ஃபேஸ்புக்‍கில் ஒரு பதிவைப் பார்த்தேன். குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக உதவி கேட்டுச் சென்ற உதவி இயக்குநர் (கண்ணுபடப் போகுதையா படத்தில் பணியாற்றியவர்) ஒருவரை விஜயகாந்த் எப்படி நடத்தினார், அஜித் எப்படி நடத்தினார் என்பது பற்றிய பதிவு அது. விஜயகாந்த் திட்டி அனுப்பியிருக்கிறார்; அஜித் தேவையான பணத்தைக் கொடுத்து உதவியிருக்கிறார்.

அந்தப் பதிவு ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாகவும், இந்த செய்தியை தமிழ்நாட்டினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் இதனைப் பகிர்கிறேன்.

திரைப்படத் தொழிலாளர்கள் உரிமை காப்பதற்காக பெப்சி விஜயன் தலைமையில் திரைப்படத் தொழிலாளர் போராட்டம் நடந்த நேரம்.

நான் அப்போது எமது தொழிற்சங்க மையத்தின் (AICCTU) பிரதிநிதியாக திரைப்படத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஜெமினி, விஜயா உள்ளிட்ட லேப் தொழிற் சங்கங்கள் எமது தலைமையில் இயங்கிய காலம் அது. முதன் முறையாக பெப்சிக்கு ஆதரவாக, திரைப்படத் தொழிலின் தீர்மானகரமான சக்தியான லேப் தொழிலாளர்களை, எமது சங்கம் பெப்சிக்கு ஆதரவாகச் செயல்பட வைத்தது.

அப்போது அஜித் இளைய கதாநாயகன். போராட்டத்தின் கடுமையில் தொழிலாளி ஒருவர், தமிழ்நாட்டுக்கே உரிய முறையில் தீக்குளித்துவிட்டார். அவர் உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றபோது அந்த ஊர்வலத்தில் தனது எதிர்காலத்தையும் பணயம் வைத்து அஜித் கலந்துகொண்டார். கொள்ளிச் சட்டியை அவர் தூக்கிச் சென்றார் என்று என்னிடம் தொழிலாளர்கள் சொன்னார்கள்.

‘இதோ ஒரு மனிதன்’ என்று என் மனம் சொன்னது. அந்த மனிதன் இன்றும் மனிதனாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய படங்கள் என்னைக் கவரவில்லை. திரைப்பட வணிகத்தில் சிக்கிக்கொண்டார் அஜித் என்ற நடிகர். என்றாலும் அஜித் என்ற மனிதனைப் பாராட்டுகிறேன்.

இந்த சமயத்தில் அப்போராட்டத்துடன் தொடர்புடைய இன்னொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது. வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எமது சங்கமான AICCTUவின் அன்றைய மாநிலத் தலைவர் குமாரசாமியும் (இன்று எமது கட்சியின் அரிசியல் தலைமைக்குழு உறுப்பினர்) நானும் ஜெமினி, பிரசாத், விஜயா லேப் தொழிலாளர்களும் கலந்துகொண்டோம். அப்போது போராட்டத்தை வாழ்த்த வந்திருந்த நடிகர் கமல் என் கைகளைப் பிடித்துக்கொண்டு நன்றி சொன்னார். தொழிலாளர் உரிமையைக் காக்க எம்போன்றாரால் முடியும், விடாது தொடருங்கள் என்றார். அதில் பொய்யிருந்ததாகப் படவில்லை. மற்றொரு மனிதனைச் சந்தித்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.

அப்படியே இன்னொன்றையும் பதிவு செய்ய வேண்டும். நடிகர் சங்கத்தின் திரைப்பட அரங்கின் புரெஜக்டர் ஆப்பரேட்டரை அன்றைய நடிகர் சங்கத் தலைவர் ராதாரவி வேலை நீக்கம் செய்தார்.

தப்பு. சாவியை வாங்கிக்கொண்டு, 'போடா வெளியே’ என்று விரட்டிவிட்டார். தொழிலாளர் சட்டப்படி, அப்படி செய்ய முடியாது. மாறாக, அவருக்குப் பணி ஓய்வு கொடுத்திருக்க வேண்டும். அத்தனை வயது அந்தத் தொழிலாளிக்கு. யாருமற்ற அனாதை அந்த முதியவர்.

அவரின் வழக்கை எடுத்து நடத்தினேன். ACL நிலையில் எங்களுக்கு சார்பாக பரிந்துரை செய்யப்பட்டது. வழக்கு, தொழிலாளார் நீதிமன்றம் சென்றது. அந்த சமயம் விஜயகாந்த் நடிகர் சங்க பொறுப்புக்கு வந்தார். அந்த ஆப்பரேட்டர் என்னிடம் ஓடி வந்தார். தலைவர் வி.கா.வைப் பார்த்தால் பிரச்சனை தீரும் என்றார். நான் ‘அந்த நபரை நான் பார்க்க முடியாது. அதற்கான தகுதி அவருக்கில்லை’, என்று மறுத்தேன். ஆனபோதும், அந்தத் தொழிலாளிக்காக, ஜெமினி லேப் தொழிற்சங்க செயலர் சிங்கை வி.கா.விடம் அனுப்பி பேச வைத்தேன். நடிகர் சங்க நீச்சல் குளம் கட்டுவதால், சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி இருப்பதால், பிறகு வந்து பார்க்கச் சொன்னாராம் வி.கா. என்ன ஓர் அற்பன் அந்த ஆள் பாருங்கள்.

அப்புறம் அந்த பெரியவர் பலமுறை முயற்சித்தும் எதுவும் நடக்கவில்லை. சிலபல காரணங்களுக்காக நான் சென்னையை விட்டு விலகிவிட்டேன். அந்தப் பெரியவர் வறுமையில் இறந்திருப்பார் என்று நினைக்கிறேன். அஜித் மனிதன்; வி.கா. மனிதன் இல்லை என்று என் அனுபவம் சொல்கிறது. ஆனால் வி.கா. சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர்!

என்னவென்று சொல்ல?

- சி.மதிவாணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It