இவர் இதய மருத்துவர் என்பது ஊரறிந்த விஷயம். இதயத்தை திறக்கும் மருத்துவர் என்பதுதான் உண்மை அறிந்த விஷயம்.

"இதயச் சாரல்" கவிதை நூல் இவரின் இரண்டாவது நூல். முதல் நூல் "இதய நலம்" தமிழக அரசின் விருதை பெற்ற நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வாங்கிய விருதுகளுக்கு ஒரு பக்கத்தையே ஒதுக்க வேண்டும். வாழ்நாள் சாதனையாளர் விருது அதில் மகுடம். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால்.... இவர் அலைபேசியில் என்னோடு பேசும் போதெல்லாம் ஏதோ பக்கத்து வீட்டு அங்கிள் பேசுவது போல தான் இருக்கும். ஒரு நாள் கூட அவரின் படிப்பு பற்றியோ.. தொழில் பற்றியோ...தன்னை பற்றியோ...பேசியது இல்லை. அவர் இதய மருத்துவர் என்பதைத் தாண்டி வேறு ஒன்றும் தெரியாது. அணிந்துரை.. என்னுரை என்று புத்தகம் சார்ந்து.... அவரைப் பற்றி படிக்கையில் தான்.... இத்தனை பெரிய மனிதரோடா நான் பழகிக் கொண்டிருக்கிறேன் என்று ஒரு வித ஆச்சரியம் ஏற்பட்டது.

பேராசிரியர் Dr. ச. இளங்கோவன் M.D(Gen.Med), D.M. (Cardio), FACC (USA), FRCP (Glasgow), FAPSIC, FCSI, FSCAI(USA)

இத்தனை படித்து விட்டு.... அத்தனை விருதுகளை வாங்கி விட்டு..... இத்தனை பெருமைகளை சுமந்து கொண்டு.. மிக சாதாரணமாக பழகும் அய்யாவை வணங்குகிறேன். நல்ல படைப்புகளை படித்து விட்டால் அந்த படைப்பாளிக்கு ஊக்கம் தரும் அழைப்பு....அதில் புன்னகையோடு மனம் நிறைந்த வாழ்த்து....என அய்யாவின் இதயம்....நமக்கெல்லாம் உதாரணம்.

இந்த நூல் இதுவரை நான் காணா கவிதை வகைமையில் விரிகிறது. இரண்டு சொற்கள் தான் ஒரு வரி. இரண்டுக்கும் இடையே இடைவெளி. அப்படி பார்த்தால் ஒரு சொல் இடைவெளி மீண்டும் ஒரு சொல்.. அப்படித்தான் நூல் முழுவதும். மிக கடினமான சொற்கள் அமைப்பு. படிக்க படிக்க ரசிக்க ஆரம்பித்து விடும்.. வாசக மனம் என்பதை மிக அழுத்தமாக சொல்லிக் கொள்ளலாம். எல்லாருக்கும் தெரிய வேண்டிய எல்லாவற்றையும் மிக இயல்பான ஒப்பனையில்லாத.......வீண் தோரணையில்லாத ஒரு வித சகஜ நிலையில் சொல்லிக் கொண்டே போகிறார்.

"மகாகவி" ஈரோடு தமிழன்பன் அய்யா மீது மிகவும் ஈடுபாடு கொண்டவர் என்பதே இவரின் ஆழ்ந்த தமிழின் அறிவுத் திறப்பு எப்படி இருக்கும் என்று விளக்கி விடுகிறது. இதயம் நிறையும் சொற்கள்.... இதயம் சிரிக்கும் சொற்கள்..... இதயம் உணரும் சொற்கள்... இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் என்றால் மிகை இல்லை.

கவிதையின் முதல் பகுதியே தாய்மொழி பற்றி தான். தாய்மொழியின் தவம் அவர் கண்கூடாக உணர்ந்திருக்கிறார். சேலத்தில் பிறந்து திருச்செங்கோட்டில் ஆரம்ப கல்வியைக் கற்று..... சென்னையில்....மதுரையில் படித்து மருத்துவர் ஆகி சென்னையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற இந்த இதய மருத்துவர் தமிழால் வளர்ந்தார்.....தமிழால் நிறைந்தார்....தமிழாலே தன் எண்ணங்களை எல்லாம் வரைந்தார். உலகத் தாய்மொழி நாளுக்காக எழுதிய கவிதையை முதல் கவிதையாக வைத்தது தமிழுக்கு அமுதென்று பேர் என்பது நித்திய உண்மை என்று நம்பலாம்...இன்னொருமுறை.

இரண்டாவது பகுதியில் அவருக்கு பிடித்த மாமனிதர்கள் பற்றி எழுதி இருக்கிறார்.

பாரதி.... பெரியார்..... காமராஜர்..... கலாம்...... அண்ணா...... தன் நண்பர் ஜானகி ராமன்..... லிங்கன்...... அலெக்ஸ்சாண்டர்.......மற்றும் பிளாரன்ஸ் நைட்டிங்கல் என்ற நர்ஸ் ஒருவரும்.

செவிலியர் மீது அய்யா கொண்ட அன்பின் நம்பிக்கையின் ஆழம் தான் பிளாரன்ஸ் பற்றிய கவிதை. அவரின் பிறந்த நாளைத்தான் செவிலியர் தினமாக உலகம் கொண்டாடுகிறது.

மேற்சொன்ன ஆளுமைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இந்த சமூகத்துக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள். சமூகமே நமது முகவரி. காமராஜர் இல்லையென்றால் நீங்களும் நானும்.......ஏன் 80 சதவீத மண்ணின் மைந்தர்கள் படித்திருக்க இயலாது. கல்வி கண் திறந்த கடவுள் என்றால் அது அப்படியே இருக்கட்டும் காலத்துக்கும். அலெக்ஸ்சாண்டரின் இரு கை விரிப்பு சவ ஊர்வலம் மானுட அடைப்புகளின் திறவு. எதையும் கொண்டு போகாத எதுவுமற்ற வெற்று கைகள்தான் மிச்சம் என்று உலகத்துக்கு காட்டியது. அலெக்ஸ்- ன் இறுதி ஊர்வலம். வருகையிலும் போகையிலும்........ 'தான்' மட்டும் தான்.... அதில் 'நான்' கூட இல்லை....என்பது ஞானத்தின் திறவு. அதை அய்யா வரிகளில் இன்னும் சுலபமாக புரிகையில் உள்ளுக்குள் இருக்கும் அலெக்ஸ்சாண்டர் மரித்து போக விரும்புகிறான். மரித்த அலெக்ஸ்சாண்டர் விழித்து விட விரும்புகிறான்.

மூன்றாவது பகுதியில் "என்னை சுற்றி" என்று அவர் சுற்றிய........ அவரைச் சுற்றிய பிணைப்புகள்.... கோபங்கள்.... விருப்பங்கள்.....ஆரவாரங்கள் என்று எல்லாம் சொல்கிறார்.

காலத் தேவை ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி சிலாகித்து எழுதுகிறார். "ரௌத்திரம் அழகு" என்று தலைப்பின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் ரௌத்திரத்தில் பாரதி மீசை. கால பிரச்னை..... பெண்களின் மணமுறிவு... அவர்களுக்கு அசரீரியாக அறிவுரை சொல்லும் இடம் கண் முன்னே உண்மையின் சொரூபம். தன் அம்மாவின் காணாமல் போன கம்மல் குறித்த கவிதையில் ஒரு மகனின் அரவணைப்பை காண முடியும்.. இந்த நூல் வெளி வருகையில் அம்மா இல்லையே என்ற ஆசிரியரின் குமுறலில்.....நம் இதய மருத்துவர்க்குள் ஒரு சிறுவன் ட்ரவுசர் போட்டுக் கொண்டு அம்மாவின் முந்தானை பற்றித் திரிவதை உணர்கிறேன். உணர்விலேயே அழுகை தான் ஆகச் சிறந்த உணர்தல் என்று தோன்றுகிறது. ஆசை தீர அழுவதைத் தவிர...... விட்டு சென்றவர்களுக்கு நாம் வேறு என்ன செய்து விட முடியும்.

"அன்புள்ள அப்பா" தலைப்பிட்ட கவிதை அன்புள்ளம்தான் அப்பா என்கிறது. இக்கவிதையின் பாதிப்பு எங்கிருந்தோ என்றாலும்.. பதித்த நல் எண்ணம் மிக உயர்ந்த அசல் எனலாம்.

நான்காவது பகுதியில் இயற்கை மீது.......தான் கொண்ட நேசமும்... சுவாசமும் பற்றி சொல்கிறார்.

பூமி பற்றியும்....பூமியின் தற்போதைய நிலை பற்றியும்... என்ன விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய் என்ற எச்சரிக்கையையும்.... சிறுவயதில் தான் கண்ட மழை பற்றியும்....சமீபத்தில் போட்டு புரட்டி எடுத்த மழை வெள்ளம் பற்றியும்.... எழுதிக் கொண்ட போகிறார். இத்தகைய நிஜத்தில்தான் நம் சுவாசம் இருக்கிறது என்பதுதான் அடிக்கோடிட்ட செய்தி. உன்னை சுற்றி இருக்கும் உன் பூமி சுகமில்லை என்றால் கண்டிப்பாக நீயும் பலவீனமடைவாய் என்பது தத்துவம் இல்லை. தனித்துவ உண்மை என்று மீண்டும் ஒருமுறை கவிதைகளின் வாயிலாக அழுத்தமாக கூறி இருப்பது சாலப் பொருத்தம். இதுதான் கால சரித்திர விருத்தம்.

அடுத்த பகுதி- மனித நேய மாண்புகள் பற்றி அடுக்குகிறார்.

இவ்வாழ்வு ஒரு வழி பாதை என்ற தத்துவமும்.... யார் தான் இங்கு சாதனையாளர் என்ற தனித்துவமும்..... நிம்மதியும் நல் நித்திரையும் என்ற தார்மீகமும்..... என்று மனிதனுக்கு தேவையான மாண்புகள் பற்றி அழகு தமிழில் அத்தி பூத்தாற் போன்ற சொற்றொடர்களில் சொல்லிக் கொண்டே போவதை படித்துக் கொண்டே போகலாம். எப்போதாவது கிடைக்கும் இது மாதிரியான ஆத்மார்த்தமான உணர்வோடு யோசித்தால் அகிலம் எங்குமில்லை. நம்மை சுற்றிதான் என்று புரிகிறது. மானுட சேவை புன்னகையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்று அறிவோம். கற்பும்... நன்றி போற்றுதலும்.. மானுட பிடிகள். யார் செல்வர்... எனும் பக்கத்தில்... வேண்டுபவனுக்கு துணை நிற்பேன் என்ற பொதுமன சிந்தனை அறிவியலில் மற்றுமல்ல அறத்திலும் தேவை என்று புரிந்தது.

அடுத்த பகுதி ஆன்மீகம். ஆன்மீகம் ஒருவகையில் அனுபவத்தால் கட்டப்படுகிறது. அஸ்திவாரத்தில் அன்பு இருக்கையில் தான் அனுபவமும் ஆன்மீகமாகிறது.

அடுத்த பகுதி பாரதி சொன்னது போல அந்நிய படைப்புகள் அன்னைத் தமிழில் மொழி பெயர்த்திட வேண்டும் என்பது. சுனாமி சமயத்தில் ஆங்கிலத்தில் படித்த குறுங்கதையை... லிங்கன் பேசிய கட்டிஸ்பரக் உரையை..... நிலவில் ஆம்ஸ்ட்ராங் பேசிய உரையை தங்கத் தமிழில் மாற்றம் செய்திருக்கிறார். உணர்வு பொங்க உணர்ச்சி எங்கும்..... தமிழ் பூசி சிரிப்பதைக் காண்கிறேன்.

அடுத்த பகுதி மருத்துவம் பற்றி.

ஒரு மருத்துவராக இவரின் சமூக பொறுப்பு ஆச்சரியம் சேர்க்கிறது.

இந்த மானுடம்..... இதய நோயில் இருந்து விடுபட.... "ஆஞ்சியோ பிளாஸ்டி" அதாவது..... பை பாஸ் சர்ஜரி என்ற இதய அறுவை சிகிச்சை செய்யாமல் இண்டெர்வென்ஷனல் கார்டியாலஜி என சொல்கிற முறையில் இதய மருத்துவம் கண்டறிந்த "ஆண்ட்ரியஸ் க்ரன்சிக்"க்கு நன்றி செலுத்தும் வகையில் எழுதுகிறார். மானுட நன்றிக்கடன் காண்கிறேன். இவர் போன்ற மாண்புமிகு மனிதர்களாலேதான் இந்த மானுடம் பிழைத்துக் கிடக்கிறது என்பதை புரிய நேர்கையில்.. தலை வணங்குகிறேன்.

இறுதிப் பகுதி..... அவர் படித்த செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி பற்றி.

"தூய்மை தொண்டு தியாகம்" வழி நின்று அந்த கல்லூரி எப்படி தனக்கு இன்னொரு தாயாக மாறியது என்று மனம் நிறைந்து எழுதுகிறார். கல்லூரியில் தான் பெற்ற கல்வி.. அனுபவம்... அங்கே அவருக்கு இருந்த பொறுப்புகள்... என்று அப்போதிருந்தே கவிதைகள் வாயிலாகவே தன்னை தகவமைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

"ஏன் பிறந்தோம்" என்ற கடைசி கவிதை மூலம் தன்னை தானே சுத்திகரிப்புக்கு உள்ளாக்குகிறார். "ஏன் பிறந்தோம்" என்ற சுய கேள்வி மூலமாக ஆன்மீக சிந்தனையை நோக்கி கவிதை நூலை நகர்த்துகிறார். எதன் நோக்கத்தில் அமைந்தது என்று தெரியாத வாழ்வை...வாழ்பவர் தான் புரிந்துணர்ந்து கண்டுணர வேண்டும். அது தான் கவிதைகளின் தூரம் சொல்லும் அருகாமை அற்புதம். மிக நெருக்கமான இணக்கத்தோடு நம்மை நாமே இதய சுத்திகரிப்புக்கு உள்ளாக்கும் மருத்துவர்........ நூலில் மிகச்சிறந்த கவிஞராகவும் உள்ளிருக்கும் உவமைகளில் மிகச் சிறந்த படிப்பாளியாகவும்.. உருவெடுக்கிறார்.

இப்படி ஒரு அற்புதமான பணியை செய்திருக்கும் மருத்துவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு பக்கத்திலும்...எழுத்தேதும் செந்தமிழில் வர நேரிட்டால் அதற்கு பொருள் கூற நடைமுறை சொல்லை புரிதலுக்கு சேர்த்திருப்பது வாசக மனதை வடித்தெடுத்துக் கொண்ட உவகை.

மானுட சேவையே மகத்தானது என்பதை உணர்கையில்....மீண்டும் ஒரு முறை படிக்கத் தோன்றுகிறது. அப்படி படிக்க படிக்க பூக்கும் நிறைவை தமிழ் கொண்டு கொண்டாடலாம். கவிதை என்றும் சொல்லாடலாம்.

நூல் : இதயச் சாரல்
ஆசிரியர் : பேராசிரியர் டாக்டர். ச இளங்கோவன்
விலை : Rs. 200/-
தொடர்புக்கு : 9840521510

- கவிஜி

Pin It