நான் எழுதத் தொடங்கியதற்கு எங்கள் வீட்டுச் சூழலும் ஒரு காரணம். இஸ்லாமிய சமூகம், சமத்துவம் பற்றி வாய்கிழியப் பேசினாலும் எங்களை ஒரு தனிச் சாதியாகத்தான் கருதுகிறது. என் தந்தை ஒரு சித்த மருத்துவர்; திறமையானவர். அதனால் நாங்கள் வறுமையை அவ்வளவாக அனுபவித்ததில்லை. ஆனால் சமூக ஒடுக்குமுறையை அனுபவித்திருக்கிறோம்.
அப்பா ஒரு சித்த மருத்துவராக இருந்த காரணத்தால் சித்தர்களுடைய எதிர்ப்புணர்வையும் அவர் சுவீகரித்துக் கொண்டிருந்தார். ஒடுக்குமுறைக்குப் பணிந்து போகாத கலக மனப்பான்மை அவருடையது. அந்தச் சிந்தனைச்செல்வாக்கு எங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் ஏதோ ஒரு வகையில் பிடித்திருந்தது.
என் அண்ணன் சின்ன வயதிலிருந்தே திரைப்பட மெட்டுகளுக்குப் பாடல் எழுதுவார். மூடத்தனங்களையும் சமூக ஒடுக்கு முறையையும் எதிர்த்துத்தான் எழுதுவார். என் மூத்த சகோதரி மிக அருமையாகப் பாடுவார். வீட்டுக்குள் மட்டுந்தான். அண்ணன் எழுதிய பாடலை அக்காள் பாட நாங்கள் எல்லாரும் உட்கார்ந்து கேட்போம். மாலை ஏழு மணிக்குப் பெரும் பாலும் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
இந்தச் சூழல் என்னையும் எழுதத் தூண்டியது.
எங்கள் ஊருக்கு வடக்கே பெரிய மணல் மேடு ஒன்று உண்டு. அதில் ஒரு தர்ஹாவும் இருக்கிறது. அந்தத் தர்ஹாவுக்கு ஒவ்வொரு வியாழக் கிழமை இரவும் பெண்கள் பேயாடச் செல்வார்கள்.
முதன் முதலாகக் கவிதை என்று எழுதியது இந்த வீட்டி மூடத்தனத்தை எதிர்த்துத்தான். எழுதிய கவிதையை அரங்கேற்றிய தும் எங்கள் வீடில்தான். அத்தா (அப்பா) உம்மா (அம்மா) ராத்தா (அக்காள்) அண்ணன் அவ்வளவு பேருக்கும் முன்பாக நான் அந்தக் கவிதையைப் படித்தேன். அக்காவின் குரலினிமையால் நிரம்பும் அந்த மாலையும் அந்த முற்றமும் முதன்முதலாக ஒரு கவிதையையும் எதிரொலித்தன. நான் படித்து முடித்தவுடன் அக்காள் சொன்னார்.
"நீ பாட்டுக் கட்டு... நான் பாடுறேன்."
சிவகங்கை மன்னர் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்தேன். அந்த ஆண்டுதான் கவிஞர் மீராவும் ஆசிரியராகச் சேர்ந்தார். அப்பொழுது நான் தி.மு.க.வின் தீவிரமான ஆதரவாளன். கலிஞர் மீராவும் அப்படித் தான்.
புகுமுக வகுப்பில் Isles of Greece (கிரேக்கத் தீவுகள்) என்ற கவிதை ஆங்கிலத்தில் பாடமாக இருந்தது. லார்டு பைரன் எழுதிய கவிதை அது. ஆங்கிலப் பேராசிரியர் பிரேம்சந்த் எங்களுக்கு அந்தக் கவிதையை நடத்தினார். நாங்கள் பெரும்பாலோர் கிராமப் புறங்களில் இருந்து வந்தவர்கள். அந்தக் கவிதையின் முழுப் பொருளையும் ஆங்கிலத்தின் வழியே உள்வாங்குவது எங்களுக்கு இயலாததாய் இருந்தது, அதனால். அந்தக் கவிதையைத் தமிழில் நடத்தும்படி பேராசிரியர் பிரேம்சந்த் மீராவைக் கேட்டுக் கொண்டார். மீராவும் அதைப் புரியும்படி எங்களுக்கு நடத்தினார்.
ஒரு கவிதையின் பொருளை மாணவர்களுக்கு உணரச்செய்வதில் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி இன்னும் என் சிந்தனையில் பசுமையாக இருக்கிறது.
கிரேக்க மக்களைத் துருக்கிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடத் தூண்டியது அந்தக் கவிதை. அந்தக் கவிதை இந்தி ஆதிக்கத்துக்கு எதிரான செய்தியை எனக்கு உணர்த்தியது. அந்தக் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு நானும் ஒரு கவிதையை எழுதி மீராவிடம் காட்டினேன். கவிஞர் மீராவுக்கும் எனக்கும் உள்ள உறவு சகோதர உறவாக வளர்ந்தது.
புகுமுக வகுப்புப் படிக்கும் போது என் தந்தை மாரடைப்பால் இறந்து போனார். பிறகு வறுமையையும் அனுபவித்தேன். மேலே படிப்பைத் தொடர முடியாமல் சென்னையில் ஒரு கடையில் சிப்பந்தியாக வேலை பார்த்தேன்.
மீண்டும் படிப்பைத் தொடருமாறு அண்ணன் கடிதம் எழுதினார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கியப் பட்ட வகுப்பில் சேர்ந்தேன்.
வைகைக் கரையில் இருந்த அந்தக் கல்லூரியில் திரும்பும் இடமெல்லாம் கவிதை இருந்தது. பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் விடுதியின் காப்பாளர். அவர் அறிக்கை எழுதினாலும் செய்யுளில்தான் எழுதுவார். தொலைந்து போன செருப்பைத் தேடித் தரவேண்டும் என்ற மாணவர் ஒருவரின் கோரிக்கையும் அறிவிப்புப் பலகையில் கவிதையாகவே தொங்கியது.
நான் சேர்வதற்குமுன்பே கவிஞர் மீரா, கவிஞர் அப்துல் ரகுமான், அபி ஆகியோர் அங்கு கவிதைச் சூழலை வளர்த்து வைத்திருந்தனர். கற்றுத் தந்த பேராசிரியர்களும் படைப்பு முயற்சிகளை மனமாரப் பாராட்டி வளர்த்தனர்.
நான் சேரும்பொழுது கவிஞர் காமராசன் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர். சூரிய தீபன் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர். காளிமுத்து என் உடன் வகுப்புத் தோழர் நான் சேர்ந்த மறு ஆண்டு கவிஞர் மேத்தா பட்ட வகுப்பில் சேர்ந்தார்.
சுரதாவின் உவமைகளிலும், கலீல்கிப்ரானின் கற்பனை அழகிலும் நாங்கள் மயங்கிக் கிடந்தோம். அப்பொழுதுதான் சி. சு. செல்லப்பா தொகுத்து வெளியிட்ட 'புதுக் குரல்கள்' என்ற புதுக் கவிதைத் தொகுப்பு வந்தது. இந்தக் கவிதைத் தொகுப்பால் காமராசனும் நானும் வெகுவாகப் பாதிக்கப்பட்டோம். எண் சீர்க்கழிநெடிலடி, ஆசிரிய விருத்தத்தில் எழுதிக் கொண்டிருந்த நாங்கள் யாப்பை மீறியும் எழுத முயன்றோம். புதுக் குரல்களைப் படித்த வேகத்தில் காமராசன் 'புல்' என்ற ஒரு கவிதையை எழுதி 'எழுத்து'வுக்கு அனுப்ப அது பிரசுரமானது. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய ’நிழல்கள்' என்ற கவிதை தாமரை இதழில் வெளிவந்தது. என்னை 'வெயில்' என்ற தலைப்பில் எழுதச் சொன்னார், எழுதினேன். ஆனால் எந்த இதழுக்கும் அனுப்பவில்லை. கல்லூரி ஆண்டு மலரில் அது வெளியிடப்பட்டது
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர அனுதாபிகளாக இருந்த போதிலும், அதன் தலைவர்கள் சொல்லித் தந்த பொதுவுடைமைக் கோட்பாடுகளும் எங்களை ஈர்த்தன. எங்கள் ஒவ்வொருடைய வாழ்க்கை அனுபவமும் எங்களைப் பொதுவுடைமைவாதிகளாகத்தான் கல்லூரி நாட்களிலேயே நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் எங்களை அணுகுவதற்கு தி.மு.க. மட்டுந்தான் இருந்தது.
எங்களுடன் படித்த பொதுவுடைமைச் சார்புடைய மாணவர்களுக்கு காங்கிரஸ் கட்சிதான் நெடுங்காலமாகத் தோழமைக்குரியதாய் இருந்தது. தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமை பற்றி அந்த மாணவர்களுக்குத் தெரியாது. அந்தக் கட்சிக்கு அப்பொழுதும் இது குறித்து அக்கறை இருந்ததில்லை. இப்பொழுதும் இல்லை. அதனால் பொதுவுடைமைச் சார்புடைய மாணவர்களுடன் நாங்கள் கொண்டிருந்த உறவு அவ்வளவு நேசப் பூர்வமானதாய் இருந்ததில்லை.
தி.மு.க.வழியில் நாங்கள் பொதுவுடமைச் சித்தாந்தங்களைப் புரிந்து கொண்டிருந்தோம். அப்பொழுது நான் எழுதிய 'வெயில்' இப்படி முடித்திருந்தேன்.
சுரண்டிக் கொழுப்பவர்கள் -உன்
சூட்டில் பொசுங்கவில்லை.
சுரண்டப் படுபவர்தாம் -உன்
சூட்டில் பொசுங்குகிறார்.
ஆகையினால் வெயிலே - ஏழை
ஆவி பிரிந்த உடல்
வேகையில் மட்டும் சுடு - அவரை
வீணில் பொசுக்காதே!
1967-ல் தி.மு.க.ஆட்சிக்கு வந்தது. உண்மையிலேயே தமிழினத்திற்கு விடுதலையும் சமத்துவமும் வந்து விட்டதாக நான் நம்பினேன்.
1968 டிசம்பர் 25... என் கனவுகளில் இருந்து நான் விழித்தேன். வெண்மணிப் படுகொலை தி.மு.க வின் போலிச் சமத்துவ உச்சாடனத்தை அம்பலப்படுத்தியது.
நான் தி.மு.க. அரசியலை விட்டு விலகத் தொடங்கினேன். அப்பொழுது சென்னையில் செயல்பட்ட 'மக்கள் எழுத்தாளர் சங்கம்' எனக்குப் பொதுவுடைமைத் திசை வழியை அறிமுகப்படுத்தியது.
தி.மு.க.வின் மயக்கத்திலிருந்து முழுமையாக மீண்டவர்கள் சூரியதீபனும் நானுந்தான். அதனுடைய இலக்கியச் செல்வாக்கிலிருந்து நான் மீள்வதற்கு வெகுநாளாயிற்று. தி.மு.க.வின் இலக்கியப் பாரம்பரியம் சமூக எதார்த்தங்களை உண்மையாகச் சித்திரிப்பது இல்லை. அதற்கான தீர்வுகளையும் யதார்த்தத்தில் தேடுவதில்லை. அதற்கு இடைக்கால இலக்கியங்களின் நழுவல் போக்குகளே முன் மாதிரிகளாக இருந்தன. மன்னர் பற்றிய பிரமைகளை அது சனநாயக யுகத்திலும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. இந்தப் போதை வட்டத்திலிருந்து இன்னும் பெருங் கவிஞர்கள் பலர் விடுபடவில்லை.
இனி ஒன்றிரண்டு படைப்புகள் எந்தச் சூழலில் உருவாயின என்று கூறுவது பொருத்தமாயிருக்கும்.
தோழர் எஸ்.வி.ராஜதுரையால் மொழி பெயர்க்கப் பட்ட மாசே-துங் கவிதைகள் வெளியீட்டு விழா சென்னை மத்திய நூலகக் கட்டிடத்தில் நடந்தது. பேராசிரியர் நாகநாதன் தலைமை தாங்கினார். கவிஞர் ஈரோடு தமிழன்பன், பேராசிரியர் சஞ்சீவி ஆகியோர் பேசினர். இறுதியாக நான் பேசினேன்.
பொதுவுடைமையாளர்கள் வன்முறையைக் கைவிட்டு விட வேண்டும் என்று பேராசிரியர் சஞ்சீவி பேசினார்.
நான் எது வன்முறை என்ற கேள்வியை எழுப்பினேன். பஞ்சமும் பட்டினியும் வன்முறை இல்லையா என்ற மார்க்க ட்வெயின் கேள்வியை நானும் எழுப்பினேன். அரசு எப்படி வன்முறையை ஆதாரமாகக் கொண்டு நீடிக்கிறது என்பதை அம்பலப் படுத்தினேன்.
அதன் பிறகு திரு.சஞ்சீவி தம்மைப் பார்க்க வருமாறு எனக்குச் சொல்லி அனுப்பினார். நான் போனேன். காவல்துறை அதிகாரி திரு. சஞ்சீவியின் நண்பர் ஒருவர் மூலமாக திரு.சஞ்சீவிக்குச் செய்த எச்சரிகையைச் சொல்லிக் காண்பித்தார். அந்த நண்பரிடம் என்னைப் பற்றியும் காவல்துறை அதிகாரி இப்படிச் சொன்னாராம்; திரு. சஞ்சீவி சொன்னார்:
''அந்த இன்குலாப் தன் கலரைக் காட்டிட்டான். ”We will physically liquidate him" (அவனை நாங்கள் தீர்த்துக் கட்டிவிடுவோம்)
”நீங்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்" என்றார் சஞ்சீவி.
நான் புன்முறுவலுடன் "இதுவரையிலும் சாகாத ஒரு மனிதனை எனக்குக் காட்டுங்கள். அப்படி அழிந்து போவதற்கு மகிழ்ச்சியுடன் நான் தயாராய் இருக் கிறேன்” என்றேன்.
1981-வாக்கில் மக்கள் கலாச்சாரக் கழகம் சார்பில் கவியரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. கவிஞர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். "சிந்தும் ரத்தத்தில்' என்ற தலைப்பில் நான் கவிதை படித்தேன். காவல் துறையின் மிரட்டலுக்கு அது ஒரு கவிதைப் பதிலாக இருந்தது.
"நண்பர்களே
எதிரிகளே
ஒரு முடிவு செய்துவிட்டுத்தான்
உங்கள் முன் நிற்கிறேன்...
என்று அக்கவிதையைத் தொடங்கினேன்.
நான் பாடாதிருந்தாலும்
என் பாடலின் பொருளை
என் தோழமை நெஞ்சங்கள்
கேட்டுக் கொண்டிருக்கும்.
எதிரிகளே
உங்கள் கனத்த செவிகளைத்தான்
சமீபிக்க முயல்கிறேன்...
என்று தொடர்ந்தேன்.
சாபானு வழக்குத் தொடர்பாகக் கடுமையான விவாதங்கள் எழுந்த நேரம். நான் என் கொள்கைப்படி ஒடுக்கப்படுகிற முஸ்லீம் பெண்களுக்கு ஆதரவாக நின்றேன். 'உன்னைப் பர்தாவில் புதைக்கும் கைகளுக்கு எதிராக' என்ற கட்டுரையை எழுதினேன். 'தராசில்' வந்தது.
ஆணாதிக்க மனோபாவத்தில் ஊறிய முஸ்லீம் ஆண்கள் எனக்கு எதிராக நின்றனர். சில முல்லாக்கள் எனக்குச் சாபம் கொடுத்தனர். எனது முந்திய எழுத்துக்களால் பாதிக்கப்பட்ட கடத்தல் பேர்வழிகள் சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.
"இஸ்லாத்தில் சில சிவப்புப் பார்வைகள்" என்று ஒரு புத்தகம் முதன்மையாக என்னைச் சாடி வந்தது. அதை எனது ஊர், எனது தெருவைச் சேர்ந்த என் இளமைக்கால நண்பர் ஒருவரே எழுதி இருந்தார். என் மீது கொண்ட கோபத்தால் மனித கண்ணியங்களை எல்லாம் மீறி என் மீது வசை பாடினார். 'இஸ்லாம் சமத்துவத்துக்கான மதம்' என்று சொல்ல வந்தவர் என்னையும் என் குடும்பத்தையும் ஒரு வருணாசிரம வாதியைப்போல் நின்று இழிவு செய்தார்.
அந்தப் புத்தகம் வந்தவுடன் நான் பயந்து ஒடுங்கி விடுவேன் என்று என் எதிரிகள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் அளிக்கும் பதிலாக ‘யுகாக்கினி' வெளிவந்தது. அதற்குப் பிறகு அவர்கள் வாய் திறக்கவில்லை.
'யுகாக்கினி'யை நம் தோழர்கள் எத்தனை பேர் படித்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. அது தொடர்பாக நமது வட்டத்தில் எந்த விமர்சனமும் வரவில்லை.
பொதுவாக நமது படைப்புகள் குறித்து எதிரிகளின் தாக்குதல்கள் என்னைக் கவலைப்பட வைத்ததில்லை. ஆனால் தோழமை வட்டத்தின் வைராக்கியமான மௌனந்தான் என்னை அதிர்ச்சியடைய வைத்திருக் கிறது.
புரட்சிகர மாற்றத்தை முன்மொழியும் படைப்பாளிக்குச் சித்தாந்தத்தைப் போலவே, அமைப்பும் அவசியமானதுதான். அப்படி ஓர் அமைப்பை ஏற்காமலும் ஒருவன் புரட்சி இலக்கியம் படைக்கக்படும் அல்லது அவன் தனக்குச் சரியென்று தோன்றுகிற மாற்று அமைப்புகளிலும் நிற்கக்கூடும். தன் அமைப்பைச் சாராதவர்களை எல்லாம் எதிரிகளாகப் பார்ப்பது புரட்சிகர ஐக்கியத்தை உருவாக்காது.
விமர்சனமற்ற ஐக்கியம் சந்தர்ப்பவாதந்தான். ஆனால் விமர்சனம் என்பது அவதூறல்ல; விமர்சனம் என்பது ஒருவழிப் பாதையல்ல.
பெரும்பாலான புரட்சிகர அணிகள் இந்தக் குறுங்குழுவாத வெறியிலிருந்து தப்பவில்லை. எனது 'இன்குலாப் கவிதைகள்' மீது அரசும் தி.மு.க.வும் தாக்குதல் தொடுத்தபோது என்னை ஆதரிப்பதாகச் சொல்லி முன்வந்த சக்திகள் எந்தக் காரணமும் சொல்லாமல் நழுவிச் சென்றார்கள். சாபானு தொடர்பாக நான் தாக்கப்பட்டபோது நானும் 'யுகாக்கினி'யுந்தான் களத்தில் நின்றோம்.
பண்பாட்டுத் துறையிலாவது இந்தக் குறுகிய சுவர்கள் தகர்க்கப்பட வேண்டும். மிகக் கறாராகக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கிறேன் என்ற பெயரில் மிகக் கறாராக நண்பர்களை எதிரிகளாக்கியவர்களைப் பற்றியும் ஒரு கவிதை எழுதினேன்.
சுற்றம் முழுதும்
குற்றம் பார்க்கும்
தூய தோழர்
தோள் பை மாட்டி
வீட்டை விட்டு
வெளியேறும் முன்பு
புன்னகையோடு
போய்வருகிறேன் என்று
கையை அசைப்பார்
கண்ணாடி முன்பு
அந்தத் தோழர் யாரென்று நமக்கெல்லாம் தெரியும். நாம் அவராகி விடக் கூடாதல்லவா? அதற்குத்தான் இந்தக் கவிதை.
நான் எழுதியவற்றையெல்லாம், முழுமையாக மதிப்பிட எனக்கு இப்பொழுது மனசில்லை. இது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியது என்பதையும் நான் சரியாகப் பார்க்கும் நிலையில் இல்லை.
ஆயினும் ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை முதலில் எதிர்க்கும் எழுத்துகளில் எனது எழுத்தும் ஒன்றாக இருந்தது.
ரயில்வே தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்ற நேரம். அரசின் பிரச்சார சாதனங்கள் வழக்கம்போல் பொய்களைப் பரப்பிக் கொண்டிருந்தன. ஜெயகாந்தன், கண்ணதாசன் போன்ற ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகள் வானொலியில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை எதிர்த்து ஊளையிட்டுக் கொண்டிருந்தனர். இப்போராட்டத்தை- ஆதரித்து எழுதினாலோ பேசினாலோ தண்டனை என்று அரசு அச்சுறுத்தலில் இறங்கியது.
இதை எதிர்கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதினேன். இந்த அச்சுறுத்தல் முற்போக்குப் பேனாக்களை முடக்கிவிடாது என்று உணர்த்த விரும்பினேன். ’புகை பறக்காது' என்று ஒரு கவிதை எழுதினேன்.
புகை படிந்த எங்கள் முகங்களிலே - ஒரு
புதிய ஜோதி வரும் வரைக்கும்
புகை பறக்காது எஞ்சினிலே - இதைப்
புரிந்து நடந்துகொள் துரைத்தனமே!
என்று அந்தக் கவிதை தொடங்கியது இதைத் தீக்கதிர் வெளியிட்டது.
'அவசர நிலை' அறிவிக்கப்பட்ட போதும் இப்படித் தான். அந்தச் சமயங்களில் இன்குலாப் என்ற பெயரிலும், வேறு பல புனை பெயர்களிலும் எழுதினேன். அவசர நிலைமையின்போது பல எழுத்து, வீரர்களின் ஒப்பனை முகம் கிழிபட்டது. எந்தச் சூழ்நிலையிலும் எவருக்கும் அடிபணியமாட்டோம் என்று சவடாலாக எழுதித்தள்ளியவர்கள், அவசர மாதாவின் கால்களில் தங்கள் பேனாக்களை சமர்ப்பித்தார்கள். அவர்களுடைய ஆரவாரங்களையும், தற்போதைய அடிபணிதலையும் கவனித்த நான் இப்படி எழுதினேன்:
எந்தக் கூட்டிலும்
எங்கள் சிறகுகள் அடங்காது
என்று அறிவித்த வானம்பாடிகள்
அடைக்கல மாதாவின்
கூண்டில் முடங்கியது
அவசரத்தாலா?
அவசியததாலா?
குளப்பாடி கிராமத்தில் அந்தச் சிறுவர்கள் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட செய்தியைப் படித்தபோது நான் அதிர்ந்து போனேன்.
அச்சிறுவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற காரணத்துக்காகவே கொல்லப்பட்டனர். அவர்கள் குளித்த கிணறு மிராசுவின் பெயரில் இருக்கலாம். ஆனால் அதைத் தோண்டிய போது சிந்தப்பட்ட ஒவ்வொரு வேர்வைத்துளியும் அந்தச் சிறுவர்களின் தந்தையர்களது அல்லவா!
அந்தச் சிறுவர்களின் முகம் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்தச் சாதிய ஒடுக்குமுறை எனக்குப் புரியாததல்ல. அந்த ஒடுக்குமுறையின் கோரமுகத்தைத்தான் நான் எழுத்துகளின் மூலம் அறைந்து கொண்டிருக்கிறேன்; அதற்குப் புதைக்குழி தோண்டுகிறேன்.
அந்தப் படுகொலை நான் அனுபவித்தறியாதது. ஆனால் அந்த அவமானம் எனக்குவேறு வடிவங்களில் நேர்ந்திருக்கிறது. அந்தத் தாழ்த்தப்பட்டவர்களோடு அந்த அவமானம் என்னை ஐக்கியப்படுத்தி இருக்கிறது. அதனால் அந்தச் சிறுவர்கள் மீது பாய்ச்சப்பட்ட மின்சாரம் என்மீது பாய்ச்சப்பட்டதாக உணர்ந்தேன். அந்த ஒடுக்குமுறைக்கும் மானுட இழிவுக்கும் கணக்குத் தீர்க்கும் நோக்கத்தோடு நான் எழுதியதுதான்.
‘மனுசங்கடா-நாங்க
மனுசங்கடா
என்ற பாடல்:
‘எனது நாட்குறிப்பில்-மே நாள்' என்ற என் கவிதை நம் தோழர்கள் சிலரால் விமர்சிக்கப்பட்டது. அந்தக் கவிதையில் அவநம்பிக்கை தொனிக்கிறது என்பது விமர்சனம்.
'அவநம்பிக்கை' என்பதும் இன்றைய சமூக யதார்த்தம். இன்று நீடிக்கக்கூடிய நிலைமைகளில் நம்பிக்கை இழப்பதே, இதை சிந்தனைக்கு வழிவகுக்கும் என்று மாற்றுவதற்கான சில முற்போக்குத் திறனாய்வாளர்கள் கருத்துக் கூறுகின்றனர். கற்பனை அடிப்படையிலான நம்பிக்கைத் தீர்வுகளைவிட யதார்த்த அடிப்படையிலான அவநம்பிக்கைச் சித்திரிப்பு சரியானது என்பது அவர்களின் வாதம். இதை நாம் முழுமையாக மறுதலிப்பதற்கில்லை. யதார்த்தத்தின்மீது அவநம்பிக்கையை உருவாக்குவது, மாறுதலுக்கான நம்பிக்கையை உள்ளடக்கும் என்பது நாம் ஆராய வேண்டிய ஒரு கருத்து.
எனினும் என் 'மே நாள்' கவிதையை நான் அவநம்பிக்கையின் (Pessmism) அடிப்படையில் எழுதவில்லை. "இன்றும் கிழக்கு இயற்கையாய்ச் சிவக்கும்' என்பது எனது ஆதங்கம் அது புரட்சியினால் சிவக்க வேண்டும் என்ற விருப்பத்தின் எதிர்மறைத் தூண்டுதல். அந்தக் கவிதையின் எதிர்மறைத் தொனியே தூண்டுதல்தான். அதனால் அந்தக் கவிதை அவநம்பிக்கை வாதத்தின் அடிப்படையில் உருவானது என்பதை நான் ஏற்பதற்கில்லை
பழமலையின் 'சனங்களின் கதை' நூல் மதிப்பீட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் நானும் கலந்து கொண்டு அதை வரவேற்றுப் பேசினேன். இறுதியில் தோழர் பழமலை ஏற்புரை நிகழ்த்தினார். எனது கவிதைகள் எல்லாம் விளித்துப் பேசும் தன்மை யுடையன; அதனால் அவை அவ்வளவு சிறந்தவை அல்ல என்ற சுருத்துப்பட என்னை விமர்சனம் செய்தார். என்னுடையவை கவிதைகளே அல்ல என்றும் அவர் கூறி வருகிறார் என்பதையும் நான் அறிவேன்.
என் கவிதைகளை ஏற்பதும் மறுப்பதும் அவரது அடிப்படை உரிமை.
என் கவிதைகளில் அவர் எதிர்பார்க்கும் கவித்துவமே இல்லாமற் போகலாம். ஆயினும் விளித்துப் பேசுது கவிதையா இல்லையா என்பது போகிற போக்கில் பேசி விட்டுப் போகிற செய்தி இல்லை.
எதிரிகளிடமிருந்து அச்சுறுத்தலும் அறை கூவலும் வந்த நேரங்களில் எல்லாம் நான் மக்களின் பக்கத்தில் நின்று பேசினேன் அப்பொழுது வெடிப்புறப் பேசுவது என் இயல்பாக இருந்தது. அந்த நேரங்களில் எல்லாம் என் கவிதைக்குக் கலை நியாயங்களை வழங்க நான் முயன்றிருக்கிறேன். பழமலை கருதுவது போல் இந்த முயற்சியில் நான் தோற்றுப் போயிருக்கலாம். எனது நோக்கம் ஒரு கவிஞனாக என்னை நிலைநிறுத்திக் கொள்வதில்லை. மாறாகப் போராடுவதும் போராடத் தூண்டுவதுந்தான். எனது முயற்சியும் எனது தோல்வியும் 'விளித்துப் பேசுவது' என்ற கவிதை வெளிப்பாட்டு முயற்சியையே தவறெனக் கருத வைத்து விடுமா?
அல்லது 'சனங்களின் கதை' என்ற கவிதைக்குரிய செய்திகள் மட்டுமே கவிதைக்கு உரிய ஒரே பொருள் என்று கொள்ள முடியுமா? தோழர் பழமலை தன் குடும்ப உறவுகளில் மனித நேயத்தைத் தேடிய காலங்களில், நான் சமூக உறவுகளில் மனித நேயத்துக்காகப் போராடினேன்.
கவிதை என்பது எல்லாந்தான். அது ஒரு மௌனம் மட்டுமல்ல; இடியும்கூட. இந்த மௌனமும் இடியும் யாருக்காக என்பதுதான் நம் போன்ற சிந்தனையாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி.
முன்னரே குறிப்பிட்டது போல எனது படைப்புகளையெல்லாம் அசைபோடுவதற்குரிய நேரம் இப்பொழுதன்று. அப்படி ஒரு நேரத்தை எதிர் கொள்ளாமலேயே நான் முடிந்து போய்விடலாம். எனினும் எனது உயிர்ப்பில் நான் செய்யவேண்டியவை மலை போல் குவிந்து கிடக்கின்றன. இங்கு ஒரு தனிமனிதனாக நின்று என்னால் எதையும் செய்ய முடியாது என்பதை உணர்கிறேன்.
சமூக மாறுதலுக்கான புரட்சி வேலைத் திட்டத்தைக் கொண்ட இயக்கங்களுக்கு கலைத் தொண்டு புரிவதுதான் இன்று என் முதன்மையான பணி என்று கருதுகிறேன். எனக்கொரு இயக்கச் சார்பு இருக்கலாம். ஆயினும் எனது சார்புகள் புரட்சிகரப் பண்பாட்டுச் சக்திகளை அடையாளங் காணத் தடையாய் அமைய நான் அனுமதிப்பதில்லை. எதிரிகளுடன் சமரசமற்ற போருக்கு ஆயத்தமாய் நிற்கும். அதேநேரத்தில் தோழமைச் சக்திகளுடன் பகைமையற்ற ஒற்றுமைக்கும் நாம் ஆயத்தமாக வேண்டும். இன்று மலர்களுக்காக விதைப்பதைக் காட்டிலும் வேலிகளுக்காக வெட்டுவது தான் அதிகமாயிருக்கிறது. நமது முரண்பாடுகளில் பல உழக்குக்குள் கிழக்கு மேற்கு காண்பதாகவே அமைந்திருக்கின்றன.
நாம் மாபெரும் கொள்கைகளைப் பேசலாம்; ஆயினும் மக்களுடைய மனத்தில் பெரும்பான்மையான இடம் நமக்கில்லை. அனைத்திலும் மக்கள், மக்கள் என்று உருவேற்றும் நாம், மக்களைவிட்டு எப்படி இப்படி ஆகிறோம் என்பதைச் சிந்தித்தாக வேண்டும்.
நம் அரசியல் பிளவுகளுக்கு அப்பால், கலை இலக்கியத் துறையில் கைகோத்துக் கொள்ள முடியும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் கலை, இலக்கியம் என்பது பல சமயங்களில் அரசியல் கணிப்புகளுக்கு முந்திச் செல்லக் கூடியது. அரசியலை ஆணையில் வைப்பது அரசியலின் முதன்மையை ஏற்றுக் கொள்வது என்பதுதான். எனினும் இலக்கியம் அறியா அரசியல் தலைமைகளின் அதிகாரக் குறுக்கீடுகள் கலை இலக்கியங்களின் உயிர்ப்புத் தன்மைக்கே எதிராக நின்று விடக் கூடும். இதில் கலை இலக்கியவாதிகள் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். இந்த எச்சரிக்கை என்பது புரட்சியின் பண்பாட்டுச் சேவகத்துக்கான எச்சரிக்கை. இது விவாதத்திற்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகலாம். எனினும் இதைச் சொல்லியாக வேண்டும்.
நாம் மக்களை எட்டுவதற்கு நமது நடையைத் திருத்தியாக வேண்டும். புதிய ஜனநாயகப் புரட்சிக்கு நாம் நிற்கிறோம் என்று சொல்லி வருகிறோம். எனினும் நமதுநடை நமக்குள் புழங்கும் குழுக்குறியீடுகள் போலவே அமைந்துள்ளன. இது ஜனநாயகப் புரட்சிக்கு உதவாது. நமது நடையை ஜனநாயகப் படுத்தவேண்டும். அதாவது எல்லாருக்கும் புரிந்த நடையை நாம் ஏற்றாக வேண்டும். அதுமட்டுமன்று; சென்றாக வேண்டும். நாம் பரவலாகவும்
பரவலாக நமது கருத்துக்களைப் பரப்பவே பல சமயங்களில் நான் வணிக இதழ்களில் எழுதினேன். அப்படி எழுதிய சமயங்களில் நம் கருத்துகள் சென்று சேரவேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருந்தேன். இதற்காக என்னை விமர்சனம் செய்த தோழர்களும் வசைமாரி பொழிந்த ஆட்களும் உண்டு. அவர்கள் இந்தப் பிரபல பத்திரிகைகளில் நான் எழுதியதை மட்டுமே பார்த்தார்கள். நான் மறுத்தவை அவர்களுக்குத் தெரியாது.
ஒரு சமயம் சுனில் கவாஸ்கர் 10,000 ரன் எடுத்ததற்குப் பாராட்டிக் கவிதை கேட்டு வந்தார் ஒரு பிரபல வார இதழ் நிருபர். நான் கேட்டேன்:
"சுனில் கவாஸ்கர் யார்? மீசை வைச்ச ஆளா? மீசை இல்லாத ஆளா?''
வந்த நிருபர் பேசாமல் திரும்பினார். அதிர்ச்சியடைந்தார்.
இன்னொரு சமயம் குமுதம் இதழுக்காக 'காதல் நிலவில்கால் வைத்தேன்' என்ற ஈற்றடிக்கு ஏற்ற அந்தாதிக் கவிதை ஒன்றை ஒரு நிருபர் கேட்டு வந்தார். அவருக்கு ஒரு நீண்டமடலே எழுதினேன். அந்த மடலின் சாரம் இதுதான்: புதிய சமுதாயத்தின் கலைப் பிரதிபலிப்பு புதுக்கவிதை. அதனால் அது பழைய மரபுகளை உடைத்தெறிகிறது. எனது மார்க்சியக் கண்ணோட்டங்களை வற்புறுத்துவது இருக்கட்டும்; புதுக்கவிதையின் கலை மேன்மை குறித்தாவது உங்களுக்கு அக்கறை உண்டா? எனில் இற்றுப்போன அந்தாதி மரபில், ஒரு, கற்பனா மனோநிலையில் நின்று 'காதல் நிலவில் கால் வைத்தேன்' என்று அடிகொடுத்து பாட வைப்பது என்ன நியாயம்?
பிரபல இதழ்களில் நான் எழுதியவை சமூக மாற்றத்துக்கான செய்திகளைச் சனநாயகக் கலைநடையில் அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடுதான். நமது சிற்றிதழ்களில் எழுதியதால் நான் எதிர்கொண்ட கண்டனங்களைவிடப் பிரபல இதழ்களில் எழுதியதால் நான் எதிர்கொண்டவை அதிகம். சில சமயங்களில் என் உயிருக்கே அச்சுறுத்தலாகவும் சில எச்சரிக்கைகள் வந்தன.
இதனால் கூடுதலான வாசகர்களைச் சென்றடைந்தது: மட்டுமல்ல, கூடுதலான சிந்தனைப் போராட்டங்களையும். தோற்றுவிக்க முடியும் என்பது என் அனுபவம்.
தணிக்கையின்றி வெளியிடப்படும் வாய்ப்புக்கிடைக்கு மேயானால், நாம் பிரபல இதழ்களைப் பயன்படுத்துவது, நமது கொள்கைப் பரப்புக்கு உதவுமென்று நம்புகிறேன்.
வணிக இதழ்கள் முற்போக்குக் கருத்துகளைத் தணிக்கை செய்கின்றன என்பது உண்மைதான். கலை இலக்கியங்களுக்கு உண்மையாய் இருக்கும் படைப்பாளி வணிக இதழ்களில் எழுத நேரும் பொழுது போராட வேண்டியிருக்கிறது. தமிழில் பெருவாரியான மக்களை எட்டுவதில் வேரூன்றிவிட்ட இதழ்கள் பலவற்றில் எழுத்தாளர்களுக்கு உரிமை கிடையாது என்பதும் உண்மைதான்.
தனது இதழ்களை ஆசிரியர் குழுவினர் அல்லாமல், வெளியிலுள்ளவர்களைக் கொண்டு தயாரிக்கும் 'புதுமை'யைக் குமுதம் செய்து வருகிறது. இந்த முயற்சி குமுதத்தின் அபத்தத்தை மட்டுமல்லாமல் இத்தகைய தயாரிப்பைச் செய்து தரும் 'புகழ்' பெற்ற மனிதர் பலரின் அறிவீனத்தையும் காட்டி வருகிறது. இதில் விதிவிலக்காகச் சில சமயங்களில் நல்ல படைப்புகளும் வந்து விடுவது உண்டு.
அப்படி ஒரு மாறுதல் கவிஞர் மு. மேத்தா குமுதத்தைத் தயாரிக்கும்போது நேர்ந்தது. வகுப்பு வாதத்துக்கு எதிரான அவரது கவிதை. 'புலி'யுடன் அவர் கண்ட பேட்டி, இளங்கவிஞர்கள் பலரின் அருமையான கவிதைப் பொறிகள், திலகவதியின் மானுட நேயமிக்க சிறுகதை என்று அந்த இதழில் பாராட்டிச் சொல்வதற்குப் பல கூறுகள் இருந்தன. கவிஞர் மு. மேத்தாவே தயாரித்த அந்த இதழிலும் தணிக்கை முறை ஒன்றை குமுதம் ஆசிரியர் குழு திணித்திருக்கிறது.
திரு. மு.மேத்தா பாரதிதாசன் பற்றிய எனது கவிதையின் சில வரிகளை அந்தக் குமுதம் இதழில் மேற்கோள் காட்டி இருக்கிறார். அந்த வரிகள் இவைதாம்:
பாரதிதாசன் இன்றில்லை…
ஆயினும் உண்டு
அவன் விட்டுச் சென்ற
முழங்கு சங்கும்
கொலை வாளும்
இன்றும்
இனியும்.
இவ்வரிகளை வெளியிடக் குமுதம் ஒப்புக்கொள்ள வில்லை. அதனால் கவிஞர் மு.மேத்தா நான் எழுதிய வேறொரு கவிதையின் சில வரிகளை நினைவிலிருந்து மேற்கோள் காட்டி இருக்கின்றார். படைப்பாளியே தனது இதழைத் தயாரிக்கிறார் என்று தனது வாசகர்களிடம் காட்டிவிட்டு, படைப்பாளியின் உரிமைகளில் எவ்வளவு நயவஞ்சகமாகக் குமுதம் போன்ற இதழ்கள் குறுக்கிடுகின்றன என்பதை விளக்கவே இதைச் சொன்னேன்.
முதலாளிய வணிக இதழ்கள் இத்தகைய தணிக்கை முறைகளைக் கட்டவிழ்த்துக் கொண்டுதான் சனநாயகம், தனிமனித உரிமை போன்ற சொற்களையும் உச்சரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நமது முற்போக்குப் புரட்சிக் கலை இலக்கிய இதழ்கள் இந்த முதலாளிய ஆதிக்க மனோபாவத்திலிருந்து எவ்வளவு தூரம் விடுபட்டுள்ளன? கிட்டத்தட்ட நமது சார்புடைய இதழ்களும் தணிக்கை முறையைக் கையாள்வதில் முதலாளிய இதழ்களுக்குக் குறைவானவை அல்ல.
பாரதியார் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஒரு நெடுங் கவிதை ஒன்றை எழுதினேன். அந்தக் கவிதையை கவிஞர் மீரா அவர்களைத் தொகுப்பாளராகக் கொண்டு வெளிவர இருந்த பாரதியார் மலருக்கு அனுப்பினேன். ஆனால் அந்த மலரின் ஆசிரியர் குழு எனது கவிதையை வெளியிட மறுத்துவிட்டது. காரணம் அதில் நான் அமெரிக்காவுடன் ருஷியாவையும் கண்டனம் செய்திருந்தேன். கவிஞர் மீரா அவர்கள் வருத்தத்துடன் அக்கவிதையை எனக்குத் திருப்பி அனுப்பிவிட்டார். அந்த மலரைத் தயாரிக்கும் பொறுப்பிலிருந்த மீரா அவர்களின் குரலே அந்த ஆசிரியர் குழுவினரால் ஒடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றுதான் நான் கருதுகிறேன்.
'ஒரு நூற்றாண்டு முடிவில்' என்ற அந்தக் கவிதையை நான் ஒரு கவியரங்கத்தில் படித்தேன். அந்தக் கவியரங்கம் சென்னைப் பல்கலைக் கழகத்தின், இந்தி மொழித் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழில் இன்றைய கவிதைப் போக்குகள் எப்படி இருக்கின்றன என்பதை இந்தப் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் அந்தக் கவியரங்கம் நடைபெற்றது. எனது கவிதையைப் பேராசிரியர் குப்புசாமி அவர்கள் அருமையாக இந்தியில் மொழி பெயர்த்துப் படித்தார். அந்த மொழி பெயர்ப்பை, டில்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்திப் பேராசிரியர் திரு. நட்வர்சிங் என்பவர் வாங்கிக் கொண்டு போய், அவர் வெளியிடும் 'விமர்சனா' என்ற இந்தி இதழில் வெளியிடவும் செய்தார்.
பாரதி பற்றிய 'ஒரு நூற்றாண்டு முடிவில்' என்ற எனது தமிழ்க் கவிதை தமிழில் வெளிவருவதற்கு முன்பே இந்தியில் வெளியிடப்பட்ட நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது.
அந்தக் கவிதையைப் படித்த ஈழ எழுத்தாளர் செ. கணேசலிங்கன் கொழும்பிலிருந்து வெளிவரும் குமரன்' என்ற தமது இதழில் அதை வெளியிட்டார்.
தமிழில் எழுதப்பட்ட கவிதை முதன் முதலாக இந்தியில் வெளியிடப்படுகிறது. தமிழகத்தின் 'பாரதி மலர்' மறுத்த கவிதையை இலங்கையின் 'குமரன்' இதழ் வெளியிடுகிறது. நம் முற்போக்காளர்கள், நமது படைப்புரிமையை எவ்வளவு தூரம் அவமதிக்கிறார்கள்!
இன்னும் நமது சார்பில் வெளிவரும் கலை இலக்கிய இதழ்களில் நமது எழுத்தாளர்களின் படைப்புகள் தணிக்கைக்குத் தப்பி வெளியிடப்படுவதில்லை. ஒவ்வொரு படைப்பையும், இவ்விதழ்களின் ஆசிரியர் குழு மிகவும் கவனமாகப் பரிசீலனை செய்கிறது. தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு மாறான, அல்லது சாராத கருத்துகள் இருக்குமாயின் அந்தப் படைப்பு தணிக்கை செய்யப்படுகிறது. அல்லது திருப்பி அனுப்பப்படுகிறது. அந்தப் படைப்பை வெளியீடுவதும், அதன்மீது விவாதங்களைத் தொடர்வதும் மிகவும் அருமையாகத்தான் நடைபெறுகிறது.
அத்துடன் இவ்விதழ் ஆசிரியர் குழுவினரின் குறுங்குழுவாதப் போக்கையும் சுட்டிக்காட்ட வேண்டும். தம் இயக்கம் சாராதவர்களின் படைப்புகளை இத்தகைய இதழ்களில் பல வெளியிடுவது இல்லை. தான் வெளியிட மறுக்கும் ஒரு படைப்பு, அதை எழுதிய படைப்பாளி, வணிக இதழ் ஒன்றுக்கு அனுப்பி அது வெளியிடப்படுமாயின், அந்த எழுத்தாளன்மீது சேற்றை வாரி வீசுவதற்கும் இந்தப் புரட்சிகர இதழ்கள் தயங்குவதில்லை. இதற்குப் பொருள் என்னவாக இருக்கமுடியும்? தனது இயக்கத்தைச் சாராத ஒருவன், தனது இதழ்களிலும் எழுதக்கூடாது பிற இதழ்களிலும் எழுதக்கூடாது என்ற நடைமுறைக்குப் பொருள் அந்த எழுத்தாளனை எழுதவே அனுமதிக்கக் கூடாது என்பதுதான்.
'புதிய கலாசாரம்' என்ற பெயரில் வரும் இதழ் இத்தகைய ஆதிக்கப்போக்குக்கு உதாரணமாக விளங்குகிறது.
வணிக இதழ்களில் எழுதினேன் என்பதற்காக என்னைக் கண்டனம் செய்த அந்த இதழ் (புதிய கலாசாரம்) ஒரு தடவைகூட எனது எழுத்துகளைக்கேட்டு வாங்கி வெளியிட்டது கிடையாது. வணிக இதழ்கள் என்னிடம் வேண்டிப் பெறுகின்றன. நானாக எதற்கும் அனுப்புவதில்லை.
இன்னொன்றையும் தெரிவித்தாக வேண்டும். இதே வணிக இதழ்களும், பிரபல நாளேடுகளும், தங்கள் இயக்கம் சார்ந்த ஒருவருடைய படைப்பையோ, பேட்டியையோ வெளியிடுமானால் அவற்றைப் புரட்சிகர இதழ் ஆசிரியர்கள் கண்டித்தது கிடையாது. ஆந்திரப் புரட்சிக் கலைஞர் கத்தருடைய பேட்டிகள், ஆங்கில முதலாளிய நாளிதழ்களில் வந்துள்ளன; ஆந்திரக் கவிஞர் வரவர ராவுடைய படைப்புகளும் மேற்படி முதலாளிய நாளிதழ்களில் வந்துள்ளன. அந்தக் கலைஞர்களையெல்லாம் பாராட்டும் இந்தப் பத்திரிகைகள் அவர்கள் ஆங்கில நாளிதழ்களில் தங்கள் கருத்துகளை வெளியிட்டமைக்காக இதுவரை கண்டனம் செய்ததில்லை. காரணம் நான் அந்த இயக்கம் சாராதவன்.
முற்போக்கு இதழ்கள் இருக்கும் நிலைமை இப்படிப் பட்டதுதான். இத்தகைய ஆதிக்க உளவியல் நிலையிலிருந்து இவர்கள் மீளவேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவையும் சொல்ல தேர்ந்தது.
இதழ்களில் நான் எழுதியதால் இந்தப் புரட்சிகர இயக்கங்களின் நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் பின்னடைந்தன என்பதும் எனக்குத் தெரியவில்லை. இந்தக் கேள்வியை நான் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
- கவிஞர் இன்குலாப்
தொகுப்பு : எ. பாவலன்