தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியில் பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்குண்டு, மதங்கள் உருவாக்கிய பக்தியும் அவற்றுக்கிடையே நடந்த போர்களும் பல்வகைப்பட்டவை; இவைபற்றி ஆசிரியர் செந்தில்நாதன் பதினைந்து நூல்கள் வரை எழுதியிருக்கிறார், முத்தாய்ப்பாக இந்நுால் பெருநூலாக வெளிவந்துள்ளது.
சைவமும் பௌத்தமும் சமணமும் இலக்கிய வளர்ச்சிக்கு பங்கு வகித்தது போலவே ஒன்றையொன்று அழித்த வரலாறுகளும் உள்ளன.மதங்களின் போர்களில் அனல்வாதம் புனல்வாதம் முதல் கழுவேற்றம் துஷாக்கினி போன்ற கொலைத் தாண்டவங்களும் நிகழ்ந்துள்ளன.
இவற்றை ஆதிமுதல் ஆசிரியர் வகைப்படுத்துகிறார். கோவில் வெறும் இறைவழிபாடு சார்ந்ததாக மட்டுமில்லை, துன்பப்படும் மக்களுக்கு ஆறுதல் தருவதாகவும் மகிழ்வுடன் வாழ்வோர்க்கு இது கடவுள் போட்ட பிச்சை என்று நம்புவோரின் உறைவிடமாகவும் உள்ளது.
மதம் அதன் அடையாளமான கோவில்கள் பலரது பிழைப்பிற்கு ஆதாரமாயிருக்கிறது என்று சிந்தனைச் சிற்பி தோழர் சிங்காரவேலர் மிக விளக்கிக் கூறியுள்ளார்.
தமிழ்ச் சமூகத்தில் உருவான ஆதிகால வழிபாடுகள் முருக வணக்கம் பற்றி சுமார் நூறு பக்கங்களுக்குமேல் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை முருகன் பற்றிய கேள்விகள் அனைத்திற்கும் விடையளிக்கிறது.
அதே போல் விநாயகர் வழிபாடு வந்தமை குறித்தும் வரலாற்று ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. ஆகமங்கள் மந்திரங்கள் வந்த விதங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
ஆனால் சிவன்தான் மூத்தக் கடவுள் என்று திருமூலர்,
"சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினுமில்லை
அவரோடு ஒப்பார் இங்கு யாருமில்லை"
என்கிறார்.
தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் ஏழாம் நூற்றாண்டு முக்கிய காலகட்டமாகும், சமணம் பௌத்தம் இரண்டையும் ஒழிக்க சம்பந்தரும் நாவுக்கரசரும் தலைதூக்கி நின்ற காலம்.அவர்கள் இயற்றிய தேவாரம் மக்களை ஈர்த்து, கடுங்கோடையில் ஒருவனுக்கு மரத்தின் நிழல் தரும் குளிர்ச்சியைப் போன்றதுதான் கடவுள் என்கிறது மூவரின் தேவாரம்.
தேவாரமும் திருவாசகமும் நிலப்பிரபுத்துவத்தை பாதுகாக்கும் ஆயுதங்களாகின. சங்ககாலத் தமிழனுக்கு சொர்க்கம் நரகம் தெரியாது, ஆனால் தேவார காலத்தில் அவை தமிழனுக்குத் தெரிந்து விட்டன. ஆதிசங்கரர் வழியாக சுந்தரர் வந்து,
"வாழ்வாவது மாயம் இது
மண்ணாவது திண்ணம்"
என்றார்.
இந்நூல் பற்றிக் கூற ஏராளமான விசயங்கள் உள்ளன. தமிழகத்தை ஆட்சி செய்தவர்களின் பட்டியல் அவர்கள் காலத்தில் மதங்களின் நிலைகள் குறித்து விவரங்கள் உள்ளன. மூவேந்தராட்சி, இசுலாமியராட்சி, நாயக்கர்களாட்சி, சேதுபதிகள், ஆற்காடு நவாப்புகள், மராட்டியர் ஆட்சிவரை அக்காலங்களில் மதங்களின் நிலை கூறப்பட்டுள்ளது.
சிறுதெய்வ வழிபாடு, பெண்தெய்வ வழிபாடு விவசாய மக்களிடம் தொடர்கிறது. மேலும் சம்பந்தரும் அப்பரும் சனாதனத்தை ஏற்காமல் எதிர்த்தார்கள் என்பதற்கான ஆதாரம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சைவ சித்தாந்தமானது வடமொழி வேதத் தத்துவங்களோடும் மரபுகளோடும் முரண்பட்டு நிற்பதையும் குறிப்பிடுகிறது.
தமிழகத்தில் வைணவம் தொன்மையானது என்பதை,
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்"
என்று தொல்காப்பியம் கூறுகிறது.
அதேபோல் பழங்காலத்தில் பொருள்முதல் வாதம் இருந்துள்ளது. அது லோகாயதம் என்றழைக்கப்பட்டுள்ளது. சித்தர்களில் உலகாயதச்சித்தர் என்று ஒருவர் இருந்துள்ளார். அவரது பாடல்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டன என்று கூறப்படுகிறது. மதமாற்றங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பெருமளவு நடந்துள்ளன. நூலின் இறுதிப்பகுதியில் மதங்களின் இன்றைய போக்குகள் குறித்து விரிவாகக் காட்டப்பட்டுள்ளது.
நாம் கற்றது கைமண்ணளவே என்பதை இந்த நூலினை வாசிக்கையில் உணர முடிகின்றது. தோழர் செந்தில்நாதனுக்கு அவரது மார்க்சீய ஆய்வுகளுக்காக புகழ்மாலை சூட்டுகிறேன்.
தோழர் செந்தில்நாதன் தமிழகத்தில் ஒவ்வொரு மதமும் தோன்றிப் பரவிய விதங்களையும், ஒன்றுடன் ஒன்று மோதி அழித்த கதைகளையும் மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார். ஏற்கெனவே மயிலை சீனி.வேங்கடசாமி போன்றோர் சமணர் படுகொலைகள் பற்றியும் பௌத்தர் படுகொலை பற்றியும் விரிவாக எழுதியுள்ளனர். எனினும் இந்நூல் அப்போர்களைப் பற்றியும் அதன்முடிவில் வைணவத்தின் வருகை பற்றியும் தெளிவாக்குகிறது.
சைவம், சமண, பௌத்த மதங்களை வீழ்த்தியபின் வைணவத்தின் வருகை சைவ வைணவ மோதலாய் மாறியதையும் இந்நூல் தெளிவாக்குகிறது. தத்துவ வாதப்பிரதிவாதங்களில் தோற்றவர்களைப் படுகொலை செய்யும் சைவத்தின் பயங்கரம் கொடூரமானது.
வாதுசெய் சமனும் சாக்கியப் பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர் என்று சம்பந்தர் புத்த சமணர்களைப் பழிக்கிறார். கல்வியிற் சிறந்து விளங்கிய புத்தநந்தி என்பாரை வாதுக்கழைத்து அவரை தலையறுத்துக் கொலை புரிகிறார்கள் சம்பந்தரின் சீடர்கள். நாவுக்கரசர், அஞ்சுவதுமில்லை அஞ்சுவது யாதொன்றுமில்லை என்கிறார்.
தமிழ்நாட்டில் பேரரசுகளை நிறுவியது பிற்காலச் சோழர்களே. அவர்கள் சைவத்தை முதல்நிலைப்படுத்தினர். மதம் வெறும் நம்பிக்கைகளின் தொகுதி அல்ல. அது சமூக உறவுகளுடன் உற்பத்தி உறவுகளுடன் நெருங்கிய சம்பந்தம் கொண்டது. தேவார மூவரும் அவர்களது தத்துவங்களும் நிலப்பிரபுத்துவ சாம்ராஜ்யத்தை அமைக்க உதவின.
தமிழகத்தில் எண்ணாயிரம் சமணரைக் கழுவேற்றியது பற்றி ஒரு கூட்டம் மறுப்புத் தெரிவித்தது. இந்நூலைப் படித்தால் பிற மதத்தினர்மீது சைவம் காட்டிய படுகொலைகள் ஆய்வறிஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளதை உணர முடியும்.
கழுவேற்றி கொலை செய்தபின் எண்ணாயிரம் சமணரின் குடும்பங்களும் பிள்ளைகுட்டிகளும் மதுரை கீழக்குயில்குடி அருகில் சம்பந்தரை சுற்றி தங்கள் எதிர்காலம் பற்றிக் கேட்டதாகவும் அவரும் வேறுவழியின்றி சமணப் பள்ளிகளனைத்தையும் சைவக் கோவில்களாக மாற்றி சமணரை பிராமணராக்கி வாழ்வளித்ததாய் ஒரு கதையும் உண்டு. இந்த மதம் மாறிய பிராமணரை அஷ்ட பிராமணர் என்றழைப்பதாகவும் தெரிய வருகிறது.
பல அபூர்வச் செய்திகளை இந்நூல் எளிமையாய் சொல்லிச் செல்கிறது. மதங்கள் தோன்றிய போதே மதமாற்றங்களும் தோன்றி விட்டன. இம் மதமாற்றங்கள் மன்னர்களால் ஆனவை.
பெருந்தெய்வ வழிபாடு சிறுதெய்வ வழிபாடு முதல் பட்டியல் சாதிவழிபாடுகள் வரை நூலில் விரிவாய் கூறப்பட்டுள்ளது. மேலும், சிறுதெய்வ வழிபாடு என்பது சமூகப் போராட்டங்களின் அங்கமே என்றும் ஆசிரியர் முடிவுக்கு வருகிறார்.
475 பக்கம் கொண்ட இந்நூலில் தோழர் செந்தில்நாதன் நுாற்றுக்கணக்கான விசயங்களை அடுக்கியுள்ளார். அதனால் இந்நூலைப் பொறுமையாக வாசித்தால் மதங்கள் பற்றிய சரியான பார்வையும், மக்களின் ஒற்றுமை பற்றியும் அறிந்து வழிகோல முடியும். பகுதி பகுதியாக நானே இதை நான்குமுறை வாசித்து சுருக்கி எழுத முடிந்தது. தோழர் செந்தில்நாதன் அவர்களின் அமர படைப்பு இது என்பேன்.
- எஸ்.ஏ.பெருமாள்