சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகிலுள்ள உஞ்சனை என்ற கிராமத்தை அடுத்துள்ள அரியக்குடி விலக்கு பேருந்து நிறுத்தத்தில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடும் நிலையில் கிடத்தப்பட்டிருந்த ஒருவர், அவசர ஊர்தி 108க்கு யாரோ அளித்த தகவலின் பேரில் காப்பாற்றப்பட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

“தேவகோட்டை அருகே திருடன் என நினைத்து மனநோயாளி சித்ரவதை – படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி'' ("மாலை மலர்', 16.12.2009) என காவல் துறை தந்த செய்தியும் இச்சம்பவத்தை முக்கியமற்ற ஒன்றாக்கியது. அøனத்து செய்திகளுக்கும் பின்னே உறைந்து மறையும் உண்மைகளைப் போலவே, இச்செய்தியின் பின்னால் புதையுண்ட உண்மை நிகழ்வை, உழைக்கும் மக்கள் உரிமை இயக்கச் செயலாளரும் பட்டியலின மக்களின் வாழ்வுரிமைக்காக இப்பகுதியில் செயலாற்றி வருபவருமான ஆரோ. ஸ்டீபன்ராஜ் நமக்கு தேடித்தந்த போது, அது இன்னு மொரு வன்கொடுமை அதிர்ச்சி!

தேவகோட்டை வட்டம் கண்ணங்குடி அருகிலுள்ள தேவண்டதாவு என்ற கிராமத்திலுள்ள தனது உறவினரது வீட்டில் தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஆண்டாவூரணி (தெற்கு)இல் வசித்து வரும் குப்பையன் மகன் கருப்பையா (வயது 50) என்பவர், 13.12.2009 அன்று இரவு 8 மணியளவில்கண்ணங்குடி டாக்ஸி ஸ்டாண்டு அருகில் நின்று கொண்டிருந்தார். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த கருப்பையாவை திருடன் என முத்திரை குத்தி அவ்வூரைச் சேர்ந்த ஆதிக்க சாதி கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது. அவரின் வயதையும் பொருட்படுத்தாமல் முழங்காலில் கட்டையால் தாக்கி யும் கைவிரல் நகக்கண்ணில் ஊசியால் குத்தி யும் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் உடல் முழுவதும் சூடுகள் வைத்தும் அவரை சித்திரவதை செய்துள்ளனர். தேவகோட்டை வட்டம் காவல் நிலையத்திலிருந்து தகவல் கேள்விப்பட்டு கண்ணங்குடிக்கு வந்த உதவி ஆய்வாளரிடம் கூட அவரை ஒப்படைக்க மறுத்து, காவலர்களையும் விரட்டி அனுப்பியுள்ளது அக்கொலைகார கும்பல். அதற்குப் பிறகுதான் உடலில் தீக்காயங்களுடன் இரு நாட்களுக்குப் பிறகு அவர் கண்டறியப்பட்டுள்ளார்.

காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கருப்பையாவிடம் பலவீனமான வாக்குமூலத்தைப் பெற்று சாதாரண பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கையொன்றை பதிவு செய்ததோடு, குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் நோக்கில் அரசு மருத்துவமனையிலிருந்து கருப்பையாவை வெளியேற்றி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தி, 200 ரூபாயையும் தந்து, அவரைக் கவனித்து வந்த உறவினரிடம் மேலணை பாண்டியன், பாலகிருஷ்ணன் என்ற காவலர்களின் மூலம் நெருக்கடியும் தந்துள்ளனர் காவல் துறையினர். ஆனால் 16.12.2009 பிற்பகலில் திருவாடானை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாகவும் மறுநாள் உள்நோயாளியாகவும் கருப்பையா சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடுமையான சித்திரவதையில் மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட கருப்பையாவின் வலதுகை மோதிர விரல் நகக்கண் பிடுங்கப்பட்டதால் சீழ் பிடித்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கருப்பையாவின் சகோதரர் பால்சாமியை அழைத்துக் கொண்டு, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் முறையிட்டபோது, (கள்ளர் சாதியைச் சேர்ந்த) டி.எஸ்.பி.யிடம் இப்புகாரை விசாரணைக்கு அனுப்பி வைப்பதாக அவர் கூறியுள்ளார். ஒட்டுமொத்த காவல் துறையும் நீண்டகாலமாகவே இப்பகுதியில் கள்ளர் சாதி ஆதிக்கக் கும்பலுக்கு அடிவருடியாகவும் "நாடு' அம்பலங்களுக்கு ஏவல் செய்தும் வருவதையும் இப்பகுதி மக்கள் அனைவரும் அறிவர்.

நிலவுடைமை காலத்திய "நாடு' அமைப்பு முறையும், கள்ளர் சாதி ஆதிக்கமும் இப்பகுதியில் ஒழிக்கப்படாத வரை ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கும் இழிவுகளுக்கும் முடிவில்லை. இன்ன சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்தே கொடுமைப்படுத்தியதோடு அல்லாமல், நாதியற்ற உயிராய் நடுக்காட்டில் வீசியெறிந்து விட்டு, 200 ரூபாயில் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற சாதித் திமிருக்கு சாவுமணி அடிக்கும் எதிர்ப்பு உணர்வுக்கு ஒடுக்கப்படும் மக்களை உயர்த்த வேண்டும்.

கருப்பையாவை வன்கொடுமைக்கு உட்படுத்தி, சாதி வெறியாட்டம் நடத்திய 10 பேர் கொண்ட கும்பலின் தலைவனும் "கண்ணங்குடி நாடு' அம்பலத்தின் மகனுமாகிய படைவென்றான் என்பவனை எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உடனடியாகக் கைது செய்யவும், பாதிக்கப் பட்ட கருப்பையாவுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணம் தரவும், குற்றவாளிக் கும்பலுக்கு பாதுகாப்பாகச் செயல்படும் காவலர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி "ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி', "உழைக்கும் மக்கள் உரிமை இயக்கம்', "தியாகி இம்மானுவேல் பேரவை', "உழைக்கும் பெண்கள் இயக்கம்' ஆகியன 2010 சனவரி 3 அன்று தேவகோட்டையில் கண்டனப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்

- இளம்பரிதி 

Pin It