“மலையக இலக்கிய வளர்ச்சியை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் காலக்கணக்கெடுப்பு நடத்தினால் அதை மூன்றாக பிரிக்க வேண்டியிருக்கும். 1930 களுக்கு பிற்பட்ட காலத்தை நடேசய்யர் யுகம் என்றும், 1950 களின் பின்னர் சி.வி வேலுப்பிள்ளை யுகம் என்றும், 1980களுக்கு பிற்பட்ட காலப்பகுதியை சாரல்நாடன் யுகம் என்றும் பிரித்து பார்க்க வேண்டியிருக்கும்.” என்று மலையகம் தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்ற ஒரு இலக்கிய கருத்தரங்கில் மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் எச்.போத்திரெட்டி பதிவு செய்துள்ளார்.
இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சாமிமலை சிங்காரவத்தை தோட்டத்தில் மதுரை மேலூரைச் சேர்ந்த கருப்பையா- வீரம்மா தம்பதியினருக்கு 09.05.1944 அன்று மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் நல்லையா, இவரது தந்தை தோட்டக் கணக்கப்பிள்ளையாகப் பணியாற்றியவர். இவர் தமது ஆரம்பக் கல்வியை சாமிமலை அப்கொட் தோட்டப் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஹட்டன் ஹைலட்ண்ஸ் கல்லூரியிலும் பயின்றார் .
ஹைலண்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் நடத்திய ‘தமிழ்த்தென்றல்’ இலக்கிய இதழில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் , ‘மலைநாட்டு நல்வாலிபர் சங்கம் ’ என்ற அமைப்பில் இணைந்து மலையக இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். கண்டி அசோகா கல்லூரியில் ஆசிரியராக சில காலம் பணிபுரிந்தார்.
அகில இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையமும், பெருந்துறை நிர்வாகம் பற்றிய தேசிய நிர்வாகமும் நடத்திய தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேயிலைத் தோட்டத் தொழிற்சாலையின் உயர் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் சாமிமலை குயில்வத்தையில் தேயிலைத் தொழிற்சாலை அதிகாரியாகவும், புசல்லாவை நியூபிக்கொக், கொட்டகலை டிரெய்டன் , பத்தனை தெளிவத்தை ஆகிய தேயிலைத் தோட்டங்களில் முப்பத்தைந்து ஆண்டுகள் தலைமை தேயிலைத் தொழிற்சாலை அதிகாரியாகவும் பணியாற்றி 2000 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
‘தினகர ’ இதழின் ஆசிரியராக பேராசிரியர் க. கைலாசபதி பொறுப்பேற்றவுடன் தேசிய உணர்வுடன் மண்வாசனை மிக்க படைப்புகளுக்கு களம் அமைத்து கொடுத்தார். வடக்கு, கிழக்கு , மலையகம் என்ற தரமான படைப்புகளை அரங்கேற்றம் செய்தார் . சாரல்நாடன் எழுதிய ‘எவளோ ஒருத்தி’ என்ற சிறுகதையை தினகரன் இதழில் பிரசுரித்த பேராசிரியர் க. கைலாசபதி , அவரது ஆற்றலை இனங்கண்டு தொடர்ந்து எழுதும்படி கைப்படவே கடிதம் எழுதினார்.
மலையகத்தில் ‘மணிக்கொடி’ என்றழைக்கப்பட்ட ‘மலைமுரசு’ இதழில் சாரல்நாடன் பல கட்டுரைகள், சிறுகதைகள் எழுதினார். ‘வீரகேசரி’ இதழிலும் கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். ‘வீரகேசரி’ இதழ் 1962 ஆம் ஆண்டு நடத்திய மலையக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் இவருடைய ‘கால ஓட்டம்’ என்னும் சிறுகதைக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது.
‘சாரல் வெளியீட்டக ’ என்னும் வெளியீட்டகத்தை ஆரம்பித்து விருட்சப் பதியங்கள் (கவிதைகள்) , மனுஷியம் ( சிறுகதைகள்) , மலையக இலக்கிய தளங்கள் ( கட்டுரைகள்), வாழ்வற்ற வாழ்வு (நாவல்) முதலிய பிற எழுத்தாளர்களின் நூல்களையும் , தமது நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
மலை நாட்டு எழுத்தாளர் மன்றம், மலையக கலை இலக்கிய பேரவை முதலிய அமைப்புகளில் இணைந்து செயல்பட்டார். மேலும், துரைவி பதிப்பகம், சாரல் பதிப்பகம், மலையக வெளியீட்டகம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தொழிற்பயிற்சி நிறுவனமான காங்கிரஸ் தொழில் நிறுவனம் போன்ற அமைப்புகள் மூலம் பல மலையக எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டார்.
சாரல்நாடன் படைத்தளித்துள்ள நூல்கள் : 1. சி.வி.சில சிந்தனைகள் , 2. தேசபக்தன் கோ.நடேசய்யர், 3. மலையகத் தமிழ், 4. மலையக வாய்மொழி இலக்கியம், 5. மலைக் கொழுந்தி, 6.மலையகம் வளர்த்த தமிழ், 7. பத்திரிகையாளர் நடேசய்யர், 8. இன்னொரு நூற்றாண்டுக்காய், 9.மலையக இலக்கியம்: தோற்றமும் வளர்ச்சியும் 10. பிணந்தின்னும் சாத்திரங்கள் 11. மலையகத் தமிழர் வரலாறு, 12. கண்டி இராசன் கதை, 13. புதிய இலக்கிய உலகம், 14. பேரேட்டில் சில பக்கங்கள், 15. குறிஞ்சி தென்னவன் கவிச்சரங்கள் , 16. சிந்தையள்ளும் சிவனொளிப்பாதமலை, 17. மலையக நிர்மாணச் சிற்பி நடேசய்யர், 18. இளைஞர் தளபதி இர.சிவலிங்கம், 19. லோறி முத்து கிருஷ்ணாவின் ‘ஜனமித்திரன்’ , 20. மக்கள் கவிமணி ஸி.வி,வேலுப்பிள்ளை, 21. இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள் , 22. வானம் சிவந்த நாட்கள், 23. மலையக விடிவெள்ளி கோ. ந. மீனாட்சியம்மாள் முதலிய நூல்களாகும்.
சாரல்நாடன் எழுதிய ‘மலையக வாய்மொழி இலக்கியம் ’ எனும் ஆய்வு நூல், மலையகத்தில் வரலாறு எழுதப்படாத குறையை பெருமளவில் நிவர்த்திச் செய்யும் தகவல் களஞ்சியமாகத் திகழும் வாய்மொழிப் பாடல்களை எழுத்துத்துறையில் உள்ளவர்கள் ஈடுபாடு கொண்டு சேகரித்து வரும் தலைமுறையினருக்கு கையளிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டது என்பதை நூலின் முன்னுரையில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்நூலில் மலையக வாய்மொழி இலக்கியத்தின் முக்கியத்துவம், சூழலில் பிறக்கும் பாடல்கள், தொழிற் பாடல்கள் , கங்காணிப் பாடல்கள், கும்மியும் கோலாட்டமும், வாழ்வளித்த வாய்மொழிப்பாடல்கள், ஒப்பு நோக்கு, மயக்கும் இன்பம், உணர்வுகளுக்கு வாய்க்கால், அவலக் குரல் முதலிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
வாய்மொழி இலக்கியம் மனித மனத்தின் உள்ளுணர்வைத் தட்டிச் செல்லும் தன்மையுடையது . சந்ததி சந்ததியாக வாய்க்கு வாய் பரவும் பாடல்களாக மாத்திரம் வாய்மொழி இலக்கியம் அமையவில்லை. மாறாக, மொழி தெரிந்தவர்கள் மத்தியில் சந்ததி சந்ததியாக , கலை, மொழி, பண்பாடு, மதநம்பிக்கை , வாழ்க்கைப் பண்பு , வரலாற்று நிகழ்வு என்பனவற்றை பின்னிப் பிணைந்து செல்லும் தொடர்பு சாதனமாகவும் விளங்குகிறது ” என சாரல்நாடன் இந்நூலில் கருத்துரைத்துள்ளார்.
மலையக வாய்மொழிப் பாடல்களைப் பற்றி எழுதும் பொழுது , அவை அந்த மக்கட் கூட்டத்தினரின் வரலாற்றுச் சான்றுகளாக மட்டும் அமையவில்லை: அவர்களது கனவுகளின் இலட்சியக் குரலாகவும் விளங்குகின்றன” என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி கருத்துரைத்துள்ளார்.
“தமிழர் தம்முன்னே இலக்கியத்தை வளர்ப்பதற்கு முன்பே கட்டில்லா இலக்கியமாகிய நாடோடிப் பாடல்கள் வளர்ந்து வந்தன. தமிழ்ச் சாதிக்கும் பழம் பாடல்கள் அதிகம், பழமொழிகள் பலப்பல, மனித குலத்தின் அழகை மாத்திரம் புலவர்கள் தம் கவிகளில் காட்டுகிறார்கள். நாடோடிப் பாவலனோ அழகையும் காட்டுகின்றான். அழுக்கையும் காட்டுகிறான். ” என ‘மலையருவி’ இதழில் எழுத்தாளர் சிதம்பரம் பதிவு செய்து உள்ளார்.
“எழுதப் படிக்கத் தெரியாத பாட்டாளி மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் ‘ நாட்டார் பாடல்’ என அழைக்கப் பெறும் வாய்மொழிப் பாடல்கள் எல்லா நாடுகளிலும், எல்லா இன மக்களிடையேயும் இருப்பது போலவே இலங்கை மலையக மக்களிடையேயும் வாய்மொழிப் பாடல்கள் ஏட்டில் எழுதா இலக்கியமாக இருந்து வருகின்றன. தென்னிந்தியத் தமிழ் மக்களின் வம்சாவழியினர் என்பதால்- தென்னிந்திய –தமிழக நாட்டார் பாடல்களை ஒத்த பல பாடல்கள் இவர்தம் வாய்மொழிப் பாடல்களில் இருக்கின்றபோதும், இலங்கையில் மாற்றம் அடைந்த இவர்தம் வாழ்க்கைச் சூழல்கள் இயல்புகளுக்கேற்ப இந்த வாய்மொழிப் பாடல்களும் மாற்றமடைந்து இம்மலையக மக்களுக்கேயுரிய தனித்துவமிக்க பாடல்களாக இருப்பதை அவதானிக்கலாம்”. என தேசிய கலை இலக்கியப் பேரவை பதிவு செய்துள்ளது.
‘சி.வி. சில சிந்தனைகள் ’ என்ற நூலில் சி.வி.வேலுப்பிள்ளை பற்றி புதிய தகவல்களையும், மறக்கப்பட்ட அவரது வாழ்வின் பக்கங்களையும் மீட்டெடுத்து அளித்தார். மேலும், இந்நூலில் இரண்டெழுத்து , ஏழு பேரில் இவரும் ஒருவர், இருளில் ஒளி, ஆழப்பார்வை, கவிதை நூல் பிறந்தது , தேயிலைத் தோட்டத்திலே , உழைக்கப் பிறந்தவர்கள், பேனாச் சித்திரங்கள் முதலிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
“அவருக்கு ஏகோபித்த புகழையும் பாராட்டுதலையும் மலையகத்தைச் சாராத மற்ற எழுத்தாளர்கள் கலைஞர்கள் மத்தியில் மட்டற்ற மதிப்பையும் பெற்றுக் கொடுத்தது, அவரது கலை இலக்கியப் பணிகளே ஆகும். தொழிற்சங்கவாதிகளில் தனித்தன்மை கொண்ட அவர் உடலால் தொழிற்சங்க இயக்கத்துக்கு அயராது உழைத்தவர் எனினும் உள்ளத்தால் இலக்கியத்தையே உயிராய்க் கொண்டிருந்தவர். தமிழிலும் , ஆங்கிலத்திலும் தனது படைப்புகiச் செய்ததன் மூலம் தமிழின் எல்லைகளுக்கப்பாலும் தான் சார்ந்த சமூகத்தின் துயரம் தோய்ந்த அவலங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றவர் சி.வி.”எனப் புகழ்ந்துரைத்துள்ளார்.
‘தேசபக்தன் கோ. நடேசய்யர்’ என்ற நூலில் , மலையக மக்களின் இலக்கிய வரலாற்றின் தோற்றத்துக்கும், அரசியல் விழிப்புணர்வுக்கும் நடேசய்யர் ஆற்றிய பங்களிப்பு குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
‘ பத்திரிகையாளர் நடேசய்யர் ’ என்ற நூல், மலையகத் தொழிற்சங்கவாதியான தேசபக்தர் கோ. நடேசய்யரின் பத்திரிக்கைத்துறை பங்களிப்பை ஆய்வு செய்து சிறப்பாக பதிவு செய்துள்ளார்.
மேலும் , இந்நூலில் மலையகமும் இந்தியா வம்சாவளியினரும் , நடேசய்யரின் இலங்கை வருகை, நடேசய்யரின் தொழிற் சங்க உலகம், நடேசய்யரும் சட்டசபையும், நடேசய்யரின் பத்திரிகை உலகம், நடேசய்யரின் பதிப்புலகம் முதலிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
மேலும், சட்ட நிரூபண சபைக்குத் தெரிவு , தொழிலாளர் சம்மேளனம், தொழிலாளரும் சம்மேளனமும், மலைகளைக் கலக்கிய சண்டமாருதம், சம்பவங்கள் சாட்சியங்களாகின்றன , மீனாட்சி அம்மையாரின் மேதகு பங்களிப்பு , நடாத்திய பத்திரிகைகள், ஆசிரியர் தலையங்கங்கள் , வெளியிட்ட நூல்கள் , சட்டசபையில் நடேசய்யர், சில கண்டனங்கள் உட்பட 19 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இவர் எழுதிய ‘மலையகத் தமிழரின் வரலாறு ’ என்னும் நூலில் நிலவரி, ரயத்துவாரி முறை, பஞ்சம், தமிழர்கள் கடல் கடத்தல், கங்காணி முறை , மலையகத் தமிழரின் அரசியல் அனுபவங்கள், நாடற்றோர் பிரச்சனை , மறக்க முடியாத நிகழ்வுகள், மலையக மக்கள் சமூகம் , தோட்டப்புறக் கல்வி , வீடுகள் , காணிகள், மாறிவரும் நிலைமைகள், மலையக மக்களின் வளர்ச்சிப் படிகளில் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
சாரல்நாடன் எழுதிய ‘இன்னொரு நூற்றாண்டுக்காய்’ என்னும் நூலில் பெண் வைத்தியர் , சமுதாயப் பணியில் பெண்கள், காலப் பின்னணி, மகளிர் வாக்குரிமைச் சங்கம், பெண்கள் முன்னேற்றம், சர்வஜன வாக்குரிமை முதலிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
‘மலைக்கொழுந்து’ என்ற இவரது சிறுகதை தொகுப்பு நூல், மலையகத் தேயிலைத் தோட்டங்களில் உழைக்கும் தொழிலாளர்களது யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பனவாகும். கற்பனை குறைந்து சிறப்புப் பெறும் இக்கதைகள் வளர்ச்சியடையும் சமுதாயத்தின் சமகால வரலாற்று நிகழ்வாகவும் அமைந்துள்ளன.
“ இல்லாததையும் பொல்லாததையும் எடுத்தியம்பி மாசீயும் பொன்னும் தேயிலைத் தூரில் தோண்டி எடுக்கலாம் ’ என மக்களை நம்ப வைத்தனர். வெகு விரைவில் செல்வம் குவித்து தாயகம் திரும்பலாம் என்ற ஆசையை வளர்க்கும் விதத்திலேயே இந்த மக்களிடையே பிரச்சாரம் செய்தனர். தோட்டத்துக்குச் செல்லும் வரைதான் அவர்கள் சுரண்டப்படாது கவனிக்கப்பட்டனரேயன்றி , அதற்குப் பின்னர் அல்ல. உண்மையில் அவர்கள் சுரண்டப்பட்டதெல்லாம் தோட்டத்துக்கு வந்த பிறகு தான் ” என ‘ மலையகத் தமிழர் ’ என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.
இலங்கை மலையகத்துக்கு வந்த தென்னிந்தியத் தமிழர்கள் இங்கு நிலவிய மிகமிக மோசமான வாழ்க்கைத் தரத்தை விரும்பாது உடனே திரும்பிச் செல்லத்தான் விரும்பினர்.
“ கொங்காணி போட்டும் பழக்கமில்லை - நாங்க
கொழுந் தெடுத்தும் பழக்கமில்லை
சில்லறை கங்காணி சேவுகமே –எங்களைச்
சீமைக்கு அனுப்புங்க சாமி சாமி ”
- மலையக கதைப்பாட்டில் ஒரு பாடல்.
‘ மலையகத் தமிழர் ’ என்னும் நூலில் மலையகத் தமிழர்களின் வரலாற்றை விவரிப்பதுடன் , அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர ஏதுவான காரணங்கள் , இலங்கை மலைத் தோட்டங்களில் பட்ட துயரங்கள், மலையக மக்கள் மத்தியில் வழக்கிலிருந்த சொற்கள் என்ன கருத்தோடு பயன்படுத்தப்பட்டு வருகின்றன, இவற்றில் பொதிந்துள்ள அர்த்தங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளக்கூடியது என்ன, இவர்கள் வாழும் மலைத்தோட்டங்களின் பெயர்கள் சூட்டப்பட்டதற்கான காரணங்கள் என்ன என்பன போன்ற விவரங்களைக் கூறியுள்ளார்.
‘மலையக இலக்கியம்: தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் நூல் மலையக இலக்கியம் உருவான வரலாற்றையும் அதன் ஆரம்ப நிலைப்பாடுகளையும் பேசுகிறது. மேலும் இந்நூலில் பத்தொண்பதாம் நூற்றாண்டில் கண்டி, ஆரம்ப முயற்சிகள் , வாய்மொழிப் பாடல்கள், பாடலாசிரியர்கள் , புதிய மாற்றங்கள் , கட்டுரைகள் , கவிதைகள், நாவல்கள் முதலிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
சாரல்நாடன் எழுதிய‘இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள் ’ எனும் ஆய்வு நூலில் , மலையக அறிமுகம், மலையக இலக்கியம் , தோற்றம் பெறும் மலையகச் சிறுகதை, வளர்ச்சி கண்ட எண்பதுகளில் மலையகம், மலையக பாடலாசிரியர்கள், மலையகக் கவிதைகள், மலையகக் கட்டுரைகள், மலையகத் தமிழ் நாவல்கள், மலையக நாடகங்கள் , ஆங்கில / மலையாள மொழிகளில் மலையக வாழ்வு முதலிய தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், மலையகம் தொடர்புடைய தமிழ் இதழ்கள், மலையகத்தில் வெளியான நூல்கள், மலையக இலக்கிய ஆளுமைகள் என்பன போன்ற பட்டியல்கள் பின்னிணைப்பாக தொகுக்கப்பட்டுள்ளன.
‘கண்டிராசன் கதை’ என்னும் நூலில் நாயக்கர் வம்சம், விஜயசிம்மனுக்குப் பிறகு, விக்கிரமனின் ஆட்சி, கண்டி மன்னன் கைது, மன்னர்கள் ஆற்றிய பணிகள், தமிழ் நாட்டில் கதை வடிவில் , கண்டிராசன் எழுத்துவடிவில் எனப் பல அத்தியாயங்களைக் கொண்டு , கண்டிராசன் கதை விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
‘ மலையகம் வளர்த்த தமிழ் ’ என்னும் நூலில் ஒரு சமூகத்தின் சோகக்கதை, நூலக சேவைகளில் இன்றைய நிலையும், அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியமும், கொட்டிக் கிடக்கும் தங்கச் சுரங்கம், நூல் வெளியீட்டு முயற்சிகள், மலையக சிறுகதை இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும், மொழி, பண்பாடு பற்றிய ஒரு கண்ணோட்டம், மலையகத்தில் ஆங்கிலப் பிரயோகம் பெற்ற தமிழ் வழக்குகள், இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலப் பகுதியில் மலையகக் கவிதைகள், மலையகம் வளர்த்த தமிழ், இலக்கிய வழிகோலிகள் , மலையகத் தொடர்புடைய தமிழ் இதழ்கள் எனப் பல்வேறு தலைப்புகளில் மலையகத்தில் தமிழ் வளர்த்த வரலாற்றை பதிவு செய்துள்ளார்.
கவிஞர் தென்னவனின் கவிதைகளைத் தொகுத்து நூலக வெளியிட்டுள்ளார் சாரல் நாடன். கவிஞர் தென்னவனின் கவிதைகளிலும் , பாடல்களிலும் காட்சிப்படுத்துந்திறன் நிறைந்து காணப்படுகின்றன. மலையகப் பெண்கள், புதிய உலகம், தொழிலாளத் தோழர்கள், இரங்கல் பாக்கள், இன வன்முறைகள், புதுக்கவிதை , குறும்பா என்ற அவரது ஆக்கங்கள் சமுதாயப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது என தமது அறிமுகவுரையில் பதிவு செய்துள்ளார்.
வணக்கம்
“தடுக்கிடும் சேலையென்று
தகுவதாய் மடித்துக்கட்டி
படங்கினை இடையில் சுற்றி
படர்தலை முக்காடிட்டு
அடைமழை தவிர்க்க வேண்டி
அணிசேர் கம்பளியை
அடுக்கியே மலையிலேறும்
அஞ்சுக பாவாய் கேள் ! ”
என கொழுந்தெடுக்கும் மலையகப் பெண்ணுக்கு சேதி சொல்லும் இந்த கவிதையின் பகுதி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ குறிஞ்சிப் பூ கவிதைகள் ’ எனும் மலையகக் கவிதைகள் அடங்கிய தொகுதியில் இடம் பெற்ற சாரல்நாடன் கவிதையாகும்.
சாரல்நாடனின் ஆய்வு இலக்கிய பணிகளில் மிக முக்கியமான பண்பு ஒன்றாக அமைந்தது ‘மலையகம்’ என்ற கருத்துருவாக்கம் ஆகும்.
“இலங்கையைத் தாயகமாக வரித்துக் கொண்டவர்களும், இலங்கைத் தாயகத்திலே பிறந்தவர்களும் தங்களை இலங்கையர் என்ற முழு உணர்வோடு சொல்லிக் கொள்ளும் நிலையை அரசியல் சமத்துவம் ருசுபடுத்த வேண்டும். அது எப்போது நிகழும் என்பதை நாம் ஆக்கப்பூர்வமாக உணர்ந்திட வேண்டும். அன்றுதான் நமது பெருமையும் நிலை நாட்டப்படும் ” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாத இதழான ‘ மாவலி ’ யில் 1973 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில் சாரல்நாடன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வாழ் இந்தியவம்சாவளித் தமிழர்கள் இலங்கையின் எந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தாலும் மலையகத் தமிழர் என்று குறிப்பிடும் வழக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. மலையக எழுத்தாளர்கள் யாரும் ஆர்வம் காட்டாத ஆய்வுத்துறைகளில் அக்கறை காட்டினார் . தகவல்கள் சரியானவையா, ஆதாரங்கள் உண்மையானவையா என்பதை தேடிப் படித்து விளக்கம் பெற்றார். தேனீக்கள் பறந்து பறந்து பூக்களில் மகரந்தத்தை சேர்ப்பது போல, நூல் நிலையங்களைத் தேடிப் போனார். கொழும்பு தேசிய சுவடிக்கூடம், நூதன சாலை நூலகம், கண்டி சத்தியோதய நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், இந்தியத் தூதரக நூலகம், கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகம், அட்டன் கிறிஸ்துவ தொழிலாளர் சகோதரத்துவ நூலகம், லேக்ஹவுஸ் நூலகம், பல்கலைக் கழக நூலகம் போன்றவற்றில் இருந்து அரிய பல நூல்களைத் தேடிப்படித்தார். தேசிய சுவடிக் கூடத்தில் பழைய பத்திரிகைகளை அணுகி ஆராய்ந்தார். அவரின் தேடல்களின் அறுவடை தான் ‘தேசபக்தன் கோ. நடேசய்யர், ’ ‘ பத்திரிகையாளர் நடேசய்யர் ’ என்ற மலையகத்தின் மாமனிதரின் செயற்பாடுகள் பற்றிய நூல்கள் . இந்த இரண்டு நூல்களும் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றன.
“மலையக இலக்கியம் என்று குறிப்பிடப்படுவது , இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய இலக்கியம் என்ற நிலையைக் கடந்து வளர்ச்சியடைந்து இந்திய வம்சாவாளித் தமிழர்களாக இலங்கையில் வாழுகின்ற இன்றைய அரசியல், கல்வி, பொருளாதாரத்துக் கூடாக தம்மை இனம் காட்டத் துடிக்கின்ற ஒரு மக்களைப் பற்றிய இலக்கியம் என்று இன்று பொருள் கொள்ள வேண்டும் ” என ‘மலையக இலக்கியம் ’ குறித்து சாரல்நாடன் வரைவிலக்கணம் வகுத்தளித்துள்ளார்.
இலங்கைக்கு வந்தவர்கள் அனைவருமே தமிழ் நாட்டில் சோற்றுக்கு வழியற்றவர்கள் தான். பொருளாதாரத்தால் நாம் மிகவும் ஏழைகள். சுமார் எண்பது சதவீதம் இலங்கை வந்தவர்களெல்லோரும் தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லப்படும் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். எனவே இவர்கள் சமூகத்தில் பலமிழந்தவர்கள் . தங்களின் சொந்தக் கிராமங்களில் அடிமைகள் போல் வாழ்ந்தவர்கள் இவர்கள். இலங்கை வந்து சில ரூபாய்களைக் கையில் பெற்றதும் அது என்னவோ பெருந்தொகையாக இவர்களுக்குப்பட்டது. அவர்கள் அதிகம் சம்பளம் பெறுவதாக நினைத்தார்கள். அவர்கள் எல்வோரும் கூலிகள். எனவே, ஒரு கங்காணி வேலையைப் பெறுவதையும், தபால் பையனாக இருப்பதையும் பெரிதாக எண்ணினர். சமூகத்தில் கீழ்நிலையிலிருந்த அவர்கள் பங்களாவில் துரை முன் நிற்பதை ஒரு அரசன் முன்னால் மாபெரும் அரண்மனையில் நிற்பதாகக் கருதினர். இப்படி இவர்கள் வாழ்ந்து தோட்டத்தையே உலகமென நினைத்து வெளி உலகத்தைப் பற்றிய செய்தியறியாது உலகத் தொடர்பற்று வாழ்ந்தனர்.” தேசபக்தன் இதழ் ‘இந்தியத் தொழிலாளித்துயர்’ எனும் இக்கட்டுரையை 1929 ஆம் ஆண்டு வெளியிட்டது.
“நாட்டின் பொருளாதாரத்திற்கும் வளப்பெருக்கத்திற்கும் ஓயாது உழைத்து வரும் ஒரு சமூகத்தின் மனிதாபிமான வளர்ச்சிக்கு ஏதும் செய்யாமல் அசட்டையாயிருப்பது பரிதவிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, அது எந்த ஒரு ஆரம்ப அரசாங்கத்திற்கும் அவமானம் நிறைந்த பழிசொல்லே ஆகும். அவ்வப்போது அரசாங்கங்கள் பல உறுதிமொழிகளைப் பக்தி சிரத்தையோடு பல தடவைகள் கூறிய போதும், நடைமுறையில் அவை செயற்படுத்தப்படவில்லை. அதனால்தான் இம்மக்கள் இன்று மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். ” – எனத் ‘தொழிலாளி’ இதழில் ‘இலங்கை இந்தியர் உரிமை ’ என்ற கட்டுரை 1938 ஆம் ஆண்டு வெளிவந்தது.
இந்தியக் கூலிகள் இலங்கைத் தோட்டங்களில் கூலி ஜீவனஞ் செய்யத் தலைப்பட்ட நாள் முதல் அவர்கள் கஷ்டத்தையே அனுபவித்திருக்கிறார்களென்பது ஒப்ப முடிந்த விஷயம். காரணத்தை ஆலோசிப்போமானால் அவர்களின் நலவுரிமை, சுகாதாரம் முதலிய விஷயங்களில் தோட்டச் சொந்தக்காரரும், உத்தியோகத்தர்களும், பிறரும் அக்கறையற்றிருந்ததாகும். அவர்கள் தோட்டங்களில் நடத்தப்பட்டு வரும் முறைகள் பற்றி அடிக்கடி பத்திரிகை வாயிலாகவும் , பிற வாயிலாகவும் அறிந்து வந்திருக்கிறோம். அவற்றை மனுஷ தர்மத்துக்கு உகந்தவைகளாக கூற முடியாது. தோட்டங்களுக்குச் செல்வோர் அநேகமாக அடிமைகளைப் போலவே கருதப்படுதலியல்பு. இன்னும் சொல்வோமெனில் அவர்கள் தேயிலைத் தோட்டங்களிலுள்ள தேயிலை இயந்திரங்களாக எண்ணப்பட்டு வருகின்றனர். இயந்திரத்தை நினைத்தபடி இயக்குவது போல அவர்களும் இயக்கப்படுகின்றனர்.
இயந்திரத்தை எடுத்துக் கொண்டால் அதன் மட்டில் இயக்குவோர் மாத்திரம் அதிகாரத்தைச் செலுத்த முடியும். நமது சகோதரர்களாகிய கூலி ஆட்களை எடுத்துக் கொள்வோமாயின் அவர்களை இயக்குவோர் ஒருவரல்ல, பலருளர். பெரியதுரை, சின்னத்துரை, கண்டக்டர், கணக்குப்பிள்ளை , கங்காணி முதலிய இவ்வகையறாக்களின் இஷ்டத்தை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். ஒருவன் இருவருக்கு ஊழியராய் இருக்க முடியாதென்பது அனுபவம். அப்படியிருக்க எழுத்து வாசைன தெரியாத கூலியாட்கள் ஒரு தொகையினரின் இஷ்டத்தையும் , எண்ணத்தையும் எவ்வாறு பூர்த்தி செய்தலியலும் ” என ‘இலங்கை லேபர் கமிஷன் ’ என்ற தலைப்பில் 1919 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு பத்திரிகைத் தலையங்கத்தில் , கூலித் தமிழ்க் காலத்தின் தோட்ட நிலவரங்கள் எனத் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளன.
சாரல்நாடனின் இலக்கியப் பணியைப் பாராட்டி இலங்கை அரசாங்கம் ‘கலாபூஷணம் ’ விருது வழங்கி கௌரவித்தது.
இந்தியாவில் உள்ள ஆக்ராவில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘சார்க்’ இலக்கிய விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சாரல்நாடன் கலந்து கொண்டு, நாட்டுக்கும், தமிழ் இலக்கியத் துறைக்கும் பெருமை சேர்த்தார்.
“மலையகத்தின் மக்களின் வாழ்க்கை , உழைப்போடு இணைந்த வார்த்தைகள், துன்பங்கள், போராட்டங்கள் சமுதாய உணர்வை மேம்படுத்த உதவுகின்றன. இக்கதைகள் வளர்ச்சியடையும் சமுதாயத்தின் சமகால வரலாற்று நிகழ்வாகவும் உள்ளது”. என ஈழத்து நாவல் இலக்கிய முன்னோடி செ. கணேசலிங்கன் ‘மலைக் கொழுந்தி’ சிறுகதைத் தொகுதியின் பதிப்புரையில் பதிவு செய்துள்ளார்.
“இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய வரலாற்றினை விளங்கவும் , எழுதவும் முற்படுகின்ற எவரும் சாரல்நாடனை அறியாது இருக்க முடியாது. அவரது நூல்கள் இலங்கையின் மலையகப் பிரதேசத்தில் தமிழ் இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை பற்றிய தரவுகள் நுணுக்கமாக தொகுத்து எழுதப்பட்டவையாக உள்ளன. ‘ மலையகம் வளர்த்த தமிழ் ’ என்ற கட்டுரைத் தொகுதி மூலமாக இந்த இலக்கிய வரலாற்றுக்கான ஓர் அடிப்படை ஆவணத்தை தந்துள்ளார். ஈழத்து இலக்கிய வரலாற்றின் மூல நாயகர்களுள் ஒருவர் சாரல்நாடன்” எனப் பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பி புகழாரம் சூட்டியுள்ளார்.
“சாரல்நாடன் மேற்கொண்ட ஆய்வுகள் விதந்து கூறத் தக்கவையாகும். மலையகத்தின் ஆக்க இலக்கியத்துறையிலும் ஆய்வுத்றையிலும் முக்கிய இடம் பெறுபவர் சாரல்நாடன். மலையகம் பற்றி அவர் எழுதியுள்ள பல கட்டுரைகளும் , நூல்களும் இலங்கையில் மனங்கொள்ளத்தக்கவை. அவரது ஆய்வு முயற்சிகளுள் சிறப்பித்துத் கூறக்கூடியவை தேசபக்தன் கோ. நடேசய்யர். சி. வி. சில சிந்தனைகள், மலையக வாய்மொழி இலக்கியம் என்பனவாகும். மலையக இதழியல் தொடர்பாக இதுவரை ஏனையோரிலும் பார்க்க சாரல்நாடனே காத்திரமான சில ஆய்வுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது ” என எழுத்தாளர் க. அருணாசலம் ‘இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள்’ என்னும் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.
“மலைய மாருதம் வீசிடும் சாரல்நாடன்
மரகதத் தேயிலை மலைகளில் உதித்திடும்
செஞ்சுடர் போன்ற தோழருள் ஒருவன்.”
என கவிஞர் . வ.ஜ.ச. ஜெயபாலன் ‘ஒரு அகதியின் பாடல்’ என்னும் தமது கவிதை நூலில் புகழாரம் சூட்டியுள்ளார்.
“மலையக இலக்கியத்தின் முன்னோடியும் , எழுத்தாளருமான கலாபூஷணம் சாரல்நாடன் (சி.நல்லையா) மறைவு தமிழ் இலக்கியத்துறைக்கு மாத்திரமல்ல நாட்டின் ஒட்டுமொத்த இலக்கியத்துறையிலும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த இலக்கியத் துறையின் முன்னேற்றத்திற்கு மலையக இலக்கியத்துறையும் பாரிய பங்களிப்பை செய்துள்ளது. இதில் காலஞ்சென்ற சாரல்நாடனின் பங்களிப்பு அதிகமானது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்” என அப்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தமது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“எண்பதுகளில் மலையகத்தை , மலையகத்திற்கு அப்பால் வாழும் தமிழர்களுக்கு சாரல் நாடன் எழுத்துக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. சாரல்நாடனின் எழுத்துக்கள் தென்றலாக வீசி புயலாக மலையக இலக்கியத்திற்கு வலிமை சேர்ப்பன. மலையக இலக்கிய வரலாற்றில் சாரல்நாடனுக்கு தனி அத்தியாயம் எழுதப்பட வேண்டும்.” என மலையக எழுத்தாளர் அந்தனி ஜீவா பதிவு செய்துள்ளார்.
சாரல்நாடன் 31.07.2014 அன்று கண்டியில் தமது எழுபதாவது வயதில் காலமானார்.
- பி.தயாளன்