1.0 அறிமுகம்

இலங்கை சிங்களவர், தமிழர், சோனகர், மலையகத் தமிழர், மலாயர், பறங்கியர் என பல இன மக்களைக்கொண்ட நாடாகும். மலையக மக்களுள் பெரும்பான்மையினராக தமிழர்களும், சிறுபான்மையினராக சிங்களவர்களும் சோனகர்களும் அடங்குவர்.

 1977 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் மூன்று இனக்கலவரங்கள் நடந்துள்ளன. முதலாவது இனக்கலவரம் ஐ.தே.க. அரசாங்கம் பதவிக்கு வந்ததும் ஏற்பட்டது. இரண்டாவது இனக்கலவரம் 1981 இல் ஏற்பட்டது. மூன்றாவது இனக்கலவரம் 1983 இல் ஏற்பட்டது. மலையக மக்கள் ஆரம்பகாலங்களில் தமிழர், சிங்களவர், சோனகர் என்ற வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்தனர். 1956க்குப் பின்னர் சிங்களவருக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையில் இன முரண்பாடுகள் தோன்றின. இந்த இன முரண்பாடுகள் பிற்போக்கு அரசியல்வாதிகளால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டன. பிரித்தானியரின் ஆட்சியின் போது சிங்கள இனத்தைச் சேர்ந்த நடுத்தர உயர்ந்த மட்டத்தினர் காணியுரிமை, கல்வியறிவுரிமை, அரசாங்க சேவை உத்தியோகவுரிமை போன்ற பொருளாதார உறுதியும் சமுதாய உயர் நிலையும் கொண்டிருந்தனர்.

srilanka mapஇனக் கலவரங்களின் போது மலையக மக்கள் உயிரிழப்பு, உடைமையிழப்பு என பல இழப்புகளை எதிர்நோக்கினர். இனங்களுக்கிடையே சாதாரண மலையக மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தமைக்கான சான்றுகளும் உண்டு. இன வன்முறையால் அதிகம் பாதிப்படைந்தது மலையகத் தமிழர்களே. பல ஆண்டுகள் சிங்களவர்களோடு கிராமங்களிலும் தோட்டங்களிலும் நகரங்களிலும் இணைந்து வாழ்ந்த மலையகத் தமிழர்கள் இன வன்முறையினால், அப் பிரதேசங்ளை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த சூழலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மலையகத் தமிழர்களை வடக்கு கிழக்கு மாகாணங்களில் குடியேற அழைப்பு விடுத்தது. திக்கற்ற நிலையில் இருந்தவர்களுக்கு இது நம்பிக்கைத் தரும் வகையில் இருந்தமையால் வடக்கு, கிழக்கை நோக்கி பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மலையகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து சென்று சிறு தொகையினரே குடியேரினர்.

மலையக மக்கள் இன வன்முறையின் போது, ஒவ்வொரு இனத்திற்கும் இடையில் ஒற்றுமையாக வாழ்ந்ததுடன் ஒருவருக்கொருவர் துணையாகவும் இருந்தனர். மலையக மக்களில் அதிகமானோர் தமிழர்கள் என்பதால் இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களால் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டனர். சாதாரணமக்கள் இன்றுவரை இணைந்து வாழவே விரும்புகின்றனர். சில முற்போக்கான அரசியல் வாதிகள் இந்த மக்களிடையே பிரிவினையை உண்டு பண்ணிதங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்கின்றனர். இதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் அடங்குவர்.

இவ்வாறாக மலையக மக்கள் இனங்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இனி ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் அவற்றை எவ்வாறு கையாண்டுள்ளனர் என நோக்குவோம்.

1.1 சிறுகதைகளில் இன முரண்பாடுகள்

 மலரன்பன், ‘தார்மீகம்’என்னும் சிறுகதையில் இனமுரன்பாட்டை பிரதான கருவாக்கிக் கொண்டாளும் தோட்டத்துப் பெண்கள் சிங்களக் காடையர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதை ஆரம்ப பகுதியில் கூறியுள்ளமையைக் காணலாம். கண்ணெதிரே தனது மனைவியைப் பத்து பன்னிரண்டிற்கு மேற்பட்ட காடையர்கள் பலாத்கரமாக தூக்கிக்கொண்டு சென்றபோது தன்னால் ஈடுகொடுக்க முடியாது என்றாலும் கையாளாகாதவனாக வெறுமனே பார்த்துக் கொண்டிடுக்க முடியாமல் மனைவியைக் காப்பாற்ற முயற்சி செய்த அவனுக்கு மிஞ்சியதெல்லாம் அடி உதை வெட்டுக்காயங்கள் தான். அவர்கள் அவனைத்தாக்குவதை விட அவனது மனைவியை யார் முதலில் அடைவது என்பதில் அவளோடு இருந்தமையால் அவன் உயிர் பிழைத்தான்... அஞ்சலை பாட்டியின் கடைசி மகளை அவன் திருமணம் செய்துக்கொண்டுபோய் ஆறுமாதம் கூட ஆகியிருக்காது. அவனது மனைவியின் பிரேதம் தம்புள்ளைக்கு அருகில் குளம் ஒன்றில் மிதந்ததாக அகதி முகாமில் பேசிக் கொண்டார்கள் என இச்சிறுகதை நகர்ந்து முடிகின்றது.

 இச்சிறுகதையில் அஞ்சலை பாட்டி தனது கடைசி மகளையும் சிங்கள காடையர்களுக்கு இரையாக்கிவிட்டு அவளும் வேறுசில ஆண்களும் பெண்களும் வயோதிபர்களும் வாலிபர்களும் சிறுவர்களும் காடையர்களின் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடையுடைப்பு என நாலாபுரமும் பரவிய செய்திகள் கேட்டு பதற்றத்துடன் முற்றத்தில் குழுமியிருந்தனர். பக்கத்து லயத்தில் சிங்கள காடையர்கள் புகுந்து அட்டகாசம் செய்தனர். இதையறிந்த மாத்தளை பகுதியைச் சேர்ந்த தோட்டத்திலுள்ள ஆண்கள் எல்லாம் ஒன்றுகூடி இனிமேல் பார்த்து எந்த கரியமும் நடைபெறபோவதில்லை உள்ளதையும் இழக்கவேண்டி வரும் என எண்ணி கையில் கிடைத்த ஆயுதங்களுடன் எதிர்த்து தாக்க துணிந்தனர்.

 பெண்கள், சிறுவர்கள், முதியோர் முதலியோர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அஞ்சலை பாட்டி வைத்தியசாலையை விட இலவசமாக பிரசவம் பார்ப்பதில் கைத்தேர்ந்தவள் என்பதால் அந்த இரவில் அந்த கலவரத்தின் மத்தியில் சிங்கள இனத்தைச் சேர்ந்த அந்த கொலணியில் அப்பம் சுட்டு வித்து தன் காலத்தை ஓட்டும் அலிஸ்நோனா, பதுங்கியிருக்கும் இடத்திற்கு வந்து,

“இந்த யாப்பனே மினுசுனாலதானே இந்த கரைச்சல் அவங்க இந்த ஊர் பிரிச்சுக் கேக்குரதுதானே!...” - அலிஸ் நோனா அரசியல் பேச,

 அந்த இடத்திலிருந்த மூத்த கிழவன் “அவங்க ஊர் பிரிச்சுக்கேட்டா அதுக்கு எங்களப் போட்டு கொல்றதா நாங்கள் என்ன குத்தம் செய்தோம். எதுக்கும் ஒரு நாயம் வேணாமா” என பதிலடி செய்தான். அலிஸ்நோனா தனது பிள்ளைக்குப் பிரசவம் பார்ப்பதற்கு அஞ்சலைப்பாட்டியை அழைக்கின்றாள். இந்த கலவரத்தில் அவளைத் தனியாக அனுப்ப முடியாது என அங்கு இருந்தவர்கள் தடுத்தபோதிலும் அவள் மனிதாபிமானத்துடன் பிரசவம் பார்க்க அலிஸ்நோனாவுடன் புறப்பட்டாள். இவர்கள் வசித்த லயத்தில் கலவரம் முடிந்து சப்தம் ஓய்ந்து மக்கள் தங்கியிருந்த இடத்திற்கு கூட்டத்துடன் வந்த கங்காணி மக்களைப் பயப்படவேண்டாம் வந்தவரெல்லாம் திரும்பி ஓடிவிட்டனர் என்று கூறினார். அவர்களுக்கு அருகில் இருந்தவர்களுக்காக சண்டையிட்டு தலையில் அடிப்பட்ட அந்த தோட்டத்தை சேர்ந்த அப்புகாமி என்னும் சிங்கள தொழிலாளி பின்வருமாறு கூறினார்.

“அவனுக வந்த நேரமே நான் கண்டுட்டேன். நான் முன்னுக்குப் போய் இந்தாப் பாருங்க இங்க உள்ளவங்க எல்லாம் தோட்டத்தில் நாய்ப்பாடுப்பட்டு கால்வயிறு அரைவயிறு கஞ்சிக் குடிக்கிறவங்க, ஒருபாவமும் செய்யாத இவங்கள ஒன்னும் செய்ய வேணாம். பேசாம திரும்பிப் போயிடுங்க, அப்படினேன்.... அடே நான் தமிழன் பக்கம் சேரலடா நியாயம் பக்கம் சேர்திருக்கேன் நீங்க எல்லாம் வந்த வழியே திரும்பிப் போயிடுங்கனு தயவா சொன்னேன். அவனுக கேக்கல, லயத்துக்கு கல்லடிக்கத் தொடங்கிட்டானுக. என்னால பொறுக்க முடியல வாளெடுத்துக்கிட்டுப் பாஞ்சேன்....”

 எனவே, தார்மீகம் என்னும் சிறுகதை அஞ்சலைப் பாட்டியின் மனிதாபிமான தர்மத்தைச் சிறப்பாக எடுத்துக் காட்டுவதுடன், பொடி அப்புகாமி என்னும் சிங்களத் தொழிலாளியின் வர்க்க உணர்வையும் காட்டியுள்ளது.

 தமிழோவியன், ‘மொய் மணக்குது’ எனனும்சிறுகதையில் இன வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைக் காட்டியுள்ளார். கட்டுக்குலைந்து போன தமிழினம், நாட்டில் பட்டுப்போன மரங்களாகவும், சுட்டெரிக்கப்பட்டத் தளிர்களாகவும் தட்டுத்தடுமாறி நின்ற வெட்டவெளியான பாலைவனத் தளிர்கள் நிலை. எரியுண்ட கோயில்கள், இடித்துச்சாம்பலாக்கப்பட்ட இல்லங்கள், தறிக்கெட்டு ஓடிப்போன இனக்கும்பலான மலையக மக்கள் சமுதாயத்தில் அழகமுத்து கங்காணியின் குடும்பமும் பங்கப்பட்ட ஓர் அங்கம் என அந்த குடும்பத்தின் பரிதாப நிலையையும் இன வன்முறையையும் இக்கதையில் காட்டியுள்ளார். இனக்கலவரத்தினால் அன்பழகனுக்கும் அவனின் தந்தை மகளைத் திருமணம் செய்வதற்குப் போட்டத் திட்டம் தடைப்பட்டது. அழகமுத்து குடும்பம் சிகப்பு பாஸ் போர்ட்காரர்கள் அக்கரைக்குப் போய்விடப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆசைப்பட்டு, இந்தியக்குடிகள் எனத் தங்களை அரச வழியாகவே முத்திரை குத்திக் கொண்டது. வன்செயல்கள் பல நடைபெற்றதினால் வள்ள போக்குவரத்து இல்லாமல் அக்குடும்பத்தின் ஆசை தவிடுபொடியாகிவிட்டது.

 இவ்வாறான வேளையில் தான் அன்பழகனுக்கும் பிரேமலதாவிற்கும் காதல் மலர்ந்து திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆரம்பத்தில் அழகமுத்துகங்காணி குடும்பம் எதிர்ப்புக்காட்டினர். அவ்வாறே பிரேமலதா வீட்டாரும் எதிர்ப்புக் காட்டினர். குழந்தையின் முதலாவது பிறந்த நாள் விழாவில் புஞ்சி பண்டாவும் அழகமுத்து கங்காணியும் பன்னீர் தெளித்து, சந்தனம், குங்குமமிட்டு எல்லோரையும் வரவேற்றனர். இன்னொரு பக்கம் அன்பழகனின் அம்மா அஞ்சலையும் பிரேமலதாவின் தாய் முத்துமெனிக்கவும் பேரப்பிள்ளையைத் தூக்கி வைத்துக்கொண்டு போட்டி போட்டுக்கொண்டு கொஞ்சினர். இதன்மூலம் இன முரண்பாடுகள் மலையகப் பிரதேசத்தில் வாழ்ந்த சாதாரண மக்கள் மத்தியில் இல்லை என இச்சிறுகதை ஆசிரியர் காட்டியுள்ளார்.

எம்.வாமதேவன், ‘முடிவு’ என்னும் சிறுகதையில் இன முரண்பாட்டைக் காட்டியுள்ளார். பெரியசாமியார் ராணித்தோட்டத்தில் தலைவனாக இருந்தான். அவனது மகள் கனகம்மா சிறிசேன என்னும் சிங்கள இளைஞனைக் காதலிக்கின்றாள். பெரியசாமியார் தமிழ்ப்பற்று உள்ளமையால் அதை ஆரம்பத்தில் வெறுத்தார். சிறிசேனா அந்த தோட்டத்தில் பிறந்தவன். அங்கு உள்ள தமிழ் மக்களோடு அன்பாக பழகினான். இதனால், இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பிரசாவுரிமைப் போராட்டத்தில் காடையர்கள் புகுந்து செய்த வேளையில் சிறிசேனா இனத்தைப் பொருட்படுத்தாமல் நேர்மையின் உயர்விற்காக அவர்களை எதிர்த்து போராடினான். இதனால் பெரியசாமியாரும் சிறிசேனாவும் வேகமாக மாமனும் மருமகனும் ஆகிவிட்டனர் என்பது இக்கதையின் சுருக்கமாகும்.

 இதன் மூலம் சாதாரண தோட்ட மக்கள் சிங்களவர் - தமிழர் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு தயார் என்பதையும் முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்த சிங்களவர் - தமிழர் தங்கள் இருப்பைத் தக்க வைத்து கொள்வதற்காக சாதாரண தோட்டத் தொழிலாளர்களை இனக்கலவரத்திற்குள் சிக்கவைத்து இன முரண்பாட்டை உருவாக்குகின்றனர் என்பதைக் காணலாம்.

 சிவனு மனோகரன், ‘மலினங்கள்’ என்னும் சிறுகதையில் இலங்கையில் நடைபெற்ற இனவெறி போரினால் வீணாக மலையக உயிர்கள் பலியாகிப் போவதை காகங்களைக் குறியீடாக கொண்டு வெளிக்காட்டியுள்ளதோடு, மலினப்பட்டுப் போன யுத்த தேசத்திலிருந்து பூக்கும் புதுமலர்கள் கூட பிணவாடையை எதிர்கொள்வதையும் மலினங்கள் மலினப்பட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக காகங்களைக் குறியீடாக்கி, அவைகளின் கூட்டுறவின் மூலம் மனித மனங்களுக்குள் ஓர் ஒட்டுறவையும் சித்திரித்துள்ளார்.

 வடகிழக்கில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால், மலையகப் பிரதேசத்தைச் சேர்ந்த மலையக மக்களும் வீணாக பலியாகியதையும் அவர்களின் மரண ஓலங்களையும் இச்சிறுகதை ஆசிரியர் பின்வருமாறு எடுத்துக்காட்டுகின்றார்.

 “அண்டத்தின் நிசப்பதத்தில் மனசின் ரணங்கள் கலைந்து தொடரும் யாத்திரையில் அலறித் துடித்து தஞ்சம் தேடித் திரியும் காக்கைகளின் பரபரப்புகள் பல்வேறு குழப்பங்களை பதியமிட திக்குத் தெரியாமல் எல்லாப் பக்கங்களில் இருந்தும் எழுப்பப்படும் மரண ஓலம் உண்மையை உணர்த்திப் போனது. ஆமாம் மனித மலினங்களை குறி வைத்து எங்கோ ஒரு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது என்ற கசப்பான உண்மை தொடரும் நிழலாய் இன்னுமே மாறாத படிக்கும் இருப்பது புரிந்து போனது. மனிதங்களைக் காவு கொள்ளும் அதே மரண ஒலி செவிகளை செவிடாக்கி நிசப்தம் காணவும் அண்டம் அதிர்ந்து நிசப்திக்கவும் குறியீடு விளங்கி மனசு வலிக்கிறது...”

 கே.கோவிந்தராஜ், ‘மொய்க்காசு’ என்னும் சிறுகதையில் பெற்றோர்கள் மொய்க்காசுக்காக காது குத்தும் சடங்கை தங்களின் மகனுக்கும் செய்ய அதே சடங்கு மகனுக்கு எமனாகவும் மாறிவிட்டதை நினைத்து அவதியுறுகின்றார்கள் எனவும் மகன் ராசுக்கண்ணு சரளமாகச் சிங்களம் பேசக் கூடியவன். ஆனாலும் காதுகுத்து அவனைத் தமிழனென்று காட்டிக்கொடுத்து விடுவதால் இனக்கலவரக் காடையர்கள் புகையிரதப் பெட்டிக்குள் வைத்து அவனை அடித்துக் கொல்லுவதையும் காட்டியுள்ளார்.

 ராசுக்கண்ணு தமிழன் என்று தெரிந்ததும் சிங்கள காடையர்கள் அவனை வெட்டி சாய்த்தனர் என்பதை பின்வருமாறு இச்சிறுகதையில் சித்திரித்துள்ளார், ஆசிரியர்.

 “கைகளில் டோர்ச் லைட்டுகளுடனும் கம்பு, கத்தி, பொல்லுகளுடனும் சில பேர் ராசுக்கண்ணு இருந்த பெட்டியினுள் நுழைந்தனர்.”

 “சிங்களத்தில் ராசுக்கண்ணுடன் தர்க்கம்”

 “ராசுக் கண்ணுவின் காதை ஒருவன் பிடித்தான். ‘அடே கன விதிலா... தெமலு...’( காது குத்தியிருக்கான் தமிழன்) என்று சொன்னதுதான் தாமதம்”

 “தாறுமாறாக வெட்டுகள். அவனால் பேசமுடியவில்லை. நினைவிழந்து கீழே சரிந்தான்.”

 மாத்தளை செல்வராஜா, ‘இன்னும் ஒரு ஜீவன்’, ‘வேதனையே வாழ்க்கையென்றால்...’, ‘ஒரு உயிர் பாதுகாக்கப்படுகிறது’ முதலிய சிறுகதைகளில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டு வாழ்வியல் பிரச்சினைகளையும் இன ஒற்றுமையின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

‘இன்னும் ஒரு ஜீவன்’ என்னும் சிறுகதையில், ஆயாம்மாளாக காட்டப்படும் சிங்களப்பெண் நன்கு தமிழ் தெரிந்தவள் எனவும் மலையகத் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்ந்தவள் எனவும் காட்டப்பட்டுள்ளது. அதனை இச்சிறுகதையின் இறுதிபகுதியில் ஆசிரியர் பின்வருமாறு சித்திரித்துக்காட்டியுள்ளார்.

 “தோட்டத்தில் யாருக்கு குழந்தை பிறந்தாலும் ஆயம்மாள்தான். சிங்களப் பெண்ணாக இருந்தாலும் நன்றாக தமிழ் பேசுவாள். காம்பராவில் இனிமேல் எட்டுபேர் முத்தையாவுக்கு இருந்த களைப்பு, வெறுப்பு எல்லாம் பறந்து விட்டது. பேரானந்தத்தால் கண்ணீர் விட்டான். குழந்தையைக் கையிலெடுத்து கொஞ்சினான்.”

‘வேதனையே வாழ்க்கையென்றால்...’ என்னும் சிறுகதை, கோவிந்தன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக நடந்த இனக்கலவரத்தை எதிர்த்து, ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்தியமையால், கோவிந்தனும் அவனது நண்பர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்டுவதைக் காட்டும். ‘இனவாதத்தை தூண்டி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவன்’ என அவனை தலைக்கீழாகத் தொங்க விட்டு பிளாஸ்டிக் பெட்ரோல் பையில் முகத்தை மூடி கட்டி துன்புறுத்தினர், பொலிசார். எப்படியோ நான்கு மாதங்களுக்குப் பின்னர் அவனும் அவனது நண்பர்களும் விடுதலையாகினர். வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட நண்பன் கந்தசாமி தலையில் காயம் ஏற்பட்டமையால் இறந்து போனான். தோட்ட நிருவாகத்தைப் பொறுத்தவரையில் அநீதிகளைத் தட்டிக் கேட்டமையால், கோவிந்தன் ஒரு புரட்சிக்காரன்; குழப்பக்காரன். பொலிஸார் அவனை கவனித்து வந்தமையால், அவன் மீண்டும் தோட்டத்துக்கு போகாமல், கொழும்பில் பலசரக்குக் கடையொன்றில் வேலை செய்கின்றான். கொழும்பில் குண்டு வைக்கப்பட்டுள்ளது என வதந்தி பரவியமையால், சோதனை மேற்கொண்ட இராணுவத்தினரும் பொலிஷாரும், கோவிந்தன் தமிழன் என்பதாலும் ஆள் அடையாளத்திற்கு பொலிஷ் அறிக்கையும் அடையாள அட்டையும் இல்லாததினால், மீண்டும் கைது செய்யப்படுகின்றான். ஊரில் திடீரென இறந்து போன தந்தையின் பிணத்தையும் பார்க்கப் போக முடியாமல் சிறையில் வாடினான் என இக்கதை நகர்ந்து முடிகின்றது.

 இச்சிறுகதையினூடாக சிங்கள இளைஞர்களில் சில காடையர்கள் மலையகத் தமிழ் மக்களைத் துன்புறுத்தினர் எனவும், அதற்கு பொலிஷாரும் தோட்டத்து சிங்கள நிருவாகத்தினரும் ஆதரவு வழங்கினர் எனவும் காட்டப்பட்டுள்ளன.

‘ஒரு உயிர் பாதுகாக்கப்படுகின்றது’ என்னும் சிறுகதையில், 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறுதியில் நாடு முழுவதும் ஏற்பட்ட இனக்கலவரத்தால், மாத்தளை வாழ் மலையக மக்கள் இடம் பெயர்ந்து, பாடசாலைகளில் தஞ்சம் புகுந்து அங்கு அவர்கள் இட வசதி போதாமையாலும் மலசலக்கூட வசதிகள் இன்மையாலும் சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள், கரப்பிணித்தாய்மார்கள் பட்ட அவலங்களையும், தமிழரைத் திருமணம் முடித்தமையால், சிங்கள தாதி ஒருத்தியும் முகாமிற்கு வந்தமையால், . அவள் மனிதாபிமான அடிப்படையில் கர்ப்பவதியாக இருந்த கலாவதிக்கு பிரசவமும் பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளன.

 இச்சிறுகதை பொதுவில் சிங்கள மக்கள் நல்வர்கள் என்றும் சில இரத்த வெறிப்பிடித்த காடையர்களிடம் தமிழர்கள் சிக்கிவிட்டால், அவர்களின் நிலை பரிதாபமாகி விடும் எனவும் அதற்கு சில அரசியல்வாதிகளும் பெரிய மனிதர்களும் துணை போகின்றார்கள் எனவும் ஆசிரியர் கூறுகின்றார்.

 சிங்கள காடையர்களின் இனத்துவேசத்தையும் இனக்கலவரத்தின் போது சிறியோர் முதல் பெரியோர் வரையும், நோயுற்றோர் முதல் கர்ப்பிணிப்பெண்கள் வரையும் பாதிப்படைந்தனர் என்பதையும் ஆசிரியர் பின்வருமாறு எடுத்துக்காட்டியுள்ளார்.

 “அப்பா இவன்கள் ரவுடிப்பசங்கள் இனத்துவேசம் புடிச்சவனுங்க. பாவம் புண்ணியமெல்லாம் பாக்கமாட்டானுங்க. சின்னப் புள்ளைங்களோட என்னால் இங்க இருக்க முடியாது. கலாவதியும் வயித்துப்புள்ளக்காரி இன்னைக்கு நாளைக்குன்னு இருக்கு...”

 இச்சிறுகதையின் மூலம் இனக்கலவரத்தால், இடம் பெயர்ந்து அகதி முகாமில் வாழும் கர்ப்பிணித்தாய் அடையும் வேதனைகளையும் இராணுவத்தினரும் பொலிஸாரும் அவர்கள் தமிழர்கள் என்பதால், உதவி செய்ய முன்வராததையும் ஆசிரியர் காட்டியுள்ளார்.

 மாத்தளை வடிவேலன், ‘அக்கினி’ என்னும் சிறுகதையில் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் கஷ்டப்பட்டு வேலை செய்த மலையக மக்களின் லயங்கள் பொருட்கள், சில உயிர்கள் இனக்கலவரத்தால் அழிக்கப்படுவதையும் அதனால், இந்தியாவுக்குப் போகவிருந்த சிலரின் ஆவணங்களும், பணங்களும் எரிக்கப்பட்டதனால், அவர்கள் நாடற்றவர்களாக நின்றனர் என்பதையும் காட்டியுள்ளார்.

 சில சிங்கள காடையர்களால் லயத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலையைப் பின்வருமாறு இச்சிறுகதை ஆசிரியர் காட்டியுள்ளார்.

 “லயம் அக்கினி வெள்ளத்தில் குதித்துக் கொண்டிருந்தது! ஆடுகள், மாடுகளை அடைத்த பட்டிகள் அக்கினியில் மூழ்கிக்கொண்டிருந்தன. தீ நாக்குகளிற் சிக்கிய மிருகங்களின் ஓலம்!... அவலக்குரல் எழுப்பி அழுவோரும், சிதறி ஓடுவோரும்! பொருட்களை இழந்தோரின் பரிதவிப்பு!... செய்வதறியாத பிஞ்சுக்குழந்தைகள்! எல்லாமே வெறியாட்டத்தின் விளைவுகள்! எங்கும் மனத்தை குமட்டும் நெடியும் புகையும்! நேரம் நிதானமாகக் கடந்து கொண்டிருக்கிறது. அக்கினி தேவனின் வெறி தணிந்து கொண்டபோது, லயத்தின் தகரங்கள் கூட உருசிக்கிடந்தன!”

இன வன்முறையாளர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஆண்கள், பெண்கள், முதியோர்கள், கர்ப்பிணிப்பெண்கள், நோயாளர்கள் என பலரையும் துன்புறுத்தியதுடன் கொலையும் செய்தனர் என்பதை இச்சிறுகதையில் மறைமுகமாக வெளிக்காட்டுகின்றார், ஆசிரியர்.

 வன்னிப்பகுதியில் மாங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த புயல் பெ. ஸ்ரீகந்தநேசன் அவர்களின் ‘கனவு வாழ்வு’ என்னும் சிறுகதையின் மூலம் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களுடைய வாழ்வியல் பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இனக்கலவரத்தால் விரட்டியடிக்கப்பட்ட மலைநாட்டுத் தமிழர் பலர் வன்னியிலே வந்து குடியேறியமை பற்றிய விபரங்களை அறிய முடிகின்றது. இதனை இச்சிறுகதை ஆசிரியர் பின்வருமாறு எடுத்துக்காட்டுகின்றார்.

 “1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தால் கண்டியில் தமிழர்கள் வீதி வீதியாக வெட்டப்பட்டனர். வயது போனவர்கள், வாலிபர்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரையும் இரக்கமில்லாமல் கொடூரமான முறையில் கொன்று குவித்தனர்.”

“என்னங்க என்னங்க ஏதோ இராத்திரியிலே சத்தம் கேக்குதுங்க சுருக்கா எந்திரிங்க என்று கத்தியதுதான் தெரியும் மூக்காய்யின் தலை வெட்டப்பட்டது. ‘அடோ தெமலா வாடா வெளியே என்று கத்தினான் முனியாண்டியுடன் நண்பனாயிருந்த சிங்களவன். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து முறுக்கேறிப்போயிருந்தது மூக்காயியின் உடல். இதனால், துடிதுடித்து சிறிது நேரத்தின் பின்னரே அவள் உடலில் இருந்து உயிர் பிரிந்தது.”

“திடுக்கிட்டு எழுந்த மூக்காயி முனியாண்டி பிள்ளைகள் மூவரையும் கூட்டிக்கொண்டு, மலைக்குகைக்குள் பின்வாசலாக ஓடி ஒளிந்து விட்டான். சிறிது நேரத்தில் அவன் வீடு கொழுத்தப்பட்டது. அவன் மனைவியின் உடலைக் கூடப் பார்க்கவில்லை.”

 “எங்கு செல்வதென்று தெரியாமல் வீதி வீதியாக ஓடினார்கள். ஏதோ ஒரு புண்ணியவான் இவர்களை இடையில் சந்தித்து வானில் ஏற்றிக்கொண்டு வந்து வவுனியா காத்தான் சின்னக்குளம் என்ற இடத்தில் இறக்கிவிட்டான்.”

 மலையக மக்கள் மலையகப் பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது வன்னிப்பகுதியில் குடியேறியப்போதும் அங்கும் அவர்கள் நிம்மதியாக வாழவில்லை. உள்நாட்டு யுத்தத்தினால், பாதிப்படைந்ததுடன், தமிழர் என்ற பெயரில் வாழ்ந்தமையால் சிங்கள இரணுவத்தால் கைது செய்யப்பட்டு கொல்லப்படுவதையும் காணாமல் ஆக்கப்படுவதையும் இச்சிறுகதையின் மூலம் தரிசிக்கலாம்.

 சிறிய வயதில் மலையகப் பிரதேசத்திலும், இடைவயதில் வன்னிப்பிரதேசத்திலும் இளைஞனாக கொழும்பு பிரதேசத்திலும் பல இன்னல்களுக்கு மத்தியில் இளைஞர்கள் கல்வி கற்றபோதும், பின்னர் அவர்கள் சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக கீழ்வரும் பகுதியைக் குறிப்பிடலாம்.

“குமாரும், ரஞ்சனும் மற்றும் ஐந்து பேரும் டியூசன் வகுப்புக்குச் செல்லும் போது இராணுவத்தின் சுற்றி வளைப்பில் இவர்கள் அகப்பட்டு விட்டார்கள். ஏதோ இவர்களுக்கு இங்கு நிரந்தரப்பாஸ் இல்லை என்று கைது செய்யப்பட்டு களுத்துறைக்கு அனுப்பப்பட்டார்கள்.”

‘மலைகளின் மக்கள்’ சிறுகதையில் சாதாரண சிங்கள மக்களும் மலையகத் தொழிலாளர்களும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்ந்தனர் என்பதும் மலையகத்தமிழர்களில் சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சிங்களவர்களில் சில அதிகாரிகளுமே இனவாதம் பேசுகின்றனர் என்பதும் காட்டப்பட்டுள்ளன.

 பல வருடங்களாக இந்த மண்ணில் கஷ்டப்பட்டு உழைத்த தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு துண்டு நிலம் கூட சொந்தமில்லை. ஆனால், சிங்கள மக்களை தோட்டப்பகுதியில் குடியேற்றியபோது, அதை தடுப்பதற்கு வன்முறையில் இறங்கிவிடக்கூடாது. அவர்கள் இந்த நாட்டு பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர்கள். நாங்கள் முரட்டு செயல்களில் இறங்கினால், அது இனவாதமாக திரிக்கப்பட்டு இனக்கலவரங்களாக உருவெடுக்கும் என்று, தோட்டப்பகுதிகளில் குடியேறிய சிங்கள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு உதவிகள் செய்து, தோட்ட மக்கள் தங்களின் உண்மை நிலையைத் தெளிவுப்படுத்தினர். சிங்கள மக்கள் அம்மக்களுக்கு உதவி செய்யும் மனநிலை வந்தபோது, தோட்டத்தலைவன் இவ்வாறு கேட்டான்.

“நாங்கள் ஒரே இரவில் தளம் வெட்டி சுவர் எழுப்பி - கூரை போடுவதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை.” என்று சாதாரண சிங்கள மக்களின் உதவியுடன், தோட்ட மக்கள் யாவரும் புதிய தேயிலை நிலத்திலுள்ள குடிசைகள் அமைத்து குடியேறினர். லயங்கள் வெறிச்சோடிக்கிடந்தன. இராணுவத்திற்கும் பொலிசுக்கும் குடிமனைகளுக்குள் புக வேண்டாம் என மேலிடம் கட்டளையிட்டது.

‘அனல் காற்று’ என்னும் சிறுகதையில், மலையகத் தமிழ்த் தோட்டத்தொழிலாளர்களின் நிலங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களைச் செய்து, அம்மக்களை வேறு இடங்களுக்கும் தோட்டங்களுக்கும் அனுப்பி வைப்பதும், அதை எதிர்த்து தலைமைத் தாங்கி போராடிய ஆனந்தன் என்னும் தோட்டத்தொழிலாளி கொலை செய்யப்படுவதையும் ஆசிரியர் சித்திரித்துள்ளார்.

 மேகமலை தோட்டப் பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடைபெற்றதையும், அம்மக்கள் வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும் ஆசிரியர் பின்வருமாறு காட்டியுள்ளார்.

 “மேகமலை தோட்டத்து முந்நூற்று ஐம்பது ஏக்கர் நிலத்தை அப்படியே சிங்களக் கிராமவாசிகளின் குடியேற்றங்களுக்காக அரசு சுவீகரிக்கப் போகிறது என்ற ஓர் அறிக்கையை தோட்ட நிர்வாகி தோட்டத் தலைவர்மார்களின் முன்னிலையில் வாசித்துக்காட்டினார். அந்தத் தோட்டத்து மக்களை வெவ்வேறு தோட்டங்களுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அடுத்தக் கிழமை...”

 நவத்தின் ‘நந்தாவதி’என்னும் சிறுகதையில், இனம், மொழி, சாதி முதலிய வேற்றுமைகளை வளர்த்துக்கொண்டு பகை கொள்வதால் உண்டாகும் அபாயம் சித்திரிக்கப்பட்டுள்ளது.

 சாதாரண மலையகத் தோட்டத்தொழிலாளர்களான தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். சில வெறிப்பிடித்தவர்களின் தூண்டுதலினால் இந்த நாட்டில் இனக்கலவரம் நடக்கின்றது என நந்தாவதி என்னும் பாத்திரத்தின் மூலம் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்.

 “அவர்கள் கிராமத்துக்குப் பக்கத்திலுள்ள ‘எலுபுளுவ’ ரப்பர்த் தோட்டத்தில் கூலியாகச் சேர்ந்து இரத்தத்தை வியர்வையாக்கி, அந்த வியர்வையை உணவாக்கும் ‘ஜால வித்தை’யைச் செய்து கொண்டு வருகிறாள் நந்தாவதி!”

 “இந்த விவரங்களை இத்தோட்டத்தில் வேலை செய்யும், ‘மலைநாட்டுத் தமிழர்’ களிடமிருந்து பெற்ற தன் ‘கொஞ்சங் கொஞ்சம் தமிழால்’ கூறிமுடித்தாள் நந்தாவதி.”

 பெனடிக்பாலன், ‘மனிதனும் மனிதனும்’என்னும் சிறுகதையில் இலங்கையில் இனக்கலவரம் நடந்த ஆண்டுகளில் புளத்சிங்களவில் உள்ள கலஹேன இறப்பர்த் தோட்டத்தில் எந்த இனக்கலவரமும் ஏற்படவில்லை என்றும், அத்தோட்டத்தில் சிங்களத்தொழிலாளர்களும், தமிழ் தொழிலாளர்களும் தொழில்புரிந்து லயங்களில் அக்கம் பக்கமாய் வாழ்கின்றனர் எனவும் காட்டியுள்ளார்.

 இக்கதையில் மலையகத் தமிழ் மக்களும் மலையக சிங்கள மக்களும் நல்லவர்கள். சுயநல அரசியல்வாதிகள்தான் மன நிம்மதியை அழித்து இனக்கலவரத்தை உண்டு பண்ணுகின்றனர் என்ற செய்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

செ.கணேசலிங்கன், ‘மரக்கட்டை’, ‘சங்கமம்’, ‘ஆண்மை இல்லாதவன்’, ‘முந்திவிட்டான்’முதலிய சிறுகதைகளில் மலையகத் தமிழ் மக்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இன முரண்பாட்டைக் காட்டியுள்ளார். அத்துடன், சாதாரண மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு முற்பட்டபோதும் அதை பிற்போக்கான அரசியல்வாதிகள் தங்களின் சுயலத்திற்காக தடுகின்றனர் என்ற செய்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

‘மரக்கட்டை’ சிறுகதையில் வருகின்ற பிரேமா, என்ற சிங்களப்பெண் மலையகத் தோட்டத்தில் கண்டக்டர் வீட்டில் வேலை செய்து கொண்டு, கண்ணுச்சாமி என்ற மலையகத்தோட்டத் தொழிலாளி ஒருவனைக் காதலித்தவள். மலையகத்தமிழனான கண்ணுச்சாமி சிங்களப் பெண்ணைத் திருமணம் புரிவதை அவனது சகோதரி விரும்பவில்லை. இதனால், கண்ணுச்சாமியின் சகோதரி தமிழ்நாட்டில் உள்ள தந்தை நோய்வாய்ப்பட்டிருப்பதாகப் பொய் கூறி, அவனை தமிழ்நாட்டிற்கு அனுப்பிவிட்டாள். தமிழ்நாடு சென்ற கண்ணுச்சாமி சகோதரியின் திட்டத்தைத் தெரிந்து பிரேமாவிடம் திரும்பி வருவதற்கு எத்தனிக்கின்றான். ஆனால், குடிவரவுச்சட்டம் அவனுக்கு இலங்கைக்கு வர அனுமதி கொடுக்க மறுத்து விடுகின்றது. கண்ணுச்சாமிக்காகக் காத்திருந்து ஏமாற்றம் அடைந்த பிரேமா ஆற்றில் விழுந்து தன் வாழ்வை அஸ்தமனமாக்குகின்றாள் என இச்சிறுகதை முடிகின்றது. இக்கதையின் மூலம் இனவாதமே இந்த காதல் ஜோடிகளின் பிரிவுக்கு காரணம் என்பதை அறியமுடிகின்றது.

 இச்சிறுகதை ஆசிரியர் கண்ணுச்சாமி என்ற பாத்திரத்தின் மூலம் இனவாத போக்கும் சிங்கள பிற்போக்கு ஆட்சியாளர்களின் மலையக மக்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் விதத்தையும் பின்வருமாறு காட்டியுள்ளார்.

 “பிரேமா! நான் அங்கு வரமுடியாதாம். உன்னைக்காண முடியாதாம். சட்டம் அப்படிப்பேசுகின்றது. தனி மனிதன் தற்காப்புத்தேடுகிறான். தனி இனம், மொழி, மதம் இவற்றைக் கொண்டு மக்கள் பாதுகாப்புத் தேடுகின்றனர். பெரும்பான்மையினர் என்ற மக்களின் போர்வையும் வந்த ஆட்சியாளர் பாதுகாப்பு என்ற பெயரில் தாம் விரும்பியபடி சட்டத்தை ஆக்குகின்றனர். அவர்களும் உணர்ச்சியுள்ள மனிதர்கள்தான். ஆனாற் சட்டம் என்று உருப்பெற்றதும் அது உணர்ச்சியற்ற கட்டையாகி விடுகின்றது. இதை அவர்கள் பின்னர் உணரத்தவறுகிறார்கள்...”

‘சங்கமம்’ சிறுகதையில் வரும் சுதந்திரசேனா என்ற சிங்கள இளைஞன் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தன்னுடன் படித்த தேவி என்ற தமிழ்ப் பெண்ணைக் காதலிக்கின்றவன். சந்திரசேனாவின் தந்தை அலுவிகார, மகன் தமிழ்ப்பெண் ஒருத்தியைத் திருமணம் செய்யப்போவதை அறிந்து அதிர்ச்சியடைகின்றார். அலுவிகாரரும் அவரது மனைவியும் கிராமத்தில் தங்கள் சாதி, அந்தஸ்து எப்படி இருக்கின்றது. இவன் இப்படி செய்து போட்டான் என்று வருத்தப்படும் போது, சந்திரசேனா பின்வருமாறு எழுதி வைத்துவிட்டு, தேவியைத் திருமணம் செய்து கொண்டான்.

“தேவி ஒரு பெண். அவள் தமிழ்ப் பெண்ணா, சிங்களப் பெண்ணா என்பதை நான் விசாரிக்கவே இல்லை. அவள் தன் பெற்றோர் தமிழர் என்று பின்னர் சொன்ன போதேயே தெரிந்தது. இந்தப் பரந்த உலகத்திலே மொழியால் ஏற்படும் வேற்றுமை மிகக் குறுகியது. இதை இன்று நீங்கள் உணராவிட்டாலும் என்றோ ஒரு நாள் கட்டாயம் உணர்ந்து கொள்வீர்கள். நான் எங்காவது வாழ வேண்டும் என்று கருதினால் இந்தப் பெண்ணுடனேயே வாழ முடியும்.”

தேவி தாயாகிவிட்ட நிலையில், பல பகுதிகளில் இனக்கலவரங்கள் ஏற்பட்டு தமிழர்களின் கடைகள், வீடுகள் அனைத்தும் சிங்களக் காடையர்களால் எரிக்கப்பட்டன. இவ்வேளையில் சந்திரசேனாவும் தமிழ்ப்பெண்ணைத் திருமணம் செய்தவன் என்ற காரணத்தால் படுமோசமாகத் தாக்கப்பட்டு, படுகாயம் அடைந்து, இறந்துவிட, தேவியும் குழந்தையும் அநாதரவாக கொழும்பிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

 அலுவிகார இன ஒற்றுமையைத் தங்களால் செய்ய முடியாமல் போனதை உணர்ந்து தேவியின் கையில் இருந்த பேத்தியைப் பார்த்து பின்வருமாறு கூறுகின்றார்.

 “நீ தான் இந்த இரு இனங்களையும் எதிர்காலத்தில் ஒற்றுமைப்படுத்தப் பிறந்திருக்கிறாய். எல்லாருடைய கண்ணீரும் ஒரே மொழியைத்தான் உடையன. தமிழ்க்கண்ணீர் சிங்களக்கண்ணீர் என்றும் வேறுபாடு உண்டா?”

பிற்போக்கு வாதிகளின் இனக்கலவரங்களால் பல உடைமைகள் அழிகின்றன. பல மனித உயிர்கள் தயவு இன்றி பழியாகின்றன. சிங்களவன் - தமிழன் என்பதற்கு அப்பால் நாம் மனிதர்கள், இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற உணர்வு விதைக்கப்படாததால் உண்டாகிய வழுக்களே இந்த நாட்டின் வரலாறாகிவிட்டால் மனிதம் இங்கே மரணித்துப்போய்விடலாம். இந்த நிலையை இல்லாதொழிக்க மொழி, இன, மத பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என இச்சிறுகதை வலியுறுத்துகின்றது.

 யாழ்ப்பாணத்தில் தமிழ் இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது பல இளைஞர், யுவதிகள் இணைந்தனர். சிலர் ஆதரவை வழங்கினர். அப்போது பயங்கரவாத தடைச்சட்டம் அமுலுக்கு வந்தது. அதனால் புஸ்பத்தின் காதலனைக் கைதுசெய்து கொழும்பிலுள்ள நாலிக்கோ பூசாவுக்கு கொண்டுபோனார்கள். இறுதியில் துன்புறுத்தப்பட்டு மகேந்திரத்தினது ஆண்மை அழிக்கப்பட்டு விடுதலையாகின்றான். அவன் வீட்டுக்கு போகாமல் தலவாக்காலைக்குச்சென்று தொழிற்சங்கம் என்ற போர்வையில் இயக்கவேலையில் ஈடுபடுகின்றான்.

 இவ்வாறு வடக்கில் தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தினால், பாதிக்கப்பட்டதைப்போல மலையக பிரதேசத்தில் உள்ள இளைஞர்களும் யுவதிகளும் பாதிக்கப்பட்டனர் என்பதை செ. கணேசலிங்கனின் ‘ஆண்மையில்லாதவன்’ என்னும் சிறுகதை வெளிப்படுத்துகின்றது. பின்வரும் உரையாடலை உதாரணமாக கூறலாம்.

“கொழும்பில் என்னை ஒரு தடவை பார்த்துவிட்டு வந்திருக்கலாமே”,

“அப்படியும் நினைத்தேன். பின்னர் என்னோடு வெளியேறிய தேயிலைத் தோட்டத் தொழிலாளரோடு இங்கு வந்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.”

 செ.கணேசலிங்கன், ‘முந்தி விட்டான்’ சிறுகதையில் வரும் இராமசாமி, பண்டா, சோமாவதி ஆகியோர் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் தொழிலாளர்கள் என்பதன் மூலம் ஒற்றுமைப்பட்டுத் தமது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடித் தம்மையே தியாகம் செய்யும் இலட்சியப் பாத்திரங்களாகப் படைத்துள்ளார். இந்தியத் தமிழனான இரமசாமிக்கும், சிங்களப் பெண்ணாகிய சோமாவதிக்கும் இடையில் காதலும் பல போராட்டங்களுக்கு மத்தியில் தம்மை ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்யும் இயல்பும் இன, மத வேறுபாடுகளை மறந்து எல்லோரும் தொழிலாளர் என்ற வகையில் ஒரே அணியில் நின்று போராட வேண்டும் என வெளிப்படுத்துவதாக இக்கதை அமைந்துள்ளது

 பவானி தேவதாஸின் ‘நினைவில் நீங்காதவன்’ என்னும் சிறுகதையில், 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தால் தமிழர்கள் மோசமான முறையில் பாதிக்கப்பட்டதையும், தமிழர்கள் இனக்கலவரத்தில் பாதிப்புற்றவேளை தன்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை என தற்கொலை செய்து கொண்ட இளம் சிங்களப் பெண்மணி பற்றியும் சித்திரிக்கப்பட்டள்ளன. இவரது இன்னுமொரு சிறுகதையான ‘என் இனிய தோழனே’ என்னும் சிறுகதையில் சிங்களவர்களின் பாதிப்பு சித்திரித்துக்காட்டப்பட்டுள்ளது.

 பொ.கிருஷ்ணசாமி, ‘மன்னிப்பா?, உனக்கா?’ என்னும் சிறுகதையில் 1958 ஆம் அண்டு மே மாதம் நடைபெற்ற இனக்கலவரத்தில் தமிழர்களின் வீட்டில் வேலை செய்த சிங்களவர்களும் கொல்லப்பட்டனர் எனக்காட்டியுள்ளார். வீட்டில் உள்ள உடைமைகள் உடைக்கப்பட்டும் திருடப்பட்டும் இருந்தன. சிங்கள காடையர்களிடம் இணைந்து கொண்ட எந்த தொழிலும் இல்லாத சில தமிழ் இளைஞர்கள் பெண்களின் கற்பினைப்பறித்தனர். கண்ணுக்கு முன்னே பெற்றோர்களைப் பறி கொடுத்து பிள்ளைகள் பரிதவித்தல், கலவரத்தின்போது கர்ப்பமாகி பிள்ளையைப் பெற்றெடுத்த பெண்கள் கணவன் இன்றியும் பிள்ளைகள் அப்பாவின்றியும் வாழும் பரிதாபநிலை முதலிய அசம்பாவிதங்கள் 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தால், மலையக மக்களுக்கு மலையகப் பிரதேசத்தில் ஏற்பட்டமையை இச்சிறுகதை காட்டும்.

 இனக்கலவரத்தின் போது, தனது கற்பைத் தமிழ்க்காடையர்களிடம் பறிக்கொடுத்த கமலா என்னும் ஆசிரிய பெண் என்ற பாத்திரத்தின் மூலம் இனக்கலவரத்தால் ஏற்பட்ட அழிவுகளை பின்வருமாறு சித்திரித்துள்ளார்.

 “...இந்த கலவரக்காலத்தில் எங்கள் வீட்டையும் சில சிங்கள முரடர்கள் சூழ்ந்து கொண்டார்கள். நாங்கள் தப்பி ஓடுவதற்கு எவ்வழியும் இல்லை. எங்கள் சமையற்காரன் அப்புஹாமி வெளியே சென்று பொலீஸ் உதவிபெற முயன்ற பொழுது வெறியர்களால் அவன் தாக்கப்படுவதை நாங்கள் கண்டோம்...

 எங்கள் வீட்டிலிருந்த பொருட்களை அவர்கள் சொந்தப் பொருட்களைப் போல கொள்ளையடித்துச் சென்றார்கள். தூக்கி செல்ல முடியாதவற்றை நொறுக்கிக் குவித்தார்கள்...

 ஒரு வெறியன்... என்னை பலாத்காரம் செய்யமுயன்றான். நான் கூச்சலிட்டேன். கிடைத்த உதவியெல்லாம் வெறிச்சிரிப்புத்தான். நான், ஆம்! அத்தான் நான், கெடுக்கப்பட்டேன். அதுவும் என் தந்தையின் கண்முன்னே! அதைத் தடுக்க முயன்ற அவர் தலையில் பட்ட அடியும் இந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியும் அவரை உலகை விட்டே விரட்டி விட்டன. எனக்குச் சுய நினைவு வந்த பொழுது நான் மனநோய் வைத்தியசாலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டேன். அத்துடன் இன்னுமொரு பேரதிர்ச்சி தரும் உண்மையையும் சொன்னார்கள். நான் ஐந்து மாத கர்ப்பிணி!...”

இக்கதையில் வரும் தமிழ் இளைஞன் இனக்கலவரத்தின் போது, கமலாவின் கற்பினை பறித்ததுடன், குமார் என்ற சிறுவனுக்கும் அவனே தந்தை என்பதும் காட்டப்பட்டுள்ளதுடன் கமலாவிடம் பின்னர் நட்பாக பழகி உன்னுடைய வாழ்க்கையைப் பாழாக்கியவன் நான்தான் என்பதை கூறி, தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டபோது அவள் மறுப்பதையும் இச்சிறுகதை ஆசிரியர் பின்வருமாறு காட்டியுள்ளார்.

 “இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு! அப்போது எனக்கு எவ்வித வேலையும் கிடைக்கவில்லை. ஆனால், வேலையில்லையே என்ற காரணத்தால் வயிறு பசிக்காமல் இருந்து விடுகிறதா? காரில் செல்பவர்களையும் அலங்கார மாளிகை வாசிகளையும் பார்க்கும் போது உள்ளத்திலே பொறாமை உணர்ச்சி கொழுந்து விட்டெரியும். பெண்களைப் பார்க்கும் போது, என் உணர்ச்சிகள் உச்ச நிலை அடைந்துவிடுவதுடண்டு...

 ஆம்! கமலா! நான் தான் அப்படி நடந்து கொண்டேன். அன்று உங்கள் வீட்டில்... அந்தப் பாதகத்தை எப்படிக்கூறுவேன். உன்னை... அந்த மிருகம்... நானேதான். ஐயோ கமலா எப்படிபட்ட தீங்கிழைத்து விட்டேன். கமலா! நீ என்னை மன்னித்துவிடு...

 நான் செய்த தவறுக்கு பிராயிச்சித்தமாக இல்லாவிட்டாலும், உன்னிடம் நான் கொண்டிருக்கும் அன்புக்காகவாவது என்னை ஏற்றுக்கொள்வாயா?” என அந்த இளைஞன் தன் தவறை உணர்ந்து கடிதத்தின் மூலம் மன்னிப்புக் கேட்டான். பின்னர் அவன், கமலாவின் வீட்டுக்குச் சென்ற போது, “நீ...நீ...ஒரு நீயொரு மிருகம். இந்த வீட்டில் நுழைந்தாலே அது பெரும்...” என்று கமலா கூறி அவனை வீட்டை விட்டு வெளியே விரட்டி விடுகின்றாள். கமலாவின் மகன் குமார் தந்தை யார் என்று தெரியாமல் பாட்டியின் தோளில் விளையாடி கொண்டிருந்தான். என இச்சிறுகதை இனக்கலவரத்தால், ஏற்பட்ட பாரதூரமான விளைவை விசித்திரமாகச் சுட்டிக்காட்டுகின்றது.

 நீர்கொழும்பு முத்துலிங்கம் ‘ஒரு மகன் தன் தாயை தேடுகிறான்’ என்னும் சிறுகதையில் இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது, தோட்டப்பகுதியில் உறவினர்கள் எல்லோரையும் பறிகொடுத்துவிட்டு, கொழும்புக்கு தாயும் மகனும் தனியாக வந்து, ஹாஜியார் பள்ளிக்கு அருகில் கொடுத்த இடத்தில் அந்த இரு மலையக முஸ்லிம்களும் வாழ்கின்றனர் என சித்திரித்துள்ளார்.

இனக்கலவரத்தால் உறவினர்கள், உடைமைகள் என எல்லாவற்றையும் பறி கொடுத்த ஐம்பது வயது தாயும் மன நோயால் பாதிக்கப்பட்ட மகனும் கொழும்பு நகரில் படும் அவலங்கள் ஏராளம். தாய் அதிகாலையில் தோட்டத்து வேலைக்கோ, பங்களாவில் வேலைக்கோ போய் இரவு ஏழு மணிக்குத்தான் வீடு திரும்புவாள். அதுவரை மகன் வீதியால் திரிந்து ‘எங்கட அம்மாவக் கண்டீங்களா?’ என எல்லோரையும் கேட்டுக்கொண்டு திரிவான். தாய் இரவு வேலை விட்டு வந்து மகனைத் தேடிக்கொண்டுவந்து, உணவு உண்டும், ஓரளவு நிம்மதியாக வாழ்ந்தாலும் அவளின் கண்களில் சோகமே இருந்தது. இனக்கலவரமே நாம் இந்த நிலைக்குக் காரணம் என நினைத்தோ தெரியவில்லை. ஒரு சமயம் மகன் புகையிரதத்தில் சிக்குண்டு மரணமானான். ஏலவே இனக்கலவரத்தால் மனமுடைந்து இருந்த தாய் இப்போது மகனின் இறப்பால் பைத்தியமாகிவிட்டாள். ‘எங்கட மகனைக் கண்டீங்களா?’ என எல்லோரையும் கேட்டுக்கொண்டு, தாய் சுய உணர்வு இல்லாமல் நடைப்பிணமாக வீதிகளில் திரிவாள் என இச்சிறுகதை நகர்ந்து முடிகின்றது.

இவர்களின் இந்த அவல நிலைக்கு இனக்கலவரமே முக்கிய காரணம் என்பதை ஆசிரியர் நாசுக்காக சொல்வதுடன், மலையகப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொழும்புக்கு வந்தவர்கள் என்பதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். எடுத்துக்காட்டாக பின்வரும் பகுதியைக் குறிப்பிடலாம்.

 “அவங்க அம்மா காலையில போனா ராத்திரிக்குத்தான் வரும். எங்கேயோ தோட்டத்துல, இல்லாட்டி பங்களாவுல வேல போல இருக்கும். மனுஷி காலையில போனா அந்தி ஆறு ஏழு மணிக்குத்தான் ஊட்டுக்கு வரும். இந்தப் பொடியன் வூட்டுக்கும் றோட்டுக்குமா நூறு தரம் அலைவான். யாரைக்கண்டாலும் எங்கட அம்மாவக் கண்டீங்களா? அம்மாவக் கண்டீங்களான்னு கேப்பான்.”

 செ.யோகநாதன், “ஆறுமுகம்” என்னும் சிறுகதையில் சேகுவேரா இயக்கம் இலங்கையில் செயற்பட்ட போது, சிங்கள இராணுவத்தினரும் பொலிஸாரும் பல்கலைக்கழகங்களிலும் ஏனைய இடங்களிலும் உள்ள தீவிரவாத இளைஞர்களை வேட்டையாடினார்கள். இந்த மோதலின் போது பல இன்னல்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு படித்து பல்கலைக்கு வந்த ‘ஆறுமுகம்’ என்னும் மலையகத்தமிழ் மாணவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பரிதாபமாக உயிர் இழப்பதாக சித்திரித்துள்ளார். இக்கதை இலங்கையில் நடந்த சேகுவேரா குழப்பத்தில் தமிழ், சிங்கள வேறுபாடுகள் இன்றி அனைவரும் பாதிப்புக்குள்ளாகினர் என்ற செய்தியை மறைமுகமாக உணர்த்துகின்றது.

மலரன்பனின் ‘தமிழ்ச்சாதி’, ‘நந்தாவதி’ முதலிய சிறுகதைகள் இனத்துவத்தை முதன்மையாகக் கொண்டவை.

‘தமிழ்ச்சாதி’ என்னும் சிறுகதை, தமிழர் என்ற அடிப்படையில் மலையகமும் வடக்குக் கிழக்கும் எதிர்நோக்கும் பிரச்சினையைச் சுட்டிக்காட்டுகின்றது. 1956 ஆம் ஆண்டு தொடங்கி 1983 இல் உக்கிரமடைந்த இனக்கலவரம் மலையகத் தமிழரை வடக்கிற்கு இடம்பெயர வைத்தன. அவர்கள் மலையகத்தோடு எவ்வாறு தொடர்புகளைக் கொண்டுள்ளனர், அவர்கள் வடக்கு – கிழக்கில் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சினைகள் என்ன? என்பதையும் மேலோட்டமாக காட்டும்.

‘நந்தாவதி’ என்னும் சிறுகதை, பெரும்பான்மையினரோடு இணைந்து வாழ்கின்ற தறுவாயில் ஏற்படும் தொடர்புகள் எதிராகவும் நட்பு ரீதியிலும் அமைந்து விடுகின்றபோதிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கணவன் எதிர்திசையில் வன்செயலை தூண்டுவதாக அமைய, மனைவி அதற்கு எதிராக மலையகத் தமிழர்களோடு நட்பு ரீதியில் உறவைப் பேணுவதாக காட்டும்.

 மல்லிகை சி.குமாரின் ‘வளரும் மரங்கள்’ என்னும் சிறுகதை, கந்தப்பளையில் நடைப்பெற்ற வன்செயலால் சிங்கள காடையர்கள் தமிழர்களின் கடைகள், வீடுகள், உடைமைகள் தீக்கிறையாக்கப்பட்டமையும் பெண்களின் கற்பைப் பாதுகாத்துக் கொள்ள வேறு தோட்டங்களில் தஞ்சம் புகுந்தனர் என்பதையும் அவ்வாறு ஓடும் போது வயதானவர்கள் வன்செயலில் சிக்கியும் தொடர்ந்து ஓட முடியாமலும் இடை நடுவே பரிதாபமாக உயிர் இழந்தமையும் சித்திரித்துக்காட்டும். இன வன்முறையால் ஏற்பட்ட அவலங்களைப் பாட்டியைப் பறிகொடுத்த சிவத்திற்கும் அவனது நண்பனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் மூலம் சிறுகதை ஆசிரியர் பின்வருமாறு சித்திரித்துக்காட்டியுள்ளார்.

“சிவம் ஓங் கை எல்லாம் நெருப்புக்காயம் பட்ட தழும்பு இருக்கே....?”

“அதுதான் அந்த வன்செயல் டைம்ல... கந்தப்பல டவுணையே எரிச்சவனுக நாங்க குடியிருந்த எடத்தயும் நெருப்புவைக்க வரப்போராங்கனு தெரிஞ்சு... பக்கத்திலுள்ள காட்டுக்கு ஓடினோம். ஏன்னா நாங்க இருந்த எடத்துல நாலஞ்சு குடும்பம் இருந்தோம். அந்த குடும்பத்தில வயதுக்கு வந்த கொமரிகளும் இருந்தாங்க. எங்க உயிரு போனா பரவாயில்லைன்னு அவுங்கல எதிர்த்து நிக்க முடியும். ஆனா...கொமரிப்புள்ளைகள இழுத்து...ஏதாவது மானபங்கங்கள் செஞ்சிட்டா...?

“ஆயாவ காணோமே...? பதட்டத்தோடு அப்பா திரும்பி என்னை நோக்கி ஓடி வருது அப்போ... நீ நீ வராத அவங்களோட ஓடிடு. நாப் போயிப் பார்த்துட்டு வாறேன்...

“வேணான்டா... நீ வந்திரு நாப் போரேன்டா... நாப் போய் ஆயாவைபப்பார்த்துக் கூட்டிட்டு வாரேன்!

“வேணா... தங்கச்சி முன்னுக்கு ஓடுது அத பாத்துக்க...

கத்திவிட்டு நான் பாட்டியை விட்டு திரும்பி ஓடுகின்றேன். அதற்குள் காடையர்கள் எங்களின் குடியிருப்பிற்கு தீ வைத்துவிட்டு ஓடுகிறார்கள். பாட்டி என்ன ஆனாளோ? பதை பதைக்க ஓடிப்பார்க்கின்றேன். தீ வைத்த வீட்டிற்குள் எங்கள் பாட்டியின் அலறல்.

பாட்டியை காப்பாற்ற வேண்டுமே... துணிச்சலோடு வீட்டிற்குள் புகுந்து பாட்டியை வெளியில் இழுத்து வருவதே பெரும்பாடாகிவிட்டது.

அடே...! தூரத்தில் சிலர் எங்களை நோக்கி சத்தமிட்டனர். இன்னும் கொஞ்சம் சுணங்கினால் அவர்கள் ஓடிவந்து எங்களை தாக்கினாலும் தாக்கலாம். எனவே கரடு முரடான அந்த பாதையில் கிழவியை இழுத்துக்கொண்டு ஓடினேன்.

அய்யோ...! அவள் அலறினாள். குத்தாக நின்ற கல்லில் அவளின் கால் இடிபட்டு என் பிடியில் இருந்து அவள் நழுவி விழுந்தாள்.

பாவம்... இந்த நாட்டு பிரஜைகள்னு எங்க குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை காப்பாற்றிய கிழவியை எங்களால் காப்பாத்த முடியல. நாசமாப்போன இந்த கடுதாசியாலதானே எங்க ஆயா செத்திச்சு... ஆத்திரத்தோடு அவள் பிடியில் இருந்த சிட்டிசன் காட்டை உருவி கிழித்து எறியப்போனார் அப்பா. வேண்டாங்கப்பா... பாட்டி கடைசி வரைக்கும் இது மேல தான் உயிரயே வச்சிருந்தா... நான் தடுத்து விட்டேன். அந்த பயங்கர சம்பவத்திற்குப் பிறகு நாங்க அந்த பகுதியிலயே இருக்கேல. அங்க அகதிகளாக இருந்து கடைசியில இந்த தோட்டத்திற்கு வந்து சேந்திட்டம்...”

 இச்சிறுகதை மூலம் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் உடலில் வடுக்கள் ஏற்பட்டதுடன் பல வருடங்கள் சென்றாலும் மனதில் ஆறாத வடுக்கள் நிறையவே ஏற்பட்டுள்ளன என்பதை காட்டியுள்ளது.

‘என் இரத்தம் உணர்த்தும்’ என்னும் சிறுகதையில், இனவன்முறையால் மலையகத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் வீணாக வீதி வீதியாக கொல்லப்பட்டதையும் காணாமல் போனதையும் காணலாம். தன்னுடைய சகோதரியை இனவெறியால் கொலை செய்த சிங்கள இளைஞன் ஒருவன் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் மரணத்துடன் போராடிக்கொண்டிருந்த போது, அவனுக்கு இரத்தம் கொடுத்து காப்பாற்றி நாங்கள் அடைந்த துன்பத்தை எல்லாம் உன் உடம்பில் ஓடுகின்ற என்னுடைய இரத்தம் உனக்கு கட்டாயம் காட்டும். இனக்கலவரத்தால் தனது சகோதரியை இழந்த இளைஞனின் மன ஆதங்கமும் அவனின் மனிதாபிமானமும் சித்திரிக்கப்பட்டுள்ளது.

 இனக்கலவரத்தின் போது பலர் கொல்லப்பட்டதையும் பிணங்களை ஒழிப்பதையும் காணாமல் போவதையும் பின்வருமாறு கோவிந்தன் என்ற பாத்திரத்தின் மூலம் சித்திரித்துக்காட்டுகின்றார், ஆசிரியர்.

 “...பய எங்கப் போயிருப்பான் மணியும் பத்துக்கு மேலாகிறிச்சே...? என் தங்கச்சியைத்தான் அந்தப் பாவிப் பயலுங்க வன்செயல் நேரத்தில் கொன்னுப்புட்டானுங்க. இப்ப அந்த கிழவியோடப் பேரனையும் அடிச்சி எங்கேயாவது தூக்கி வீசியிருந்தா?...”

 மாத்தளை சோமுவின் ‘நமக்கென்றொரு பூமி’என்னும் சிறுகதையில், 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தால் மலையக மக்கள் பலர் வன்னிப்பகுதியில் குடியேறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்ற செய்தியை உணர்த்துவதோடு, ‘மலையகப் பிரதேசத்தில் இறந்துபோன கிழவியை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லை’ என அரசாங்கத்தால், தோட்டப்பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட சிங்கள துரைமார் கூறினார் எனவும் சித்திரித்துக்காட்டப்பட்டுள்ளது.

 மலையக மக்கள் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டபோது பாதிக்கப்பட்டனர் என்பதை சுப்பன் என்ற பாத்திரத்தின் மூலம் ஆசிரியர் பின்வருமாறு காட்டியுள்ளார்.

 “இனிமே தோட்டத்தில இருக்கிறதுல அர்த்தமில்ல. இன்னும் எத்தன வருசம் இங்க இருந்தாலும் நமக்கும் கஷ்டம்தான்...சொந்தமா. எட்டடி மண்ணுகூட இருக்காது! முந்தி மொதலாளிமாருக தோட்டத்துச் சொந்தக்காரனுங்க இப்ப அரசாங்கம் தோட்டத்தை எடுத்தபொறகு யார்யாரோ கால்சட்டை போட்டுவிட்டு சிங்களப் பயலுக தொரமாரா வர்றானுங்க. வர்ர நேரம் நெத்தலி பயில்வான் மாதிரி வார்றானுங்க. ரெண்டு மூணு வருசம் இருந்தோன்ன பயில்வான் மாதிரி கொழுத்திடறானுங்க. கவுருமெண்டு எதுக்குத் தோட்டத்த எடுத்தானுங்க தெரியுமா? சிங்களப் பயலுகளுக்கு வேலை கொடுக்கவும் அவனுங்க, தோட்டத்தில கொள்ளையடிக்கவும்தான்! தோட்டத்த கவுருமெண்டு எடுத்து காலம் காலமா ஒழைச்சுக்கிட்டு வந்த நமக்கு என்னத்தான் செஞ்சிருக்கானுக... நாங்க ஒழைச்சி ஓடாக வேண்டியதுதான்... பொதைக்ககூட சொந்தக்காணி இல்ல... அதைக்கூடக் கேட்டுதான் பொதைக்கணும்!”

 கிழவியின் இறப்புக்கு முன்னரே கலவரத்தின் போது கிளிநொச்சி பகுதியில் குடியேறிய வேலுவின் நண்பன் சுப்பன் கிளிநொச்சி பகுதியில் தங்களின் வாழ்வியல் நிலையைப்பற்றியும் மலையகத்தில் மக்களின் நிலை பற்றியும் வேலுவுக்கு பின்வருமாறு கடிதத்தில் எழுதினான்.

 “வேலு! நீ குடும்பத்தோட வந்துறதுன்னா வா. காணி பூமி குத்தகைக்கு வாங்கித்தாறேன். எனக்கு இப்ப சொந்தக்காணி பூமி, மண்குடிசை இருக்கு! தோட்டத்தில இருந்தா என்னதான் சொந்தமா இருக்கு?... என்னய வுடேன்... இப்ப ஒனக்கு என்னதான் சொந்தமா இருக்கு சொல்லு! டவுன்ல கொறஞ்ச வாடகை வீட்டுல இருக்கிறவங்களுக்கு இருக்கிற வீடு சொந்தமாம். நாங்க தோட்டத்தில பரம்பரையா ஒழைச்சோம். என்னா சொந்தமா இருந்திச்சி, இருக்கு? எத்தனை நாளைக்கித்தான் சொந்த வீடு வாச காணி பூமி இல்லாம இருக்கிறது? நமக்குன்னு ஒரு பூமி வேணும் இல்ல. ஒடனேவா!”

 ஆனந்த ராகவன், ‘உதயகாலத்து ஜனங்கள்’, ‘நண்பனே என்றும் உன் நினைவாக’, ‘வீணையை மேவும் விரல்கள்’ முதலிய சிறுகதைகளில் இலங்கையில் ஏற்பட்ட இனமுரண்பாட்டை எடுத்துக்காட்டியுள்ளார்..

‘உதய காலத்து ஜனங்கள்’ என்னும் சிறுகதையில், நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் இராணுவத்தினரால் ஆண்களும் பெண்களும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அப்போது சிறைக்குள் ஏற்பட்ட கலவரத்தால் ஆண்கள் சிலர் கொள்ளப்பட்டனர். பெண்கள் சிலர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டனர் முதலிய விடயங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

‘நண்பனே என்றும் உன் நினைவாக’ என்னும் சிறுகதை, குடும்ப நண்பனாக இருந்த குனபாலன் இனக்கலவரத்தின் போது கொடூரமான முறையில் கொல்லப்பட்டமையைக் காட்டும். அவனின் உடலை தோட்டத்தின் எல்லையில் புதைத்து விட்டு சென்றார், ஆசிரியர். அவன் உடலை பார்க்கமுடியாத தந்தையும் காதலியும் சொல்லொணாத்துயரை அடைந்தனர். மீண்டும் அந்த ஆசிரியரின் குடும்பம் அவன் புதைக்கப்பட்ட இடத்தை துப்புரவு செய்து பூக்களைப்பறித்து நினைவுகூர்ந்தமையையும் இக்கதை காட்டும்.

 அரசியல்வாதிகளாலும் மதவாதிகளாலும் மனிதர்களை மிருகங்களாக்கி விட்டமையையும. சிங்களக்காடையர்களால் தோட்டத்தில் உள்ளவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதையும் அதனால், இறந்தவர்களின் உறவுகள் பரிதவிப்பதையும் இச்சிறுகதை ஆசிரியர் பின்வருமாறு சித்திரித்துக்காட்டியுள்ளார்.

 “அவனது கைகள் இரண்டும் வெட்டப்பட்டு பக்கத்தில் கிடக்கின்றன. ஒரு கண் பாதி வெளியில் வந்த நிலையில் வெடுத்து நிற்கிறது. உடல் முழுவதும் குத்திக்குதறிய நிலையில்.....

 ஒரு இழப்பை உணர்ந்திருப்பவர்களா? ஒரு தந்தையின் கதறல, ஒரு இளம் பெண்ணின் நித்தியமாகிப் போன ஏக்கமும், கண்ணீரும் ஒரு நண்பனின் தவிப்பு - இந்த மனித உணர்வுகள் இவர்களை எப்போதாவது தொட்டதுண்டா?...”

‘வீணையை மேவும் விரல்கள்’ என்னும் சிறுகதை, பொலிஷிலுள்ள தமிழ் இளைஞர்களின் குடும்பங்கள், நடந்து முடிந்த இனக்கலவரங்களில் பாதிப்புற்ற போதும், பொலிஷ் தமிழ் இளைஞர்கள், ஒரு இனத்தின் தன்மானத்திற்கும் விடுதலைக்கும் போராடிய இளைஞர்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்தமையைக் கூறும். இதை இச்சிறுகதையில் ஆசிரியர் பின்வருமாறு சித்திரித்துக்காட்டியுள்ளார்.

 “நடந்து போன இனக்கலவரங்களில் எல்லாம் எங்கள் குடும்பத்தாரும் நிறையவே பாதிப்புக்குள்ளாகி இருந்தார்கள். இந்தத் தமிழ் இளைஞரின் போராட்டமும், தியாகமும் நான் உட்பட ஒரு இனத்தின் தன்மானத்திற்கும் விடுதலைக்குமானது தானே என்று நினைக்கவில்லை. இவரோடு வாழ்க்கை ஒரு குற்றமாகின்றது. மிருகத்தனமான சித்திரவதைகளுக்குக் காரணமான ஒருவரின் உழைப்பில் சாப்பிடுகிறோம் என்ற எண்ணமே என்னை எத்தனையோ நாட்கள் பட்டினிபோட வைத்திருக்கின்றது. இப்போது கூட நான் இந்த வாழ்க்கையை, ஓ... ஹெள மச் ஐ ஹேட் இட்”

அல் அஸ_மத் ‘58, 57, 83, நாளை’, ‘வேதங்களின் தூய்மை’‘இருட்டு’முதலிய சிறுகதைகளில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளையும் காட்டியுள்ளார்.

 ‘58, 77, 83, நாளை என்னும் சிறுகதை, இலங்கையில் காலங்காலமாக ஏற்பட்ட இனக்கலவரத்தால் மலையக மக்கள் பாதிக்கப்பட்டதையும் இனக்கலவரத்தை சில சிங்கள காடையர்கள் செய்தாலும் சில தோட்டங்களில் தமிழ் மக்களுடன் சிங்களமக்களும் இணைந்து இனக்கலவரத்தில் பங்குபற்றியவர்களை விரட்டியடித்தனர் என்பதையும் சித்திரித்துக்காட்டும்.

 கலவரத்தின் போது சில சிங்கள மக்களாகிய பெரும்பான்மையினர் மலையகத்தமிழ் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தமையை இச்சிறுகதை ஆசிரியர் பின்வருமாறு காட்டியுள்ளார்.

 “பியசேன மொதலாளி மாதிரி ஊருக்கு ஒரளாவது இருந்தாப் போதுமே! ஆனா நீங்க எங்களுக்கு ஒதவி செய்யப்போய் இந்தக் காடயங்களோட கோவம் ஒங்க மேலயும் வருமே!...”“நம்ம மேலயா!... ஹாஹ்ஹா!...டீ மேக்கர் மஹத்திய நல்லா ஜோக் பேசறதில்லியா! நாங் அவன வெட்டி சூப் போடறதில்லியா! இந்த அப்புரானி தமுலாலுக் கிட்ட ஆட்ற மாதிரி நம்ம கிட்ட வாலாட்ட ஏலாதி தானே!... நல்ல கதயில்லியா ராஜா அப்பா பேஸ்றதி!...”

 வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் தனி நாடு கேட்டு போராடினார்கள். இதனால், அப்பாவி மலையக மக்கள் மலையகப் பிரதேசத்தில் கொள்ளப்பட்டமையை இச்சிறுகதை ஆசிரியர் பின்வருமாறு சித்திரித்துக்காட்டியுள்ளார்.

 “... இந்தப் பயணம்னாசேதம் ரொம்பசாஸ்த்தி போல! யாழ்ப்பாணத்தாளுக ஈழம் கேட்ட நம்பள ஏம் போட்டு இப்பிடிக் கொல்றானுஹ? அங்க போய்க் கேக்குறது? அவிங்களோட அடிச்சிப் புடிச்சி பாக்குறது? இதென்னமோ எவனயோ உட்டுப்புட்டு எதையோ வெட்டுறகதையா இல்ல இருக்கு!...”

‘வேதங்களின் தூய்மை’ என்னும் சிறுகதை, 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் போது மலையக மக்கள் குடும்பம் குடும்பமாக எறிக்கப்பட்டதையும் கலவரத்தின் பின்னர் மலையக மக்கள் இலங்கையின் பல பாகங்களுக்கு வாழ்வு தேடிச் சென்றதையும் கூறும்.

‘இருட்டு’ என்னும் சிறுகதை, தொண்ணூறுகளில் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட வெற்றி நிச்சயம் என்னும் இராணுவ நடவடிக்கையில் பங்கு பற்றிய இராணுவத்தினரை விடுதலைபுலிகள் கொலை செய்து தென்பகுதிக்குப் பூதவுடல்களை அனுப்பும்போது, ஆத்திரம் அடைந்த பெரும்பான்மையினத்தவர்கள் அப்பாவி மலையக மக்களைத் தாக்கினர் என்பதை கூறும். இச்சிறுகதையில் தமிழன் சிங்களத்தையும் சிங்களவன் தமிழையும் அறிந்திருக்க வேண்டும். அப்படி அறிந்திருந்தால், அது இனப்பிரச்சினை தீரும் என்பதற்கு தியறியேதவிர சொலூஷன் இல்லை என்பதை பின்வருமாறு கட்டியுள்ளார், ஆசிரியர்.

 “பொன்னம்பலம்! ஒன்ட பேச்சில நெறய முரண்பாடு இருக்குடா! ஏன்னா நீ முரண்பாடான விடயங்கள ஒரே விடயம்னு சிந்திக்கிற. நான் சிங்களம் படிக்காதது சாபக்கேடுன்னு சொல்ற, நான் சிங்களத்தையும் அவன் தமிழையும் படிச்சிட்டா இனப்பிரச்சினை தீரும்னு சொல்றது ஒரு தியறியேதவிர சொலூஷன் இல்ல! அடுத்தது-புலி எப்பிடித் தமிழன், முஸ்லிம், சிங்களவன், இந்தியன், அமெரிக்கன்னு பாக்காம எதிரிகள்னு மாறீட்ட அவனக் கொல்லுதோ, அப்பிடித்தான் ராணுவமும் அரசும் இது உலக இயங்குமுறை. இத நீ ஒரு இனத்த ஆக்கிற முயற்சின்னு சொல்லறது அதீத வாதம்...”

கேகாலை கையிலைநாதனின் ‘மீண்டும் வசந்தம் வரும்’, ‘வெண்ணிறத் தாமரைகள்’முதலிய சிறுகதைகளில் முதலாவது, தமிழ் - சிங்களக் கலவரத்தினால் தோட்டமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதையும் தோட்டமக்கள் சின்னாப்பின்னமாக போனதையும் கலவரத்தின் போது பெண்களின் மானத்தையும் உயிரையும் காப்பாற்ற மன்னாரு போன்றவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வதையும், சொந்தமாக நிலத்தில் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை பலப்படுத்த முனையும் போது எதிர்கொள்ளும் சவால்களையும் காட்டும். இரண்டாவது, வடக்கு-கிழக்கில் நடந்த உள்நாட்டுப் போரினால், மலையகப் பிரதேசத்தைச் சேர்ந்த கணவன்மார்கள் எதற்காக என்று தெரியாமல் இராணுவ சுற்றிவளைப்பில் கைது செய்யப்படுகின்றமையால், பிள்ளைகள், மனைவிமார்களின் வாழ்க்கை சின்னாபின்னமாக போவதையும் கைது செய்யப்படும் கணவர்மார் எங்கு போனார்கள் எனத்தெரியாமல் மனைவிமார்கள் துன்பமடைவதையும் இவற்றையெல்லாம் பெரும்பான்மையினத்தினர் கண்டும் காணாமல் இருப்பதையும் காட்டும்.

 பாலா சங்குப்பிள்ளையின் ‘திருமதி சீதாலட்சுமி ரணசிங்க’என்னும் சிறுகதையில், சிங்கள இராணுவத்தினர் தமிழர் - சிங்களவர் என்ற பாகுபாட்டில் மக்களை நோக்கிய போதும் இங்கு வரும் பாத்திரங்கள் இலங்கையில் வாழும் தமிழ்ச் சிங்கள மக்கள் மத்தியில் பரஸ்பர ஒற்றுமையை வளர்ப்பதாக காட்டப்படுகின்றது. இவரது இன்னுமொரு சிறுகதையான ‘ஓர் உன்னதத் தமிழனின் கதை’யில் இராணுவத்தினர் வடக்கு கிழக்கு மலையகம் என பாகுபாடுகள் இல்லாமல் அனைத்து மக்களையும் துன்புறுத்திய போதும் இக்கதையில் வரும் பாத்திரங்கள் வடக்கில் வாழ்ந்தாலென்ன மலையகத்தில் வாழ்ந்தாலென்ன தமிழ் பேசும் அனைவருமே தமிழர்கள் தான் என்ற நோக்கில் வடக்கில் வாழும் தமிழர்களையும் மலையகத்தில் வாழும் தமிழர்களையும் இணைப்பதற்கு பாலம் ஒன்றை அமைப்பதாக உள்ளன.

1.2 முடிவுரை

மலையக மக்களில் பல்வேறு இனத்தவர்கள் ஆரம்பத்தில் காணப்பட்டபோதிலும் பெரும்பான்மையினராக திகழ்பவர்கள் தமிழர்களே ஆவர். அவர்கள் இலங்கையின் பெரும்பான்மையினராக திகழும் சிங்களவர்களாலும் சிறுபான்மையினராக விளங்கும் இலங்கைத் தமிழராலும் பல்வேறுபட்ட அடக்குமுறைகளுக்கு உள்ளாகியமையை சிறுகதைகள் காட்டுகின்றபோதும் ஒற்றுமையாக தங்களின் விடுதலைக்காக தொழிலாளர் என்றவகையில் சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத்தமிழர், முஸ்லிம்கள் என்ற பாகுபாடுகளை மறந்து போராடியமையையும் காட்டும். சான்றுகளாக, மலரன்பனின் நந்தாவதி சிறுகதை, எம்.வாவதேவனின் முடிவு சிறுகதை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் தமிழ், சிங்கள முரண்பாடுகளை மறந்து ஒன்றாக செயற்படுவதும் காட்டப்பட்டுள்ளது.

 பயங்கரவாத தடைச்சட்டத்தினால், மலையக இளைஞர்கள் பலபாகங்கங்களிலும் பாதிப்படைதல், தமிழ்ப்பெண்களைப் பெரும்பான்மை இனத்தவர்கள் கற்பழித்துக் கொலைசெய்தல், உடைமைகளை அழித்தல், சாதாரண சிங்கள மக்களும் இனக்கலவரத்தில் பாதிப்படைதலும் இறத்தலும், சிங்கள – தமிழ் இளைஞர், யுவதிகளின் காதலைப் பெற்றோர் வெறுத்தல், தமிழர் கலாசாரத்தைச் சீரழித்தல், ஏனைய சமூகத்தவர்கள் மலையக மக்களை அடிமையாக நடத்துதல், பொய்யான குற்றச்சாட்டுகளினால் சிறைக்குச் செல்லல், கலவரங்களினால் இடம் பெயர்ந்து வாழ்வாதாரம் சீரழிதல், ஆவணங்களை எரித்தல், தோட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், சிங்களத் தொழிலாளர் வர்க்க உணர்வுடன் சிந்தித்தல் முதலிய வாழ்வியல் பிரச்சினைகள் இனங்களுக்கிடையே ஏற்பட்டவையாக சிறுகதைகள் காட்டும்.

 ஆகவே இனங்களுக்கு இடையிலான வாழ்வியல் பிரச்சினைகள் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஏற்பட்டு 58, 57, 83 களில் உக்கிரமடைந்தபின்னர் உள் நாட்டுப் போராக மாறி 2009 ஆம் ஆண்டு பாரிய அழிவுடன் நிறைவு பெற்றாலும் இதனூடாக சிங்களமக்களும் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் பாரிய உடைமை உயிரிழப்புக்களைச் சந்தித்தனர் என்பதே வெளிப்படை.

Pin It