நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் - அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும். இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த இரு இதழ்களின் தொடர்ச்சியாக இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது. அ.சா. 5: பெரியவர் (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை

நான் மேலவளவு காலனியில் வசிக்கிறேன். ஆஜர் எதிரிகளில் சில பேரை தெரியும். சில பேரை எனக்கு தெரியாது. அதில் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களும் இருக்கிறார்கள். நான், தாழ்த்தப்பட்ட பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். 30.6.97 அன்று திங்கட் கிழமை நான் மற்றும் ஏகாதேசியும் அக்ரகாரத்திற்கு சென்றோம். அப்போது பகல் 3.15 மணி இருக்கும். அப்போது நத்தம் செல்லக்கூடிய கே.என்.ஆர். பஸ் வந்து நின்றது. எங்கள் ஊரைச் சேர்ந்த அம்பலக்காரர் ஜாதிக்காரர்களும் மற்ற ஊரைச் சேர்ந்தவர்களும் பஸ்ஸை சுற்றி அரிவாளுடன் நின்றனர். அதில் என் ஊரைச் சேர்ந்த எதிரிகள் ராமர், தங்கமணி, கண்ணன், எதிரி ரசம் என்கிற அய்யாவு, எதிரி மார்கண்டன் (11ஆவது எதிரி) மற்றும் பலரும் இருந்தனர். எங்கள் ஊரைச் சேர்ந்த எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களை, எங்கள் ஊரைச் சேர்ந்த அம்பலக்காரர்களும் மற்ற ஊரைச் சேர்ந்தவர்களும் வளைத்து வளைத்து வெட்டினார்கள். அவர்கள் அரிவாள், கத்தி, ஆயுதங்களுடன் வந்தனர்.

எங்கள் இனத்தைச் சேர்ந்த தலைவர் முருகேசனை, முதல் எதிரி அழகிரிசாமி,வெட்டி தலையை துண்டாக எடுத்துக் கொண்டு வயல்காட்டுப் பக்கம் ஓடிவிட்டார். எதிரி ராமர் எங்கள் இனத்தைச் சேர்ந்த ராஜாவை, மாறி மாறி தலைப் பக்கம் வெட்டினார். எதிரி ஆண்டிச்சாமி அதே ராஜாவை பின்பக்கம் வெட்டினார். என் இனத்தைச் சேர்ந்த சேவகமூர்த்தியை எதிரி மனோகரன் வலது கையில் வெட்டினார். என் இனத்தைச் சேர்ந்த மூக்கனை எதிரி ராஜேந்திரன் கையில் வெட்டினார். எதிரி கறந்தமலை எங்கள் இனத்தைச் சேர்ந்த சின்னய்யாவை (அ.சா.3) அரிவாளால் வெட்டினார். நான் நெருங்கிச் சென்றபொழுது, அவர்கள் எங்களையும் வெட்டிவிடுவதாக மிரட்டியதால் நான் பயந்து ஓடினேன்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை

நான் மேலவளவு கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவன். மேலவளவு கிராமத்தைச் சேர்ந்த எனக்கு தெரிந்த நபர்களின் பெயர்களை முன் விசாரணையில் குறிப்பிட்டுள்ளேன். நானும், ஏகாதேசியும், ஒரே கராணத்திற்காகத்தான் அக்ரகாரம் கிராமத்திற்குச் சென்றோம். மாடு வாங்குவதற்காக சென்றோம். 20 மீட்டர் தூரத்திலிருந்து பஸ் நின்றதையும் ஜனங்கள் சூழ்ந்து நின்றதையும் பார்த்தோம். பஸ்சுக்கு வடபுறமாக நின்று நாங்கள் பார்த்தோம். மேலும் பஸ்ஸை நோக்கி நகர்ந்து நாங்கள் சென்றோம். அப்படி நாங்கள் சென்றபோது பஸ்ஸிலிருந்து இறங்கி வந்தவர்கள், எங்களை நோக்கி யாரும் ஓடிவரவில்லை. எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர, மற்றவர்கள் இறங்கி ஓடிவிட்டனர். எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களை இறங்க விடவில்லை.

இரண்டு வழிகளிலும் அடைத்துக் கொண்டதால், எங்கள் இனத்தவர்கள் பஸ்சுக்குள்ளே இருந்து இறங்க இறங்க வெட்டினார்கள். அம்பலக்காரர் இனத்தைச் சேர்ந்தவர்களும் பஸ்சுக்குள் இருந்தார்கள் அவர்கள் எங்கள் இனத்தைச் சேர்நத ஒவ்வொருவரையும் வெட்டி வெளியே தள்ளினார்கள். அப்படித் தள்ளப்பட்டவர்களை வெளியில் இருந்தவர்கள் மீண்டும் அவர்களை வெட்டினார்கள். அப்படி வெட்டுப்பட்டவர்களும் ஆங்காங்கே விழுந்துவிட்டார்கள். நானும் ஏகாதேசியும் கூச்சல் போட்டோம். கூச்சல் போட்டவுடன் எங்களை மிரட்டியதால் நாங்கள் எங்கள் ஊருக்கு ஓடிவிட்டோம்.

நாங்கள் சென்றதும் எங்கள் இனத்தைச் சேர்ந்த 6 பேரையும் கொன்று விட்டார்கள் என்று பொதுவாக ஊர் ஜனங்களிடம் சொன்னோம். நாங்கள் சொன்னதும் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு, சம்பவ இடத்தை நோக்கி ஓட ஆரம்பித்துவிட்டனர்.

இரவு 10 மணி வரை போலிசார் யாரும் மேலவளவு காலனிக்கு வரவில்லை. இரவு 10 மணியளவில் நான் சம்பவ இடம் வந்த பிறகுதான் போலிசார் அங்கு வந்திருப்பது எனக்கு தெரிய வந்தது. வெட்டுப்பட்ட சம்பவத்தை நான் பஸ் நின்ற இடத்திற்கு மேற்கு பக்கம் நின்று பார்த்தேன்.

அ. சா. 6 : ஏ.கே. பழனி (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை

நான் மேலவளவு காலனியில் வசிக்கிறேன். எங்கள் ஊரில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. அது தனித் தொகுதி. முருகேசன் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் காரணமாக, கள்ளர் சமுதாயத்திற்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கும் விரோதம் ஏற்பட்டது. 30.6.97 தேதி அன்று பகல் 2.45 மணியளவில் நான் மேலூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்தேன். என்னுடன் கணேசன் என்பவரும் நின்று கொண்டு இருந்தார். மேலவளவுக்கு செல்வதற்காக நான் நின்று கொண்டு இருந்தேன். அப்போது கே.என்.ஆர். பஸ் திண்டுக்கல் போகும் பஸ் வந்தது. உடனே பஸ்ஸில் நானும் கணேசனும் ஏறிவிட்டோம். எங்களுக்குப் பின்னாடி அ.சா.2 குமாரும், அ.சா.3 சின்னய்யாவும் ஏறினார்கள். அதன் பிறகு எதிரி அழகர்சாமி, இறந்து போன எதிரி ஜெயராமன், எதிரி ஜோதி, எதிரி மணிகண்டன் மற்றும் பலரும் பஸ்ஸில் ஏறினார்கள். பஸ்சுக்குள் எங்க ஊர் தலைவர் முருகேசன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, கிருஷ்ணன், நித்தியானந்தம், பாண்டியம்மாள் ஆகியோரும் இருந்தார்கள்.

பஸ் அக்ரகாரம் கள்ளுக்கடை மேடு வந்தபோது, பஸ்ஸில் இருந்த எதிரி துரைபாண்டி, பஸ்ஸை நிறுத்துடா என்று கூச்சல் போட்டவுடன் டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டார். உடனே எதிரி தலைவர் அழகர்சாமி அரிவாளால் முருகேசனை வெட்டினார். எதிரி அழகு, முருகேசனை இடது கன்னத்திலும், வலது தோள்பட்டையிலும் அரிவாளால் வெட்டினார். எதிரி பாரதிதாசன், முருகேசனை இடது கையில் அரிவாளால் வெட்டினார். எதிரி கதிர்வேல், எதிரி தங்கமணி, எதிரி கணேசன், எதிரி மணி ஆகியோர்களும் முருகேசனின் வயிறு பகுதியிலும், நெஞ்சு பகுதியில் வெட்டினார்கள்.எதிரி ரங்கநாதன், சேவகமூர்த்தியை இடது கணுக்காலில் வெட்டினார்கள். எதிரி சேகர் பூபதியுடைய வலது கையில் வெட்டினார். எதிரி தமிழன் அ.சா. 2 குமாருடைய வலது கையில் வெட்டினார். எதிரி ராஜேந்திரன், மூக்கனுடைய வலதுபுற தலையில் வெட்டினார். மேலும் எதிரி ராமர், எதிரி மனோகரன், எதிரி சக்கரமூர்த்தி ஆகியோர்களும் மற்றவர்களும் சேர்ந்த பக்கத்தில் யாராவது வந்தால் வெட்டிவிடுவோம் என்று மிரட்டினார்கள். நாங்கள் பயந்து கொண்டு ஓடிவிட்டோம். பிறகு வெட்டுப்பட்ட 6 பேர்களும் இறந்துவிட்டதாக தெரிந்து கொண்டேன். 35 நாட்கள் கழித்து டி.எஸ்.பி. வந்து என்னை விசாரித்தபோது, நான் இந்த சம்பவம் பற்றி சொன்னேன்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை

நான் பஸ்ஸில் ஏறிய போது உட்காருவதற்கு சீட் கிடைத்தது. என்னுடன் கணேசனும் பஸ்ஸில் சீட் கிடைத்ததும் உட்கார்ந்து விட்டார். நான் குறிப்பிட்டு சொல்லிய நபர்களைத்தவிர, வேறு பல நபர்களும் பஸ்ஸில் ஏறினார்கள். நான் எங்கள் இனத்தைச் சேர்ந்த நபர்களான - இச்சம்பவத்தில் இறந்து போனவர்களிடமும் சாட்சிகளிடமும் நான் பேசவில்லை. நான் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தபடியே அழகர்சாமி 1ஆவது எதிரி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். அந்த வெட்டப்பட்டதைப் பார்த்ததும் உள்ளே இருந்த பயணிகள் கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார்கள். 1ஆவது எதிரி அழகர் சாமி வெட்டிய முதல் வெட்டு, முருகேசனின் வலதுபுற தோள்பட்டையில் பட்டது. வெட்டு வாங்கும்போது முருகேசன் குனிந்தபடி இருந்தார். மேலும், முருகேசனை இழுத்துக் கொண்டே வந்தார்கள். மற்ற அம்பலக்காரர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் அப்போது முருகேசனை வெட்டிக் கொண்டும் குத்திக் கொண்டும் வந்தார்கள்.

அன்று அழகர்சாமி மற்றும் அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டியதை முதல் முதலில் பார்த்தேன். நான் மற்ற நபர்களையும் வெட்டியதையும் பார்த்துவிட்டுத்தான் ஓடினேன். முருகேசனை தவிர மற்ற நபர்கள் வெட்டுப்பட்டதை பஸ்சுக்குள் வெளியே நின்றுதான் நான் பார்த்தேன். நான் பார்த்த சம்பவம் சுமார் 10 நிமிடங்கள் நடந்திருக்கும். நான் பயந்து ஊருக்கு ஓடிய போது என்னுடன் வேறு யாராவது ஓடி வந்தார்களா என்பதை நான் கவனிக்கவில்லை. நான் ஊருக்குப் போனவுடன் என் தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறினேன். நான் ஊருக்கு ஓடிப்போய் சேர்ந்தபோது, அங்கு ஜனங்கள் கும்பலாக கூடியிருந்தார்களா, இல்லையா என்பது எனக்கு ஞாபகமில்லை. நான் சொல்வது போல் சம்பவம் எதையும் நான் பார்க்கவில்லை என்றும், காலதாமதமாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் என்னை சாட்சியாக போலிசார் உட்புகுத்தியுள்ளார்கள் என்றால் சரியல்ல.

அ.சா. 7 கே.கணேசன் : (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை

நான் மேலவளவு காலனியில் குடியிருக்கிறேன். எங்க ஊர் பஞ்சாயத்து தேர்தலில் முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் அம்பலக்காரர் ஜாதியினருக்கும், எங்கள் இனத்தாருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. 30.6.97ஆம் தேதி அன்று நான் மேலூருக்கு சென்றிருந்தேன். பகல் 3 மணியளவில் நானும் பழனி என்பவரும் மேலூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்தோம். எங்கள் ஊருக்குப் போவதற்காக நின்று கொண்டு இருந்தோம். கே.என்.ஆர். பஸ்ஸில் ஏறினோம். பஸ்ஸுக்குள் எங்கள் ஊர் தலைவர் முருகேசன், மூக்கன், நித்தியானந்தம், ராஜா, பூபதி, சேவகமூர்த்தி, செல்லத்துரை, கிருஷ்ணன், பாண்டியம்மாள், மூர்த்தி ஆகியோர் இருந்ததைப் பார்த்தேன். மேலூரில் எங்களைத்தவிர 1ஆவது எதிரி அழகர்சாமி, பொன்னைய்யா, துரைபாண்டி ஆகியோர் ஏறினார்கள். பஸ் அக்ரகாரம் கள்ளுக்கடை மேடு அருகில் சென்றபோது, எதிரி துரைபாண்டி டிரைவரிடம் போய் பஸ்ஸை நிறுத்துடா என்று கூச்சல் போட்டார். டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டார். உடனே எதிரி அழகர்சாமி, முருகேசனை வலது தோள்பட்டையில் அரிவாளால் வெட்டினார். உடனே எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினார்கள். அப்போது எதிரி பாண்டி, செல்லதுரை, என்பவரின் கை விரலில் வெட்டினார். எதிரி புகழேந்தி செல்லதுரையின் வலது உள்ளங்கையில் வெட்டினார்.

எதிரி மதுரவீரன், சேவகமூர்த்தியின் தோள்பட்டையில் வெட்டினார். எதிரி செல்வம் மேற்படி சேவகமூர்த்தியின் கணுக்காலில் வெட்டினார். எதிரி ஜோதி, மூக்கனின் வலது கன்னத்தில் வெட்டினார். எதிரி ராமர், ராஜாவினுடைய தலையில் வெட்டினார். எதிரி மணிகண்டன், செல்லதுரையின் கழுத்தில் குத்தினார். எதிரி மணி வாசகம், சேவகமூர்த்தியை வெட்டினார். எதிரி சேது, சேவகமூர்த்தியின் வலது மணிக்கட்டில் வெட்டினார். மேலும் பல அம்பலக்காரர்கள் வந்து எங்கள் ஜாதிக்காரர்கள் பலரை வெட்டினார்கள். அதன் விளையாக, முருகேசன், மூக்கன், ராஜா, பூபதி, செல்லதுரை, சேவகமூர்த்தி ஆகிய ஆறு பேர்களும் இறந்து விட்டார்கள் 5.8.97ஆம் தேதி அன்று என்னை டி.எஸ்.பி. விசாரித்தார்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை

சம்பவ இடத்தில் இருந்த அம்பலக்காரர் ஜாதியை சேர்ந்த எனக்கு, பெயர் தெரிந்தவர்களைப் பற்றி போலிசார் விசாரணையில் கூறியுள்ளேன். ஆஜர் எதிரிகளின் எல்லோருடைய பெயர்களும் எனக்கு தெரியாது. ஒரு சில பேர்களுடைய பெயர்கள் எனக்கு தெரியும் டி.எஸ்.பி. என்னை விசாரித்தபோது, அந்த தந்தைமார்களின் பெயர்கள் சொன்னேனா என்றால், அதுபற்றி எனக்கு தெரியாது. 1ஆவது எதிரி அழகர்சாமியை பொதுவாக எங்கள் ஊரில் முன்னாள் தலைவர் அழகர்சாமி என்று சொல்வார்கள். 5.8.97ஆம் தேதியன்று போலிசார் என்னை விசாரித்தது தவிர, அதற்கு முன்போ பின்போ என்னை போலிசார் விசாரிக்கவில்லை. என்னை டி.எஸ்.பி. விசாரித்தபோது, அந்த இடத்தில் என்னைத் தவிர எங்கள் ஊரைச் சேர்ந்த வேறு யாரும் இல்லை. நான் அப்போது குறிப்பு எதுவும் எழுதி வைத்துக் கொண்டு அவரிடம் சொல்லவில்லை. பார்த்த ஞாபகத்தை வைத்துத்தான் சொன்னேன். நான் பெயர் குறிப்பிட்டுள்ள எதிரிகளை சம்பவத்திற்கு முன்பே எனக்கு தெரியும்.

நான் மட்டும்தான் மேலூருக்கு சென்றேன். நான் அன்று காலேஜுக்குத்தான் போனேன். அன்று நான் கல்லூரி சென்றதற்கு என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்று 1.00 மணிக்கே நான் கல்லூரியைவிட்டுவந்துவிட்டேன். மேலூர் பஸ் ஸ்டாண்டில் நான் பழனியை தற்செயலாகப் பார்த்தேன். நான் பேருந்தில் ஏறியவுடன் பஸ்சுக்குள் உட்கார இடம் இருந்தது.

என்னுடன் வந்த பழனியும் என்னுடன் பக்கத்திலேயே உட்கார்ந்தார். எதிரி துரைபாண்டி டிரைவரிடம் பஸ்ஸை நிறுத்துமாறு கூச்சலிட்டபோதும், ஒரு சில பயணிகள் பஸ்ஸுக்குள் நின்றுகொண்டு இருந்தார்கள். வண்டி நின்றவுடன் 1ஆவது எதிரி அழகர்சாமி, முருகேசனை வலது தோள்பட்டையில் வெட்டியதை நான் முதன் முதலாகப் பார்த்தேன். அப்போது வெட்டுப்படும்போது மேற்படி முருகேசன் இருக்கையில் உட்கார்ந்திருந்தார். வெட்டு விழுந்தவுடன் பஸ்சுக்குள் இருந்த எல்லோருக்கும் பீதி ஆகி இரண்டு படிகட்டு வழியாக வெளியே ஓட ஆரம்பித்தனர். நான் ஓடவில்லை.

10 அடி தூரத்தில் சென்று நின்று பார்த்தேன். நான் பார்த்தபோது முருகேசனின் முண்டம்தான் பஸ்சுக்கு வெளியே தரையில் வந்து விழுந்தது. அப்போது என் இனத்தைச் சேர்ந்தவர்களை எதிரிகள் வெட்டிக்கொண்டு இருந்தார்கள். பஸ்ஸை விட்டு இறங்கி அவர்கள் ஓடிக்கொண்டு இருக்கும்போது விரட்டி வெட்டினார்கள். 5.8.97ஆம் தேதிக்கு முன்பாக நானாக போலிசாரிடம் நான் பார்த்த சம்பவம் பற்றி கூற முயற்சிக்கவில்லை. காரணம், நான் என் மாமா வீட்டிற்குப் போய்விட்டேன். எங்க ஊரிலிருந்து கச்சிராமம்பட்டி கிராமம் 4 அல்லது 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சம்பவத்திற்கு 2, 3 நாட்கள் கழித்து எனது மாமா வீட்டிற்குப் போய்விட்டேன். அங்கிருந்து எங்கள் ஊருக்கு சில நாட்கள் வருவதும் மாமா வீட்டிற்குத் திரும்புவதுமாக இருந்தேன்.

டி.எஸ்.பி. என்னை விசாரித்தபோது என் தாயாரிடம் மட்டும் இந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டுக் கூறவில்லையென்று சொன்னால் சரியல்ல. டி.எஸ்.பி. விசாரணையின்போது நான் என் மாமா வீட்டிற்குப் போய் இருந்த விஷயத்தை கூறவில்லையென்றால் சரிதான். நான் சம்பவத்தைப் பார்க்கவே இல்லையென்றாலும் என்னை இந்த வழக்கிற்காக போலிசாரும் மற்றவர்களும் சேர்ந்து என்னை சாட்சியாகப் போட்டுள்ளார்கள் என்றால் சரியல்ல.

2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை

டி.எஸ்.பி. விசாரணையின்போது நான் பயந்து கொண்டு யாரிடமும் சொல்லாமல் என் தாயாரிடம் மட்டும் கூறினேன் என்று சொல்லியுள்ளேன் என்றால் சரியல்ல. முருகேசனை எதிர்த்து தலைவர் தேர்தலுக்கு வைய்யன் கருப்பன் என்பவர் போட்டியிட்டார். இந்த வழக்கு சம்பவத்திற்குப் பிறகு, மேலூர் சவுந்தரராஜன் என்பவர் கொலை செய்யப்பட்டார் என்பது எனக்கு தெரியும். வைய்யன் கருப்பன் மேற்படி தேர்தல் காரணமாக, எங்கள் இனத்துக்குள்ளேயே இரண்டு கோஷ்டிகளாக விரோதம் இருந்து வந்தது என்று சொன்னால் சரியல்ல. நான் சொல்வதுபோல் நான் பேருந்தில் செல்லவில்லையென்றாலும், நான் சம்பவத்தைப் பார்க்கவில்லை என்றாலும், நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றாலும் சரியல்ல. நான் விடுதலைச் சிறுத்தை இயக்கத்தில் உறுப்பினராக உள்ளேன் என்றால் சரியல்ல. எங்கள் இயக்க உறுப்பினர்கள் சொல்லிக் கொடுத்து நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல.

அ. சா. 8 : ஏகாதேசி (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை

நான் மேலவளவில் குடியிருக்கிறேன். நான் தாழ்த்தப்பட்ட பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். அ.சா.5 பெரியவரை எனக்கு தெரியும். நானும் மேற்படி பெரியவரும் மேலவளவிலிருந்து அக்ரகாரத்திற்குப் போனோம். பகல் 3.15 மணிக்கு கே.என்.ஆர். பஸ் நின்றதைப் பார்த்தேன். எங்கள் ஊரிலிருந்து 12.30 மணிக்கு கிளம்பினோம். பேருந்திலிருந்து சுமார் 50, 60 பேர் கீழே இறங்கி பதறி ஓடினார்கள். பஸ்ஸை சுற்றிலும் மேலவளவு அம்பலக்காரர் ஜாதிக்காரர்களும் சுற்றுப்பட்டிக்காரர்களும் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் நின்று கொண்டு இருந்தார்கள். சேவகமூர்த்தி பேருந்திலிருந்து கீழே இறங்கி வரும்போது, எதிரி ரங்கநாதன் மேற்படி சேவகமூர்த்தியின் வலது கால் பாதத்தில் வெட்டினார். எதிரி தினகரன், வலது கைவிரலில் வெட்டினார். எதிரி மார்கண்டன், முருகேசனின் தொப்புளில் அரிவாளால் வெட்டினார். எதிரி ரசம் என்ற அய்யாவு, மேற்படி முருகேசனின் வலது உள்ளங்கையில் வெட்டினார். எதிரி அழகிரிசாமி முருகேசனின் தலையை தூக்கிக்கொண்டு வடமேற்கே போனார். எதிரி மனோகரனும், எதிரி ராமர் கோஷ்டியும் கிட்டே வந்தால் உங்களை வெட்டுவோம் என்று மிரட்டினார்கள். அதனால் நான் மிரண்டு பயந்து ஓடினேன். மேற்படி நபர்களை வெட்டிய எதிரிகள் கோர்ட்டில் உள்ளார்கள். நான் வீட்டிற்குப் போய்விட்டு இரவு 10 மணிக்கு மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்தேன். அங்கு மேலூர் போலிஸ் அதிகாரிகள் வந்து என்னை விசாரித்தார்கள். அப்போது அங்கு 6 பிரேதங்களும் ஆங்காங்கே கிடந்தன.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை

ஆஜர் எதிரிகள் 40 பேர்களையும் சம்பவத்திற்கு முன்பே எனக்கு தெரியும். சம்பவம் சுமார் 5 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது. பிறகு நான் என் வீட்டிற்கு ஓடிவந்துவிட்டேன். அன்று இரவு போலிசார் என்னை விசாரித்தபோது, சம்பவத்தின்போது எந்த எந்த எதிரிகள் இருந்தார்கள் என்று பெயர்கள் குறிப்பிட்டு சொல்லவில்லையென்றால் சரிதான். யார் யார் எனக்கு தெரிந்தவரை வெட்டினார்கள் என்பது பற்றி குறிப்பிட்டு, டி.எஸ்.பி. என்னை விசாரித்தபோது நான் கூறினேன். 6 பேர்களை வெட்டியவர்களை நான் கூறினேன். முருகேசனுடைய தலையை அழகிரி சாமி எடுத்துக் கொண்டு போனதை நான் கடைசியாகப் பார்த்தேன். நான் மேலவளவுக்கு பயந்து ஓடியபோது, என்னுடன் வேறு யாரும் ஓடிவந்தார்களா என்பதை நான் கவனிக்கவில்லை.

மீண்டும் இரவு 10 மணி அளவில் சம்பவ இடத்திற்கு நான் தற்செயலாக சென்றிருந்தேன். அங்கு போலிஸ் அதிகாரிகள் வந்திருந்தார்கள் அன்று நான் மாடு வாங்குவதற்காக சென்றோம். நான் முதன் முதலில் சம்பவத்தை சுமார் 20 அடி தூரத்தில் இருந்து பார்த்தேன். சேவகமூர்த்தி பின்படிகட்டு வழியாக மேற்குப் பக்கம் ஓடியபோது அவர்கள் பிடித்து வெட்டினார்கள், சேவகமூர்த்தி வெட்டுப்பட்ட இடத்திலும், நான் நின்று கொண்டு இருந்த இடத்திலும் மற்ற ஜனங்கள் நின்று கொண்டு இருந்தார்கள் எதிரி மார்கண்டன் முருகேசனின் தொப்புளில் வெட்டினார். முருகேசன் வாசற்படியில் இறங்கிக் கொண்டிருந்தபோதே வெட்டினார். முருகேசன் கீழே விழுந்தவுடன் எதிரி ரசம் என்கிற அய்யாவு முருகேசனை வெட்டினார்.

நான் சம்பவம் எதுவும் பார்க்கவில்லையென்றாலும், இந்த கேசுக்காக குறிப்பாக, என்னை ஒரு சாட்சியாக தேர்ந்தெடுத்துப் போட்டுள்ளார்கள் என்றால் சரியல்ல. 

(தலித் முரசு மார்ச் 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It