ஒடிசா மாநில பாஜக தலைவர்களுள் ஒருவரான சம்பித் பத்ரா, "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று அண்மையில் பேசி, பிறகு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். மன்னிப்பு என்பதெல்லாம் அவர்களின் வாடிக்கையான கதைதான்.

ஆனால் பிரதமர் மோடி, சம்பித் பத்ராவையும் மிஞ்சி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. 'ஏதோவொரு விஷயத்தை' நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காகவே, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்" என்று கூறியிருக்கிறார் பிரதமர் மோடி.

இப்படித்தான் நித்தியானந்தா என்று ஒருவர் கைலாசா என்ற நாட்டின் 'அதிபர்' என்று சொல்லிக் கொண்டு வித்தை எல்லாம் காட்டிக் கொண்டு இருந்தார் - இப்பொழுது, மோடி!

அந்த பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி 'ஏதோவொரு விஷயத்தை' நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் அவரை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்" என்று சொன்னார் அல்லவா!

அது என்ன விஷயம்?

அரசுப் பொது நிறுவனங்களை எல்லாம் தனியாருக்குத் தாரை வார்த்தாரே, அதுவா?

திடீரென்று ஒருநாள் பணமதிப்பிழப்பு என்று சொல்லி மக்களைப் பாடாய்ப் படுத்தினாரே, அதுவா?

நீட்தேர்வு, நுழைவுத்தேர்வு, பெற்றோல் டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருள்களின் விலையேற்றம், அதுவாக இருக்குமோ!

அல்லது பீகாரில் போய், பூரி கோயிலின் 'புதையல்' இருக்கும் அறையின சாவி தமிழ்நாட்டுக்குப் போய்விட்டது என்று ஒரு கதை சொன்னாரே அதுவாக இருக்குமோ!

தமிழருக்கு எதிராகவும், சிறுபான்மையினர் - இஸ்லாமியருக்கும், எதிராகவும் இனவாதம் பேசி வருகிறாரே!

இதுபோன்ற விஷயத்தை நடத்தியே ஆகவேண்டும் என்பதற்காகத்தான் அந்த பரமாத்தா மோடியை அனுப்பினார் போலத் தெரிகிறது.

இந்த விஸ்வகுருவின் அடுத்த வேடம் `பிரம்ம ரிஷியாக' இருந்தாலும் இருக்கும்! ஒரு பிரதமர் எப்படி இருக்க வேண்டும் என்பதல்ல, எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மோடியைத் தவிர வேறு யாரைத்தான் சொல்ல முடியும்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It