இவ்வாழ்வின் அடித்தளம் அன்பினால் கட்டப்பட்டிருக்கிறது என்று மீண்டும் ஒரு முறை நுட்பமாக.... இந்தப் படம் பேசுகிறது. ஏற்கனவே "பூவரசம் பீப்பி" மூலம் அறிமுகமான......... டீடெயிலிங் உள்ள திரைக்கதை வடிவத்தை மிக லாவகமாக கையாளக் கூடிய சினிமா அறிவு கொண்ட படைப்பாளி இயக்குனர் ஹலிதா சமீம். முதலில் வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்ளலாம்.

நான்கு கதைகள். நான்கையும் மிக சாதாரண புள்ளியில் இணைத்த லாவகம் மெச்சத்தக்கது. நான்கு சிறுகதைகளை செதுக்கிய சாதுர்யம்... படமாக்கிய விதம்.. தரத்தோடு கொண்ட தமிழ் சினிமாவுக்கு சான்று.

sillukarupattiவிளிம்பு நிலை மனிதர்களுக்கும் பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கும் மனிதர்களுக்கும் இடையே இருக்கும் தூரம் மிக நீளமானது. அவர்களை இணைக்கும் மிக முக்கியமான இடம் குப்பை மேடுகள் என்பதைத்தான் முகத்தில் அறைந்தாற் போல சொல்லி..... மீண்டும் ஒரு முறை இந்த சமூக கட்டமைப்பில் பிரிந்து நிற்கும் மானுட வடிவத்தை மறுபரிசீலனை செய்ய நினைவூட்டி இருக்கிறார்.

அத்தியாயம் ஒன்று

"முதல்ல வைரம் மாதிரி உங்க போட்டோ கிடைச்சது. அப்புறம் வைரமே கிடைச்சது...." என்று அந்த பொருளைத் திருப்பி தர அந்த பையன் எடுக்கும் முயற்சிகள்......... அதற்காக அவன் அந்த பெண்ணை பின் தொடர செய்யும் பிரயத்தனங்கள்.. பிங்க் என்ற தலைப்பில் முதல் அத்தியாயமாக விரிகிறது. பிங்க் பேக்கிற்காக அவன் காத்துக் கிடப்பதும் அதைக் கண்டதும் ஓடி வந்து அதை எடுத்துப் பார்ப்பதும்... அன்பின் தேடல் குப்பைகளிலும் மின்னும் நட்சத்திரங்கள் ஆளாகின்றன. "பொய்ட் ஆஃப் வேஸ்ட்" போன்ற உலக சினிமாக்களை சற்று நினைவூட்டினாலும்..... தமிழுக்கு புதிது.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்று நம் பாட்டன் சும்மாவா சொன்னான். முகம் அறியா... பிசிராந்தையார்க்கும் கோப்பெருஞ்சோழனுக்கும் இருந்த நட்பு கதையல்ல நிஜம் தானே. அதன் போக்கில் அந்த பெண் மீது இனம் புரியாத அன்பு.

"காதலோ...?" என்று.....உடன் இருக்கும் இருக்கும் நண்பன் கேட்கையில்.... "அதெல்லாம் ஒன்னும் இல்ல... பொருளை தொலைச்சிட்டு இருக்காங்க. கொண்டு போய் சேக்கணும்... அவ்ளோதான்..." என்று சொல்லும் அந்த குப்பை பொறுக்கும் பதின்பருவத்து பையனின் தீர்க்கம் அவன் கண்டெடுத்த வாழ்விலிருந்து கிடைத்த ஜனனம். இயல்பிலேயே மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவனாக அவன் இருக்கிறான். அவள் புகைப்படத்தைக் கூட அவன் ஒரு மிரட்சியின் தேஜஸ் கொண்டே பத்திரப்படுத்துகிறான். அவள் ஒரு ஆச்சரியத்தை அவனுள் கிளறுகிறாள். இது தான் காதல் என்றால்.. அது அப்படி இருந்தால் அது அழகு தான்.

அவள் ஏற்கனவே தூக்கி வீசி எறிந்த சின்ன டேப் ரிக்கார்டை சரி செய்து அதில் கிப்ட் பேக் போல செய்து மோதிரத்தை கட்டித் தொங்க விட்டு.... திருடப்போகிறவன் போல அவளை பின் தொடர்ந்து அதை அவளிடம் சேர்த்து விட்டு ஓடி விடுகிறான். வைர மோதிரம் குப்பையில் கிடந்ததையும்.....தான் அதை எடுத்து இப்போது உரியவரிடம் சேர்த்து விட்ட செய்தியையும் அவன் அந்த டேப் ரிக்கார்டில் பேசி பதிவு செய்திருப்பதை கேட்ட அவளுக்கு எல்லாமே புரிகிறது. அந்த மோதிரத்துக்கும் தனக்குமான உணர்வை......பிணைப்பை நினைத்து அது திரும்ப கிடைத்து விட்ட இன்ப அதிர்ச்சியில்...சந்தோசத்தில் அவளையுமறியாமல் அவனைத் தேடும் கண்களில் ஒளிர்ந்தது காதல் தான் என்றால்... அது தகும். காதல் என்பது பரஸ்பர நம்பிக்கை. பரஸ்பர நிம்மதி. அது தான் அன்பின் நன்றி. அது தான்.. அன்பின் நிறைவு. அடுத்த நாள் அதே பிங்க் பேக்கில் தின்பண்டங்களை அடுக்கி அவனுக்காக வீட்டு டஸ்ட் பின்னில் வைக்கிறாள். வேலைக்காரி மூலமாக அது குப்பைத் தொட்டிக்கு போகும் வரை ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் அந்த சிறுமி மேல் தட்டு வர்க்கத்திலும் மின்னும் வைரம்.

சேரியில் இருக்கும் அவன் தோழி..."ஷாம்ம்பு கிடைச்சா கொண்டு வாடா.. தலைக்கு குளிக்கணும்... எப்படியும் கடைசியில் கொஞ்சம் மிச்சம் வெச்சு தான் தூக்கி போட்ருப்பாங்க...." என்று கேட்கையில் இப்படியெல்லாம் ஒரு வாழ்க்கை நம்மை சுற்றி இருக்கிறது என்பதை ஆச்சரியத்தோடு தெரிந்து கொள்ள முடிகிறது. போட்டுடைத்த உண்மையைப் போல அந்த கசப்பு என்னுள் மின்னுவதை பொறுக்கமாட்டாமல் இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். சேரியில் அடிக்கப்படும் கொசு மருந்தும்.........வைரப்பெண் வீட்டில் திறக்கும் குளிர்சாதனப்பெட்டியில் இருந்து வரும் ஃபாக்- கும்.......... அடுத்தடுத்த காட்சியில் கலப்பதில் இருக்கும் செய்தி மானுட மூட்டத்தை விலக்குகிறது.

அத்தியாயம் இரண்டு

ஆண்குறியில் கேன்சர் வந்த ஹீரோ.. அவனோடு ஷேர் கால் டேக்சியில் பயணிக்கும் பெண். இவர்களுக்குள்ளான அறிமுகம் நட்பு...அன்பு என்று காதலாக மாறும் இடம்.......அவன் கேன்சரை வெல்லுமிடமாக முடிகிறது.

காருக்குள் அவர்களுக்குள் நிகழும் சம்பாசனைகள்... சினிமா உள்ள காலம் வரை ரெபரண்ஸ்க்கு எடுக்கப்பட போகிறவை. வாழ்வை அவரவர் பார்வையில் மிக நுட்பமாக... தெளிவாக.... சக மனிதன் மீதான அக்கறையாக பரிமாறிக் கொள்ளும் இளைஞர்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் கருத்தை ஒருவர் மீது திணிப்பதில்லை.

"சிம்பதி எல்லாம் வேண்டாங்க" என்று அவன் சொல்கையில்...." கைதான் குடுத்தேன்.... சிம்பதி இல்ல.... போங்க பாஸ்.. போய் தைரியமா கேன்சர ஜெய்ச்சிட்டு வாங்க..." என்று இயல்பாக சொல்லி அனுப்புகையில்.......இப்படி ஒரு தோழமை ஒவ்வொருவருக்கும் வேண்டும் என்று அழுத்தமாக புரிய முடிந்தது.

வலியோடு அவன் நடக்கையில்... அலுவலகத்தில் அமர்ந்திருக்கையில்... இப்படி ஒரு வியாதி தனக்கு வந்து விட்டதை நினைத்து நினைத்து நினைத்து நினைத்து காருக்குள் சோர்ந்து சரிந்து அழுது கொண்டே பயணிக்கையில்... முதல் முறை விஷயம் தெரிந்து வீட்டுக்கு வருகையில்... பாதி வழியிலேயே.... நடுக்கம் கூடி.. துக்கம் தாளாமல் ஒரு கட்டத்தில்...... வண்டியை நிறுத்த சொல்லி.....வெளியே தள்ளாடியபடியே வேகமாய் இறங்கி........ என்ன செய்வதென்று தெரியாமல் அழுவதற்கு சொல்லற்று குனிந்து நொறுங்கும் போது......... அந்த சாலையோரத்தில் நாய் ஒன்று நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கும்... எந்த சலனமும் அற்று அவரவர் அவரவர் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பர். ஒற்றை மனிதனின் துக்கம் பெரும் கூச்சலெடுத்த மௌனமாய் விசும்பிக் கொண்டிருக்கும். மேட்ரிமோனியில்... பார்த்து கல்யாணத்துக்கு ஓகே ஆன "தேன்மிட்டாய்" தேன்மொழி கூட "கட்டி வந்தவருக்கு கட்டித்தர மாட்டார்கள்" என்று வாட்சப்பி விட்டு உறவை முறித்துக் கொள்தலும் சேர்ந்து விட....... நாயின் அருகே கைவிடப் பட்ட மனிதனாக அமர்ந்து அழுகையில்.... நாம் நொறுங்கிப் போகிறோம். பலபோது வாழ்வின் மீதான நம்பிக்கை இப்படிப்பட்ட வளைவுகளில் தான் நொறுங்கிப் போகின்றன.

அவனுக்காக மருத்துவமனைக்கு அவள் வருவதும்.. நர்ஸ் மூலமாக அவனுக்கு நம்பிக்கை விதைப்பதும்....அவளாகவே அவன் உலகம் சுருண்டு பின் மீண்டும் அவளுக்காகவே விரியும் போது அப்பாடா என்று இருந்தது. இறுதியில் அவன் படுத்திருக்கும் கட்டிலில் அன்போடு ஆதரவோடு அவளும் சேர்ந்து படுத்துக் கொண்டு 'நான் இருக்கேன்....... உனக்கு ஒன்னும் ஆகாது' என்று தன் காதலை அவன் கையோடு பிணைக்கையில்... கடவுளர்களாக அவர்களை சுற்ற ஆரம்பிக்கிறது அன்பின் வெளிப்பாடு.

அத்தியாயம் மூன்று - 60 வயதுக்கு மேல்.. ஒரு ஜோடி.

மனைவியை இழந்த நவநீதன். கல்யாணமே செய்து கொள்ளாத யசோதா.

மாஸ்டர் செக் அப்புக்கு சென்ற போது அறிமுகம். பேசி பழகி நட்பாகி... ஆமை முட்டைகளை காக்கும் பொருட்டு ஒரு வாலண்ட்டரி கேம்ப். அதில் அவரையும் வர சொல்லி.. அந்த இரவு அவர்கள் பேசிக் கொள்ளும் பிளாசிபிகள் 60 வருட வாழ்வின் முடிச்சுகளில் உதிரும் நட்சத்திரங்கள். ஒரு கட்டத்தில்... விளையாட்டாகவே தன் காதலை வெளிப்படுத்தி விடுகிறார் நவநீதன். யசோதா கோபித்துக் கொண்டு கிளம்பி விடுகிறார். இஞ்சிட்டீ வித் டிஃ க்னிட்டி என்று அத்தனை களேபரத்திலும் டீ வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்ய முயற்சிக்கும் நவநீதனுக்கு அது தான் அவரின் இயல்பு. எல்லாவற்றையும் சிரித்துக் கொண்டே..... உள்ளே இருக்கும் முரண்களைக் களைந்து கொண்டே அதன் மூலம் தன்னைக் கூட கலாய்த்துக் கொண்டே அதன் வழியே தீரா தனிமையை உணர்ந்து போக்கிக் கொள்ள முயற்சிக்கும் மனிதர். மிக அற்புதமான அறிவாளித்தனம் நிறைந்த அமைதி கொள்ளும்... ஆன்மாவாக யசோதா. பேச்சு.. பார்வை....புரிதல்.. சமூக அக்கறை.. என்று மிக மிக நிதானமான ஒரு வாழ்வை வாழ்ந்து வருபவர். நவநாதனுக்கு காதல் இழையோட ஆரம்பிக்கிறது. இங்கே காதல் என்றால்.. கருணை. கொடுக்கும் அதே நேரம் தனக்கும் வேண்டும் என்கிற கருணை.

ஒருவரையொருவர் பார்க்க முடியாத சூழல். யசோதரா கீழே விழுந்து அறைக்குள் முடங்கி போகிறார். நவநீதன் அவரைத் தேடிக் கொண்டேயிருக்கிறார். ஒரு கட்டத்தில் தேவதூதர்களான ஆட்டோ டிரைவர் மூலமாக மீண்டும் சந்திக்கிறார்கள்.

மூப்பின் தவிப்பு........நரையின் தாழ்வுமனப் பான்மை.... மற்றவர்களுக்கு நாம் பொருட்டாக இருப்பதில்லை போன்ற மனக்குமுறல்கள் என்று இருவருக்கும் பொதுவான தனிமை...... இடைவெளி குறைக்க விரும்புகிறது. கை பிடித்து நடக்க இன்னொரு கை தேவைப்படுகிறது.

ஆம்... வயதானவர்களை நாம் எங்கே கண்டு கொள்கிறோம். "பெருசு......பேசாம போய் டிவி பாரு.....உனக்கு ஒன்னும் தெரியாது" போன்ற பாவனையில் தானே அவர்களைக் கடந்து செல்கிறோம். தாத்தாவுக்கும் பாட்டிக்கும்........ அதுவும் துணை இழந்த தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பேசுபொருள் என்னவாக இருக்கும்.... காணும் காட்சி என்னவாக இருக்கும் என்று எப்போதாவது நின்று நிதானித்து யோசித்திருக்கிறோமோ. கேட்டால்... இது ஃபாஸ்ட்டான உலகம் என்று சப்பைக் கட்டு கட்டுவோம். உண்மையில் நம்மிடம் வெற்றிடம் கூட இல்லாத அளவுக்கு குப்பைகள் நிறைந்திருக்கின்றன. அதன் வாசம் நம்மை சுற்றிக் கொண்டிருப்பதால்......நம்மால் அவர்களுக்கு பூங்கொத்து தர முடிவதில்லை.

"கூட இரு யசோதா.. எல்லாமே மறந்து போகுது....... என் நினைவா நீ இரு.." போன்ற மிக அற்புதமான வசனங்களால் நவநீதன் தன் காதலை மிக அழுத்தமாகவே சொல்லி விடுகிறார். மிக அழகாக செதுக்கப்பட்டிருக்கும்.. காட்சி மொழி கூட.

காதலை உணர்ந்து.....தனக்கும் துணை வேண்டும் என்ற உண்மை புரிந்து..... ப்ராக்டிகலாக தன்னை அனலைஸ் செய்து..."இப்பவே என்னை கூட்டிட்டு போ" என்று யசோதா சொல்கையில்.. காதலுக்கு ஏது வயது... வெட்கத்துக்கு ஏது காலம்....என்று அந்த சாப்டரை மன நிறைவோடு நாம் கடக்கிறோம். 

அத்தியாயம் நான்கு - கடைசி அத்தியாயம்

மூன்று குழந்தைகளோடு நடுத்தர வர்க்கத்தில் வாழும் கணவன் மனைவிக்குமிடையேயான காதலின் வறுமை பற்றி பேசுகிறது. கணவன் நல்லவன் தான். ஆனால் அவனிடம் பேச்சு குறைந்து விட்டது. தன் மீதான கவனம் இல்லாமல் போய் விட்டது. அதன் தொடர்ச்சி.. கோபத்தில்... முனங்களில்.... வெறுப்பில்... ஆற்றாமையில்... தவிக்கிறாள் மனைவி. தூங்குவதற்கு முன் தூக்க மாத்திரையைப் போன்ற செக்ஸ் அவளுக்கு விருப்பமில்லை. அவளுக்கு காதலோடு கூடிய செக்ஸ் தேவைப்படுகிறது. அது என்ன காதலோடு கூடிய செக்ஸ் என்றால் அது காதலித்தவர்களுக்கு புரியும். காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு புரியும்.

அவர்களுக்குள் நடக்கும் பேச்சு வார்த்தை...... சண்டை எல்லாம் ஏதோ பக்கத்து வீட்டை ஜன்னல் வழியே பார்பபது போல.. கைதேர்ந்தே நடிப்பு. கலையான உரையாடல். மிக கச்சிதமான இயக்கம்.

புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே "தூக்கம் வரல.. கொஞ்சம் உள்ள வரயா.. டையர்டா இருந்தா வேண்டாம்" என்று சொல்லி விட்டு உள் அறைக்குள் செல்லும் காட்சியில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் நமக்கு புரிந்து விடுகிறது. அத்தனை அழுத்தத்தில் அவன் இந்த வாழ்வென்னும் போர்க்களத்தில் ஒவ்வொரு நாளையும் எதிர் கொள்கிறான். எப்போதும் ஏதோ சிந்தனை.. இறுக்கம் கொண்ட உடல் மொழி.

பேச்சுகளற்ற வாழ்வின் பிற்பாதிக்கு யார் பொறுப்பு.

இன்றைய அதிவேக துரித வாழ்வில்.. கணவனுக்கும் மனைவிக்குமான ஒரே உரையாடல்....தூக்கம் வராத இரவில் விளக்கில்லாமல்... உடலும் உடலும் கொண்ட மொழி மட்டும் தான். இந்த அத்தியாயம் சொல்ல வருவது பேச்சின் வழியே... புரிந்து கொள்தலையும்..... காது கொடுத்து கேட்பதின் வழியே... மனைவிக்கு கொடுக்கும் மரியாதையை பற்றியும்தான். மனைவி பேசிக் கொண்டிருக்கும் போது கண்டும் காணாமல் ரிமோட்டில் சேனல் மாற்றிக் கொண்டிருக்கும் கணவர்களுக்கானது இவ்வத்தியாயம். கணவன் பேசிக் கொண்டிருக்கும் போது கண்டும் கொள்ளாமல் சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் மனைவிகளுக்கானது இவ்வத்தியாயம்.

40 வயதுக்கு மேல் சாலையில் எத்தனை ஜோடிகள் கை பிடித்து கொண்டு நடக்கிறார்கள். அது தான்.....அந்தப்புள்ளியில் இருந்து தான் இந்த அத்தியாயத்தின் விதை விழுகிறது. சமுத்திரக்கனி ஒரு கட்டத்தில்... புரிந்து கொள்கிறார். மனைவிகளை சற்று தூரத்தில் இருந்து பாருங்கள்.. அருகாமையிலிருக்கையில் அற்புதங்கள் நிகழ்வதில்லை...என்பதை உணரும் போது அவர்களின் காதல் மீண்டும் உயிர்த்துக் கொள்கிறது.

சில்லுக்கருப்பட்டி

படம் முழுக்க ஆங்காங்கே சில்லுக்கருப்பட்டி போல வசனங்கள். ஆழமாக சிந்தனையைக் கிளறுவதை மறுக்க முடியாது. ஒரே ஒரு சொல்லுக்கு காத்திருக்கும் கவிஞனுக்குத்தான் தெரியும்.... வாக்கியத்தின் அச்சை வார்த்தெடுக்கும் வலி. கவிஞனை சுமந்தலைந்தால் தான் இந்த மாதிரி காட்சிகளை உருவாக்க முடியும். மணிகண்டன் என்ற அற்புதமான நடிகனை தமிழ் சினிமா பெற்று இருக்கிறது. சமுத்திரக்கனி வழக்கம் போல தன்னை மிகச் சிறந்த நடிகனான முன்னிறுத்திக் கொண்டேயிருக்கிறார். சுனைனா.... நளினத்தில்...... நடுக்கத்தில்...... நடுத்தரத்தில்..... நம்பும்படியான கதாபத்திரம். மணிகண்டனுக்கு ஜோடியாக வரும் மூக்குத்திக்காரி மாதிரி ஒருத்தி இருந்தால் எந்த கேன்சரையும் வெல்லலாம். லீலா சாம்சனை பற்றி சொல்வதற்கெல்லாம் கவிதை பத்தாது. காவியம் படைக்கலாம். குரல் வழியே.... குணம் வழியக் கண்டேன். பெரியவர் ஸ்ரீராம்.... நல்ல கண்டுபிடிப்பு. சில இடத்தில்... அமெச்சூர் ஆக்டிங். குப்பை பொறுக்கும் சிறுவர்கள். அவர்கள் கூட வரும் அந்த கூந்தல் அழகி. கதாபாத்திரங்களில் தங்களை உருக்கி கொட்டியிருக்கிறார்கள்.

அத்தனை பெரிய குப்பை மேட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் குப்பை பொறுக்கும் சிறுவர்களையும் சேர்த்து தான் நாம் இந்தியா என்கிறோம். ஒரு பக்கம் மட்டும் வளந்தா அது வீக்கம்... எல்லா பக்கமும் வளந்தா தான் அது வளர்ச்சி.

இந்திய வறுமை.... அச்சுறுத்துகிறது.

மெல்ல நகரும் காட்சிகள்... நிழலுக்கு முத்தமிடும் காட்சி... காதலன் காதலியைத் தூக்கிக் கொண்டே செல்லும் காட்சி..... வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போதே மனைவிக்கு போன் செய்து ஐ லவ் யூ..... ஐ லவ் யூ..... ஐ லவ் யூ என்று கத்தும் காட்சி..... சினிமாவுக்கே உண்டான கிளிஷேக்கள். தவிர்த்திருக்கலாம்.

மற்றபடி... நான்கு அத்தியாயம் மூலம் நான்கு பக்க சமூக இடைவெளியை இணைந்திருப்பது கண்டிப்பாக பாராட்டுதலுக்குரியது. இந்த மானுட குலம் அன்பால் கட்டப் பட்ட மணல்வீடு. சாவென்னும் அலை உடைக்கும் முன் வாழ்ந்து விட வேண்டும். அவ்வளவே...

- கவிஜி

Pin It