேசுங்க, செய்யுங்க. ஆனா இந்த கடவுள், மதம் இதை மட்டும் "டச்' பண்ணாதீங்க அப்படின்னு சொல்வாங்க. எப்படி முடியும்?

துப்புரவுப் பணியில் இருப்பவர்களுக்கு என்று மத்திய அரசு பல கோடி ரூபாய்களை தமிழகத்திற்கு ஒதுக்கியது. அந்த ரூபாய் எல்லாம் என்ன ஆனது? அதை நம் மக்களுக்கு கொடுத்திருந்தால், நம் சமூகம் இன்று மிகப் பிரமாதமாக இருந்திருக்குமே! அந்தத் தொகையை ஏன் நெடுஞ்சாலைத் துறைக்கும், பொதுப் பணித்துறை என பல்வேறு துறைகளுக்கும் மாற்றுகிறீர்கள்? படிக்க வருகின்ற முதல் தலைமுறைக்கு ஆரம்ப கல்வியில் இருந்து ஆராய்ச்சிக் கல்வி வரைக்கும் இலவசமா கொடுக்கணும்னு திட்டத்துல இருக்கு. ஆனா ஏன் செய்யல? "ஹட்கோ'வில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையெல்லாம் பினாமியில் வெளியில இருக்கு. மேற்கு மாவட்டங்களில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகள் எல்லாம் பினாமியில் கவுண்டர், நாயக்கர் பேர்ல யும் இருக்கு. ஏன் அரசாங்கம் இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா?

தமிழ் நாட்டில் கையால் மலம் அள்ளுகிறவர்கள் 35 ஆயிரம் பேர் என்று சொல்கிறார்கள். அது பொய். சென்ற முறை நடந்த ஒரு கூட்டத்தில் இப்படித்தான் இப்போதெல்லாம் இந்தத் தொழில் கிடையாது; எங்கும் நடக்கலன்னு ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி பேசினார். உடனே நம்ம பெசவாடா வில்சன், இன்னிக்கு காலையில் 6 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் நான் இறங்கிவரும்போது எடுத்த படம் என்று காட்டினார். உடனே வாய்மூடிக் கொண்டார்கள். எத்தனை சட்டங்கள், நீதிமன்ற உத்தரவுகள் இருந்தாலும், எத்தனை புத்தகங்கள் எழுதினாலும் இவர்கள் காதில் ஏறுவதில்லை.

நம்மைப் பொருத்த அளவில் ஒன்றில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இந்த கக்கூஸ் என்பது இங்கிலீஸ்காரன் வரும் வரையிலும் இங்கு கிடையாது. இங்கிலீஸ்காரர்கள் வந்து 350 ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பு இந்தியாவில் கக்கூசு கிடையாது. இங்கிலீசுகாரன் வந்த பிறகுதான், கக்கூஸ் என்ற ஒன்று உருவாகி, அதைப் பராமரிக்க ஒரு ஆள் தேவை என்று உருவானது. இங்கிலீசுகாரன் வந்த பிறகு நாட்டில் பல விசயங்கள் வந்தன. ஆக, 400 வருசத்துக்கு முன்னாடி இந்தத் தொழில் கிடையாது. இதுதான் நிலைமை. இடைக்காலத்தில் நாம் ஏமாந்தபோது நம்மீது திணிக்கப்பட்டது இத்தொழில், சாதியின் அடிப்படையில்.

சிலர் "தீண்டாமை ஒழிப்பு' என்கிறார்கள். சாதி ஒழிப்பு என்ற வார்த்தையை சொல்ல மறுக்கிறார்கள், முற்போக்கு பேசுகின்றவர்கள். தீண்டாமை காந்தி சொன்னது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அம்பேத்கர்தான், “அப்படி அல்ல. தீண்டப்படுபவர், தீண்டப்படாதவர். இவர்கள்தான் நாட்டில் உள்ளார்கள்'' என்று சொன்னார். இந்த நாட்டையே புரட்டிப் போட்ட கருத்துகளை வழங்கிய அம்பேத்கரை ஓரம் கட்டி வைத்துவிட்டு, இன்று யார் எல்லாமோ தலைவர் ஆகிவிட்டனர். உலகத்திற்கே புரட்சிக் கருத்துகளை வழங்கிய மார்க்சுக்கு நிகராக கருதப்படும் புரட்சியாளர் அம்பேத்கருக்கு, இன்று நாட்டில் என்ன மரியாதை இருக்கிறது? நாம் அவர் படத்தை மட்டும் பயன்படுத்துகிறோம்.

மற்ற சாதியில் பிறந்தவர்களும், முற்போக்குப் பேசுகின்றவர்களும் இதை எண்ணிப் பார்த்து, இதை ஒழிக்க முன்வர வேண்டும்; நம்மோடு கைகோர்க்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சனையை தீர்க்க முடியும். எனக்குத் தெரிந்து 10 ஆண்டுகளாக நாம்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இதற்கு எப்போதுதான் முடிவு? 2010 இல் தமிழ் நாட்டை கையால் மலம் அள்ளும் தொழில் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது சபாய் கரம்சாரி அந்தோலனின் விருப்பம். அதை நடைமுறைப்படுத்த இந்த அரசு உதவி செய்ய வேண்டும். அரசு உதவி செய்ய வேண்டும் என்றால், பிற கட்சிகள் எல்லாம் என்ன செய்கிறது என்பதுதான் நாம் முன்வைக்கின்ற கேள்வி.

இங்கு தமிழ் நாட்டில் இருக்கின்ற பெரியாரிஸ்டுகளும், அம்பேத்கரிஸ்டுகளும் கருத்துடையவர்கள். கருத்துத் தெளிவுடையவர்கள். நாம் ஒரு திட்டத்தை கையில் எடுத்தால் அதை நிச்சயம் நடத்திக் காட்ட முடியும். இத்தொழிலை ஒழிக்க ஆதித்தமிழர் பேரவை ரயில் மறியல் போராட்டம் நடத்தி, 3000 பேர் கைதானார்கள். மாநகராட்சிகள், நகராட்சிகள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியிருக்கிறோம். இதையொட்டி நாம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பல அமைப்புகளுடன் பல்வேறு திட்டங்கள் வைத்து செயல்படுகிறோம். நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

‘தமிழகத்தில் 2010 க்குள் கையால் மலமள்ளும் தொழிலை ஒழிப்பதற்கான மாநில கலந்தாய்வு’ கூட்டத்தை 18.12.1009 அன்று சென்னையில் ‘சாபய் கரம்சாரி அந்தோலன்’ என்ற அமைப்பு நடத்தியது. இக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் ரா.அதியமான் நிகழ்த்திய உரையின் சுருக்கமே இங்கு வெளியிடப்பட்டுள்ளது. “இனி இத்தொழிலை செய்ய மாட்டோம் என்று சமூகப் பிரகடணம் செய்தால்தான், கையால் மலம் அள்ளும் இழித்தொழிலை ஒழிக்க முடியும்” என்று இக்கூட்ட்த்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான ‘ சமூகப் பிரகடன மாநாடு’ செப்டம்பர் மாதம் பெரியார் பிற்ந்த நாளான 17,2010 அன்று நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

- ரா. அதியமான் 

Pin It