இராமநாதபுரம் ஜில்லா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு சென்ற வாரம் சிவகங்கையில் வெகு சிறப்பாய் நடந்தேறியிருக்கும் விபரம் மற்ற பக்கங்களில் காணலாம்.
அவற்றுள் மகாநாட்டுத் தலைவர் தோழர் எஸ்.ராமநாதன் அவர்கள் “இயக்கக் கொள்கைக்குத் தக்க திட்டங்களை வகுத்துக் கொள்ளவில்லை” என்றும் “காரியத்திற் கடமைகளை உணரவில்லை, வேலை தொடங்க வில்லை” என்றும் கூறியிருப்பதையும், வேறு சிலர், காந்தியவர்கள் வரவை பகிஷ்காரம் செய்த தீர்மானத்தை தவறு என்று கூறி கண்டித்திருப்பதையும் பற்றி சிறிது சமாதானம் கூற வேண்டியது அவசியம் என்று கருதுகின்றேம்.
முதலாவது, தோழர் ராமநாதன் அவர்கள் கூறும் குறைக்குச் சமாதானம் இயக்கத்திற்கு கொள்கைகளும் திட்டங்களும் வகுக்க என்று ஈரோட்டில் சென்ற வருஷம் டிசம்பர் மாதத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து, தமிழ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 250 தோழர்கள் வரை விஜயம் செய்து, இரண்டு நாள் தாராள விவகாரத்திற்குப் பிறகு இயக்கத்திற்கென்று ஒரு லக்ஷியமும் ஒரு திட்டமும் வகுக்கப்பட்டிருப்பதை யாவரும் அறிவார்கள். அந்த லக்ஷியமும் திட்டமும் இதுவரை, சுமார் 120 சங்கங்களால் ஒப்புக் கொள்ளப்பட்டும், சுமார் 10, 20 மகாநாடுகளில் நன்றாய் விவாதிக்கப்பட்டும் 2, 3 மகாநாடுகளில் தோழர் ராமநாதன் அவர்களாலேயே எதிர்த்து ஆnக்ஷப ணைகள் கூறி மறுக்கப்பட்டு அம்மறுப்புகளுக்கு ஆங்காங்கு அவ்வப் போது சமாதானம் கூறப்பட்டு அநேகமாய் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு இருப்பதும் தோழர் ராமநாதன் அவர்களுக்கும் மற்றும் அம் மகாநாடு களுக்குச் சென்ற அநேகருக்கும் தெரியும். இந்நிலையில் சுயமரியாதை இயக்கத்திற்கு திட்டங்கள் வகுத்துக் கொள்ளவில்லை என்பது நமக்குப் புரியவில்லை.
இது ஒருபுறமிருக்க, தோழர் ராமநாதன் அவர்கள் சுமார் 3,4 சு.ம. மகா நாடுகளில் பொதுஜனங்களுக்குத் தனது அபிப்பிராயத்தையும் கொள்கைகளையும் திட்டங்களையும் எடுத்துச் சொல்லத்தக்க வசதி உள்ள தலைமையை வகித்தும் இருக்கிறார். அவைகளில் எதிலாவதொன்றிலாவது “அக் குறையை” நீக்கத்தக்க திட்டங்களை வகுத்துக் குறிப்பிட்டதாகவும் தெரியவில்லை. ஆனால் தான் விஜயமாகும் மகாநாடுகள் தோறும் சிலவற்றுள் “லக்ஷியத்தையும் திட்டத்தையும் எதிர்ப்பதாகவும்” சிலவற்றுள் “லக்ஷியம் அர்த்தமற்றது. திட்டம் பயனற்றது” என்று சொல்லுவதாகவும் சிலவற்றுள் “லக்ஷியம் ஒப்புக்கொள்ளக் கூடியது, திட்டம் பயனற்றது” என்று சொல்லுவதாகவும் தான் தெரிய வருகின்றது. ஒரு இயக்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும்பற்றி மாறு அபிப்பிராயப்படவும் மறுக்கவும் யாருக்கும் உரிமையுண்டு. ஆனால் அவ்வியக்கத்தில் இருக்கின்றவர்களுக்கு அவ்வுரிமையுடன் கூடவே அதற்கு பதிலாக, வேறு எதையாவது தான் கருதி இருப்பதை காட்ட வேண்டிய அவசியமும் இருக்க வேண்டியது நியாயமாகும்.மற்றபடி தனிப்பட்ட முறையில், இருக்கிறதா? இல்லையா? என்பதை விவகாரத்துக்கு இடமானதாகக் கொள்வதானாலும், மகாநாடுகளுக்குத் தலைமை வகித்து தலைமைப் பேருரை நிகழ்த்துங்காலையில் குறைகள் கூறப்படும்போது அதற்குப் பரிகாரமும் கூற வேண்டியது யாரும் எதிர் பார்க்கத்தக்க தர்மமாகும்.
நிற்க, இம்மகாநாட்டுத் தலைவரால் மற்றொரு குற்றமும் கூறப் பட்டிருக்கிறது. அதாவது,
“வேலை துடங்கவில்லை என்பதை நாம் அனைவரும் வருத்தத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டும். இனியாவது நமது கடமை களை உணர்ந்து அவைகளைச் செலுத்த வேண்டிய முறையில் காரியாம்சையில் ஈடுபட ஒருப்படுவோமென்கின்ற நம்பிக்கையில் இம் மகா நாட்டின் நடைமுறைகளை அமைப்போமாக” என்று கூறி இருக்கிறார். இதையும் அர்த்தம் செய்து கொள்ளத்தக்க சக்தி நமக்கு இல்லை.
என்ன வேலை துடங்கவில்லை? நமது கடமை என்ன? காரியாம்சையில் ஈடுபடுவது என்பது எப்படி? ஆகிய விஷயங்களை அறிய ஆசைப்பட எவருக்கும் உரிமையுண்டு. ஆதலால் அவைகளை அத் தலைமை உரையிலாவது, முடிவுரையிலாவது கூறப்பட்டிருக்குமானால் மிகவும் அழகாயிருந்திருக்கும் என்பதோடு சமாதானம் சொல்ல வேண்டிய அவசியமும் நேர்ந்திருக்காது.
மற்றபடி அபிப்பிராய பேதங்கள் இயற்கையானதும் அவசியமானதுமாகையால் மற்றும் சில விஷயங்களைப் பற்றி இப்பொழுது பேச அவசியமில்லை என்ற அளவில் அடுத்த விஷயத்தைக் கவனிப்போம்.
காந்தி பகிஷ்காரம்
தோழர் காந்தி அவர்களது தமிழ் நாட்டு விஜயத்தைப் பொது மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்றும் அவருக்குப் பண முடிப்பு சமர்ப்பிக்க யாரும் பணம் கொடுக்கக் கூடாதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டி ருப்பது உண்மையேயாகும். இதிலென்ன தப்பிதம் இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை.
வாலிப உலகில் காந்தியார் சுமார் 5, 6 வருஷகாலமாகவே பகிஷ்கரிக் கப்பட்டு வருகிறார்என்பது யாவரும் அறிந்ததே. கராச்சியிலும், பம்பாயிலும் மற்றும் இரண்டொரு இடங்களிலும் காந்தியார் வரவுக்குக் கருப்புக்கொடி பிடித்ததும் கையில் கருப்பு புஷ்பம் கொடுத்தும் “காந்திஜி திரும்பிப்போ” என்று மக்கள் கூவியதும் அனேகருக்குத் தெரியும். அப்படிக் கூடியவர்கள் வெறும் சோத்து ராமன்கள் அல்ல. பின்னை யாரென்றால் தூக்கு மேடையில் ஒருகாலும் காந்தி பகிஷ்காரத்தில் ஒரு காலும் வைத்துக்கொண்டு மனித சமூக சமதர்ம இன்ப வாழ்வுக்கு உயிரைத் தத்தம் செய்து வைத்திருந்த வாலிபர் களேயாவார்கள்.
ஆதலால் காந்தி பகிஷ்காரம் என்பது ஒரு ஒப்பற்ற மனித சமூக சுயமரியாதைத் தத்துவம் கொண்டதே ஒழிய, ஓட்டுப் பெறவோ சோம்பேறிக் கூட்டங்களுக்கு அன்னசத்திரம் வைப்பது போன்ற சோம்பேறி மடங் கட்டவோ ஏற்பட்ட வேலையல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். “சுயமரியாதைக்காரர் பகிஷ்காரம் வெற்றி பெறுமா” என்பது வேறு சங்கதி.
“பெரியபாளையத்து அம்மன்” உற்சவத்துக்கு, சீலையையும் வேஷ்டியையும் அவிழ்த்துப் போட்டு ஆடுவதற்கும், அதைப் பார்ப்பதற்கும் அதற்குப் பணம் கொடுப்பதற்கும் லக்ஷக்கணக்கான ஜனங்கள் போகிறார்கள். அதைப் பகிஷ்கரிக்கச் செய்த பிரசாரங்களில் எட்டில் ஒரு பங்குகூட இன்னமும் வெற்றி பெறவில்லை. ஆதலால் வெற்றி தோல்வி என்பவைகளிலேயே காரியங்களின் யோக்கியதாம்சங்கள் இருக்கின்றன என்று கருதினால் விஷயங்களின் தன்மையில் ஏமாந்து போக நேரிடும்.
“காந்தியாரைப் பகிஷ்கரிப்பது அறிவீனம்” என்று சில பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால் இப்பத்திரிகைகள் “காந்தியாரைப் பகிஷ்கரிப்பது பெரிய பாவம்” என்று சொல்லும் மேதாவிகளைவிட ஒருபடி மேலானவைகளென்றே சொல்லலாம்.
காந்தியார் எதற்காக வருகிறார்? அவருக்குக் கொடுக்கும் பணம் எதற்குப் பயன்படும்? அவரை யார் கூட்டிவந்து காட்டி பணம் பெறுகிறார்கள்? காந்தியார் கொள்கை என்ன? என்பவைகளைப் பற்றி இவர்கள் யோசித்து இருந்தால் உண்மைத் தன்மையில் இப்படிப் பேசியும் எழுதியும் இருக்க மாட்டார்கள்.
காந்தியார் தீண்டாமை விலக்குப் பிரசாரம் செய்ய வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். தீண்டாமை எதிலிருந்து உற்பத்தியாயிற்று? ஹிந்து மதத்தில் தீண்டாமைக்கு ஆதாரம் இருக்கின்றதோ இல்லையோ என்பது ஒரு பிரச்சினையேயானாலும் இந்துமத சம்பிரதாயப்படிக்கு என்றுதானே இன்று தீண்டாமை இருந்து வருகின்றது.
தோழர் காந்தியவர்கள் “தீண்டாமைப் பேயை” ஓட்ட வேண்டு மென்பது “மதத்தைப் புனிதமாக்கவே” ஒழிய தீண்டாதார்களைப் பற்றிய கவலையால் அல்ல என்பது யாவரும் உணரக்கூடியதேயாகும். மதத்தைப் புனிதமாக்குவது என்பது எதற்காக என்றால் இந்து மதம் குற்ற முடையதாகி அது பலராலும் குற்றம் சொல்லும் நிலைமைக்கு வந்தது சீக்கிரத்தில் கழிந்து போகத் தக்க நிலைமைக்கு வந்து விட்டதாதலால் அக்குற்றங்களை களைந்து சீக்கிரம் அழிந்துபோகக்கூடுமான நிலைமையில் இருக்கும் இந்துமதத்தை காப்பாற்றவேண்டும் என்பதற்காக என்பது காந்தியவர்களுடையவும் அவரைக் கூட்டி வந்து வேடிக்கை காட்டும் பார்ப்பனர்களு டையவும் அவ் வேடிக்கையில் வசூலாகும் பணங்களைக் கொண்டு வயிறு வளர்க்கும் மத-தேச பக்தர்களுடையவும் கருத்து என்றே வைத்துக் கொள்ளலாம். இதை சுயமரியாதைக்காரர்கள் அல்லது மனித சமூக ஒற்றுமையிலும் பரஸ்பர அன்பிலும் கவலையுள்ளவர்கள் அல்லது இந்தியா ஒரு தேசமாகி இந்திய மக்கள் ஒற்றுமையுடன் பரஸ்பர அன்புடனும் சமாதானத்துடனும் சகோதரத்துவத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ வேண்டும் என்று கருதுகின்ற உண்மை தேசபக்தர்கள் அல்லது தேசியவாதிகள் என்பவர்கள் ஒப்புக்கொள்ள முடியுமா என கேட்கின்றோம்.
தீண்டாமை விலக்கு என்பது ஒரு பொதுஜன தர்மம் அல்லவென்றும் அது இந்துக்களை மாத்திரம் சேர்ந்த வேலையென்றும் தோழர் காந்தியார் ஆயிரம் தடவை சொல்லி இருக்கிறார். இதிலிருந்தே தீண்டாமை விலக்கு என்பது ஒரு மதப்பிரசாரம் என்பதாக ஒரு சாதாரண மனிதனுக்கும் விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.
காந்தியாரின் தீண்டாமை விலக்குப் பிரசாரத்தினால் “இந்திய தேசியத்திற்கே ஜாதிப்பாகுபாடானது இயற்கை விரோதியாய் இருக்கின்றது” என்று தேசியவாதிகள் தேசபக்தர்கள் என்பவர்களால் சொல்லப்படுகின்ற ஜாதிப் பாகுபாடுமுறை அழிந்து விடுமா?
அல்லது “இந்திய சமுதாய மக்களின் சுயமரியாதை வாழ்வுக்கே விரோதமாய் இருக்கிறது” என்று எல்லாப் பார்ப்பனரல்லாத மக்களாலும் ஏக மனதாய் ஒப்புக் கொள்ளப்படுகின்ற வருணாச்சிரம தர்மமுறை தோழர் காந்தியார் தீண்டாமை விலக்குப் பிரசாரத்தால் ஒழிந்து விடுமா என்று தேச பக்தர் தேசியவாதிகள் பார்ப்பனரல்லாத சுயமரியாதையுடைய மக்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் ஆகிய எல்லோரையுமே வணக்கத்துடன் கேட்கின்றோம்.
மனிதன் தனக்கு எழுதவும் பேசவும் தெரிந்துவிட்டதாலேயே தன்னை பூரண மனிதன் என்று நினைத்துக் கொள்ளலாம் என்பது ஒரு நாளும் ஒப்புக்கொள்ளத் தக்கதாகாது. மனிதன் மதிக்கப்படவேண்டுமானால் அவனது எழுத்தும் பேச்சும் பொருத்தவரையிலாவது எதற்கு பயன் படுகிறது என்ப தைப் பொருத்ததேயாகும். இன்றைய தினம் காந்தியாருக்கு பாமரமக்களிடம் உள்ள செல்வாக்கின் பயனாய் காந்தியைப் புகழ்ந்து கூறும் ஒரு கிறாமபோன் தகடு (அது யார் கூறியதாய் இருந்தாலும்)க்கு கூட மதிப்பும் பக்தியும் இருந்துவருவது யாவரும் அறிந்ததே யாகும்.
காந்தியார் பல தடவைகளில் ஒவ்வொரு ஜாதியாரையும் பார்த்து “ஜாதிப்பாகுபாடுகள் அவசியம்” என்றும் அவனவன் தகப்பன் செய்த தொழில் (அவனவன் ஜாதித்தொழில்) அவனவன் செய்ய வேண்டும் என்றும் சொல்லி வருவதும், இதை அனுசரித்துத் தனது ஆச்சிரமத்தில் இன்றைய தினம்கூட தீண்டப்படாத ஜாதியாருக்குத் தோல் பதனிடும் வேலை செய்யவும், பழகவும் வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொடுத்து வருவதும் யாவரும் அறிந்தாகும்.
ஜாதிகள் அழியவேண்டும் என்று நாளது வரை தோழர் காந்தியார் தன் வாயினால் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை என்றும் ஆனால் ஜாதிகள் இருக்க வேண்டுமென்று பல தடவை சொல்லி இருக்கிறார் என்றும், நாம் பந்தயங்கட்டிக் கூறத் தயாராயிருக்கிறோம். இதை மறுக்கும் மனிதர் யாராயிருந்தாலும் தயவு செய்து முன்வரட்டும் என்று தலைவணங்கி அழைக்கின்றோம். இதற்கு யோக்கியமில்லாதவர்கள் காந்தி பகிஷ்காரம் பாவம் என்றும், அறிவீனம் என்றும் சொல்லுவதில் பயன் என்ன? என்பது நமக்கு விளங்கவில்லை.
வருணாச்சிரம விஷயத்தில் தோழர் காந்தியார் “பிராமணன், க்ஷத்திரி யன், வைசியன், சூத்திரன் என்கின்ற நான்கு வகுப்பு இருக்க வேண்டும்” என்றும், ஐந்தாவதான சண்டாளர் என்கின்ற வகுப்புக் கூடாதென்றும் அச்சண்டாளர் என்னும் வகுப்பை சூத்திரர் என்னும் வகுப்புடன் சேர்க்க வேண்டும் என்றும் சொல்லுகிறார். இதற்கு ஆதாரம் இரண்டொரு மாதத் திற்கு முன் ‘குடி அரசி’ லேயே எடுத்துக்காட்டியிருக்கிறோம். அதாவது,
தீண்டாதவர்கள் கோயிலுக்குப் போனால் அவர்கள் நிற்கவேண்டிய இடம் எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கும் தீண்டாமை என்பது போய் விட்டால் தீண்டாதவர்களாய் இருந்தவர்களுக்கு இந்து மதத்தில் அவர் களுடைய நிலைமை என்ன என்றும் கேட்கப்பட்ட கேள்விக்கும் தோழர் காந்தியவர்கள் அளித்த பதில், “அவர்கள் (தீண்டப்படாதவர்கள்) சூத்திரர்களுக்குச் சமமாக அதாவது சூத்திரர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர்களாகப் பாவிக்கப்படுவார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.
இவைகளுக்கெல்லாம் காந்தி பகிஷ்காரத்தைக் கண்டு துள்ளிக் குதிக்கின்றவர்கள் என்ன பதில் சொல்லுகின்றார்கள் என்று கேட்கின்றோம்.
பார்ப்பனர்களுக்கு இது சமயம் ஒரு காந்தியார் வேண்டியது மிக அவசியமாகும். ஏனெனில் தர்ம கிளர்ச்சியும் ஏற்படுகிற காலங்களில் எல்லாம் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதாக சரித்திரம் இருக்கின்றது. அச்சரித்திரங்களில் பலவற்றை சுயமரியாதைக்காரர்கள் முழுப்பொய் என்றாலும் அவை பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை என்றும் நிலை நிறுத்திக்கொள்ள நடந்து கொள்ள வேண்டியதற்கு வழிகாட்டிகள் என்பது ஒரு முடிவு. ஆதலால் பார்ப்பனர்களுக்கும் சோம்பேறிகளுக்கும் ஆதர வளிக்கும் காந்தியாருக்கும் பிரசாரத்துக்கும் தாழ்த்தப்பட்ட மக்களும் பின் தள்ளப்பட்ட மக்களும் ஏன் ஆதரவளிக்க வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.
பண முடிப்பு
காந்தியார் பேரால் வசூலிக்கப்படும் பணம் நாளைக்கு என்ன கதி அடையப்போகிறது என்பதைப் பற்றி சிறிது சிந்திக்க வேண்டுகிறோம்.
கதருக்கு வசூல் செய்த பணம் கதர் இலாக்காவுக்கு அதாவது நிர்வாகத்தில் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனர்களாயிருந்து மாதம் 250, 200, 150, 100, 50 என்கின்ற கணக்கில் சம்பளமாக கொள்ளை அடித்து வயிறு வளர்ப்பதற்கும் பார்ப்பனரல்லாதவர்களையும் அவர்களது இயக்கத்தையும் முயற்சியையும் வைது திரிவதற்கும் ஒரு சோம்பேறிக் கூட்டம் அனுபவிக் கப் பயன்படுத்தப்பட்டது-படுகிறது என்பதை யாரோ மறுக்கவல்லார்? இன்றும் ஆங்காங்கு காந்தி பண முடிப்பு வசூல் செய்வதெல்லாம் பார்ப்பன ரல்லாதாரிடமிருந்தும் வசூல்நிர்வாகம் செய்வதெல்லாம் பெரிதும் பார்ப்பனருமாயிருந்தும் வருவது யாவரும் அறிந்ததேயாகும். மொத்த வசூல் தொகைகள் பார்ப்பனர்களிடம் ஒப்புவிக்கப்பட்டு அவற்றில் ஒரு சிறிது வேறு வழியில் பிழைக்க வகையற்றவர்களும் தங்கள் சுயமரியாதையை விற்றுப் பிழைத்துத் தீர வேண்டியவர்களுமான இரண்டொரு “கனவான்களுக்கு” அதாவது தீண்டாதார் வகுப்பைச் சேர்ந்த இரண்டொருவருக்கும், பார்ப்பனரல்லாத வகுப்பைச் சேர்ந்த இரண்டொருவருக்கும் கொடுத்து விட்டு மீதி அவ்வளவும் பார்ப்பனர்கள் மூலமே பெரிதும் பார்ப்பனர்களுக்கே பயன்படப் போகின்றது.
தீண்டப்படாதவர்களுக்கு ஒரு நாளைக்கு தலைக்கு எண்ணையும், குளிக்கச் சோப்பும் இடுப்புக்கு (விற்காமல் கட்டுக் கடையாயிருக்கும்) இத்துப்போன கதர்த்துணியும் கொடுத்து அவர்கள் குடியிருக்கும் வீதியை ஒருநாளைக்கு கூட்டியும் விட்டால் தீண்டப்படாத வர்களுடைய கஷ்டம் நீங்கி அவர்கள் வாழ்ந்து விடமுடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். விற்காத கதர்களை விற்க இது ஒரு தந்திரம். காந்தி யாரின் தீண்டாமை விலக்குக் கொள்கையில் இருக்கின்ற புரட்டுகளையும் கொடுமைகளையும் விட தீண்டாமை விலக்குக்காக செய்யப்படும் வேலைத் திட்டங்களில் அநேக புரட்டுகளும், பித்த லாட்டங்களும், மோசங்களும் இருப்பதோடு அக்கூட்டத்தார்கள் மற்ற ஜனங்களை எவ்வளவு முட்டாள் களாகக் கருதியிருக்கிறார்கள் என்பதும் சிறிது யோசித்தால் விளங்காமல் போகக் கூடிய சங்கதி அல்ல.
நிற்க, “தோழர் காந்தியார் வரவை வைதீகர்களும் கண்டிக்கிறார்கள், சுயமரியாதைக்காரர்களும் கண்டிக்கிறார்கள். ஆதலால் இருவர்கள் செய்கையும் அக்கிரமம் என்றும், காந்தியார் நடுநிலைமையுடன் இருக்கிறார் என்பது விளங்குகின்றதென்றும்” சிலர் தர்மநியாயம்பேசுகிறார்கள். இது உண்மையறியச் சக்தியற்றவர்கள் வாதம் என்றே சொல்லுவோம். வைதீகர்கள் காந்தியாரை எதிர்ப்பது மாட்டுக் கடை தரகு வியாபாரம் போல் ஒருபெரும் சூட்சியேயாகும். இது தோழர் காந்தியும் வைதீகர்களும் நம்மை ஏமாற்ற ஏற்கனவே பேசிவைத்துக்கொண்டு செய்யப்படும் தந்திரமாய் இருந்தாலும் இருக்கலாம்.
வியாபாரிகள் இப்படித்தான் செய்வார்கள். அதாவது ஒரு கடையில் ஒரு சாமானுக்கு ஒரு குமாஸ்தா ஒரு விலை சொன்னால் அந்த விலையைப் பற்றி வாங்குகிறவனுக்குச் சிறிதும் சந்தேகம் தோன்றாமல் இருப்பதற்காக பக்கத்திலிருக்கும் முதலாளியானவன் குமாஸ்தாவைக் கண்டபடி வைவது போல் வார்த்தைகள் உபபோயகப்படுத்தி “அந்தச் சரக்குக் கொடுக்கமுடியாது. அதன் விலை குமாஸ்தாவுக்குத் தெரியாது. அதற்கு அவன் பொருப்பில்லாதவன்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான். இதைக் கேட்ட வாங்க வந்தவன் “இந்த விலைக்காவது கொடுத்தால் போதும். குமாஸ்தா ரெம்பவும் நல்லவன். நமக்கு வேண்டிய வன்” என்று கருதி விலையைப் பற்றியும் சரக்கைப் பற்றியும் சிறிதும் யோசிக்காமல் சொன்னபடி கேட்டுவிடுவான். இந்தத் தந்திரமே இன்று தீண்டாமை விலக்கிலும், கோவில் நுழைவிலும், தீண்டாமை விலகியபின் தீண்டாதவர்கள் நிலை என்ன என்பதிலும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இதை அறியாத மக்களும், சுயநலமிகளும் நம்மைக் குறை கூறுகிறார்கள். நமக்கு இதைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லை. ஆனால் காந்தியார் விஜய மானது மக்களு டைய சுயமரியாதைக்கு விரோதமென்றும், அவருக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு காசும், பிற்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக் கும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் நிரந்தர கெடுதியையும் இழிவையும் உண்டாக்கத் தக்க தென்றும் நாம் பலமாக அபிப்பிராயப்படுகின்றோம்.
தோழர் காந்தியாரைவிட வைதீகர்களும், சனாதன தர்மிகளும் எத்தனையோ பங்கு மேம்பட்டவர்கள் என்பது நமது அபிப்பிராயம். எப்படியெனில் வைதீகர்களுடைய அக்கிரமம், அயோக்கியத்தனங்கள் என்னப்பட்ட விஷமானது நன்றாகக் குருடனுக்கும் மூடனுக்கும் தெரியும் படியாக இருக்கின்றன.
காந்தியாரின் விஷம் மேலே சக்கரைப் பூச்சுப் பூசி எப்படிப்பட்ட “அறிவாளி” யும் எடுத்துச் சாப்பிடும்படியான மாதிரியில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஆதலால் வைதீகர்களது விஷத்தை யாரும் சாப்பிட்டுச் செத்துப் போகமாட்டார்கள் என்பதோடு அவ்விஷங்கள் வைதீகர்களையே கொல்லுவதற்குத்தான் பயன்படும் என்றும் சொல்லலாம். ஆனால் காந்தியாரின் விஷம் எல்லோரையும் அருந்தச் செய்து எல்லோரையும் கொல்லத்தக்க மாதிரியில் பூச்சுப் பூசப்பட்டிருக்கிறது என்பதோடு காந்தியாரை மகாத்துமா வாக்கி பின் சந்ததிகளையும் கொல்லச் செய்யத் தக்கதாகும் என்று சொல்ல லாம்.
ஆதலால் வைதீகப் பிரசாரத்தையும், சனாதனப் பிரசாரத்தையும் பகிஷ்கரிப்பதைவிட காந்தி பிரசாரத்தைப் பகிஷ்கரிக்க வேண்டியது அவசியமும் அவசரமுமான காரியமாகும்.
(புரட்சி - தலையங்கம் - 10.12.1933)