நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் - அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும். இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த சில இதழ்களின் தொடர்ச்சியாக இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.

அ.சா.17 : கணேசன் (ரத்தக்கறை மற்றும் சான்று பொருள் ஆகியவற்றை கைப்பற்றும்போது உடனிருந்த சாட்சி) முதல் விசாரணை

எனக்கு சொந்த ஊர் தெற்குப்பட்டி. 1.7.97 ஆம் தேதியன்று காலை 6 மணியளவில் நான் மேலூர் காவல் நிலையம் பக்கம் போனேன். என்னுடன் சமத்துவம் என்பவரும் வந்தார். அங்கே டி.எஸ்.பி. மற்றும் போலிஸ் அதிகாரிகள் கே.என்.ஆர் பஸ்ஸை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். நாங்களும் பார்த்தோம். அங்கே பஸ்ஸுக்குள் இருந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டு இருந்தார்கள். மகஜர் தயாரித்ததில் கையெழுத்து போடச் சொன்னார்கள். நானும் சமத்துவமும் அதில் அகையெழுத்து போட்டோம். அந்த மகஜர்தான் அ.சா.ஆ.6 கையெழுத்து போட்டவுடன் நாங்கள் வந்து விட்டோம்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை

மேலூருக்கும் தெற்குப்பட்டி கிராமத்திற்கும் 2 அல்லது 3 பர்லாங் தூரம். சமத்துவம் என்பவர் எனக்கு உறவினர் இல்லை. பஸ் நின்ற இடத்திற்கு நான் போனபோது, சமத்துவம் அங்கு இருந்ததை நான் பார்த்தேன். மேற்படி பஸ் மேலூர் காவல் நிலையத்திற்கு முன்பாக நின்று இருந்தது. அன்று காவல் நிலையத்தில் கும்பலாக இருந்ததால், என்னவென்று பார்க்கலாம் என்பதற்காக நான் அங்கு போனேன். கும்பலோடு கும்பலாக நான் நின்று கொண்டிருந்தேன். போலிசார் அழைத்து என்னிடம் கையெழுத்து கேட்டார்கள். நான் போட்டேன். எனக்கு கொஞ்சம் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரியும். என்னிடம் கையெழுத்து வாங்கிய பிறகு கும்பலில் நின்றிருந்த சமத்துவத்தையும் போலிசார் அழைத்து கையெழுத்து வாங்கினார்கள். நான் சொல்வதுபோல் சொன்ன நேரத்திலும் சொன்ன முறையிலும் அ.சா.ஆ.6 தயாரிக்கப்படவில்லை என்றால் சரியல்ல. பின்னிட்டு போலிசால் தயாரிக்கப்பட்ட அ.சா.ஆ.6. மகஜரில் நான் காவல் நிலையத்தில் வைத்து கையெழுத்து போட்டுக் கொடுத்தேன் என்றால் சரியல்ல.

அ.சா.18 : சண்முகம் (குற்றவாளிகளின் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றுதல் மகஜர் ஆகியவற்றைப் பற்றி கூறும் சாட்சி) (இவர் பிறழ் சாட்சியாகக் கருதப்பட்டு பின்னர் அரசுத் தரப்பு வழக்குரைஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்) முதல் விசாரணை

என் சொந்த ஊர் நாலினிப்பட்டி. நான் நாலினிப்பட்டியில் தலையாரியாக இருந்தேன். தற்போது ஓய்வு பெற்றுவிட்டேன். சுமார் 3,4 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் நாவன்னா கோவில்பட்டி ஊருக்கு நான் வசூலுக்கு போனேன். என்னையும் நம்பி யையும் (தலையாரி) இரண்டு போலிஸ்காரர்கள் மேலூர் காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்றார்கள். இந்த வழக்கு விஷயமாக எனக்கு எதுவும் நேரில் தெரியாது. இத்தருணத்தில் இந்த சாட்சியை பிறழ் சாட்சியாகக் கருதி, குறுக்கு விசாரணை செய்ய அரசு வழக்கறிஞர் அனுமதி கோர, அனுமதி வழங்கப்பட்டது.

அ.சா.19 : நம்பி (குற்றவாளிகளின் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றுதல் மகஜர் ஆகியவற்றைப் பற்றி கூறும் மற்றொரு சாட்சி) (இவரும் பிறழ் சாட்சியாகக் கருதப்பட்டு பின்னர் அரசுத் தரப்பு வழக்குரைஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்) முதல் விசாரணை

நான் நாலினிப்பட்டியில் தலையாரியாக இருக்கிறேன். இந்த வழக்கு சம்பந்தமாக எனக்கு எதுவும் நேரடியாக தெரியாது. (இத்தருணத்தில் இந்த சாட்சியை பிறழ் சாட்சியாகக் கருதி குறுக்கு விசாரணை செய்ய அரசு வழக்குரைஞர் அனுமதி கோர அனுமதி வழங்கப்பட்டது.)

அரசு தரப்பில் குறுக்கு விசாரணை : அனுமதியுடன்

போலிசார் என்னை விசாரித்தபோது 1.7.97 அன்று எதிரி செல்வம், சின்ன ஒடுங்கான், சொக்கநாதன், அம்பலம், களஞ்சியம் மணி, சேவகபெருமாள், ஆகியோர்களை ஆலமரத்துக்கு அடியில் பகல் 2.30 மணிக்கு போலிசார் கைது செய்ததாகவும், அப்போது மேற்கண்ட எதிரிகள் தனித்தனியாக ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாகவும் நான் போலிசார் விசாரணையில் சொல்லவில்லை. அந்த ஒப்புதல் வாக்குமூலங்களில் நானும் சண்முகமும் கையெழுத்துப் போட்டது உண்மை. பகல் 2.30. மணிக்கு செல்வத்தை விசாரிக்க 3.30 மணிக்கு எதிரி சின்ன ஒடுங்கானை விசாரிக்க, அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்கள். பகல் 4.45 மணிக்கு சொக்கநாதனை விசாரிக்க அவர் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் சொன்னதாகவும், அதில் நானும் சாட்சி சண்முகமும் சாட்சி கையொப்பம் செய்தோம். இரவு 7.15 மணிக்கு களஞ்சியத்தை விசாரிக்க அவர் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தபோது, அதில் நானும் சண்முகமும் சாட்சி கையொப்பம் செய்தோம். நான் போட்ட கையெழுத்து மட்டும் அ.சா.ஆ.17 முதல் அ.சா.ஆ.26 ஆகும். மேற்படி எதிரிகள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலங்கள் அ.சா.ஆ.27 முதல் அ.சா.ஆ.31 ஆகும்.

அ.சா.20 : முத்தன் (28 ஆவது எதிரியின் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றுதல் மகஜர் ஆகியவற்றைப் பற்றி கூறும் சாட்சி) முதல் விசாரணை :

எனது சொந்த ஊர் மேலவளவு. மேற்படி மேலவளவு காலனியில் நான் குடியிருக்கிறேன். கொலை நடந்த சம்பவத்திற்கு 2 நாட்கள் கழித்து இரவு 1.00 மணியளவில் அழகிரிபட்டி பஸ் ஸ்டாண்டில் நானும் சின்னக்கருப்பனும் இருந்தபோது, 2 ஆவது எதிரி இளவரசை டி.எஸ்.பி. கைது செய்து விசாரித்தார்கள். அப்போது நானும் சின்னக்கருப்பனும் இருந்தபோது, 2ஆவது எதிரி இளவரசை டி.எஸ்.பி. கைது செய்து விசாரித்தார்கள். அப்போது நானும் சின்னக்கருப்பனும் இருந்தோம். பின்புறமாக இருந்து அரிவாளை இளவரசு எடுத்துக் கொடுத்தார். அதை டி.எஸ்.பி. மகசரின் கீழ் கைப்பற்றினார். இந்த மகசரில் நானும் சின்னக்கருப்பனும் சாட்சி கையொப்பம் செய்தோம். அந்த அரிவாளும் மஞ்சள் பையுடன் இருந்தது.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை

இவ்வழக்கின் 2ஆவது சாட்சி குமார் என் மகன். அழகிரிப்பட்டி பஸ் ஸ்டாப்புக்கும் மேலப்பட்டிக்கும் 3 கி.மீ. தூரம். நான் அழகிரிப்பட்டி பஸ் ஸ்டாப்புக்கு வந்தபோது போலிசார் ஏற்கனவே இளவரசை விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். அங்கிருந்த கடைக்கு பின்புறமாக தரையில் கிடந்த அரிவாளை இளவரசு எடுத்துக் கொடுத்தார். அந்த இடத்தில் 2 கடைகள் உள்ளன. அன்று அந்த இடத்திற்கு அந்த பஸ் ஸ்டாப்பிற்கு எதற்காக நான் போனேன் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. நான் சொல்கின்ற முறையிலும் சொன்ன நேரத்திலும் சொன்ன விதத்திலும் இளவரசு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவில்லை என்றும், அதன் பேரில் இளவரசு அரிவாளை எடுத்து கொடுத்ததாகவும், அதை போலிசார் கைப்பற்றவில்லையென்றும் சொன்னால் சரியல்ல. பின்னிட்டு போலிசார் மகஜரில் என்னிடம் காவல் நிலையத்தில் வைத்து என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் என்றும் சொன்னால் சரியல்ல. நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல.

அ.சா.21 : க. மெய்யழகன் (சம்பவத்தில் இறந்த ராஜா, முருகேசன், பூபதி மற்றும் செல்லதுரை ஆகியோரின் சடலங்களை கூராய்வு செய்த மருத்துவர்) முதல் விசாரணை

நான் தற்சமயம் மதுரை மருத்துவக் கல்லூரியில் சட்டம் சார்ந்த மருத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். 1.7.97 ஆம் தேதி அன்று அதே துறையில் பணியாற்றிய பொழுது, காலை 8.00 மணிக்கு மதுரை மாவட்ட குற்றக் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களிடமிருந்து ராஜா என்ற 22 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதத்தை சடலக் கூராய்வு செய்யும்படி வேண்டுகோளை பெற்றேன். அந்த வேண்டுகோள் அ.சா.ஆ.34. அதே தினம் காலை 8.15 மணிக்கு சடலக் கூராய்வு ஆரம்பித்தேன். பிரேதம் காவலர் எண்.1360 கடோத்கஜன் என்பவர் பொறுப்பில் இருந்தது. பிரேதத்தின் உடல் முழுவதும் பிரேத விறைப்புத் தன்மை காணப்பட்டது. பிரேதத்தின் கீழ்க்கண்ட இறப்புக்கு முன்பு ஏற்பட்ட காயங்கள் காணப்பட்டன.

இடது புற தலையில் பக்க எலும்பு மற்றும் பின் எலும்பு பகுதியில் காது மடலுக்கு 1 செ.மீ. பின் புறத்தில் 12 து 1.5 கபால அறைக்குச் சென்று இருந்த செங்குத்து வாட்டின் சாய்வான வெட்டுக் காயம் காணப்பட்டது. அந்த காயத்தை அறுத்து ஆய்வு செய்த பொழுது, அந்த காயம் அதன் அடியில் உள்ள மூளை ஜவ்வுகளையும் பெரு மூளையையும் 10 து 5 செ.மீ து 5 செ.மீ அளவில் வெட்டிச் சென்று இருந்தது.

இடது புற கழுத்தின் கீழ் தாடை எலும்பின் வளைவுப் பகுதிக்கு 3 செ.மீ. கீழே 4 து 1.5 செ.மீ. தசை அளவு ஆழத்திற்கு படுக்கை வாட்டில் சாய்வான ஒரு வெட்டுக் காயம் காணப்பட்டது.

வெட்டுக் காயங்களின் ஓரங்கள் சீராக காணப்பட்டன. மற்ற உடல் உள் உறுப்புகளை அறுத்து ஆய்வு செய்தபோது நாவடி மேல் எலும்பு சீராகவும், வயிற்று அறை, மார்பு அறைகள் காலியாகவும், இருதய மேல் உறையும் 20 மில்லி லிட்டர் அளவுக்கு வைக்கோல் நிற திரவமும் இருதயத்தின் அறைகள் காலியாகவும், இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள் சீராகவும் நுரையீரல்கள், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள் மற்றும் மூளை ஆகியவை வெற்றுத் தோற்றத்தில் வெளிரியும் காணப்பட்டது. இரைப்பையில் 100 மில்லி லிட்டர் அளவுக்கு கினோட்டும படல திரவம் இருந்தது. குறிப்பிடத்தக்க நெடி எதுவும் இல்லாமல் கினோட்டுமபடலம் வெளிரிப் போய் காணப்பட்டது. சிறு குடலில் 30 மில்லி லிட்டர் அளவுக்கு பித்த நீர் கலந்த திரவம் குறிப்பிடத்தக்க நெடி எதுவும் இல்லாமல் கினோட்டுமபடல திரவம் வெளிறியும், சிறுநீர்ப்பை காலியாகவும் காணப்பட்டது.

கருத்து

இறந்த நபர் அவருக்கு ஏற்பட்ட பல தரப்பட்ட காயங்களினால் உண்டான அதிர்ச்சியினாலும் ரத்தப் போக்கினாலும் இறந்து இருக்கிறார் என்று கருத்து வழங்கி உள்ளேன். நான் வழங்கிய சடலக் கூராய்வு சான்றிதழ் அ.சா.ஆ.35.

காயம் எண்.1, 2 ஆகியவை ஒரு நபருக்கு நிச்சயமாக மரணத்தை விளைவிக்கக் கூடிய காயங்கள் ஆகும்.

அதே தினம், காலை 8.00 மணிக்கு காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் கொடுத்த மற்றொரு வேண்டுகோளை அதே நேரத்தில் முருகேசன் என்ற 37 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் பிரேதத்தை சடலக் கூராய்வு செய்ய வேண்டி வேண்டுகோள் பெற்றேன். தலையையும், தலை இல்லா முண்டத்தையும் தனித் தனியாக சடலக் கூராய்வு செய்ய வேண்டு பெற்றேன். அந்த வேண்டுகோள் அ.சா.ஆ.36. அதன் பேரில், அதே தினம் காலை 9.15 மணிக்கு சடலக் கூராய்வை ஆரம்பித்தேன். பிரேதம் காவலர் எண். 1341 முருகன் என்பவர் பொறுப்பில் இருந்தது. பிரேதத்தில் உடல் முழுவதும் மரண விறைப்பு காணப்பட்டது.

சுமார் 37 வயது மதிக்கத் தக்க தனியாக துண்டிக்கப்பட்ட ஆணின் தலை தனியாக காணப்பட்டது. அதை பரிசோதித்து ஆய்வு செய்ததில், தலை 4ஆவது மற்றும் 5ஆவது கழுத்து எலும்புகளுக்கு இடையே உள்ள குறுத்து எலும்பை வெட்டியும் அதை சுற்றியுள்ள தசைகள், ரத்த நாளங்கள், நரம்புகள், உணவுக் குழாய், மூச்சுக் குழாய் மற்றும் தண்டுவடம் ஆகியவற்றை வெட்டிய நிலையில் காணப்பட்டது.

வலது தாடையில் வலது கண் புருவத்திற்கு 1.5 செ.மீ. வெளிப் புறமாக 15 து 1.5 செ.மீ. எலும்பு அளவு ஆழம் வரை சென்று இருந்த வெட்டுக் காயம். அந்த காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது அதன் கீழ் உள்ள தசைகள், ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் கீழ் தாடையும் புறப்பகுதியும் வெட்டிய நிலையில் காணப்பட்டது.

- சு.சத்தியச்சந்திரன்

(தலித் முரசு ஆகஸ்ட் 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It