நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் – அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும். இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த சில இதழ்களின் தொடர்ச்சியாக, இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.

அ.சா.21 : இடது காது மடலுக்கு பின்புறத்தில் கீழே 4 து 1 செ.மீ. எலும்பு அளவு ஆழத்திற்கு, படுக்கை வாட்டில் சாய்வான ஒரு வெட்டுக் காயம் காணப்பட்டது. இடது புற அல்லையில் இடுப்பு எலும்புக்கு 3 செ.மீ. மேலே 6 து 1.5 செ.மீ. து வயிற்று அறைக்கு சென்று இருந்த படுக்கை வாட்டில் சாய்வான குத்துக் காயத்தின் வழியே குடல் வெளியேறிய நிலையில் காணப்பட்டது. அந்த காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது, அந்த காயம் மேல் நோக்கியும் உள் நோக்கியும் சென்று சிறு குடலின் கடைசி பகுதியும் சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் முறையே 900 செ.மீ. 140 செ.மீ முன்பாக 2.5 து .5 செ.மீ. குடல் அறைக்குள் சென்று இருந்தது. வயிற்று அறையினுள் சுமார் 100 மில்லி லிட்டர் அளவில் ரத்தம் மற்றும் ரத்தக் கட்டிகள் காணப்பட்டன.

இடது முன் கையில் 4 து 3 செ.மீ. து தசை அளவு ஆழத்திற்கு ஒரு வெட்டுக் காயம், இடது மணிக்கட்டுக்கு 8 செ.மீ. மேலே காணப்பட்டது. அந்த காயத்தின் தோல் மேல் நோக்கி காணப்பட்டது. அந்த காயத்தில் அனைத்து வெட்டுக் காயங்களின் ஓரங்களும் சீராக காணப்பட்டன. மற்ற உடல் உள் உறுப்புகள் நாவடி மேல் எலும்பு சீராகவும், மார்பு அறைகள் காலியாகவும், வயிற்று அறை காயம் பகுதி விவரிக்கப்பட்டும், இருதயம் மேல் உறையினுள் 20 மில்லி லிட்டர் அளவில் வைக்கோல் நிற திரவமும் இருதயத்தின் அறைகள் காலியாகவும், இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள் சீராகவும் காணப்பட்டன. நுரையீரல்கள், கல்லீரல், சிறு நீரகங்கள், மண்ணீரல் ஆகியவை வெட்டுத் தோற்றத்தில் வெளிறிப் போய் காணப்பட்டன. இரைப்பையில் சுமார் 100 மில்லி லிட்டர் அளவில் சிலேட்டும படலம் திரவம் குறிப்பிடத்தக்க நெடி எதுவும் இல்லாமல் இருந்தது. சிறுநீர்ப்பை காலியாகவும் மூளை வெற்றுத் தோற்றத்தில் வெளிறியும் காணப்பட்டது.

கருத்து :

இறந்த நபர் அவருக்கு ஏற்பட்ட பல தரப்பட்ட காயங்களினால் உண்டான அதிர்ச்சியாலும் ரத்தப் போக்கினாலும் இறந்திருக்கிறார் என கருத்து தெரிவித்து உள்ளேன். இது குறித்து நான் வழங்கிய சடலக் கூராய்வு சான்றிதழ் அ.சா.ஆ.41. அ.சா.ஆ.35ல் குறிப்பிட்டுள்ள 1, 2, 3 காயங்கள் அரிவாளால் தாக்கப்பட்டால் ஏற்பட்ட வாய்ப்புண்டு. அ.சா.ஆ.37இல் குறிப்பிட்டுள்ளபடி தலையில் கண்ட முதல் காயமும் முண்டத்தில் கண்ட முதல் காயமும் ஒரே சமயத்தில் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. மேற்படி முதல் காயம் ஒரு வெட்டிலேயே மரணம் ஏற்படுவது நிச்சயம். அந்த காயம் உடனடியாக மரணத்தை விளைவிக்கக் கூடிய காயம் ஆகும். தலையில் காணப்பட்ட முதல் காயம் மரணத்தை ஏற்படுத்திய நிச்சய காயம் ஆகும்.

அ.சா.22 : டாக்டர் என். மகாராஜி (சம்பவத்தில் இறந்த சேவகமூர்த்தி மற்றும் மூக்கன் ஆகியோரின் சடலங்களை கூராய்வு செய்த மருத்துவர்) முதல் விசாரணை :

நான் தற்போது விருதுநகர் மாவட்டம் கன்னிச்சேரி புதூர் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றுகிறேன். 1.7.97 அன்று நான் மதுரையில் போதகராக பணியாற்றி வந்தேன். அன்று காலை 7.00 மணியளவில் துணைக் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம் குற்றவியல் பிரிவு அவர்களிடமிருந்து வந்த வேண்டுகோளை காவலர் முனுசாமி மூலம் பெற்று, சேவகமூர்த்தி என்பவருடைய பிரேதத்தை சடலக் கூராய்வு செய்தேன். அந்த வேண்டுகோள் அ.சா.ஆ.42. அதே தினம் காலை 8.15 மணிக்கு பிரேத மருத்துவ பரிசோதனை செய்ய ஆரம்பித்தேன். பிரேதத்தின் உடல் முழுவதும் பிரேத விறைப்புத் தன்மை காணப்பட்டது. அது சாதாரண போஷாக்குள்ள சுமார் 45 வயதுள்ள ஆணின் பிரேதம். கை, கால், விரல் நகங்கள் வெளிறிப்போய் இருந்தன. உடலில் கீழ்க்கண்ட காயங்கள் காணப்பட்டன.

கழுத்தின் பின்புறத்தில் வலது பக்கத்தில் 13 து 4.5 செ.மீ. எலும்பு ஆழமுள்ள கழுத்து எலும்பு சி2–11 குறுக்கு வாட்டத்தில் சாய்வான வெட்டுக் காயம் காணப்பட்டது. அதை அறுவை செய்து பார்த்தபோது, அந்தக் காயம் அடியில் உள்ள தசை ரத்த நாளங்கள் நரம்புகள், கழுத்து எலும்பு 2, 3க்கு இடையில் சென்று தண்டுவடத்தை யும் வெட்டி இருந்தது. வலது பக்க தலையில் 6.5 து 1.5 செ.மீ. எலும்பு ஆழமுள்ள குறுக்கு வாட்டத்தில் சாய்ந்த வெட்டுக் காயம். அது வலது காலுக்கு 2 செ.மீ. மேலேயும் பின்னாலும் இருந்தது.

வலது பாதத்தில் மேல்பகுதியில் 8 து 2 செ.மீ. து எலும்பு ஆழமுள்ள குறுக்கு வாட்டத்தில் சாய்வான வெட்டுக் காயம். அதை அறுவை செய்து பார்த்தபோது அதன் அடியில் உள்ள தசைகள், ரத்தநாளங்கள், நரம்புகள், பாத எலும்புகள் வெட்டி இருந்தது. வலது கட்டை விரலின் அடிபாகத்தின் உள்பக்கத்தில் 5 து 1.5 செ.மீ. து எலும்பு ஆழமுள்ள ஒரு குறுக்கு வாட்டத்தினாலான வெட்டுக் காயம் இருந்தது. அதை அறுவை செய்து பார்த்தபோது அதன் அடியில் உள்ள தசைகள், ரத்தநாளங்கள், நரம்புகள் உள்ளங்கை எலும்பு ஆகியவற்றில் வெட்டி இருந்தது.

இடது தொடையில் வெளிபாகத்தில் முழங்காலுக்கு 20 செ.மீ. மேலே 4 து 1.5 செ.மீ. அளவில் ஒரு குறுக்குவாட்டில் சாய்ந்த குத்துக் காயம். அது தசைகளோடு சென்று தசை அளவில் கூர்மையான முனையில் முடிந்துள்ளது. அதன் உள்முனை மழுங்கி யும், வெளிமுனை கூர்மையாகவும், ஓரங்கள் சீராகவும் இருந்தது. எல்லா வெட்டுக் காயங்களின் விளிம்புகளும் சீராக இருந்தன.

மற்ற உள் உறுப்புகள் :

கழுத்தின் வில் எலும்பு தன்மை மாறாமல் இருந்தது. மார்பு கூடு, வயிற்றுக்கூடு காலியாக இருந்தது. இருதய அறையில் 30 மில்லி அளவில் வைக்கோல் நிற திரவம் இருந்தது. நுரையீரல்கள், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள், மூளை ஆகியவை வெட்டுத் தோற்றத்தில் வெளிறிப்போய் காணப்பட்டன. இருதய அறைகள் காலியாக இருந்தன. ரத்த நாளங்கள் தன்மை மாறாமல் காணப்பட்டன. வயிற்றில் 75 மில்லி அளவுள்ள சிலேட்டும படல திரவம், எந்தவித குறிப்பிடத்தக்க வாசமும் இல்லாமல் இருந்தது. சிலேட்டும படலம் வெளிறிப்போய் காணப்பட்டது. சிறு குடலில் 30 மில்லி அளவில் பித்த நீர் கலந்த திரவம் இருந்தது. சிலேட்டும படலம் வெளிறி இருந்தது. சிறுநீர்ப்பை காலியாக இருந்தது.

கருத்து :

இறந்த நபர் தனக்கு ஏற்பட்ட பலதரப்பட்ட காயங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும், ரத்தப் போக்கினாலும் இறந்திருக்க கூடும் என கருத்து தெரிவித்து நான் கொடுத்த சடலக் கூராய்வு சான்றிதழ் அ.சா.ஆ.43. அதே தேதியில் அதே அதிகாரியிடமிருந்து மற்றொரு வேண்டுகோள் கடிதத்தை காவலர் வாசு எண்.795 அவர்களிடமிருந்து மூக்கன் வயது சுமார் 32 என்ற ஆண் பிரேதத்தை பிரேத பரிசோதனை செய்ய கொடுத்த வேண்டுகோள் அ.சா.ஆ.44 எனக்கு கிடைத்தது. அதே தினம் காலை 9.10 மணிக்கு பிரேத பரிசோதனை செய்ய ஆரம்பித்தேன். பிரேதம் உடல் முழுவதும் பிரேத விறைப்புத்தன்மை காணப்பட்டது. அது சாதாரண போஷாக்குள்ள சுமார் 32 வயதுள்ள ஒரு ஆணின் பிரேதம். அதன் கை, கால், விரல் நகங்கள் வெளிறிப்போய் காணப்பட்டன.

கீழ்க்கண்ட காயங்கள் காணப்பட்டது. கழுத்தின் வலது பக்கத்தில் பின்னால் வலது காதுக்கு 2.5 செ.மீ. கீழே 15 செ.மீ. து 6.5 செ.மீ. எலும்பு ஆழமுள்ள குறுக்கு வாட்டத்தில் சாய்ந்த வெட்டுக் காயம். அதை அறுவை செய்து பார்த்தபோது அந்தக் காயம் அடியில் உள்ள தசைகள், ரத்தநாளங்கள், நரம்கள் சி2 கழுத்து எலும்பினுடைய குடல்பகுதி, தண்டுவடம் ஆகியவற்றை வெட்டி இருந்தது. வலது பக்க தலையில் வலது பக்க காது மடலுக்கு 2 செ.மீ. மேலே 5 து 1.5 செ.மீ. து எலும்பு ஆழமுள்ள குறுக்கு வாட்டத்தில் சாய்ந்த வெட்டுக் காயம்.

இடது பக்க தலையில் இடது பக்க காது மடலுக்கு 3 செ.மீ. மேலே 3.5 செ.மீ. து 1 செ.மீ. து எலும்பு ஆழமுள்ள ஒரு குறுக்கு வாட்டத்தில் சாய்ந்த வெட்டுக் காயம். வலது பக்க முன்கையில் வலது பக்க முழங்கைக்கு 4 செ.மீ. கீழே 6 து 1 செ.மீ து எலும்பு ஆழமுள்ள குறுக்கு வாட்டத்தில் சாய்ந்த வெட்டுக் காயம். இடது பக்க முன்நெற்றியின் இடது பக்க புருவத்திற்கு மேலே 5 செ.மீ து .5 செ.மீ. து எலும்பு ஆழமுள்ள ஒரு குறுக்கு வாட்டத்தில், சாய்ந்த ஒரு கிழிந்த காயம் இருந்தது. எல்லா வெட்டுக் காயங்களிலும் எலும்புகள் சீராக இருந்தன.

மற்ற உறுப்புகள் :

கழுத்தின் வில் எலும்பு தன்மை மாறாமல் காணப்பட்டது. வயிற்றுக்கூடும், மார்பு கூடும் காலியாக இருந்தது. இருதய அறையில் 30 மில்லி அளவுள்ள வைக்கோல் நிற திரவம் இருந்தது. ரத்த நாளங்கள் தன்மை மாறாமல் காணப்பட்டது. இருதய அறைகள் காலியாக இருந்தன. நுரையீரல்கள், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள் வெட்டுத் தோற்றத்தில் வெளிறிப்போய் காணப்பட்டன. வயிற்றில் 70 மில்லி அளவுள்ள சிலேட்டும படல திரவம், எந்தவித குறிப்பிடத்தக்க வாசமும் இல்லாமல் இருந்தது. சிலேட்டும படலம் வெளிறிப்போய் இருந்தது. சிறு குடலில் 30 மில்லி அளவுள்ள பித்த நீர் கலந்த திரவம் இருந்தது. இதில் எந்தவித குறிப்பிடத்தக்க வாசமும் இல்லை. சிலேட்டும படலம் வெளிறிப் போய் இருந்தது. சிறுநீர் பை காலியாக இருந்தது. மூளை வெற்றுத் தோற்றத்தில் வெளிறிப்போய் இருந்தது.

கருத்து :

இறந்த நபர் தனக்கு ஏற்பட்ட பலதரப்பட்ட காயங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும், ரத்தப் போக்கினாலும் இறந்திருக்கக்கூடும் என நான் கொடுத்த சடலக் கூராய்வு சான்றிதழ் அ.சா.ஆ.45. வேண்டுகோளுடன் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த "ஹிஸ்ட்டரி ஆப் தி கேசில்' கண்டுள்ள நேரத்திலும் முறையிலும் காயங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கலாம். அ.சா.ஆ.43இல் கண்டுள்ள 1ஆவது காயம் நிச்சயமாக மரணத்தை ஏற்படுத்தக் கூடிய காயம். மற்ற காயங்கள் சாதாரண காலப் போக்கில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் ஆகும். மற்ற காயங்கள் தனியாகவோ, கூட்டாகவோ சேர்ந்து மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் ஆகும்.

அச.சா.ஆ.45இல் அதற்குண்டான வேண்டுகோளுடன் இணைக்கப்பட்டுள்ள "ஹிஸ்ட்டரி ஆப் தி கேசில்' குறிப்பிட்டுள்ள நேரத்திலும் முறையிலும் காயங்கள் ஏற்பட்டு இருக்கும். அதில் உள்ள 1ஆவது காயம் மரணத்தை நிச்சயமாக ஏற்படுத்தக்கூடிய காயங்கள் ஆகும். மற்ற காயங்கள் தனியாகவோ, கூட்டாகவோ சேர்த்து மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் ஆகும். மேற்படி காயங்கள் பட்ட சில நொடியிலேயே அந்த நபருக்கு மரணம் ஏற்பட்டு இருக்கும்.

அ.சா.23 : பி. வேங்கடாசலம் (சம்பவத்தில் காயம்பட்ட அரசுத்தரப்பு சாட்சிகள், 1–கிருஷ்ணன், 2–குமார் மற்றும் 3–சின்னய்யா, ஆகியோருக்கு காயச் சான்றிதழ் அளித்த மருத்துவர்) முதல் விசாரணை :

நான் தற்போது மேலூர் அரசு மருத்துவமனையில் உதவி மருத்துவராக தற்போதும் பணிபுரிகிறேன். 30.6.97 அன்று நான் மேலூர் மருத்துவமனையில் உதவி மருத்துவராகப் பணிபுரிந்து வந்தேன். 30.6.97 அன்று மாலை 4.50 மணியளவில், நான் பணியிலிருந்த போது மேலவளவு காலனியைச் சேர்ந்த பெரியபுளியன் மகன் சின்னய்யா என்பவர் சிகிச்சைக்காக என்னிடம் வந்தார். அவர் தன்னை தெரிந்த ஒரு நபர் 30.6.97 மாலை 3.15 மணியளவில் சென்னகரம்பட்டி அடுத்துள்ள ஆத்துக்கால் பிரிவில் வைத்து அரிவாளால் தாக்கியதாக கூறினார். அந்த காயச் சான்றிதழ் அ.சா.ஆ.46 மேற்படி காயங்கள் சாதாரண காயங்கள் ஆகும்.

தெற்கு காலனியில் உள்ள சர்க்கரை கருப்பன மகன் கிருஷ்ணன் என்பவர் சிகிச்சைக்காக என்னிடம் வந்தார். அவர் தன்னை தெரிந்த 40 நபர்கள் 30.6.97 அன்று மாலை 3.15 மணியளவில் சென்னகரம்பட்டிக்கு அருகில் உள்ள கள்ளுக்கடை மேட்டுக்கு அருகில் உள்ள தாண்டமடையான் அருகில் பட்டாக்கத்தி மற்றும் அருவாள் கொண்டு தாக்கியதாக சொன்னார்.

அவருக்கு இருந்த காயங்கள் சாதாரண காயங்கள் என சான்றிதழ் வழங்கி யுள்ளேன். அந்த காயச் சான்றிதழ் அ.சா.ஆ.41. அன்றைய தினம் மாலை 5.00 மணியளவில் மேலவளவு காலனியைச் சேர்ந்த காந்தி நகரைச் சேர்ந்த முத்தன் மகன் குமார் என்பவர் சிகிச்சைக்காக வந்தார். அவர் தன்னை தெரிந்த 20 முதல் 30 நபர்கள் சென்னகரம்பட்டி அடுத்துள்ள கள்ளுக்கடை மேடு தாண்டமடையான் அருகில் வாள் மற்றும் கத்தி கொண்டு மாலை 3.15 மணியளவில் தாக்கியதாக கூறினார். நான் அவரை பரிசோதனை செய்ததில் கீழ்க்கண்ட காயங்கள் இருந்தன :

அந்த காயச் சான்றிதழ் அ.சா.ஆ.48. அதில் 1 ஆவது காயம் கொடுங்காயம் மற்ற காயங்கள் சாதாரண காயங்கள் என கருத்து தெரிவித்துள்ளேன்.

மேற்படி நோயாளிகள் என்னிடம் சொன்ன நேரத்திலும் சொன்ன விதத்திலும் சொன்ன ஆயுதத்தால் மேற்படி காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

விபத்து பதிவேட்டில் ஆபத்தான காயங்கள் இருந்தால் மட்டுமே சிகிச்சை விபரங்கள் எழுதுவோம். இம்மாதிரியான சாதாரண காயங்களுக்கு எழுத மாட்டோம். விபத்து பதிவேட்டை தற்போது கொண்டு வந்துள்ளேன். விபத்து பதிவேட்டு எண்கள் : 2422, 2423, 2424 சம்பந்தப்பட்ட பக்கங்கள் கொண்ட தாள்களை மதுரை 4ஆவது கூடுதல் சார்பு நீதிமன்றம் வாங்கியதற்கான ஒப்புதல் உள்ளது. குமார் என்பவருக்கு அவருடைய கழுத்தில் ஒரு உள்நோக்கிய காயம் இருந்ததால், அவரை மதுரை மருத்துவமனைக்கு அனுப்பினோம். மற்ற இரண்டு நோயாளிகளை மதுரைக்கு அனுப்ப தனிப்பட்ட முறையில் ஏற்பாடு நான் செய்தேன் என்றால் எனக்கு ஞாபகமில்லை. அந்த நோயாளிகள் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர்கள் இல்லை. மேற்படி 2 பேர்களையும் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததற்கு காரணம் மேற்படி குமார் என்பவருக்கு உதவியாக இருக்கும் என்பதால் அனுப்பி வைத்தேன். அதனால் மூன்று பேரும் மதுரைக்கு சென்றால் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள் என்பதால் அனுப்பி வைத்தோம். அவர்கள் சம்பந்தப்பட்ட விபத்து பதிவேட்டு நகல்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு ஒரு போலிஸ்காவலர் மூலம் அனுப்பி வைத்தோம். அந்த காவலர் மூலம் மேற்படி 3 நோயாளிகளும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள். மேற்படி நோயாளிகள் வந்த நேரத்தில் மேலூர் அரசு மருத்துவமனையில் நிறைய ஜனங்களும் போலிசாரும் கூடிவிட்டனர்.

மேலூர் நகரத்திலேயே காயம்பட்ட நபர்களை போலிசார் அழைத்து வந்து போலிசார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் அ.சா.ஆ.46, 47, 48 ஆகியவற்றை வழங்கியுள்ளேன் என்றால் சரியல்ல. போலிசார் கேட்டுக் கொண்டதன் பேரில் மேற்படி 3 ஆவணங்களிலும் குறிப்புகளை நான் எழுதினேன் என்றால் சரியல்ல. மேற்படி குறிப்புகளை பிற்பாடு போலிசார் சொன்ன யோசனையின் பேரில் எழுதப்பட்டது என்றால் சரியல்ல. எங்கள் மருத்துவமனையில் விபத்து தகவல் புத்தகம் என்ற ஒன்று இருக்கிறது. மெடிகோ லீகல் கேஸ் என்றால், அந்த தகவல் புத்தகத்தில் எழுதி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த மேற்படி 3 நோயõளிகள் சம்பந்தமான சிகிச்சை தகவல்களை போலிசுக்கு அனுப்பி வைக்காததற்கு காரணம் போலிசாரே அங்கு வந்துவிட்டார்கள்.

மறு விசாரணை :

எந்த மருத்துவர் நோயாளியை பார்க்கிறாரோ, அந்த டாக்டர்தான் விபத்து பதிவேட்டு நகல் அனுப்புவார். அன்று வந்த காவலர் யார் என்பது எனக்கு தெரியாது. அன்று மருத்துவமனையில் போலிசார், நிறைய ஜனங்கள் கூட்டமாக இருந்தது பற்றி எனக்கு தெரியாது.

(தலித் முரசு அக்டோபர் 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It