தேவகோட்டையில் 1855 ஆம் ஆண்டு, லட்சமணன் செட்டியார் மீனாட்சி ஆச்சி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் சிந்நயச் செட்டியார். திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்றார். புலமையும், தத்துவச் செறிவும் பெற்றிருந்த பேராசான்களிடம் முறையாகத் தமிழையும், சமய நெறிகளையும் ஈடுபாட்டோடு கற்றுணர்ந்தார். பெரும் புலவர் வன்றொண்டர், போராசிரியப் பெருந்தகை யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் ஆகியோரைத் தமக்குரிய ஞான குருச் செல்வர்காளக ஏற்றுக் கொண்டார் சிந்நயச் செட்டியார்.

                Sinnaya chettiarஅண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்வித்துவான் தேர்வுக்கு அறிஞர் சிந்நயச் செட்டியார் இயற்றி அருளிய ‘பஞ்சகம்’ என்னும் நூல் தேர்வு செய்யப்பட்டு பாடத்திட்டங்களுடன் இணைக்கப் பெற்றது. ஆசிரியர்களின் மனத்தையும், மாணவர்களின் கவனத்தையும் கவர்ந்த ‘பஞ்சகம்’, ஐம்பெருங் காப்பியங்களைப் போல அறிஞர் பெருமக்களால் பாராட்டப்பட்டது.

                தேவைத் திரிபந்தாதி, ‘அருணைச் சிலேடை’, ‘வெண்பாமாலை’, ‘மதுரை மீனாட்சியம்மை பதிகம்’, ‘சிலம்பை பதிற்றுப் பத்தந்தாதி’, ‘மயில்மாலைப் பிள்ளைத் தமிழ்’ ஆகிய ஐந்து நூல்களைக் கொண்டதே அறிஞர் சிந்நயச் செட்டியார் வழங்கிய ‘பஞ்சகம்’. இந்நூல், சைவ உலகிலும், தமிழ் உலகிலும் பெரும் பெயர் பெற்று, சிந்நயச் செட்டியாரின் புலமையைப் பொலிவுறச் செய்தது.

                அறிஞர் சிந்நயச் செட்டியாரின் பிரபந்தங்களில் பல, சங்ககாலச் செய்யுள் நயம் கொண்டவை. கருத்துச் செறிவுடன் தமிழின்பச் சுவை மிகுந்தவை.

                ‘திருவொற்றியூர்ப் புராணம்’ கற்பவர் நெஞ்சத்தைக் கவர்ந்த திருநூல். இந்நூலின் பெருமையை, ‘‘தமிழை வளர்ப்பவை, வாழ வைப்பவை” – என ‘திருவருட்செல்வர்’ வாரியார் சுவாமிகள் எடுத்துரைத்தார்.

                சிந்நயச் செட்டியாரின் புலமை நலத்தை அறிந்திருந்த ‘பைந்தமிழ்க் காவலர்’ பாண்டித்துரைத் தேவர், தமது நெஞ்சார்ந்த நண்பராக மதித்துப் போற்றினார். மனம் மகிழ்ந்து உரையாட சிந்நயச் செட்டியாரை அடிக்கடி தேடி வந்தார்.

                மதுரையில் நான்காவது தமிழ்ச் சங்கத்தை பாண்டித்துரைத் தேவர் உருவாக்கச் சிந்நயச் செட்டியாரின் தூண்டுதலும் முக்கியக் காரணமாக அமைந்தது. ஆனால் தமிழ்ச் சங்கம் உருவாக்கம் பெற்றபோது, சிந்நயச் செட்டியார் வாழ்ந்திருக்கவில்லை என்பது வேதனையளிக்கும் செய்தி.

                பெரும் புலவர்களை அழைத்துப் போற்றும் இராமநாதபுரம் மன்னர் பேரவை, அறிஞர் சிந்நயச் செட்டியாரைப் பேரவைக்கு அழைத்து சிறப்புச் செய்தது. மன்னர் பாஸ்கர சேதுபதி, சிந்நயச் செட்டியாரின் செந்தமிழ் நூல்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு மகிழ்ந்தார். மேலும், சமஸ்தான அரசவைக் கவிஞராகவே மதிக்கப் பெற்றார்.

                சிந்நயச் செட்டியார் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தின் தெற்குப் பகுதியில் தமிழறிந்த பெரும் புலவராக விளங்கினார்.

                கொடுத்த பொருளை வைத்து, அடுத்த நொடியே பாடல் செய்யும் ‘ஆசுகவி’ யாகத் திகழ்ந்தார் அறிஞர் சிந்நயச் செட்டியார். ‘வாக்குப் பலிதம்’ கொண்ட ‘அருட்கவி’யாகவும் விளங்கினார்.

                வடநாட்டுத் திருக்கோயில்களுக்கெல்லாம் சென்று, காசியில் தங்கி, ‘காசியமக வந்தாதி’ என்னும் அரிய நூலை இயற்றி அருளினார். ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா போன்ற பெரும்புலவர்களும் ‘காசியமக வந்தாதி’யைப் படித்து புகழ்ந்துரைத்துள்ளனர்.

                செட்டிநாட்டில் தமிழ் மொழியாலும், சைவ நெறியாலும் பெருந்தொண்டாற்றிய புலவர் சிந்நயச் செட்டியாரின் பெருமை, தமிழகமெங்கும் நாளும் வளர்ந்தோங்கியது.

                கல்வெட்டுச் சான்றுகள், துளாவூர் திருமடத்துச் செப்பேட்டுக் குறிப்புகள் முதலியவற்றை ஆதாரங்களாகக் கொண்டு ‘நாட்டுக்கோட்டை நகரத்தார் சரித்திரம்’ என்னும் அரிய நூலைப் படைத்துள்ளார். அந்நூல், மூலம் நகரத்தார் சமூகத்தின் வரலாற்றை முதன் முதலாக உருவாக்கம் செய்தார்.

 “நாற்பத்தைந்து ஆண்டுகளே வாழ்ந்திருந்த எங்கள் பாட்டனார், அவர்கள் வாழ்ந்திருந்த வயதிற்கும் மேற்பட்ட நூல்களை வழங்கியுள்ளார்கள்” எனப் பெருமிதமாக, அவரது பேரர் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

                ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்து, தமிழுலகிற்கு வழங்கிய சிந்நயச் செட்டியார், தமது நாற்பத்தைந்தாவது வயதில் 1900 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், செந்தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு தமிழிலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

- பி.தயாளன்

Pin It