“தோட்ட மக்களோடு இவர்கள் உரையாடுவதையோ பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதையோ அனுமதிக்காது தடை செய்தது. தோட்டங்களுக்கு இவர்கள் செல்வதையும் தடை செய்தது இலங்கை ஆங்கிலேய அரசு.

தாங்கொணாத இக்கஷ்டங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றி வழிநடத்த வேண்டுமென்ற நல்ல நோக்கில் தோட்டங்களுக்கு உள்ளே செல்ல முடியாததால் இருவரும் புடவை விற்பனை செய்யும் வியாபாரிகள் போல, பொருள் விற்பனையாளர்கள் போல மாறுவேடம் பூண்டு மக்களிடம் சென்று தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். தாம் இன்னல்பட்டாலும் துன்பத்தில் உழலும் மக்களை ஈடேற்ற இவ்விருவரும் பெரும்பாடுபட்டனர். மீனாட்சியம்மாள் தோட்ட மக்களிடம் சென்று பத்திரிகைச் செய்திகளை வாசித்து விளக்கி காண்பித்துச் செய்திகளை அறியச் செய்தார். அம்மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களது துன்ப துயரங்களை நீக்கிட பெரிதும் பாடுபட்டார்!

meenachiyammalதீண்டாமை எனும் சாதி வேறுபாடு, தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட வகுப்பினரை மிருகங்கள் போல் நடத்துதல், மது அரக்கனின் ஆக்கிரமிப்பு, சீதனக் கொடுமை, பால்ய விவாகம், விதவை மறுமண மறுப்பு, பெண்கல்வி மறுப்பு, பெண் அடக்குமுறை, கற்புக்கலாச்சாரம் போன்ற மிக பிற்போக்கான கொள்கைகளின் மாயையில் சமூகம் இறுக்கமாகக் கட்டுண்டிருந்த காலம். பெண் வீட்டை விட்டு வெளியே வந்தாலே கற்பு பறிபோய்விடும் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டிருந்த காலம். அக்கால கட்டத்தில் மீனாட்சியம்மாள் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் பாடுபட்டார் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என ‘ஈழத்துத் தமிழ்ப் பெண் ஆளுமைகள் என்னும் நூலில் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் பதிவு செய்துள்ளார்.

மீனாட்சியம்மாளின் முதல் கணவர் உடுமலை முத்துசாமி கவிராயர். மீனாட்சியம்மாளுக்கும் உடுமலை முத்துசாமி கவிராயருக்கும் பட்டம்மாள் என்ற மகளும், சண்முகம் என்ற மகனும் பிறந்தனர். பட்டம்மாளுக்கும் தேசிகர் சாரநாதன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சில ஆண்டுகளில் உறவினர்கள் யாரிடமும் கூறாமல் தேசிகர் சாரநாதன் இலங்கைக்குச் சென்றுவிட்டார். இலங்கையில் கோ. நடேசய்யரின் தேசபக்தன் இதழில் பணியில் சேர்ந்தார்.

மீனாட்சியம்மாள் இந்தியாவில் பிற பெண்களைப் போல குடும்ப பெண்ணாக இருந்தார். தமிழிலும், ஆங்கிலத்திலும் நன்கு புலமை பெற்று இருந்தார்.

சாரநாதன் இலங்கையில் பணிபுரிவதை அறிந்த மீனாட்சியம்மாள் தனது மகள் பட்டம்மாளையும், மகன் சண்முகத்தையும் அழைத்துக் கொண்டு கொழும்பு சென்றடைந்தார். தமது மகள் பட்டம்மாளின் வாழ்க்கை இள வயதிலேயே கேள்விக்குறியாகிவிடக் கூடாது என்ற தாயுள்ளத்துடன், தமது கணவர் உடுமலை முத்துசாமி கவிராயரிடம் கலந்துபேசி, சாரநாதனுடன் தமது மகளை சேர்த்து வைத்திட வேண்டுமென்ற நோக்கத்துடன் இலங்கைக்குச் சென்றார்.

கொழும்பு புதுச்செட்டித் தெருவில் ‘தேசபக்தன்’ இதழின் அச்சகமும், கோ.நடேசய்யரின் அலுவலகமும் அமைந்து இருந்தன. அங்கு மீனாட்சியம்மாளும், அவரது பிள்ளைகளும் தங்கினர். அப்போது நடேச்சய்யரை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிட்டியது. கோ.நடேசய்யர் கொழும்பு நகரில் 1926 ஆம் ஆண்டு மீனாட்சியம்மாளை திருமணம் புரிந்து கொண்டார்.

மீனாட்சியம்மாளை 1929 ஆம் ஆண்டு முதல் ‘தேச பக்தன்’ இதழின் ஆசிரியப் பொறுப்பில் நியமித்தார் நடேசய்யர். இதழ் நடத்தும் பணியில் மிகச் சிறப்பாக செயல்படத் தொடங்கினார். ‘தேசபக்தன்’ இதழை தின இதழாக கொண்டு வந்தார். நடேசய்யர் அரசியல் மற்றும் தொழிற்சங்க பணிகளில் கூடுதலாக ஈடுபட்டார். அச்சுகோர்ப்பவர்கள் வேலைக்கு வராத சமயத்தில் சில பெண்களை வைத்து அச்சு கோர்த்து இதழை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தினார் மீனாட்சியம்மாள்.

கவிதையில் அதிக ஈடுபாடு கொண்ட மீனாட்சியம்மாள் தேசபக்தன் இதழில் கர்சியா ஆதிமூர்த்தியின் பாடல்களையும், கவிஞர் வாணிதாசனின் கவிதைகளையும், சந்தசரபம் முத்துசாமிக்கவிராயரின் தேசிய கீதங்களையும் அதிகமாக பிரசுரித்தார்.

தேசபக்தன் இதழில் ‘இந்தியாவின் முன்னேற்றம்’ குறித்து தொடர் கட்டுரை எழுதினார். அத்தொடர் கட்டுரையில் சுதந்திரத்திற்கும், செல்வப் பெருக்கத்திற்கும் சமூக சீர்திருத்தம் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ‘தேசபக்தன் ‘இதழில் பெண்களுக்குச் சம சுதந்திரம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.

“தங்களைப் பெற்ற தாய்மார்களுக்கோ, தங்களுடைய சகோதரிகளுக்கோ சம உரிமை கொடுக்க எண்ணாத ஆண் பிள்ளைகளால் உலக சமாதானம் எவ்விதம் ஏற்படும்? சமத்துவ உணர்ச்சியும், சகோதர உணர்ச்சியும் இல்லாத ஆண்பிள்ளைகளால் நடைபெற்று வரும் அரசாங்கங்கள் ஒருவரை ஒருவர் அடக்கியாள எண்ணுமே தவிர, எவ்விதத்தும் காருண்யம் காட்டமாட்டாது. ஆகவே அரசாங்க விஷயத்திலும் பெண்கள் அதிக பொறுப்பு ஏற்றுக்கொண்டாலன்றி உலக சமாதானமே ஏற்படாது என்பது திண்ணம்.

ஆண்பிள்ளைகள் நம்மை ஒர் சட்டிப்பானை போலவும், அடிமைகள் போலவும், விலைக்கு வாங்கவும், வேண்டியவர்களுக்கு இரவல் கொடுக்கவும் உதவி வந்திருக்கின்றார்கள். பூர்வீகக் காலத்தில் கிரேக்கர்கள் தங்கள் பெண்சாதிகளையும், பெண்களையும் விற்பதுண்டாம். அவர்களுடைய சிநேகதர்களுக்குத் தேவைப்பட்ட காலத்தில் இரவலும் கொடுத்துதவுவார்களாம். தன்னுடைய சீடனுக்கும், அல்கியா பீடிஸ் என்பவருக்கும், சாக்ரடீஸ் என்னும் மகாமேதாவியே தம் சம்சாரத்தை இரவல் கொடுத்தாராம். அவரே கொடுத்தார் என்றால் பிறரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? பிறர் பெண்சாதியை இரவலாக வாங்கிக் கொள்வதோ, பிறருக்கு பெண்சாதியை இரவல் கொடுப்தோ மிகவும் கௌரவம் என்று எண்ணினார்கள்.

பிறர் பெண்சாதியை பெறமுடியாத ஒருவன் மிகவும் கேவலமானவனாக கருதப்படுவது வழக்கம். இவ்வழக்கம் அக்கால யூதர்களிடத்தும், பாபிலோனியர்களிடத்தும் இருந்து வந்திருக்கின்றது.

இந்தியாவிலும் பெண்களை விலைக்கு வாங்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. பெண்களாலேயே நரகம் கிடைக்கிறது என்றும், அவர்களுக்கு யாதொரு உரிமையும் கொடுக்கலாகாதென்றும் ஏற்பாடு செய்து கொண்டனர். இதனாலேயே பெண்களுக்கு சொத்துரிமை இல்லாமல் போயிற்று. ”

“இந்துமதப் பிரகாரம் கலியாணம் ஒரு மத காரியம். அவள் வேறு மதத்தை தழுவினால், தன் புருஷனை விட்டு பிரிய உரிமை பெறுகின்றாள். அதுவும் அவள் புருஷன் அவளுடன் வாழ மறுத்தால் தான் . அவள் வாழ்வதாகச் சொன்னால் அதுவும் முடியாது. சமீபத்தில் ஒரு வங்காளச் சகோதரி முஸ்லீம் ஆகி, புருஷனையும் முஸ்லீம் ஆகும்படி கேட்க, அவன் மறுக்க அவளின் இந்து விவாகம் ஹைகோர்ட்டால் ரத்தாக்கப்பட்டது என்று பத்திரிகைகளில் வாசித்திருக்கலாம்.

மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும், மிகவும் அவசியமான நிலைமைகளிலும் விவாகரத்துக்கு இடம் கொடுத்து அவர்கள் மறுவிவாகம் செய்து கொள்ள அனுமதிக்காவிட்டால், இந்து மதம் பாழாகுவதைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? முஸ்லீம் சட்டம் பலதாரமணத்தை அங்கீகரிக்கின்றது. கிறிஸ்துவ மதம் விபசாரியென்று பெண்களை விலக்கி வைக்க இடம் கொடுக்கின்றது. இவ்வித நிலைமையில் இந்தியாவில் அதிலும் இந்து பெண்களின் நிலைமை மிகவும் தாழ்ந்திருக்கின்றது என்று சொல்லக்கூடும். குடும்பத்தில் கீழ்த்தர நிலைமையிலே அவள் இருக்கின்றாள். குடும்பத்துக்குள்ளாகவே நமக்கு இவ்வளவு வித்தியாசம் கற்பிக்கும் பட்சத்தில் நமது நாடு முன்னேறுவது எப்படி? ஸ்திரிகள் சம சுதந்திரம் உடையவர்கள், சக்தி உருவைப் பெற்றவர்கள், அவளே வீட்டுக்கு ராணி, அவளின்றி மோட்சமடைய முடியாது என்று பல விதமாய்ச் சொல்லியும் பயன் என்ன? தற்கால நிலையிதுவே” என்று பலவித உதாரணங்களைக் காட்டி, தன் கருத்தை வலியுறுத்தும் அவர் கட்டுரையின் முடிவில் மீண்டும் பெண்களுக்கு பகிரங்க அழைப்பு விடுகின்றார்.

“நமது நலவுரிமையைக் காத்துக் கொள்ள நாமே முன்வர வேண்டும். நமக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டிருப்பதால் அரசாங்க நிர்வாகத்திலும், சட்டமியற்றுவதிலும், நமக்கு பாத்தியதை கிடைக்கும்படியோ அல்லது நமது செல்வாக்கு சட்டசபைக்குள் வியாபிக்கும்படி செய்து நாம் நமது நாட்டில் சம சுதந்திரம் அடைய வேண்டும். இது விஷயமாய் எல்லா சகோதரிகளும் என்ன செய்யப்போகின்றார்கள் நமது குரல் சட்ட சபையில் வியாபிப்பதற்கு.”

‘தேசபக்தன்’ இதழில் ஆசிரியர் தலையங்கள் எழுதினார். ‘ஸ்திரிபக்கம்’ என்று பெண்களுக்காக இதழில் ஒரு பக்கத்தை ஒதுக்கி பெண்களின் விழிப்புணர்வுக்காகப் பல கட்டுரைகள் எழுதினார்.மீனாட்சியம்மாளின் எழுத்தாற்றலைக் கண்டு கொழும்பு வாழ் தமிழர்கள் 1930 ஆம் ஆண்டு ‘தேச பந்து’ என்னும் வார இதழுக்கு ஆசிரியராக்கினார்கள். இவ்வார இதழ் இலங்கை அரசை விமர்சித்து பல கட்டுரைகளை வெளியிட்டது.

1928 ஆம் ஆண்டு ஆட்டுப்பட்டித் தெரு 70 ஆம் நம்பர் தோட்டத்தில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் குழுமியிருந்தனர். கூட்டத்துக்கு நடேசய்யர் ரிக்ஷாவில் வந்து கொண்டிருந்தார். அவரை இடைமறித்து சுமார் பத்து பேர் கொண்ட சிங்களக் காடையர் கூட்டம் தாக்கியது. நடேசய்யர் அச்சமடையவில்லை, ஜிந்துபிட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரில் “ பகல் நேரத்தில் கொழும்பு நகரில் சட்ட நிரூபணசபை அங்கத்தினர் ஒருவருக்கு இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது இலங்கையின் சனநாயத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல்” என்று குறிப்பிட்டிருந்தார். இலங்கை ஆங்கிலேய அரசு நடேசய்யரின் உயிருக்கு ஆபத்து நேராதிருக்க வேண்டி பிஸ்டல் துப்பாக்கி வைத்துக்கொள்ள சிறப்பு அனுமதி வழங்கியது. காவல் நிலையத்திலிருந்து கூட்டம் நடைபெறும் இடத்துக்கு நடேசய்யர் வந்தார். நடேசய்யர் தாக்கப்பட்டதையறிந்த கூட்டத்தினர் கொதித்தெழுந்தனர். கூட்டத்தினரை கட்டுப்படுத்த நடேசய்யருடன் வந்த இந்திய பெண்மணி மேடை ஏறினார். அவர் உரையாற்றத் தொடங்கியதும் கூட்டத்தில் உணர்ச்சி அலைகள் பரவியது.

“பல்லாயிரக்கணக்கில் கூடி இருக்கிறீர்கள். உங்கள் தலைவர் இப்படி தாக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தாக்குதல் நடத்திய குண்டர்களின் தலைவன் குணசிங்காவின் சங்கத்தில் இனியும் இருக்கப் போகிறீர்களா? வெட்கம், மானம், ரோஷம் உள்ளவர்கள் தானா நீங்கள்? தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்களே. இப்படி வாழ்வதைவிட நாம் இந்தியா போய் மானத்தோடு வாழ்வோம்.” என்று முழங்கினார் அப்பெண்மணி. “சாண் வயிறு தானே நமக்கு சரீரமெல்லாம் வயிறோ? ஊண் உண்டு வாழ்வதிலும் நாம் உயிர் துறக்கலாமே” என்ற பாடலை பாடி முடித்தார்.

“எதிரியின் தடித்தனத்தை அடக்குவதற்கு செய்ய வேண்டிய காரியத்தை எவர் செய்யாவிட்டாலும் அவர் தேசத்துரோகியாவார். நீங்கள் தேசத்துரோகியாவதற்கு விரும்பிகின்றீர்களா? என்று கூட்டத்தினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். “துரோகியாவதற்கு நாங்கள் எவரும் தயாரில்லை” என்று கூட்டத்தினர் பதில் கூறினார்.

அவரது வீராவேசமான பேச்சும், காதுக்கினிய உணர்ச்சிமிக்கப் பாடலும் எதிரி குணசிங்காவை அயர வைத்தன. அந்த வீரப்பெண்மணிதான் மீனாட்சியம்மாள் ஆவார்.

அன்றைய கூட்டத்தில் மீனாட்சியம்மாள் காட்டிய தீவிரப் போக்கும், உணர்ச்சிப் பூர்வமான பாடலும், வீர உரையும் நடேசய்யரின் நெஞ்சத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

இலங்கையிலிருந்த இருபத்திரெண்டு ஆண்டுகளில் மெய்வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், பசி நோக்காமல் இரவு பகல் பார்க்காது இலங்கை இந்தியர்களின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக உழைத்த கோ.நடேசய்யருக்கு பக்கத்துணையாக மீனாட்சியம்மாள் விளங்கினார்.

“ஆண்களுக்கு சமமாக பெண்களும் சம்பாதிக்கும் புதுமை தோட்டப் பகுதிகளில் தான் காணக்கிடைக்கின்றது. பெண்கள் உழைக்காதிருக்க மனம் வைத்தால் தோட்டங்கள் எல்லாம் காடுமண்டிவிடும். இதை பெண்கள் உணர்ந்து தங்களுக்கு சம சம்பளம் பெறுவதற்கு முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும்.”

“பெண்கள் நலினமானவர்கள், கொழுந்தாய்வதற்கு அவர்களின் நலினம் உதவுகின்றது. வெயிலிலும், மழையிலும், கடும் குளிரிலும் அவர்கள் உழைத்து மாய்வதை கண்டும் காணாததைப் போல் இருக்கும் கல் நெஞ்சர்கள் கங்காணிகளாக இருக்கும் நிலைமை மாற வேண்டும். பெண் பிள்ளைகளின் வேலையை மேற்பார்வை செய்ய பெண் கங்காணிகள் நியமிக்கப்பட வேண்டும்.” என்று மீனாட்சியம்மாள் பெண்களுக்கு சம சம்பளம் வழங்கப்பட வேண்டும், பெண் கங்காணிகள் நியமிக்கப்பட வேண்டுமென கோரிக்கைகளை முன் வைத்து குரல் கொடுத்தார்.

“பாட்டு மக்களை தட்டியெழுப்ப வேண்டும் என்பதில் தளராத நம்பிக்கை கொண்டு செயல்பட்டார். தோட்டச் சூழலில் ஒதுக்கித்தள்ளமுடியாத விதத்தில் நேரடியான உற்பத்தியில் ஈடுபடுவர்களாக பெண்கள் உள்ளனர். உணவு, எரிபொருள், உறைவிடம் உடை என்பவைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள பெண்களது பங்களிப்பு உரிய இடத்தையும் , முக்கியத்துவத்தையும் பெறுவது மிக அவசியம்.

தேயிலைத் தோட்டங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும் வாழுகின்ற பெண் தொழிலாளர்கள் உழைக்க மறுத்தால் இலங்கையின் முழுப் பொருளாதாரமும் முடங்கிவிடும். கல்வி கற்பிப்பதில் நமது கூடிய கவனம் பெண்களின் பால் இருக்க வேண்டும். குடும்பத்தில் குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலை என்பவற்றுக்கப்பால் தொழில் தளத்தில் ஆண்களின் ஆட்சியை வேரறுக்க வேண்டும்” மேற்கண்டவாறு மீனாட்சியம்மாள் பெண் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் தீவரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

“ சட்டமிருக்குது ஏட்டிலே- நம்முள்
சக்தியிருக்குது கூட்டிலே
பட்டமிருக்கு வஞ்சத்திலே – வெள்ளைப்
பவர் உருக்குதுநெஞ்சத்திலே
வேலையிருக்குது நாட்டிலே- உங்கள்
வினையிருக்குது வீட்டிலே”

என்று மீனாட்சியம்மாள் பாடிய தொழிலாளர் சட்டக்கும்மியைக் கேட்டு மெய்மறக்காதவர் யாருமில்லை. மகாகவி பாரதியாரின் பாடல்களை மலையகமெங்கும் பாடிப் பரப்பிய பெருமைக்குரியவர் மீனாட்சியம்மாள்.

மலையகத்தின் முதலாவது தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை 1931 ஆம் ஆண்டு ஆரம்பித்தார் கோ. நடேசய்யர். அந்தத் தொழிற்சங்கத்துக்கு தொழிலாளர்களை அணிதிரட்டி அறிவூட்டி உணர்வு கொடுக்கும் தளபதியாக மீனாட்சியம்மாள் திகழ்ந்தார். 1931 ஆம் ஆண்டு இவரது படைப்புகள் ‘இந்தியத் தொழிலாளர் துயரச் சிந்து’ என்ற தலைப்பில் இருபாகங்கள் வெளியிடப்பட்டது. நடேசய்யருடன் சேர்ந்து மீனாட்சியம்மாள் பொது மேடைகளிலும், பேருந்து நிலையங்களிலும், மக்கள் கூடும் பொதுச் சந்தைகளில் தோன்றி திறந்த காரை மேடைபோல் அமைத்து உரையாற்றினார்கள். அவர்களது உரைகளைக் கேட்டு தொழிலாளர்கள் புத்துணர்வு பெற்று, சங்கமாக அணிதிரண்டு, போராடுவதற்கு தொழிற்சங்கத்தில் சங்கமித்தனர்.

டொனமூர் ஆணைக்குழு 1929 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைபுரிந்த போது சர்வஜன வாக்குரிமைக்காக அந்த ஆணைக்குழுவில் நடேசய்யர் சாட்சியளித்த போது மீனாட்சியம்மாள் பெண்கள் வாக்குரிமைச் சங்கத்துடன் சேர்ந்து இயங்கியதுடன் பெண்களின் வாக்குரிமையை வலியுறுத்தி ‘தேசபக்தன் ’ இதழில் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். ஆங்கிலேய காலனித்துவ நாடுகளிலேயே முதன் முதலாக அனைவருக்கும் ஒரே நேரத்தில் சர்வஜன வாக்குரிமை கிடைத்த நாடு இலங்கை. அதற்கு காரணம் பெண்களின் வாக்குரிமைச் சங்கத்தின் விடாப்பிடியான தொடர் போராட்டத்தின் மூலம் 1931 ஆம் ஆண்டு பெண்களுக்கும் சேர்த்து வாக்குரிமை வழங்கப்பட்டது.

இலங்கை தேயிலைத் தோட்டங்களுக்கு கோ. நடேசய்யருடன் சென்று, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை நேரில் கண்ட மீனாட்சியம்மாள் நெஞ்சுருகினார். ‘கரும்புத் தோட்டத்திலே ’ என்ற பாரதியாரின் பாடல் அவரின் நினைவுக்கு வந்தது.

“தேயிலைத் தோட்டத்திலே –ஆ
தேயிலைத் தோட்டத்திலே
தேயிலைத் தோட்டத்திலே அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்துகின்றனரே – இந்த
மாதர் தன் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய்
சுருங்குகின்றனரே –அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு
மருந்திதற்கில்லையோ –செக்கு
மாடுகள் போல் உழைத் தேங்குகிறார்
நாட்டை நினைப்பாரோ –எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ – அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி
அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே ! ”

என்ற பாடலை எழுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பாடுவார். பாடல் வரிகளை கேட்டு அவர்கள் விம்மி விம்மி அழுதனர். மீனாட்சியம்மாளும் விம்மி அழுதார்.

இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கோ. நடேசய்யரும், மீனாட்சியம்மாளும் துணையாக விளங்கினார்கள்.

“இலங்கைத் தொழிலாளர்களின் தொண்டிற்காகவே இவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்திருக்கின்றார்கள் என்றும், நடேசய்யரை ‘காந்தி அய்யர் ’ என்றும் மீனாட்சியம்மாளை ‘காந்தி அம்மாள்’ என்றும் தமது இலங்கைப் பயணத்தின் போது எழுதிய கட்டுரையில் கல்கி குறிப்பிட்டுள்ளார் ”

‘இந்திய தொழிலாளர் துயரச்சிந்து’ என்ற மக்களை ஈர்க்கும் மீனாட்சியம்மாள் இயற்றிய பாடல்களை, 1930 ஆம் ஆண்டு சகோதரி அச்சகம் வெளியிட்டது. தேயிலைத் தோட்டங்களில் அடிக்கடி நடக்கும் கூட்டங்களுக் வந்து பாரதிபாடல்களை படிக்கும் பெண்மணி இயற்றிய பாடல்கள் என்ற உணர்வில் தேயிலைத் தோட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் அதை வாங்கிப் படித்தனர்.

கோ.நடேசய்யர் தம்பதியினரின் செயற்பாடுகளால் ஆத்திரமுற்ற தோட்டத்துரைமார்கள் அய்யருக்கு எதிரான பிரச்சாரங்களை முடுக்கி விட்டனர். ‘ஊழியன’ என்ற பெயரில் ஒரு எதிர்ப்பு இதழை வெளியிட்டனர். அய்யர் ஒரு பார்ப்பனர். அவரை நம்பி தோட்ட மக்கள் போராட நினைப்பது தற்கொலைக்கு ஒப்பானது என்று பிரச்சாரம் செய்தனர்.

1931 ஆம் ஆண்டு அரசாங்க சபைத் தேர்தலில் நடேசய்யர் போட்டியிட்டார். தமது தேர்தல் நிறமாக சிவப்பை தேர்ந்தெடுத்தார். அவருடைய துண்டு பிரசாரங்கள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அப்போது மீனாட்சியம்மாள்

“ பார்ப்பான் பார்ப்பானென்று – நீங்கள்
பல தடைவ சொன்னாலும்
பார்ப்பான் அல்ல வென்று, அய்யர்
பறையடித்துச் சொல்லலையே ! ”

என்ற பாடலை பாடி தமது கணவரின் நிலைப்பாட்டினை விளக்கினார்.

“ பனையைச் சேர்ந்தானோ அல்லது
பழங்கள் விற்றானோ
தொழிலாளர் கஷ்டங்களை
தொலைக்க பாடுபட்டவரை
பழியாகப் பேசி நீங்கள்
பச்சை நோட்டீஸடித்து மெத்த
பசப்புவதேனோ அம்மா
உசுப்புவதேனோ ! ”
என்று மக்களைப் பார்த்து பாடினார்.

“தொழிலார்களுக்கு அறிவூட்டுவதற்கும் அவர்களது அடிமை நிலையை உணர்த்துவதற்கும், உணர்ச்சிப் பூர்வமாக அவர்களை ஈடுபாடு கொள்ளச் செய்யவும் மீனாட்சியம்மாள் பாடல்களை பயன்படுத்தியுள்ளார்.

எளிமையான நடையில் பெரிய விடயங்களை எடுத்து இயம்பி உள்ளார். பாடல்களை மனோரஞ்சகமான மனதைக் கவர்ந்த சினிமாப் பாடல்களின் மெட்டுக்களில் அமைத்துள்ளார். இதுவும் அவரது யுக்தி, மக்களுக்காக, மக்கள் மொழியில், மக்கள் இசையில் மொழிந்துள்ளார். வாதங்களை அறுத்து, உறுத்து எட்டுப் பக்கத்தில் எல்லாவற்றையும் விண்டு விண்டு கூறியுள்ளார். மந்திரிமாரை எள்ளி நகையாடுகின்றார். அவர்களது சுயநலத்தை கடிந்துரைக்கின்றார். தொழிலாளரைத் தட்டி எழுப்பி கூவி அழைத்து போருக்கு அழைக்கின்றார்.” என மீனாட்சியம்மாளின் பாடல்களை மறு பிரசுரம் செய்து வெளியிட்ட செல்வி திருச்சந்திரன் அதன் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

‘ இந்திய தொழிலாளர் அந்தரப்பிழைப்பு’ என்ற நாடக நூலை 1937 ஆம் ஆண்டு கோ. நடேசய்யர் வெளியிட்டார். அந்நூலில் மீனாட்சியம்மாள் இயற்றிய பல பாடல்கள் இணைக்கப் பெற்றிருந்தன.

மீனாட்சியம்மாள் மக்களிடையே செல்வாக்குள்ள பாடல் மெட்டுகளில் தன் பாடல்களை இயற்றினார். ஜெய மாயாவதாரனே, சந்திர சூரியர், நந்தவனத்தில் ஓர் ஆண்டி, ஆடு பாம்பே, அய்யா ஒரு சேதிக்கேளும், தங்கக் குடமெடுத்து, கும்மி, கல்லார்க்கும் கற்றவர்க்கும், அய்யோ ஈதென்ன அநியாயம் என்று தமது ‘இந்தியர்களது இலங்கை வாழ்க்கை நிலைமை’ என்ற பாட்டுப் புத்தகத்தில் மெட்டுக்களைக் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமை வரவர மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இலங்கை வாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது உரிமைகளை நிலை நாட்டுவதற்காக தீவிரமுடன் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர்களிடையே அதிலும் முக்கியமாக இந்தியத் தோட்டத் தொழிலாளர்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். அத்தகைய பிரசாரம் பாட்டுகள் மூலமாகச் செய்யப்படின் அதிக பலனளிக்கும், இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமையைப் பாட்டுகளின் மூலம் எடுத்துக் கூற முன் வந்துள்ளேன். இந்தியர்களை தூக்கத்தில் ஆழ்த்திவிடாது தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தீவரமாகப் போராடும்படி அவர்களை இப்பாட்டுகள் தட்டியெழுப்ப வேண்டுமென்பதே எனது அவா. ” என ‘இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை’ என்ற தமது பாடல்கள் நூலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“ ஏழைக் கண்ணீர் வடிய தாமும் பார்க்கலாமா
ஏளனம் செய்வோரை நம்மில் சேர்க்கலாமா
கோழைகளல்ல வென்று கூறி கூறியே நாம் கூடுவோம்.”

என்ற பாடல் வரிகளின் மூலம் ஏழைக் கண்ணீர் சிந்துவதை நாம் வேடிக்கைப் பார்த்திட கோழைகள் அல்ல, கூடிப் போராடுவோம் என அழைக்கிறார்.

மகாத்மா காந்தியடிகள் 1929 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார் இந்திய வம்சாவளியினர் தங்களை விடுவிக்க வந்த ரட்சகனாக எண்ணி தாம் வாழும் தோட்டங்கள் தோறும் அவருக்கு சிலைகள் செய்து கும்பிட்டனர். இதை அறிந்த கோ.மீனாட்சியம்மாள்.

“ பொதுஜன சேவையே புனித வாழ்க்கை
புகன்றிடுவோம் நாமே”

“தேச விடுதலை சேவை புரிவதே
திடமெனக் கொள்வோமே
நம் நேசன் காந்தி மகான் நிர்மாணத்தினை
நினைவினில் கொள்வோமே. ”

என்று பொதுமக்களுக்கு தொண்டு செய்வது புனிதமானது, காந்தியின் நிர்மாணத்திட்டங்களை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை வலியுறத்தியுள்ளார்.

“பாய்க் கப்பல் ஏறியே வந்தோம் - அந்நாள்
பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம்,
தாய் நாடென்றெண்ணி யிருந்தோம் -இவர்கள்
தகாத செய்கையைக் கண்டு மனமிக நொந்தோம். ”

புலிகள் தான் வாழ்ந்திட்ட காடு – அது இப்போ
பொழில் சூழும் அழகிய சிங்கார நாடு,
பலியிதற் கிந்திய ஆடு –களைப் போல்
பல்லாயிரம் பேர்கள் உயிரிதற்கீடு.

அஞ்சா தெதிர்த்துமே நின்று –நமக்கிங்கே
அதிக சுதந்திரம் தரவேண்டுமென்று,
நெஞ்சி லுரத்துடன் நின்று –போராடி
நேயரே வருகுவீர் திடத்துடனின்று. ”

இந்தியர்களை இந்தியாவிற்கு விரட்ட வேண்டுமெனக் கூறி திரிந்த மந்திரிகளின் பிரச்சாரத்தை எதிர்த்துப் பாடிய பாடல் இது. மேலும், இப்பாடலில் பாய்மரத்தில் வந்ததையும், வரும் வழியில் பலர் உயிரிழந்ததையும், புலிகள் வாழ்ந்த காட்டினை, மக்கள் வாழும் அழகிய நாடாக்குவதற்கு செய்த தியாகங்களையும், எங்கள் மக்கள் இலங்கையை தாய் நாடென்று எண்ணியிருந்தோம், இப்போது இந்தியாவிற்கு எங்களை விரட்டுகிறார்களே ஆயிரக்கணக்கில் ஆடுகளைப் போல் பலியாகியுள்ளனர் என்பதையும், அஞ்சாமல் நின்று அநியாயத்துக்கு எதிராக நெஞ்சத்துணிவுடன், நேர்மைத் திறனுடன் போராடுவோம் என அறைகூவி அழைக்கின்றார்.

“காட்டைத் திருத்தினது இந்தியன்னாலே நீங்கள்
கற்றுக் கொண்டு பேசுவதும் இந்தியன்னாலே
நாட்டைத் திருத்தினதும் இந்தியன்னாலே
நன்றி கெட்டுப் பேசுவதாகாது சொல்மேலே
தீட்டின மரத்திலே கூரு பார்க்கிறீர்களா இந்தியர்
திட்டத்தை யினிமேலும் எற்குறீர்களா ?
போட்டியிட்டுச் சண்டைக்கே யாள் சேர்க்கிறீர்களா ?
போதங் கெட்ட புத்தியையே போக்குகிறீர்களா ?”

என்ற பாடலில் காட்டைத் திருத்தி நாட்டை உருவாக்கியது இந்திய வம்சாவளியினர். அவர்களது உரிமையை மறுத்து சண்டைக்கு ஆள் சேர்ப்பதை கண்டித்துள்ளார்.

“இந்தியத் தொழிலாளர்கள் இங்கு வந்தார்கள்
இலங்கையைச் செழிக்கவே செய்த தந்தார்கள்
மந்திரிகள் மயக்கத்தில் மதி மறந்தார்கள்
மனம் வந்தபடி சட்டம் பிறப்பித்தார்கள்”

என்ற பாடலில் சிங்கள மந்திரிகள் செய்திடும் சூழ்ச்சிகளையும், மனம் போன போக்கில் இந்திய வம்சாவளியினருக்கு எதிராக சட்டம் இயற்றியதையும் சாடியுள்ளார்.

“ யானை புலி கரடி சிங்கத்துக்கு
ஆயிரமாயிரம் பேர்
வேதனை கொண்டுணர்வு ஆனதுதான்
வீண் போக மாட்டாதே !
இந்தியா விட்டு நாங்கள் தொழிலுக்கு
இலங்கைக்கு வந்த போது
சொந்தமாய் வேண்டியதை எங்களுக்கு
சொரிவோ மென்றீர்கள். ”

என்னும் பாடலில் இந்தியாவிலிருந்து எங்களை இலங்கைக்கு தேயிலைத் தோட்ட தொழில் செய்ய அழைத்து வந்த போது, இலங்கை பிரஜைக்குள்ள அனைத்து உரிமைகளும் உங்களுக்கும் தரப்படும் என்று கூறிவிட்டு, இப்போது நன்றி கெட்டத்தனமாக நடப்பது நியாயமா என்கிறார். அநுராதபுர காட்டு வழியில் யானை, புலி, கரடி, சிங்கம் முதலிய மிருகங்களுக்கு ஆயிரக்கணக்கில் எங்கள் உறவுகளை பறிகொடுத்து விட்டு தோட்டங்களுக்கு வந்து உழைத்ததை உங்கள் நெஞ்சம் அறியாதா என்று கேள்வி எழுப்புகிறார்.

“ சிங்கள மந்திரிகள் கூற்று மிக
சீரு கெட்டதென்று சாற்று
சங்கடமே நேருமென தோற்று திந்திய
சமூகம் நெருப்பாய் வரும் காற்று.
நன்றிகெட்டு பேசும் மந்திரி மாரே உங்கள்
நியாயமென்ன சொல்லு வீரே
இன்றியமையாத வொரு போரே செய்ய
இடமுண் டாக்குகிறீர் நீரே !
சத்யா க்ரகமே யெங்கள் அம்பு அது
சரிசெய்யு மென்பதையே நம்பு
வித்யா விவேகியிடம் வம்பு செய்தால்
வீணிலழிந்து போகும் தெம்பு !

என்ற பாடலில் சிங்கள மந்திரிகளின் நன்றிகெட்ட தனத்தை தோலுரித்துக் காட்டுகிறார்.

கோ. ந. மீனாட்சியம்மாள் தொழிலாளர்களுடன் நின்று சேர்ந்த பாடினார். தொழிலாளர்கள் அவரது பாடல்களைப் பாடினார். தேடித்தேடி அவரது பாடல் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கினார்.

“இலங்கையில் இந்தியர்களுக்காக அநீதிகள் இழைக்கப்படுமானால் அந்த அநீதிக்கு எதிராகப் போராடும் போராளிகளின் முன் வரிசையில் திருமதி. மீனாட்சி அம்மையினரைக் காணலாம்” எனக் கலாநிதி என்.எம்.பெரேரா பதிவு செய்துள்ளார்.

“ஒரு முழு நேர தொழிற்சங்கவாதியாகவும், சமூக அரசியல், பெண்ணிய செயற்பாட்டாளராகவும், பத்திரிக்கையாளராகவும், பாடலியற்றும் கவிஞராகவும், பாடகராகவும் ஒரே நேரத்தில் செயற்பட்ட ஒரு பெண் ஆளுமை இலங்கை வரலாற்றில் முதற் பெண்ணாகவும், ஒரே பெண்ணாகவும் மீனாட்சியம்மையாரைத் தான் காண முடியும்.” என இலங்கை எழுத்தாளர் என்.சரவணன் புகழ்ந்துரைத்துள்ளார்.

“தோட்டம் தோட்டமாகச் சென்று நடேசய்யருக்குத் துணையாக நின்று கருமங்கள் ஆற்றியவர் மீனாட்சி அம்மையாரே. அய்யரின் முன் கோபத்துக்கு ஈடு கொடுத்து, அவரது முரட்டுச் சுபாவத்தைக்கரை புரண்டோடாது கட்டிக்காத்து காட்டாறாகத்தடம் புரளவிடாது தடுத்து நிறுத்தி, தடைகளைத் தகர்த்தெறியும் சக்தியாக உருவாக்கியவர் மீனாட்சி அம்மையாரே ஆவார். இந்தியாவிலிருந்த இலங்கைக்கு வந்து, இலங்கைத் தீவை தமது தாயகமாக மதித்து சேவையாற்றிய நடேசய்யரும், மீனாட்சியம்மாளும் காலத்தால் மதிக்கப்பட வேண்டியவர்கள் என மலையக எழுத்தாளர் சாரல் நாடன் பதிவு செய்துள்ளார்.

1942 ஆம் ஆண்டு தமிழகம் திரும்பிய மீனாட்சியம்மாள் 1943 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் காலமானார்.

- பி.தயாளன்

Pin It