நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் - அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும். இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த இரு இதழ்களின் தொடர்ச்சியாக இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.

அ.சா.10: கல்யாணி (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :

நான் கன்மாயபட்டி கிராமத்தில் வசிக்கிறேன். நான் தாழ்த்தப்பட்ட பறையர் இனத்தைச் சேர்ந்தவர். ஆஜர் எதிரிகளை எனக்கு தெரியும். அவர்கள் மேலவளவு கிராமத்தையும் பக்கத்து கிராமத்தையும் சேர்ந்தவர்கள். 30.6.97ஆம் தேதியன்று நான் மேலூரிலிருந்து சைக்கிளில் எங்கள் ஊருக்கு வந்து கொண்டு இருந்தேன். நானும் மாயவனும் (அ.சா.7) ஒரே சைக்கிளில் வந்து கொண்டு இருந்தோம். அக்ரகாரம் இறக்கத்தில் நாங்கள் வந்து கொண்டு இருந்தபோது, கே.என்.ஆர். பஸ் எங்களை முந்திக் கொண்டு சென்றது. அப்போது பகல் மதியம் 3.15 மணி இருக்கும். அந்த பஸ் பழைய கள்ளுக்கடை மேட்டில் போய் நின்றது. நாங்கள் அங்கே உள்ள வாய்க்காலைத் தாண்டி வந்து கொண்டு இருந்தோம். ஒரே சத்தமும் கூச்சலும் கேட்டது. நாங்கள் சைக்கிளை விட்டு இறங்கி விட்டோம். பூபதியை எதிரி செல்வம் கத்தியால் குத்தினார். பஸ்ஸின் பின்படிக்கட்டு அருகில் வைத்து குத்தினார்.

மேலும் பூபதியை சின்ன ஒடுங்கான் என்ற எதிரி, அவருடைய இடது பக்கம் கழுத்தை சேர்த்து வெட்டினார். அரிவாளால் வெட்டினார். எதிரி சொக்கநாதன் பூபதி தலையில் அரிவாளால் வெட்டினார். முருகேசனை எதிரி அழகு கத்தியால் சரமாரியாக வெட்டினார். எதிரி சத்தியமூர்த்தி முருகேசனின் கைகளில் அரிவாளினால் வெட்டினார். அப்போது அங்கிருந்த கும்பல் எங்களைப் பார்த்து கிட்டே வந்தால், உங்களையும் வெட்டிவிடுவோம் என்று மிரட்டினார்கள். கும்பலில் யார் அவ்வாறு எங்களை மிரட்டினார்கள் என்று குறிப்பாக, என்னால் சொல்ல முடியாது. நான் பயந்து கொண்டு வயல்காடு வழியாகப் பதுங்கிப் பதுங்கி, மேலவளவு காலனியை போய்ச் சேர்ந்தேன். பிறகு அன்று இரவு 10 மணியளவில் நானும் மற்றும் கும்பலாக ஜனங்களும் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தோம். சம்பவ இடத்தில் ரோட்டில் 4 பிணங்களும் கிழக்கில் ஒரு பிணமும் மேற்கில் ஒரு பிணமும் கிடந்தது. சம்பவ இடத்தில் வைத்து போலிசார் என்னை விசாரித்தார்கள்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை

கண்மாய்ப்பட்டி கிராமம் மேலவளவு கிராமத்திலிருந்து 2 கி. மீட்டர் தூரத்தில் உள்ளது. அ.சா.7 மாயவன் எனக்கு உறவினர். மேலவளவு கிராமத்தில் மேற்படி மாயவனைத் தவிர வேறு உறவினர்களும் உள்ளார்கள். ஆஜர் எதிரிகள் எல்லோரையும் எனக்கு நேரடியாகத் தெரியாது. பிரேதம் கிடந்த இடத்தில் என்னை ஒரு அதிகாரி ஒரே முறைதான் விசாரித்தார்கள். போலிஸ் துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 50 பேர்கள் இருந்தார்கள். அப்போது வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் வந்திருந்தார்கள். அந்த இடத்திலிருந்து பிணங்களை எடுத்துச் சென்றவரை நான் அங்கு இருந்தேன். பிணத்தை எடுத்துச் சென்ற போது மேலவளவைச் சேர்ந்த பலரும் நானும் மேலூருக்கு உடன் சென்றோம். மேலூர் காவல் நிலையத்திற்கு சென்றோம். சம்பவத்தின் போது எதிரிகள் எனக்கு தெரிந்தவரை (அம்பலக்காரர்கள்) யார் யார் ஆயுதங்கள் வைத்திருந்தனர் என்பது பற்றி போலிசார் அதிகாரி விசாரித்தார்.

எனக்கு தெரிந்த, நான் பார்த்த சம்பவத்தை அரிவாளால் வெட்டிய எதிரிகளின் பெயர்களை குறிப்பிட்டுச் சொன்னேன். அப்போது சொன்ன பெயர்களை இப்போது நான் சொல்லியுள்ளேன். நான் பார்த்தவரை, யார் யார் கையில் என்ன என்ன ஆயுதங்கள் இருந்தன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எதிரி சக்கரவர்த்தி, முருகேசனை தாக்க அரிவாளை பயன்படுத்தினார் என்று குறிப்பிட்டு, போலிசார் விசாரணையில் சொல்லவில்லை என்றால் சரியல்ல. எதிரி அழகு, முருகேசனை கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அப்படி அரிவாளை அவர் பயன்படுத்தியதாக போலிசார் விசாரணையில் நான் குறிப்பிட்டு கூறவில்லையென்று சொன்னால் சரியல்ல. போலிசார் விசாரணையில் எங்கள் சைக்கிளை கே.என்.ஆர். பஸ் முந்திக் கொண்டு சென்றதாக குறிப்பிட்டு சொல்லவில்லை என்று சொன்னால் சரியல்ல. 20 மீட்டர் தூரத்தில் தான் பஸ்ஸிலிருந்த ஆட்கள் ஓடுவதையும் கூச்சல் போட்டதையும் நான் பார்த்தேன். அந்த இடத்திலேயே சைக்கிளை நிறுத்திவிட்டோம். அப்படி நிறுத்திவிட்டு அங்கேயே நின்று சம்பவம் நடந்ததைப் பார்த்தேன்.

எங்கள் சைக்கிளை எடுத்துக் கொண்டு வயல்வழியாக போய்விட்டோம். வயல்வழியாக சென்று மீண்டும் வடக்கே கொஞ்ச தூரம் வந்து ரோட்டுக்கு வந்துவிட்டோம். அப்போது எங்கள் எதிரில் ஊருக்கு அருகில் மேலவளவு கிராமத்தைச் சேர்ந்த ஜனங்கள் வந்தார்கள் அவர்கள் எங்களை நிறுத்தி என்ன நடந்தது என்று கேட்டார்கள். ஆனால் என்னால் சொல்ல முடியவில்லை. நான் மேலவளவு காலனிக்கு சென்றுவிட்டேன். இரவு 9 மணிக்கு மேல் ஊர் ஜனங்கள் சம்பவ இடம் நோக்கி சென்றார்கள். அதன் பிறகு நானும் சென்றேன். அப்போது என்னுடன் முருகன், சின்னய்யா மற்றும் 10 பேர்கள் வந்தார்கள். எனக்கு முன்பாகவே அ.சா. மாயவன் சம்பவ இடத்திற்கு சென்று விட்டார். நாங்கள் சென்ற பிறகு சம்பவ இடத்தில் போலிசார் நிறைய பேர்கள் இருந்தார்கள். எனக்கு சம்பவம் பற்றி எதுவுமே தெரியாது என்றாலும், இந்த வழக்கிற்காக போலிசார் என்னை ஒரு சாட்சியமாக உட்புகுத்தியுள்ளார்கள் என்றால் அது சரியல்ல.

அ.சா. 11 கருப்பன் (இவர் பிறழ் சாட்சியாகக் கருதப்பட்டு, பின்னர் அரசுத் தரப்பு வழக்குரைஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்) : முதல் விசாரணை

நான் மேலவளவு காலனியில் வசிக்கிறேன். நான், தாழ்த்தப்பட்ட பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் திங்கட்கிழமை என் ஊரிலிருந்து எட்டி மங்களத்திலுள்ள என் உறவினர் வீட்டிற்குப் போயிருந்தேன். நான் அப்படி வீட்டிலிருந்து சென்றபோது, கள்ளுக்கடை மேட்டில் கே.என்.ஆர். பஸ் நின்று கொண்டு இருந்தது. அப்போது மணி சுமார் பகல் 3.15 இருக்கும். நான் கிட்டே நெருங்கிப் போன போது பஸ்ஸிலிருந்து ஆட்கள் இறங்கி சிதறி ஓடினார்கள். பஸ்ஸை சுற்றிலும் எங்கள் ஊரைச் சேர்ந்த அம்பலக்காரர் ஜாதிக்காரர்கள் இருந்தார்கள். கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்திருந்தார்கள். கிழக்கு திசையில் மூக்கன் ஓடி வந்தார். எதிரி அம்பலம், எதிரி களஞ்சியம், எதிரி மனோகரன், ஆகிய மூன்று பேரும் மூக்கனை அரிவாளால் வெட்டினார்கள். நான் பயந்து போய் ஒரு பனைமரத்துக்குப் பின்னால் நின்றேன். அப்போது மேற்படி 3 எதிரிகளும் மேலும் எதிரி அழகும் சேர்ந்து கிட்டே வந்தால் உன்னை வெட்டிவிடுவோம் என்று மிரட்டினார்கள். நான் பயந்து கொண்டு என் வீட்டிற்கு ஓடிவிட்டேன்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

நான் சம்பவத்தைப் பார்க்கவில்லை என்றும், நான் சம்பவ இடத்தில் இல்லையென்றும் போலிசார் என்னை ஒரு சாட்சியாக தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றால் சரியல்ல. போலிசார் என்னை விசாரிக்கவில்லை என்று சொன்னால் அது சரியல்ல. நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல.

அ.சா. 12 : காஞ்சிவனம் (சம்பவத்திற்கு முன் நடந்தவைகளை கூறும் சாட்சி) முதல் விசாரணை

நான் மேலவளவு காலனியில் குடியிருக்கிறேன். நான் தாழ்த்தப்பட்ட பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். மேலவளவு பஞ்சாயத்து ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதனால் கள்ளர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் எங்களிடம் யாரும் நிற்கக்கூடாது என்று சொன்னார்கள். அதன் பிறகு எங்கள் ஜாதிக்காரர்கள் கூட்டம் போட்டு தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்தோம். நானும் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நாமினேசன் தாக்கல் செய்தேன். முருகேசன் என்பவரும் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நாமினேசன் தாக்கல் செய்தார். அப்படி நாமினேசன் போட்டி முடிவு செய்த அன்றே என் வீடும், பாண்டியம்மாள் வீடும், சேவகமூர்த்தி வீடும் தீ வைக்கப்பட்டது. பிறகு தேர்தல் நடந்து முருகேசன் வெற்றி பெற்றார். பிறகு நானும் தலைவர் முருகேசனும் உப தலைவர் மூக்கனும், செல்லத்துரை என்பவரும், சேவகமூர்த்தி, பூபதி, ராஜா, பாண்டியம்மாள் எல்லோரும் மதுரை கலெக்டர் ஆபீசுக்கு தீப்பிடித்ததற்காக நஷ்டஈடு கேட்கவேண்டி சென்றோம். அப்படி சென்றது 30.6.97ஆம் தேதி ஆகும். அங்கு அ.சா.1 கிருஷ்ணனை பார்த்தோம். அன்று கலெக்டர் இல்லை. பிறகு என்னை மட்டும் அங்கேயே இருக்கும்படியும், கலெக்டர் வந்த பிறகு மனு கொடுக்கும்படியும் முருகேசனும் மற்றவர்களும் ஊருக்கு திரும்பினார்கள். பிற்பாடு அவர்கள் இறந்து விட்டதாக தெரிந்து கொண்டேன். என்னை இது சம்பந்தமாக போலிசார் விசாரித்தார்கள்.

1996-க்கு முன்பும் எங்கள் ஊர் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் நான் போட்டி எதுவும் போடவில்லை. என் வேலை (தொழில்) கூலி வேலைதான். எங்கள் ஜாதிக் கூட்டம் போட்ட அன்று நானும் தலைவர் பதவிக்கு நாமினேசன் தாக்கல் செய்ய முடிவு செய்தேன். அதற்கு எங்கள் இனத்தார் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என் வீடு எரிந்தது சம்பந்தமாக போலிசில் ரிப்போர்ட் கொடுத்துள்ளேன். மேலூர் காவல் நிலையத்தில் கொடுத்தேன். அதன் பேரில் வழக்குப் பதிவு கொடுக்கவில்லை. நான் கொடுத்த புகாருக்கு நகல் இருக்கிறது. நான் ரிப்போர்ட் கொடுத்த பிறகு போலிசார் ஊருக்கு வந்து விசாரித்தார்கள். அப்படி வந்த போலிசார் எரிந்து போன பாண்டியம்மாள் வீட்டையும், சேவகமூர்த்தி வீட்டையும் பார்த்தார்கள். நான் தனிப்பட்ட முறையில் 30.6.97 தேதிக்கு முன்பாக சென்றுள்ளேன். அந்த மாதம் தேதி குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

அப்படி நான் தனிப்பட்ட முறையில் சென்றபோது, கலெக்டர் ஆபீசில் மனு எழுதி கொடுத்துள்ளேன். அப்படி கொடுக்கப்பட்ட மனுவின் நகல் வைத்துள்ளேன். அந்த நகலை போலிசார் விசாரணையின்போது காட்டினேன். அதை போலிசார் கைப்பற்றிக் கொள்ளவில்லை. 30.6.97 அன்று தீப்பிடித்து எரிந்த வீட்டுக்காரர்கள் மூவருக்கும் தனித்தனியாக கலெக்டர் ஆபீசில் மனு தயாரித்தோம். அன்று கலெக்டர் வரும்வரை காத்திருந்து என் மனுவை நான் கொடுத்தேன். சேவகமூர்த்தி மற்றும் பாண்டியம்மாள் ஆகியோர்கள் டி.ஆர்.ஓ.விடம் மனுவை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். என்னிடம் கலெக்டர் மனு பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சி கொடுத்துள்ளார். நான் சொல்வது பேரில் தலைவர் முருகேசன் உடன் நான் கலெக்டர் ஆபிசுக்கு சென்றதாக பொய் சொல்கிறேன் என்றால் சரியல்ல. 6 கொலைகள் நடந்த சம்பவத்தன்று, சம்பவ இடத்திற்கு நான் பயந்துகொண்டு செல்லவில்லை. போலிசார் மறுநாள் காலை ஊருக்கு வந்து என்னை விசாரித்தார்கள்.

2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

28.12.96ஆம் தேதியன்று எங்கள் ஊரில் தேர்தல் நடந்தது. அன்று நடந்த தேர்தலில் அம்பலக்காரர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் யாரும் வந்து ஓட்டு போடவில்லை.

அ.சா. 13 : ஆர். சந்தானகிருஷ்ணன் (இவர் பிறழ் சாட்சியாகக் கருதப்பட்டு பின்னர் அரசு தரப்பு வழக்குரைஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்) முதல் விசாரணை :

நான் செட்டிநாயக்கன்பட்டியில் குடியிருக்கிறேன். நான் கே.என்.ஆர். பஸ்ஸில் கண்டக்டராக பணி செய்து வருகிறேன். 30.6.97ஆம் தேதியன்று நான் மேற்படி பேருந்தில் கண்டக்டராக பணியிலிருந்தேன். மேற்படி பேருந்து மதுரை டூ திண்டுக்கல் வழி மேலூர் நத்தம் செல்லும் பேருந்தில் 30.6.97 அன்று பகல் 2.10 மணியளவில் மதுரையிலிருந்து டிரிப் எடுத்து திண்டுக்கல் நோக்கிச் சென்றோம். சுமார் 2.45 மணியளவில் பேருந்து மேலூருக்கு வந்தது. அக்ரஹாரம் பாலம் தாண்டி சுமார் 50, 60 மீட்டர் கடந்து சென்றபோது பஸ்ஸுக்குள் பயங்கரமான கூச்சல். வெட்டுறா என்று சத்தம் கேட்டது. ஜனங்கள் எல்லாம் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டார்கள். பஸ்ஸுக்குள் வெட்டிக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸை எடுக்கும்போது பஸ்ஸுக்குள் ஒரு முண்டம் மட்டும் கிடந்தது. வெட்டியவர்களே முண்டத்தை பஸ் ஸிலிருந்து வெளியே எடுத்துப் போட்டார்கள். பிறகு சுமார் 50 மீட்டர் முன்புறமாக பேருந்தை எடுத்து, பிறகு ரிவர்ஸில் எடுத்து மேலூர் காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்றோம். இடையில் இரண்டு பிரேதங்கள் கிடந்ததைப் பார்த்தேன். பஸ்ஸுக்குள் ஒரே ரத்தமாகவும் பொருட்கள் சிதறியும் கிடந்தன. சுமார் 3.45 மணியளவில் மேலூர் காவல் நிலையத்தில் கொடுத்த வெள்ளை பேப்பரில் என்ன நடந்தது என்று நானே எழுதிக் கொடுத்தேன்.

அ.சா.14: ஆர். நாகராஜ்(இவர் பிறழ் சாட்சியாகக் கருதப்பட்டு, பின்னர் அரசு தரப்பு வழக்குரைஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்) முதல் விசாரணை :

என் சொந்த ஊர் காவேரி செட்டிப்பட்டி. நான் கே.என்.ஆர். பஸ்ஸில் 1996, 1997 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் ஓட்டுநராகப் பணிபுரிந்துள்ளேன். 30.6.1997 அன்று மேற்படி, கே.என்.ஆர். பேருந்தில் நான் ஓட்டுநராகப் பணியிலிருந்தேன். மேற்படி பேருந்தை மதுரையிலிருந்து சுமார் பகல் 2.10 மணிக்கு டிரிப் எடுத்து திண்டுக்கல் நோக்கி போய்க் கொண்டு இருந்தேன். சாட்சி சந்தானகிருஷ்ணன், அந்த பேருந்தில் நடத்துநராக பணியிலிருந்தார். மேலூருக்கு பகல் 2.50 மணியளவில் பேருந்து வந்தது. பகல் சுமார் 3 மணிக்கு மேலூரை விட்டு பேருந்து புறப்பட்டது. அக்ரஹாரம் பாலம் பஸ் ஸ்டாப்பில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டு சுமார் 2, 3 பர்லாங் தாண்டி பஸ் சென்று கொண்டு இருந்தபோது, பஸ்ஸுக்குள் கலவர சத்தம் அதிகமாகக் கேட்டது. உடனே பஸ்ஸை நிறுத்திவிட்டேன். வண்டியிலிருந்த பயணிகள் சிதறி வெளியே ஓடினார்கள். அதனால் ஒரே பதற்றம் ஏற்பட்டு வண்டிக்குள் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை.

அ.சா. 15 : ம.வி. முத்துராமலிங்கம் (இவர் பிறழ் சாட்சியாகக் கருதப்பட்டு பின்னர் அரசு தரப்பு வழக்குரைஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்) முதல் விசாரணை

எனது சொந்த ஊர் சானிப்பட்டி. நான் ஏ.3096 எண் உள்ள கேசம்பட்டி கிராமத்தின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தலைவராக உள்ளேன். மேலவளவு சேவகபெருமாள் 27ஆவது எதிரி மேற்படி கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். அங்கு சிப்பந்தகள் காலை 9 மணிக்கு பணிக்கு வருவார்கள். மாலை 5.30 மணிக்கு திரும்புவார்கள். 30.6.97 அன்று நான் வங்கிக்கு சென்றிருந்தேன். அப்போது செயலாளர் சேவகபெருமாள் 27ஆவது எதிரி மற்றும் சிப்பந்திகள் வங்கிக்கு வந்திருந்தார்கள். மதியம் ஒரு மணிக்கு சாப்பிடப் போவோம். வெளியில் செல்பவர்கள், அலுவலக ரீதியாக வெளியில் செல்பவர்கள் மூவ்மெண்ட் ரிஜிஸ்ட்டரில் பதிவு செய்துவிட்டுப் போவார்கள். மேற்படி 27ஆவது எதிரி சேவகபெருமாள் செயலாளர் மாலை 5.30 மணி வரையில் வங்கியில் இருந்தார்.

அரசு தரப்பு வழக்குரைஞர் குறுக்கு விசாரணை :

30.6.97 அன்று பகல் 2 மணிக்கு வெளியில் சென்ற சேவகபெருமாள் 4.9.97 வரைக்கும் அவர் அலுவலகத்திற்கே திரும்ப வரவில்லையென்றும் டி.எஸ்.பி. விசாரணையின்போது நான் கூறினேன் என்றால் அது சரியல்ல. 1.7.97 தேதியிலிருந்து சேவகபெருமாள் வங்கிக்கு வரவில்லை.

அ.சா. 16 : பி. பெரியகருப்பன் (பார்வை மகஜர் மற்றும் சம்பவ இடத்தின் வரைபடம் ஆகியவை தயாரித்தபோது, சான்று பொருள் கைப்பற்றும் போதும் உடனிருந்த சாட்சி) முதல் விசாரணை

நான் சென்னகரம்பட்டியில் குடியிருக்கிறேன். நான் கிராம உதவியாளராக (தலையாரியாக) பணியிலிருக்கிறேன். 30.6.97ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு மேலூருக்கு சம்பளம் வாஙக்குவதற்காக சென்றிருந்தேன். அங்கு சம்பவம் பற்றி கேள்விப்பட்டு சம்பவ இடம் வந்தேன். கள்ளுக்கடை மேடு பக்கத்தில் உள்ள மைல்கல் உள்ள தென்புறமாக தலையில்லாத ஆண் பிணம் கிடந்தது. செல்லத்துரை என்பவருடைய பிரேதமும் கிடந்தது. அடுத்து பூபதி என்பவருடைய பிணமும் கிடந்தது. அதற்கு அடுத்து ராஜா என்பவருடைய பிணமும் கிடந்தது. மூக்கன் என்பவரின் பிரேதம் கிழக்கு பக்கமுள்ள வைக்கோல் போர் பக்கத்தில் கிடந்தது. மேற்குப்புறமாக வயலில் ஒரு ஆண் பிரேதம் கிடந்தது. மேற்படி பிரேதங்கள் வெட்டு குத்து பட்டு ரத்தக்கறையோடு கிடந்தது. மேற்படி இறந்தவர்கள் மேலவளவு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். டி.எஸ்.பி. மற்றும் நிறைய போலீஸ் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். இரவு 10 மணியளவில் வடக்கு பக்கமுள்ள பாவன செட்டியாருடைய கிணற்றில் கிடந்த ஒரு தலையை நானும் மற்றொரு தலையாரி மெய்யனும் வெளியில் எடுத்தோம். போலிசார் பார்வையிட்டு வரைபடமும் தயாரித்தார்கள். அப்படி எழுதிக் கொண்ட பார்வை மகசரில் நானும் மெய்யனும் சாட்சி கையொப்பம் செய்தோம்.

அந்த பார்வை மகசர் தான் அ.சா.ஆ.4. மேலும் பிரேதங்கள் கிடந்த இடத்திற்கு அருகில் இருந்த ரத்தம் படிந்த மண் மற்றும் ரத்தம்படியாத மண் ஆகியவற்றை மகஜர் தயாரித்து கைப்பற்றினார்கள். மேலும் ஒரு சாக்கில் மாட்டுத்தீவனம், 6 செருப்புகள், புண்ணாக்கு ஒரு சாக்கு, டிபன் பாக்ஸ் ஒன்று ஆகியவற்றையும் போலிசார் கைப்பற்றினார்கள். தலையில்லாத பிரதேம் கிடந்த இடத்திலிருந்த ரத்தம்பட்ட மண் சா.பொ.2, மேற்படி இடத்திலிருந்த மாதரி மண் சா.பொ.3, செல்லதுரை பிணம் கிடந்த இடத்திலிருந்த ரத்தம் படிந்த மண் சா.பொ.4. மேற்படி இடத்திலிருந்த மாதிரி மண் சா.பொ.5, சேவகன் பிரேதம் கிடக்கும் இடத்திலிருந்த ரத்தம் படிந்த மண் சா.பொ.6, மேற்படி இடத்திலிருந்த மாதிரி மண் சா.பொ.7, ராஜா பிரேதம் கிடக்கும் இடத்திலிருந்த ரத்தம் படிந்த மண் சா.பொ.8, மேற்படி இடத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரி மண் சா.பொ.9, பூபதி பிரேதம் கிடக்கும் வயல் பகுதியிலிருந்த ரத்தம் படிந்த மண் சா.பொ.10, மேற்படி இடத்திலிருந்த மாதிரி மண் சா.பொ. 11, மூக்கன் பிரேதம் கிடக்கும் வயல் பகுதியிலிருந்த ரத்தம் படிந்த மண் சா.பொ.12. செருப்புகள் ஆறு சா.பொ. 15 வரிசை, ஆகியவற்றை அ.சா.ஆ. 5 மகசரின் கீழ் போலிசார் கைப்பற்றினார்கள். கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட தலை முருகேசனுடைய தலை ஆகும். மகசரில் நான் கையெழுத்து போட்டேன். அங்கு 2 அல்லது 3 மணி நேரம் நான் இருந்தேன். போலிசார் என்னை விசாரித்தார்கள். நான் சொன்னதை எழுதிக் கொண்டார்கள்.

-சு.சத்தியச்சந்திரன்

(தலித் முரசு மே 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It