ஜோதிடம், நரபலி, பூமிபூசை போன்ற அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களால் மக்களின் வாழ்க்கை எப்படி தடம்மாறி போகின்றது என்பதை அழுத்தமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது வெங்காயம். எளிய முகங்களை வைத்து எளியோர்களுக்கான வலிமையான கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். தன்னுடைய அறிவின் இயல்பையும், இருத்தலையும் உணரமுடியாத மக்களின் நம்பிக்கையே ஜோதிடம். அந்த அறியாமையை போக்குவதற்கான முயற்சியே இத்திரைப்படம். தொழில் தொடங்குதல், திருமணம் நிச்சயித்தல், பூமிபூசை என மனித வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் அனைத்திலும் ஜோதிடம் முக்கிய வினையாற்றுகிறது.

Vengayam_275அரசு மற்றும் ஆதிக்க சக்திகளின் மூடநம்பிக்கைள் கூட எளிய மக்களை பாதிக்கும் வண்ணம் அமைந்துள்ளதை வரலாறு பதிவு செய்கிறது. மதுரை திருமலை நாயக்கர் மகால் கட்டுவதற்காக, ஆயிரக்கணக்கான அருந்ததியர்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக, பேராசிரியர் எழில்.இளங்கோவன் தனது நூலில் குறிப்பிடுகிறார். இதே போன்ற சம்பவம் இத்திரைப்படத்திலும் வருவதை நாம் ஆய்விற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை 'முண்டச்சி' என்று சொல்லி, கிணற்றுக்கு அந்தப் பக்கம் உட்கார வைத்துப் பேசிய 'பெரியவாள்'(?) என்றழைக்கப்படும் சங்கராச்சாரி வாழ்ந்த கேடுகெட்ட நாட்டில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வெள்ளைக்காரன், பார்ப்பன பனியாக்களுக்கு நள்ளிரவில் அதிகாரத்தை மாற்றிக் கொடுத்தததற்கு காரணம் நல்லநேரம் பார்த்துதான். Corporate Culture என்றழைக்கப்படும் இந்த காலகட்டத்தில் கூட, சட்டையில்லாத பார்ப்பனர்கள் பலபேரின் ஆலோசனையின் பேரில் “அட்சய திருதை” கொண்டாடும் திருநாடு(?) இது. உழைக்காமல் முன்னேறுவதற்காக பல அதிர்ஷ்டக் கற்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு சந்தை விரிக்கும் அவலத்தை இன்னும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். குழந்தை பிறக்கிற நேரத்தை வைத்து, ஜாதகம் கணிப்பிங்கன்னா இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை செத்தும், மற்றொரு குழந்தை உயிர் பிழைக்குதே? அது ஏன்டா? என்று இப்படத்தின் சிறுவர்கள் கேட்கும் கேள்விகள் மக்களுக்கு 'பாடம்' சொல்லித் தருகின்றன.

காந்தி சுட்டுக் கொல்லப்படுவார், சாஸ்திரி செல்லும் விமானம் விபத்திற்குள்ளாக்கப்படும், 'சுனாமி' அலைகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று ஏன் நம்நாட்டு ஜோதிட வல்லுனர்கள் முன்கூட்டியே அறிவிக்கவில்லை? இதுபோன்ற கேள்விகள் திராவிட இயக்க மேடையில் அடிக்கடி கேட்கப்படும் மந்திரமா? தந்திரமா? போன்ற நிகழ்ச்சிகள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும். ஆனால் தற்போது, இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகிவிட்டன. இச்சூழலில் “வெங்காயம்” திரைப்படத்தின் பகுத்தறிவுப் பணி அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

கூத்துக்கலைஞன் தன் மகனின் உயிருக்காக தெருவில் பிச்சையெடுப்பதையும் ராஜா வேடத்தில் அவன் தான தருமங்கள் வழங்கியதையும் மாறி மாறி திரையில் காண்பிக்கும் காட்சி மனதை நெகிழச் செய்கிறது. ஜோதிடத்தை தோலுரிக்கும் அதே வேளையில், ஈழத்தமிழர் பிரச்சனை, தீண்டாமை என பல்வேறு தளங்களையும் தொட்டிருக்கும் இயக்குனர் பாராட்டுக்குரியவர். நான்கு சிறுவர்களில் சிறுமி கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூகப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் போர்க்குணம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு என்பதை பெரியாரியவாதியான இயக்குனர் பதிவு செய்கிறார்.

நடிப்பில் சிறிதும் அனுபவமில்லாத கொங்குத்தமிழ் கிராமத்து மக்கள் மட்டுமே நடித்த திரைப்படம் 'வெங்காயம்' என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பேசும் 'தமிழ்' போல் அவர்களது நடிப்பும் அனைவரையும் கவருகிறது. கதாநாயக பிம்பங்கள் உடைந்து வரும் இச்சூழலில் எளிய மக்களை முன்னிறுத்தும் முயற்சி பின்பற்றப்பட வேண்டியது.

சில மாதங்களுக்கு முன்பு இப்படம் வெளியாகி, போதிய விளம்பரமின்மையால், யாருடைய கவனத்தையும் பெறாமலே திரையரங்குகளில் இருந்து வெளியேறியது. இந்நிலையில்தான் இயக்குனர் சேரன் மறுவெளியீடு செய்திருக்கிறார். வியாபார லாபத்திற்கு உத்தரவாதமில்லாத இப்படத்தைத் துணிந்து வாங்கி, தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க முயற்சி செய்த இயக்குனர் சேரன் பாராட்டுக்குரியவர்.

ஜோதிட புரட்டர்களுக்கும், சாஸ்திர ஜாம்பவான்களுக்கும் 'வெங்காயம்' கண் எரிச்சலை மட்டுமல்ல, வயிற்றெரிச்சலையும் உண்டாக்கும்.

- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It