தாராளர் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியதாக நான் நினைக்கும் சமஸ் இன்றைய (15-05-17) தமிழ் இந்து கட்டுரையின் மூலம் அதற்கு அவர் என்ன பொருள் கொள்கிறார் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதைக் கடைசியில் பேசுவோம்.

நக்சல்பாரியின் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சமஸ் போன்றவர்களையும் கூட பேச வைத்திருப்பதும் நக்சல்பாரியின் வெற்றிதான். ஆனால், 'இந்தியா முழுமைக்கும் கூட்டினால் கூடி சில லட்சம் பேர்கள்'' இருக்கக் கூடியது என்று சமஸ் கருதும் ஒரு 50 ஆண்டு பழமையான இயக்கத்தைப் பற்றிய அவரின் அவதூறுகளை எந்தத் தயக்கமும் இன்றி அள்ளி விடுகிறார்.

''சிறை பிடிக்கப்பட்ட சாரு இறந்துபோனார்'' என்று கட்டுரையின் அறிமுகப் பகுதியில் எழுதுகிறார் சமஸ். பொய். பொய்யென்று நான் சொல்லவில்லை. 3 ஜூலை 2016 தேதியிட்ட தி வீக் பத்திரிகையின் செய்திக் கட்டுரை சொல்கிறது.

சாரு இறந்தாரா? கொல்லப்பட்டாரா?

+++++++++++++++++++++++++++++++++++++

சாருவைச் சிறையில் சந்தித்த அவரின் மகள் அனிதா இப்படி தன் நினைவைப் பகிர்ந்துகொண்டார்... ''நான் ஒரு மருத்துவ மாணவி என்பதால் அவருக்கு இன்கேலர் கொடுக்க வேண்டும் அல்லது ஆக்சிஜன் ஏற்ற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவருக்கு அப்படியான உதவி ஏதும் கொடுக்கப்படவில்லை. நான் இப்படி சொல்வதற்கு வருந்துகிறேன். அவரின் உயிரைக் காக்க தர வேண்டிய மருந்துகளைத் தராமல் அவரைக் கொன்று கொண்டிருந்தனர்''.

சமஸ் சொல்வது போல சாரு இறந்துபோகவில்லை. இந்த நாட்டு அரசாங்கத்தால் மருந்து கூட அளிக்காமல் கொல்லப்பட்டார். இறந்துபோனார் என்ற வார்த்தைகளில் சமஸின் அறியாமை இருக்கிறது... அல்லது விஷம் இருக்கிறது.

வன்முறை என்றால் என்ன?

++++++++++++++++++++++++++++++++

நோயுற்ற ஒரு மனிதரை, வயதான ஒருவரை, 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்திய அரசியலின் பேசு பொருளான இயக்கத்தைக் கட்டமைத்தவரை கொன்ற அரச வன்முறையைக் கண்டுகொள்ளாமல், 'இறந்துபோனார்' என்று கடந்துபோகும் சமஸ் நக்சல் இயக்கம் என்பதே வன்முறை இயக்கம் என்று பூச்சாண்டி காட்டுகிறார்.

காந்தி, 'சோசலிசம் பேசுபவர்கள் வெளிப்படையாகவே வன்முறையில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டதை சமஸ் வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார்.

உண்மைதான். பிளவுபட்ட சமூகத்தில் வன்முறை உள்ளார்ந்த ஒன்றாக இருக்கிறது. எளியோரை வலியோர்கள் துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள். பெண்களை ஆண்கள் ஒடுக்குகிறார்கள். அரசு தன்னைக் காத்துக்கொள்வதற்காக வன்முறையை ஏவுகிறது. அரசியல் கட்சிகள் தங்கள் எதிரிகள் மீது வன்முறை தொடுக்கின்றனர். ஏன், திமுக- அஇஅதிமுக போன்ற கட்சிகள் கட்சிக்குள் உள்ள தங்கள் எதிரிகளை வெட்டிக்கொல்வதையும் பார்க்கிறோம்.

இப்படியாக சமூகத்திற்குள் உள்ள அனைத்து பிரிவுகளும்- அமைப்புகளும், அரசும் வன்முறையைப் பயன்படுத்துகின்றன. ஆனால், 1967ல் உதித்த நக்சல்பாரி இயக்கம் நாடாளுமன்ற பாதையின் மீது இருந்த மாயையை விரட்டியது. வன்முறை - பயங்கரவாத அரசைத் தூக்கியெறிவது வன்முறையின் மூலமே நடக்கும் என்ற உண்மையை உரத்துச் சொன்னது. நாடாளுமன்ற பாதைதான் ஒரே பாதை என்ற அன்றைய இருளை ஒழிக்க உரத்து குரல் கொடுத்தது.

நக்சல்பாரி தலைவர்கள் கொன்று குவிக்கப்பட்ட பின்னர், புத்துயிர் பெற்ற எம் எல் கட்சி, ஆயுதப் போராட்டம் உட்பட, நாடாளுமன்றப் போராட்டம் வரையிலான அனைத்து போராட்ட முறைகளையும் பயன்படுத்தி வளர்ந்தது. இன்று சிபிஐ, சிபிஐ எம் கட்சிகளுக்கு அடுத்த, மாறுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியாக வளர்ந்து நிற்கிறது.

இந்த முன்னேற்றத்தை மறுக்கும் வகையில் 'போலி கம்யூனிஸ்டுகள்' என்ற பழைய உரையாடலை இன்று முன்னிறுத்தி இதற்கெல்லாம் காரணம், சகிப்புத் தன்மை இன்மைதான் (அதாவது உள்ளார்ந்த வன்முறைதான்) என்று பிரச்சாரம் செய்து கம்யூனிஸ்டுகள் மத்தியிலான உரையாடலை குழப்பி விடப் பார்க்கிறார்.

பல்வேறு இடதுசாரிக் குழுக்கள் மத்தியிலான முரண்பாடுகளை, போராட்டங்களைப் பற்றி 'விரிவாக'ப் பேசும் சமஸ், இப்படியான 'சகிப்புத் தன்மை' இன்மைதான் வலதுசாரிக் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் அவர்கள் தாக்குவதற்கான மனநிலை என்று கண்டுபிடித்து முன்னேறிச் செல்கிறார். பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வெளிவந்து 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'- 'ஏழையின் சிரிப்பில் இறைவன்' என்று பின்வாங்கிய திராவிடக் கட்சித் தலைவர்களைத் தாக்காமல் வேறு என்ன செய்வார்களாம்?

ஆனால், சாரமாக சமஸ் சொல்வது இதுதான்... நக்சல்பாரி இயக்கம் என்பது வன்முறை இயக்கம். சகிப்புத் தன்மை அற்ற இயக்கம். அதன் காரணமாக, அது பிரதான கம்யூனிஸ்டு கட்சிகளையும் கூட பலவீனப்படுத்திவிட்டது. எதிர் தரப்பாரை (அதாவது பிஜேபி வரையிலானவர்களை) பலப்படுத்திவிட்டது.

கம்யூனிஸ்டு இயக்கம் இன்று பலவீனமானதாக இருப்பதற்கு நக்சல்பாரிகளின் சகிப்புத்தன்மை இன்மை காரணம் என்று பழி சுமத்துகிறார்.

ஆனால், சிபிஐ, சிபிஐ கட்சிகளும் பிற இடதுசாரிக் கட்சிகளும், நக்சல்பாரியில் உருவான சிபிஐ எம்எல் கட்சியோடு கரம் கோர்த்து இந்தியாவில் ஓர் வலுவான சக்தியாக வடிவெடுக்கும் கோணத்தில், தங்களுடைய மாறுபாடுகளுக்கு இடையிலும் சேர்ந்து செயல்படத் துவங்கியுள்ளனர். பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் அணியாகவும் நின்று இன்றைய கட்சிகளுக்கான மக்களின் மாற்று கம்யூனிஸ்டு இயக்கம்தான் என்பதை நிறுவுகிறார்கள் என்ற உண்மையை பத்திரிகையாளர் சமஸ் அறியாது இருப்பாரா என்ன?

ஆனால், சமஸ் சொல்வதற்கு மாறாக, உண்மை- யதார்த்தம் - இன்று இந்தியாவில் வேறு மாதிரியாக இருக்கிறது. பண்டைய பிற்போக்கின் அடிப்படையிலான முதலாளியத்திற்கும் முன்னேற்றம் வேண்டும் மக்களின் விருப்பத்திற்கும் இடையிலான போராட்டமாக இருக்கிறது.

மார்க்சியம் சில கிறுக்கர்களின் விருப்பமா? அரசியலில் மதம் முற்போக்கா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மார்க்சியம் என்பது அறிவியல். சமூகத்தின் இயக்க விதிகளை பொருளீய கோணத்தில் விவரிக்கிறது. வர்க்க மற்ற சமுதாயத்தில் இருந்து வர்க்க சமூகமாகி, வர்க்கப் போராட்டத்தின் ஊடே, மீண்டும் மிக முன்னேறிய வர்க்க மற்ற சமுதாயமாக மாறுவதன் போக்கையும் அதற்கான நுணுக்கமான விதிகளையும் விவரிக்கிறது. உயிரற்ற பொருளிலிருந்து உயிர் உண்டாகி, உயிர்கள் வளர்ச்சி- பரிணாம மாற்றம் கண்டது போன்ற அடிப்படை சமூக அறிவியல் விதிகளை விளக்கிச் சொல்கிறது. அதனால்தான் ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்கள் மார்க்ஸியர்கள் ஆனார்கள்.

அறிவியல் விதிகள் தவறு செய்வதில்லை. ஆனால், அவற்றைக் கையாளும் மனிதர்கள் தவறு செய்கிறார்கள். அதுபோல, மார்க்சியத்தைக் கற்றுக்கொண்ட கம்யூனிஸ்டுகளும் தவறு செய்கின்றனர். அவற்றின் காரணமாக, மோதிக் கொள்கின்றனர். கொடூரமான வார்த்தைகளையும் பயன்படுத்தி சண்டையிடுகின்றனர். ஆனால், கம்யூனிஸ்டு கட்சியும் கூட இயங்கியல் விதிக்கு உட்பட்டதுதான். அது வானத்திலிருந்து வரவில்லை. மக்களே அதனை உருவாக்கினர். கம்யூனிஸ்டு கட்சி தவறு செய்தால், சரியான கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்கும் வேலையை சமூகமே செய்து முடிக்கும்.

இதற்கு நேர்மாறாக, இந்து பாசிசம் செயல்படுகிறது. பண்டைய காலத்து மதிப்பீடுகளின் அடிப்படையில்,வர்ணாசிரம தத்துவத்தின் கீழ், முதலாளிய சமூகத்துக்கு சேவை செய்ய அது முயற்சிக்கிறது. மக்களின் அறிவின் மேலல்லாமல் அறிவீனத்தின் மீது செயல்படுகிறது. பொய்களை அடுக்குகிறது. பண்டைய மாயைகளை நவீன தொழில் நுட்பத்தில் மறு உற்பத்தி செய்கிறது.

வரலாறு மக்களால் உருவாக்கப்படுகிறதா? அல்லது, பிற்போக்காளர்களின் விருப்பத்தால், பொய்களால்- மாயைகளால், உருவாக்கப்படுகிறதா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

முன்னேயா? பின் நோக்கியா? என்று இந்தியா தத்தளிக்கும் சூழலில், இந்து பாசிசம், முன்னே கைகாட்டிக் கொண்டு பின்னோக்கி மக்களை இழுக்கும் வேலையை அத்தனை தகிடுதத்தங்களையும் பயன்படுத்தி செய்கிறது.

வேலை, கூலி, வாழ்க்கை என்ற மக்களின் ஸ்தூலமான அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி, மாறும் காலத்துடன் போட்டி போட்டு முன்னேற கம்யூனிஸ்டுகள் முயற்சி எடுக்கிறார்கள். அதற்காக, வலது சாரி கட்சிகளுடனும், தமக்குள்ளும் ஓயாது போராடுகின்றனர்.

வரலாறு எவ்வாறு முன்செல்லும் என்பதை காலம் காட்டும்.

ஆனால், பிற்போக்குப் பாசிசத்தின் சகிப்புத் தன்மை இன்மையையும், முன்னே செல்லத் துடிக்கும் கம்யூனிஸ்டுகளின் சகிப்புத் தன்மையின்மையும் சமஸ் ஒரே தட்டில் நிறுத்துகிறார். அதாவது, தொழில் நிறுவனக் கொள்ளைக்குத் துணை போகும், ஏகாதிபத்தியங்களுக்கு தன் சொந்த நாட்டு மக்களைப் பலியாக்கும் காவிகளையும், உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக, தாய் நாட்டைக் காக்கும் கம்யூனிஸ்டுகளையும் ஒரே தட்டில் நிறுத்துகிறார்.

சரி. சமஸ் சொல்லும் நடுநிலை என்ன? காந்தீயம் என்பதை அவரின் பல கட்டுரைகள் காட்டுகின்றன. பண்டைய மத வாதத்தை நவீன கால நிலைமைகளின் நிலைநிறுத்த முயன்றவர் காந்தி. மதங்களுக்கு அரசியலில் இடம் இல்லை என்ற நவீனத்திற்குப் பதிலாக ரகுபதி ராகவ ராஜாராம் ! / பதீத பாவன சீதாராம் !/ ... /ஈஸ்வர அல்லா தேரே நாம் !/ சப்கோ சன்மதி தே பகவான் ! என்ற மத சமரசத்தைத்தான் சமஸ் சகிப்புத் தன்மை என்கிறார்.

அதாவது 'பண்டைய காலத்தில் சமரச வாழ்க்கை' நடத்த அழைக்கும் 'முற்போக்கா'ன பிற்போக்கு தாராளராக சமஸ் இருக்கிறார்.

இவர் போன்றவர்கள் உண்மையின் கூடுதல் பிரச்சனை. காவியை அம்பலப்படுத்தும் இவர் போன்றவர்கள், காவியை பிரபலப்படுத்தவும் காவியை ஒழிப்பதற்கு அணி திரள்பவர்களைப் பிளவுபடுத்தவும் செய்வார்கள்.

சமஸ் சுட்டிக்காட்டும் அற்பக் குறைகளை கம்யூனிஸ்டுகள் களையும்போது, சமஸ்களின் தத்துவ வித்தகம் முடிவுக்கு வரும்.