பிற உயிரினங்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சூழல் பெரும் பேராட்டத்தின் விளைவேயாகும். உயிரினங்களிலேயே மனிதன் பெரும்வளர்ச்சியை எய்தியவன். மனித வாழ்வில் போர் ஒரு தொடர் அம்சமாகவே இருந்திருக்கின்றது. வேட்டையாடுதலில் தொடங்கி உணவுக்கான பெரும் போராட்டம், தனிநபருக்குரிய சொத்து போராட்டம், அடிமைப் போராட்டம் என பலவகை போராட்டங்களை மேற்கொண்டவன். சமூகத்தில் மேற்கூறிய காரணங்களே பேராட்டத்தின் முதன்மைக்காரணிகளாய் இருந்தன. அடிப்படையில் செல்வப்பெருக்கம், எல்லையை விரிவுபடுத்துதல், மண்ணாசை, யார் பெரியவன் என வலிமை கருதுதல், ஓர் குடும்பத்திற்குள்ளான முரண் ஆகியன போர்களுக்கு காரணிகளாய் அமைந்திருக்கின்றன. பண்டைக்காலத்தில் நிலப்படையானது நான்கு வகைகளாகக் பிரிக்கப்பட்டிருந்தது. அவை கரிப்படை, பரிப்படை, தேர்ப்படை, காலாட்படையாகும். தமிழர்கள் தொல்காப்பிய காலந்தொட்டே போர்க் கருவிகளைக் கையாள்வதில் கைதேர்ந்த இடத்தைப் பெற்று இருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன. தொடர்ந்து வரும் காலங்களிலும் தமிழர்களின் போர் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பல சான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழர்களின் அனைத்து காலகட்டத்தின் போர்க் கருவிகளையும், அதன் பயன்பாட்டு பின்புலங்களையும் ஆராய்வதே முதன்மை நோக்கமாகும்.

weapons 640போர்க் கருவிகள்

அடார், அரம், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஆயுதக்காம்பு, உருமி, எரிசிரல், ஐயவித்துலாம், கவை, கல்லுமிழிகவண், கல்லிடுகூடை, களிற்றுப்பொறி, கலப்பை, கழு, கற்பொறி, காழெக்கம் , கிளிகடிகருவி, குந்தாலி , குறடு, கேடகம், கைப்பெயர் ஊசி, கோடாலி (கோடாரி), சக்கரம், சகடப்பொறி, சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, தூண்டில், நவியம், நாராசம், நூக்கியெறி பொறி, மட்டுவு (ஹேலடி), மழு, முக்குத்துவாள், முசுண்டி, வட்டக்கத்தி , வல்லயம், வளரி, வளைவிற்பொறி, வாள், வில், வேல், உலக்கல், ஏப்புழை/சூட்டிஞ்சி, கணையம், குருவித்தலை, தாமணி, கவர்தடி, நீர்வாளி, விதப்பு, புதை, கருவிரலூகம், கழுகுப்பொறி, குடப்பாம்பு/கத நாகம், பன்றி (கரும்பொன்னியல் பன்றி), பனை, அயவித்துலாம், எக்கு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கழிப்பிணிப் பலகை, சதக்களி தள்ளிவெட்டி, சிறியிலை எக்கம், சிறுசவளம், சுழல்படை, தாமணி, தோமரம், நாராசம், பிண்டிபாலம், பூண்கட்டிய தண்டு, பெருஞ்சவளம் மற்றும் விழுங்கும் போன்ற போர்க் கருவிகள் தமிழர்களின் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பது ஆராயப்பட்டுள்ளது.

அடார்

விலங்குளை அகப்பபடுத்தும் பொறி அடார் போர் கருவியாகும். இதைப்பற்றி செய்திகள் கிடைப்பது அரிதாக உள்ளது.

அரம்

அரம் இரும்பைத் தேய்க்கப் பயன்படும் கருவி. முப்பட்டை முதலான வடிவங்களில் நெருக்கமான கோடுகளைக் கொண்ட இரும்பால் ஆன சிறுகருவி அரம்.

அரிவாள்

அரிவாள் கருவியாகவும், போர் காலங்களில் போர் ஆயுதமாகவும் பயன் படுத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் கதிர் அரியும் கருவியாக அரிவாள் எனும் கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். பொருட்களை அரிவது அரிவாள்; அறுப்பது அறுவாள். இது தமிழகத்தில் வேளாண் பணிகளுக்குப் பயன்படுத்தும் வெட்டுக்கத்தியாகும். தமிழர்கள் அரிவாளைக் கருப்பசாமியின் அடையாள ஆயுதமாக வைத்திருக்கின்றனர். நாட்டுப்புற தெய்வங்களுக்கு முன் ஆடு, சேவல் போன்ற பலியிடும் பொருட்களை வெட்டவும் அரிவாள் பயன்படுகிறது.

ஆண்டலையடுப்பு

ஆண்டலை புள் வடிவமாகச் செய்து பறக்கவிடும் மதிற்பொறி ஆகும். போர்காலத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது ஆந்தையின் தலை போன்ற அமைப்புள்ள பாத்திரமாகும். ஓர் பெரிய காடி அடுப்பில்தான் காய்பொன் உலை (உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு, செப்புக் குழம்பு), பாகடு குழிசி (சூடான தேன் கொண்ட பாத்திரம்), பரிவுறு வெந்நெய் (சூடான எண்ணெய் கொண்ட பாத்திரம்) இம்மூன்றும் காச்சப்படும்.

ஆயுதக்காம்பு

ஆயுதக்காம்பு என்பது மண் வெட்டியின் கணையாகும். போர் ஆயுதமாகவும் பயன் படுத்தப்பட்டுள்ளது.

உருமி

உலகிலேயே மிகப்பழமை வாய்ந்த களரி எனும் கலைகளுள், முக்கியமான போர்க்கலை தான், இந்த உருமி. தொல்தமிழ் சொல்லான உருமி, சுட்டுவாள் (சுழலும் வாள்) என்றும் அழைக்கப்பட்டுள்ளது. பிற போர்க் கருவிகளைக் கற்றுத்தேர ஓரிரு ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால், இக்கருவியை தேர்ந்து பயன்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். சாட்டை போன்ற தசையினை எளிதில் கிழித்துவிடும் பல கூர்மையான நெகிழும் கத்திகளை சரியாக கையாளாவிடின், அதை பயன்படுத்துபவரையே தாக்கிவிடும் கருவியாகும்.

எரிசிரல்                                                               

கையம்பு போன்ற கையால் எறியும் ஆயுதம் எரிசிரல். இதைப் பற்றிய செய்தி கிடைப்பது அரிதாக உள்ளது.

ஐயவித்துலாம் /ஐயவி/ நாஞ்சில்/ ஞாஞ்சில்

கோட்டை வாயிலையும் அகழி தொடக்கத்தையும் இணைக்கும் ஓர் தூக்கு பாலம்.

கவை

கவை (நெருக்குமர நிலை) என்பது மதில் மீது ஏறுவோரை மறித்துத் தள்ளும் மிக நீண்ட கைப்பிடி கொண்ட ஆயுதமாகும்.

கல்லுமிழிகவண்

கல்லுமிழ் கவண் என்பது கல்லையெறியும் இருப்புக் கவண் (இடங்கணி). இது போர் ஆயுதங்களுள் ஒன்றாகும்.

கல்லிடுகூடை

கல்லிடுகூடை என்பது எதிரிகள் மீது வீசுவதற்கு கோட்டை மதில் மேல் வைக்கப்பட்டிருக்கும்

களிற்றுப்பொறி

களிற்றுப்பொறி என்பது பகைவரை அழிக்கக் கோட்டை மதிலில் வைக்கப்படும் யானை வடிவான இயந்திரம் ஆகும்.

கலப்பை

கலப்பை மண்ணைத் தோண்டி நிலத்தை உழுவதற்குப் பயன்படுத்தும் வேளாண் கருவியாகும். மரத்தினாலான கலப்பை, இரும்பு அல்லது மண் புரட்டும் கலப்பை, சட்டிக் கலப்பை என கலப்பைகள் மூன்று வகைப்படும். ஆழக்கலப்பை, உளிக்கலப்பை, சால் கலப்பை, சுழல் கலப்பை, குழிப்படுக்கை அமைக்கும் கருவி என சிறப்பு கலப்பைகளும் உள்ளன. மரத்தினால் செய்யப்பட்ட இக்கருவி நுகம், கருவுத்தடி, மேழி, முட்டி, கலப்பைக்கயிறு, கன்னிக்கயிறு (கழுத்துக்கயிறு) எனும் பகுதிகளால் ஆனது. கலப்பை இரண்டு மாடுகளால் இழுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைக்கப் பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக உழவர்கள் பயன்படுத்தும் கலப்பையால் ஓர் அடி ஆழம் வரை உழ முடியும். கலப்பைப்போர் ஆயுதமாகவும் பயன் படுத்தப்பட்டுள்ளது.

கழு

கழு என்பதற்கு கழுமரம், கழுக்கோல், யானைத்தடை, கழுகு, சூலம் என பல பொருள் உள்ளது. கோட்டைக்கு முன்னால் எதிரிப் படைகளின் மதிற்போர்க்கருவிகள், போரானைகள் உள்நுழையாமல் இருக்க வைக்கப்பட்டிருக்கும். கொலைகாரனைக் கழுவில் ஏற்றுமாறு அரசன் உத்தரவிடும் செய்தியும் பல உள்ளன.

கற்பொறி

கற்பொறி என்பது அவிழ்த்துவிட்டால் கீழே வந்து வீழ்ந்து எதிரியைத் தாக்கும். மீண்டும் இதனை சுழற்றி எடுத்துப் பயன்படுத்தலாம்.

காழெக்கம்

காழெக்கம் என்பது ஆடை, கையுறை கைக்கவசம் சோறு கழுதை கடாரம் போன்ற பல பொருள் கொண்ட பெயர்களுடன் அழைக்கப் படுகிறது. புகார்த்துறை முகத்தில் கரிகாலன் ஆட்சிக்காலத்தில் வந்து இறங்கிய பொருள்கள் தெருக்களில் நாட்டின் பெயர் பொறித்த கொடிகள் கட்டப்பட்டுக் குவிந்து கிடந்த பொருட்களில் ஒன்று “காழகத்து ஆக்கம்”.  காழெக்கம் என்பது போர் வீரர்கள் அணிந்த கவச ஆடையாக இருந்திருக்கலாம்.

கிளிகடிகருவி                                                   

கிளிகடிகருவி, கிளியோட்டுங்கருவி என்ற பெயர்களுடன் அழைக்கப்படுகிறது. இதைப்பற்றி செய்திகள் கிடைப்பதும் அரிதாக உள்ளது.

குந்தாலி

குந்தாலி என்பது குத்தித் தோண்டும் கருவிவகை ஆகும். கிணறு வெட்டும் கருவியாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளது. போர் களத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.

குறடு                                                                                  

குறடு என்பது ஒரு பொருளைப் பிடித்து இழுக்க, பிய்த்தெடுக்க, அல்லது வெட்டப் பயன்படும் ஒரு கருவி ஆகும். போர்க் கருவிகளைச் சரிசெய்ய குறடு பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.

கேடகம்                                         

கேடகம் என்பதற்கு பாசறை, கேடயம் என்ற பெயர்களுமுண்டு. போரின் போது கேடகம் முக்கிய இடம் பெற்றுள்ளது. போர்க்கருவிகள் தம்மை ஊறு செய்யாவண்ணம் காக்க கரடித்தோலாற் செய்யப்பட்ட, புலித்தோலாற் செய்யப்பட்ட கேடயமென்னும் கருவிகளைப் போர் வீரர்கள் பயன்படுத்தியதாக கந்தையாப்பிள்ளை குறிப்பிடுகின்றார். (தமிழகம், ப.176).

கைப்பெயர் ஊசி

கைப்பெயர் ஊசி - எந்தப்பக்கம் குத்தினாலும் கிழித்துவிடும். கோட்டை மதிலின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அல்லது மதிலில் இருந்து எறியப்படும். ஒருவேளை எதிரிகள் மதில் மேல் எறி மதிலின் உச்சியைப் பிடிப்பவர் இதன் மேல் கை வைத்தால் இது அவர்களின் கையினைக் கிழித்துவிடும்.

கோடாலி (கோடாரி)

கோடாலி பன்னெடுங்காலமாகப் பயன்பட்டு வரும் ஒரு கருவி. கோடாலி கைப்பிடியையும் கூரியவெட்டும் பகுதியையும் கொண்டிருக்கும். இரும்பு, எஃகுப் போன்ற உலோகங்கள் கோடாலி தயாரிக்கப் பயன்படுகின்றன. மரத்தை வெட்டவும், பிளக்கவும், செதுக்கவும் கோடாலி பயன்படுகிறது. போர்களங்களில் ஒரு முக்கிய ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சக்கரம்                                                      

சக்கரம் வட்ட வடிவத்தில் சுலபமாக உருண்டோடக் கூடிய ஒரு பொருள் ஆகும். சக்கரங்கள் புனையப்பட வண்டிகளின் எடை குறைந்தது. வண்டிகளை வேகமாகவும் ஓட்ட முடிந்தது. வடமேற்கு இந்தியாவின் சிந்துவெளி நாகரிகத்தில், வரிகள் இட்ட களிமண்ணால் ஆகிய பொம்மைச் சக்கர வண்டிகள் கண்டெடுக்கப்பட்டன என்ற செய்தி குறிப்பிடத்தக்கது. சக்கரம் பற்சக்கரம், காலச்சக்கரம், வண்டிச்சக்கரம், தேர்ச்சக்கரம், மாற்றுச்சக்கரம் என பலவகைப்படும். சக்ராயுதம் இந்து கடவுளின் ஆயதமாகும். சுக்கரத்தாழ்வார் சுதர்சன சக்கரத்தின் வடிவம் ஆவார். சக்கரங்கள் பூட்டிய தேர்களின் மீதேறி மன்னர்கள் போரிடுவர். சக்கரங்கள் பற்றி அனைவரும் எளிதில் நிறைய செய்திகள் அறிய முடியும். போர்களத்தில் சக்கரத்தின் முக்கியத்துவமும் இன்றியமையாதது.

சகடப்பொறி

சகடப்பொறி என்பது உருட்டி விடப் படும் தீச்சக்கரக் கருவியாகும்.

சேறுகுத்தி

சேறுகுத்தி சேற்றைத்தள்ளுவதற்கு உதவும் கருவி. இக்கருவி பற்றிய செய்திகள் எவையும் கிடைக்கவில்லை.

தறிகை

வெட்டப்படுகை, கட்டுத்தறி, உளி என பல பெயர்களுடையது தறிகை. வெட்டப்பயன்படும் கருவி.

துடுப்பு

உந்தித்தள்ளப் பயன்படும் கருவி. சட்டுவம், அகப்பை, வலிதண்டு, பூங்கொத்து, அகப்பை போன்ற பெயர்களுண்டு.

தூண்டில்

தூண்டில் (பெருங்கொக்கு) - கொக்கு போன்று இருக்கும் நுனியில் கொளுக்கி இருக்கும். கொளுக்கி மூலம் அகழியினுள் எந்த பொருளையும் இலகுவாக வெளியில் தூக்கி வீசி விடலாம். இது போர் நடக்கும் சமயத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் தூண்டில் என்பது மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம். பல்வகைப்பட்ட புதுவகைத் தூண்டில்கள் பயன்பாட்டில் உள்ளன.

நவியம்

நவி, மழுப்படை, புதுமை, புதியது பல பெயர்களுடையது நவியம். நெடுஞ்செழியனின் படை கடம்பு சூடிப் போரிட்ட முருகனின் கூளியர் படை போல பகைநாட்டில் வேண்டிய அளவு உண்டது போக வீசி எறிந்திருக்கும் நிலம், படை கோடாரியால் வெட்டிச் சாய்த்தனர். இவற்றையெல்லாம் அந்த நாட்டு அரசர்கள் பார்த்து நாணி, நம்மால் நெருங்க முடியாத அந்தத் துணிவாளன் உலகம் நெளியக்கூடிய பெருபடையை நடத்தி இன்னும் வந்து இன்னது செய்வான் என நடுங்கும் நாட்டைக் கண்டு வந்தேன் என்று கல்லாடனார் நெடுஞ்செழியன் தலையாலங்கானப் போரில் வென்று அழித்த பகைவர் நாட்டின் அழிவைப் பற்றி, வடி நவில் நவியம் பாய்தலின் (புறம். 23) என்ற புறநானூறு பாடல்வரியில் கூறுகையில் நவியம் ஆயுதத்தை மன்னன் விசியதாகப் பாடியுள்ளார். இது நவியம் கருவி போரில் பயன்பட்டதற்குச் சான்றாகும். இதுபோன்று புறநானூற்றின் பல பாடல்களில் நவியம் போர்க் கருவி பற்றி சான்றுகள் உள்ளன.

நாராசம்

நாராசம் இரும்பால் ஆன அம்பு. இது போர்க் கருவிகளுள் ஒன்று.

நூக்கியெறி பொறி

நூக்கியெறி பொறி நுனியில் ஒரு கயிறு அல்லது சங்கிலி இருக்கும். அதன்மூலம் எதிரி வீரனின் கழுத்தினுள் செருகி அவனைப் பிடித்து கழுத்தில் பிடித்து தூக்கி கொன்று வீசி விடலாம்.

மட்டுவு (ஹேலடி)

இருமுனையுடன் கத்தி போன்ற அமைப்பினைக் கொண்ட, ஒரு போர்க் கருவி. கைப்பிடி இரு கத்தி முனைகளையும் இணைக்கும் மையப்பகுதியில் இருக்கும். இக்கருவி கேடயத்துடன் பயன்படுத்த தகுந்ததாக கருதப்பட்டது. மட்டுவு ஹேலடி என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது. தமிழர்களின் போர்க் கருவிகளில் தலைசிறந்து விளங்கிய, இன்றைய தலைமுறையினர் அதிகம் தெரிந்திராத ஒரு கருவிதான், ’மட்டுவு’. மட்டுவு என்னும் கலை வடக்கில் ‘மது’ என்ற பெயரில் மருவி அறியப்பட்டுள்ளது. மான் கொம்பை கேடயத்தில் இரண்டு பக்கமும் வைத்து சிலம்பாட்டத்தை போல் சுற்றும்பொழுது, எதிரிகள் தடுமாறுவர். அந்த ‘மட்டுவு’ சுற்றில், எதிரிகள் சுழற்றும் போர்க் கருவிகளை தடுக்கும் வல்லமை பெற்ற கருவி, மட்டுவு. தமிழரின் பண்டைய போர்கலைகளுள் ஒன்றான இஃது, ஏறக்குறைய அழிந்தே விட்டது. இக்கருவி, இந்திய மற்றும் சிரிய நாட்டு பாரம்பரியங்களில் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. இக்கருவி பின்னாளில் அரேபியர் வரை பயன்படுத்தப்பட்டது.

மழு

மழு போர்க் கருவிகளுள் ஒன்று. அதற்கு சான்றாக தெய்வங்களையே காட்சிப்படுத்தும் சூழல் உள்ளது முருகப்பெருமான் வேல் கொண்டு மட்டும் போருக்குச் செல்லவில்லை. பல சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் சென்றுள்ளார். அவற்றுள் மழு ஆயுதமும் ஒன்றாகும். அசுரனை அழிக்க அன்னையிடம் மழு என்ற ஆயுதத்தைக் கேட்டுப் பெற்றதை நினைவுகூரும் வகையில் அவ்விடம் "கொடுமழு ஊர்" என்று அழைக்கப்பட்டது. மறியுடை யான்மழு வாளினன் (நான்காம் திருமறை, திருப்பூந்துருத்தி – 2) சிவபெருமானின் உருவத் திருமேனிகளில் பின் இருகைகளில் ஒன்றில் மழு ஆயுதத்தினை வைத்துள்ளார் என்பதை திருமறை பாடல் வர்ணித்துள்ளது. சிவ வடிவங்களை அடையாளம் காண்பதற்கு மழுஆயுதமும் பயன்பட்டிருக்கிறது.

முக்குத்துவாள்

முக்குத்துவாள் எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவாக இல்லை. ஒரு வாள் கத்தியாக இருந்து, ஒரு பொத்தானை அழுத்தும்போது, இரண்டு கத்திகள் அந்த ஒரு கத்தியின் இரு பக்கங்களிலிருந்தும் பிரிய, மூன்று கத்திகளாய் மாறும் வடிவமைப்பினைக் கொண்டது.

முசுண்டி

முசுண்டி என்பது ஓர் ஆயுதவகை. முழுமுரட்டண்டுவேன் முசுண்டி (கம்ப.பிரமாத்திர.48) என்று கம்பராமாயணத்திலும் முசுண்டி ஆயுதத்தைப் பற்றி செய்தி உள்ளது.

வட்டக்கத்தி

தட்டையாக இல்லாமல் குவிந்த அமைப்புடையதும், மெல்லியதும், வெளி வட்டம் தட்டையாக இல்லாமல் குவிந்த அமைப்புடையதும், மெல்லியதும், வெளி மட்டம் மட்டும் கூர்மையான நுனி உடையது. இதற்கு சக்கரம், சக்கர், சக்ரே, சலிக்கர் போன்ற பெயர்கள் உண்டு. இது பழங்கால போர் படை கருவிகளில் பாணி முக்தா என்னும் எறிந்து தாக்கும் வகையை சார்ந்தது. ஆள்காட்டி விரலின் சுழற்சியாலோ அல்லது ஆள்காட்டி விரல், கட்டை விரல் ஆகிய இரு விரல்களால் பிடிக்கப்பட்டு முன் கையின் அதி உந்துதல் அசைவாலோ எறிந்து தாக்குவார்கள். எதிரியின் தலை, கை, கால்களை துண்டிக்கக்கூடிய அதிபயங்கர ஆயுதமாகும்.

வல்லயம்

கோட்டையின் மதிலில் இருந்துகொண்டு கீழே உள்ள வீரரை குத்தப் பயன்படும் ஈட்டி. முனையில் கூரிய இரும்புள்ள மிகவும் நீளமான கையிற் வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஈட்டி ஆய்தம்.

வளரி                                                                                  

ஒருபுறம் கனமாகவும் மற்றொரு புறம் இலேசாகவும் கூர்மையாகவும் மரம் அல்லது இரும்பினால் பிறை வடிவாகச் செய்த ஒருவகை எறிகருவி வளரியாகும். நாஞ்சில் வட்டாரம் வயலில் முளைக்கும் களை வகை வளரி. பண்டைத் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி பல்வேறு வடிவமைப்புகளை உடையது. வளைந்த இறக்கை வடிவம். அனைத்து வளரி வடிவமைப்புகளிலும் காணப்படுகிறது. மான் வேட்டையில் பயன்படுத்தப்பட்ட வளரி விலங்கினைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. போரில் பயன்பட்ட பட்டையான வளரி எறிகருவிகள் துல்லியமான வடிவமைப்புகளையும் கூரான வெளிப்புற விளிம்புகளையும் கொண்டது. வளரியைத் தெய்வமாகக் கள்ளர் சமுதாயத்தினர் வணங்குகின்றனர் எனும் செய்தி அறியப்படுகிறது.

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களுடைய படையில் வளரி போர்க்கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள செய்தியும் அறியப்படுகிறது. இலக்கைத் தாக்கிவிட்டு, எய்தவன் கைக்கே வந்துசேரும் வளரி என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு வெள்ளையரை அச்சுறுத்தியவர்கள் மருது பாண்டிய மன்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மரத்திலும் இரும்பிலும் தந்தத்திலும் செய்து பயன்படுத்தப்பட்ட வளரி எறிகருவியின் வகைகளை சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்திலும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் சில அருங்காட்சியகங்களிலும் காட்சிப்படுத்தியுள்ளார்கள் என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல்

நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து (புறம் 339, 4 – 5)

ஆனிரை மேய்க்கும் கோவலர்கள் பூப்பறிக்கும் போது அங்கு மேயும் முயலை நோக்கி குறுங்கோல் என்னும் வளரியை வீசினர் என்பதற்கு  சங்க இலக்கியத்தின் புறநானூறு வழி சான்றுகள் காட்டப்பட்டுள்து.

வளைவிற்பொறி

வளைவிற்பொறி ஆயுதம் வளைந்து தானே எய்யும் இயந்திரவில். வளைவிற் பொறியு ங் கருவிர லூகமும் (சிலப்.15,  207) சிலப்பதிகாரம் மதுரைக் காண்ட, மதுரை மதில் படைக் கருவிகள் பாடலில் கவுந்தி கூறியதைக்கேட்டு மாதரி கண்ணகியுடன், ஞாயிறு மறைந்துகொண்டிருக்கும் வேளையில் தன் இல்லத்துக்குச் செல்லும்பொழுது, காட்டரண் கிடங்கு தானே பாயும்படி வளைத்து வைத்திருக்கும் வில் பொறி, கருமையான விரல்களை உடைய குரங்குகள், கல் வீசும் கவண், மதிலில் ஏற முயன்றால் காய்ச்சிக் கொட்டும் வெண்ணெய் வெல்லப்பாகு…முதலான பிறவும் கொண்ட மதிலில் ஞாயில் என்னும் பதுங்கு அறைகளும் இருந்தன. நாள்தோறும் ஏற்றும் கொடி அதில் பறந்துகொண்டிருந்தது. இத்தகைய வாயிலைக் கடந்து மாதரி கண்ணகியுடன் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.  இந்நிகழ்வில் வளைவிற்பொறி ஆயுதம் போர்க்கருவிகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்ததை வெளிப்படுத்துகிறது.

வாள், வில், வேல்

தொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க் கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர். அவை வாள், வில், வேல் என்பனவாகும். இவற்றுள் வாள் என்னும் போர்க் கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் வாளோர் ஆடும் அமலை (தும்பைத்திணை), ஒள்வாள் வீசிய நூழில் (தும்பைத்திணை), வாள்மங்கலம் (பாடண்திணை) ஆகிய இடங்களில் வாள் என்னும் சொல் போர்க்கருவியாக கருதுமளவிற்கு வாள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்கப்பாடல்களிலும் பல இடங்களில் வாள் என்னும் போர்க் கருவி எடுத்தாளப்பெற்றுள்ளது. வாள் என்பது ஆண்கள் பயன்படுத்தும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளனர்.

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு

எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறம். 312),

வாளொடு படுபுனம் பெயராச் செங்களம் துழவுவோள்

சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணுஉ

ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே (புறம். 63)

வீரத்தாய் ஒருத்தி வாள் கொண்டு போர்க்களம் புகுந்த செய்தி என்ற காக்கைப் பாடினியாரின் புறநானூற்றுப் பாடல்வழி புலனாகின்றது.

வில்

வில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக்கருவி வில். கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் (தொல், புறத்திணையியல் 16) என்று வில் கருவியைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

வேல்

வேல் – முருகக் கடவுளின் போர்க் கருவியாக இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வேலின் உயரம்கூட இல்லாத சிறிய வயதின் போதே வேல் என்னும் போர்க் கருவி தாயால் மகனுக்கு அறிமுகப்படுத்தப் பெற்று, அதனைப் பயன்படுத்தக் கற்றுத்தரும் மக்களின் வீரஉணர்வும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒளவையார் அதியமானைக் காட்சிப்படுத்தும் போது கையது வேலே, காலன புனைகழல் என்று வருணிக்கிறார். சங்ககாலத் தமிழர் போர்க் கருவிகளைப் பெரும்பாலும் இரும்பால் ஆக்கி கொண்டனர். வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே (புறம். 312) என்ற பொன்முடியார் பாடலின் வழியாகக் கொல்லர்கள் தம் பட்டறையில் வேல்வடித்துத் தந்துள்ளனர் என்ற செய்தி அறியப்படுகிறது. 

இரும்பு முகம் சிதைய நூறு ஒன்னார்

இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே கடனே (புறம் 309)

என்பதும் வேல் போர்க் கருவியைக் குறிக்கும் பாடலடியாகும். புறநானூற்றுப் பாடல்கள் (63, 88, 99,100, 274, 279, 302) அனைத்திலும் வேல் போர்க் கருவிப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

மேற்கண்ட செய்திகள் அனைத்தும் ஆயுதங்கள் போர்க் கருவிகளாக இருந்தமைப் பற்றிய செய்திகளாகும். அதை தவிர்த்து விலங்குகள் பறவைகள் மரங்கள் அரண்கள் வாயில்கள் மற்ற பொருட்களும் போர்கால சூழலில் பயன்பட்டன என்பதற்கு கீழ்காணும் செய்திகள் ஆதாரமாகின்றன.

உலக்கல்: எறிவதற்கு வைக்கப்பட்டிருக்கும் உருண்டு திரண்ட பெரிய கல்.

ஏப்புழை / சூட்டிஞ்சி: சிறுசிறு துளைப் பொந்துகள் போலிருக்கும் இவற்றிலிருந்து எதிரி நோக்கி அம்பு எய்யப்படும்.

கணையம்: கணையம் என்பது கோட்டை அகழிக்கு முன்னுள்ள செயற்கைக் காட்டைக் குறிக்கிறது. கணையம் என்பதற்குத் துங்சுமரம், கணையமரம், மிளை மற்றும் காவற்காடு என்று பல பொருள் இருக்கிறது. துஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – (மலை 261) என்ற மலைபடுகடாம் பாடல் சான்றாகிறது. மதிற்கதவுக்கு வலிமையாக உள்வாயிற்படியில் கணையமரம் அமைந்துள்ளது.

குருவித்தலை: குருவித்தலை (ஞாயில்/நாயில்) மதிற்சுவரின் மேல் உள்ள மறைப்பு ஆகும். கோட்டை சுவரில் உள்ள குருவித்தலைகளில் இருந்து எதிரி மீது தாக்குதல் தொடுப்பார்கள்.

தாமணி: பொருட்களைக் கட்டி வைக்க உதவும் கயிறு.

கவர்தடி: இரு பக்கமும் கூரான எறிபடை எறியவும் செய்யலாம் குத்தவும் செய்யலாம்.

நீர்வாளி: ஏற்பட்ட நெருப்பினை அணைக்க உதவும் நீர் கொண்ட வாளி.

விதப்பு: இதிலிருந்துதான் எதிரி மீது எண்ணெய் போன்றவை ஊறப்படும்.

புதை: மறைவு, காட்டில் மரமடர்ந்த இடம், மறைபொருள், புதைபொருள், மறைவிடம், உடல், அம்புக்கட்டு, புதுமை, உட்டுளை, ஆயிரம் என பல பொருள் உள்ளது. போரில் இறந்த மனிதர்களைப் புதைக்க புதைபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கருவிரலூகம்: கரிய விரல்களையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் மதிற்பொறி கருவிரலூகம். கோடை மதிலில் கட்டி வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் தாட்டான் வகை குரங்குளே அங்கு கட்டி வைக்கப்பட்டிருக்கும். இவை மேலே வரும் எதிரியினைக் கடித்துக் குதறும்.

கழுகுப்பொறி: போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்ல கழுகளும் பொறிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குடப்பாம்பு / கத நாகம்: எதிரி வீரர்கள் மீது எறிய குடத்தினுள் வைக்கப்பட்டிருக்கும் பாம்புகள்.

பன்றி (கரும்பொன்னியல் பன்றி): பன்றிகள் புத்தி கூர்மையுள்ள சமூக விலங்குகள். பன்றிகள் இறைச்சிக்காக பல நாடுகளில் பண்ணைகளிலும் வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. பன்றிகள் நீரில் இருப்பதன் மூலமோ சேற்றைப் பூசிக்கொள்வதன் மூலமோ தங்கள் உடம்பைக் குளிர்வித்துக் கொள்கின்றன. இரும்பு நிறம் கொண்ட பன்றி காட்டுப்பன்றி. பன்றியினைக் கோட்டைக் கொத்தளங்களில் கட்டி வைத்திருப்பதால் அவை ஒலி எழுப்ப எதிரியின் யானைப்படை திணறி ஓடும். மேலே எண்ணெய் பூசி நெருப்பினை வைத்து எதிரியினை நோக்கி ஓட விடுவதால் அவை எதிரியினைக் குழப்புவதோடு மட்டுமல்லாமல் அவனின் யானைப் படையினை மிரள வைக்கும். இவ்வாறு பல போர்கள் வரலாற்றில் நடைபெற்றுள்ளன.

பனை: பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனை (PalmyraPalm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப்பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை 1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை, 35. அடிப்பனை ஆகும். பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. இவற்றில் அடிப்பனையைக் கோட்டை மதிலில் இருந்து எதிரிகள் மீது எறிவார்கள் என்ற செய்தி மட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும், அயவித்துலாம், எக்கு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கழிப்பிணிப் பலகை, சதக்களி தள்ளிவெட்டி, சிறியிலை எக்கம், சிறுசவளம், சுழல்படை, தாமணி, தோமரம், நாராசம், பிண்டிபாலம், பூண்கட்டிய தண்டு, பெருஞ்சவளம் மற்றும் விழுங்கும் போன்ற கருவிகள் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை.

தொகுப்புரை

பழங்காலத்தில் போர்தொழிலே முக்கியத் தொழிலாக இருந்திருக்கின்றது. அதனால் போர்க் கருவிகள் தமிழர்களால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவையனைத்தையும் இன்று இனம்காண முடியும் என்றால் முடியவில்லை. பலவற்றிற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. சிலவற்றிற்கு குறிப்புகள் கிடைக்கவில்லை. தமிழர்களின் போர்க் கருவிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டால் வாழ்நாள் ஆய்வாக அது அமையும். இருப்பினும் சில குறிப்புகளைக் கொண்டு மட்டும் இவ்வாய்வு கட்டுரை நிறைவடைகிறது. தமிழர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகளையும் அதை அவர்கள் பயன்படுத்திய விதத்தினையும், மற்றும் தமிழர்களின் வீரத்தையும் கூறுங்கால் உலகமே வியந்து பார்க்கக் கூடிய சூழலே உருவாகிறது என்பது திண்ணம்.

துணை நூற்பட்டியல்

[1] தி.சு.பாலசுந்தரம் உரை. தொல்காப்பியம். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953.

[2] அடியார்க்கு நல்லார் உரை. சிலப்பதிகாரம். தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985.

[3] இராம, தட்சிணாமூர்த்தி. சிலப்பதிகாரத்தில் புறத்திணைக் கூறுகள். தேவி பதிப்பகம், சென்னை.

[4] சோ,ந.கந்தசாமி. புறத்திணை வாழ்வியல். தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1994.

[5] முனைவர் மு. பழனியப்பன், தமிழர் மரபுசார் போர்க்கருவிகள், தமிழர் மரபுச் செல்வங்கள் - அறிவியல் தொழில்நுட்பம் - 2, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

[6] சு.துரைசாமிப்பிள்ளை. புறநானூறுகழக வெளியீடு, சென்னை, 1970.

[7] அ,கி.அழகர்சாமி. பெரியபுராணம். கற்பகம் புத்தகாலயம், சென்னை-17.

[8] வை.மு கோபாலகிருஷ்ணமாச்சாரியார். கம்பராமாயணம் மூலமும் உரையும். குவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-05, 2006.

முனைவர் த.மகேஸ்வரி

Pin It