fishermen 600

தான் ஒருவனுக்கே என்றல்லாமல் பிறரோடு பகிர்ந்து வாழும் உயர்ந்த பொதுவுடைமைச் சிந்தனைக்கு வேராக இருந்தது தொல்தமிழர் வாழ்ந்த சங்ககாலம் என்றால் அது மிகையாகது. குறிப்பாக இனக்குழு அடையாளங்களோடு வாழ்ந்த திணைசார் அடித்தட்டு மக்களிடம் பங்கிட்டு உண்ணும் வழக்கமும், கொண்டும் கொடுத்தும் வாழ்ந்த வாழ்வியலும் காணப்பட்டன. இனக்குழுச் சமூகப் பண்புகளுள் பொதுவில் வைத்து உண்ணுதல் என்பது மரபான ஒன்றாகும். இதன் தொடர்ச்சி இன்றும் கிராமப்புறங்களில் காணக்கூடியதாக உள்ளது. சான்றாக, பழங்குங்குடியின மக்கள் வேட்டைக்குக் குழுவாகச் செல்லும் போது, வேட்டையில் கிடைக்கும் இறைச்சியினை ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூறு வைத்து (பங்கிட்டு) சமமாக வழங்குவதைக் காணமுடிகின்றது. இது பண்டைய சீறூர் மன்னர் சமூகத்தினை நினைவுப்படுத்துவதாக உள்ளது. அக்கால இனக்குழுச் சமூகத்தில் தலைவனது முக்கிய செயல்பாடாக ஆகோள் புரியும் வழக்கம் இருந்தது. சீறூர் மன்னன் தம் கிளைகளுடன் பக்கத்துச் சிற்றூர்களுக்குச் சென்று அங்கிருந்து ஆநிரைகளை கவர்ந்து வருவது வாடிக்கை. அன்றைய காலக்கட்டத்தில், இனக் குழுக்கள் தம் பொருளியல் பின்புலத்தினை அளவிடும் கருவியாக பொன்னையும், இதரப் பொருளையும் கருதவில்லை. மாறாகக் கால்நடைகளே பொருளாதார குறியீடாகக் கொள்ளப்பட்டது. அதற்கு மேய்ச்சல் நிலமான வன்புலம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

சங்ககால மக்களின் முதன்மைச் செல்வங்களாக விளங்கியவை கால்நடைகளேயாகும். அத்தகு கால்நடைகளைக் கவர்ந்து வருதல் வீரச் செயல் என அக்காலத்தைய சிற்றூர்களில் வசித்த இனக்குழு ஆடவர் கருதினர். அதற்காகத் தம் குழுவினருடன் அண்டைச் சிற்றூர்களுக்குச் சென்று ஆவினங்களைக் கவர்ந்து, தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். இதனைப் பாதீடு என இலக்கியங்கள் இயம்புகின்றன. ஆவினங்களை மட்டுமல்லாது, உணவுப் பண்டங்களையும் தம் குடிகளோடு பகிர்ந்து உண்டு உலகிற்கே முன்மாதிரிச் சமூகமாகத் தமிழ்ச் சமூகம் திகழ்ந்தது.

“மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன் புலம் தழிஇய பறவு அணி வைப்பும்..” (பதிற்:30)

மெல்லிய தினையினைக் குற்றி எடுக்கப்பட்ட மாவினைத் தம் இனத்தாருக்குப் பகுத்துக் கொடுத்த குறிஞ்சி நிலத்தலைவியின் செயல் திணைசார் குடிகளின் பங்கிட்டு வாழும் சமூக உணர்வினை அறியத் தக்கொரு சான்றாக இப்பாடல் விளங்குகின்றது.

“ஒள்வாள் மலைந்தார்க்கு ஒற்றாய்ந் துரைக்கும்
புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் விள்வாரை
மாறட்ட வென்றி மறவர்தஞ் சீறூரிற்
கூறிட்டார் கொண்ட நிரை” 1

கிடைத்தப் பொருட்களை அதாவது கவர்ந்து வரப்பட ஆவினமானலும் சரி வேட்டைப் பண்டமானலும் சரி அவற்றை ஊர்மன்றத்தில் வைத்துச் சமமாகப் பங்கிட்டுக் குழுவாழ்க்கை மேற்கொண்ட சிற்றூர் சமூகம் அன்றைக்கு இருந்தது. பொதுவாகச் சேர்த்து வைக்கும் வழக்கம் அவர்களிடையே காணப்படவில்லை. அன்றைய தேவைக்கு மட்டும் என எண்ணி வாழும் வாழ்வே இனக்குழு மக்களிடையே காணப்பட்டது.

“கானவன் எய்த முளவு மான் கொழுங்குறை
தேம் கமவ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும்
ஓங்குமலை நாடன்...” (நற்:85)

காட்டில் கானவன் (குடித்தலைவன்) வேட்டையாடிக் கொணர்ந்த முள்ளம் பன்றியின் கொழுத்த தசைப் பகுதியினைக் காட்டுக் கிழங்கோடு சேர்த்து, அழகிய கூந்தலுடைய கொடிச்சி தம் குறிஞ்சிக் குடியினர் பலருக்கும் பகுத்துக் கொடுததாக இப்பாடல் பொருளுணர்த்துகின்றது. குடித்தலைவன் தம் குடிகளுக்குத் தாமே முயன்று தேடிக் கொணர்ந்த பண்டங்களை, குடித்தலைவனின் மனைவி அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தல் இனக்குழுவினரிடையே அக்காலத்தில் காணப்பட்ட வழக்கமாகும்.

“சேறு கிளைத்திட்ட கலுழ்கண் ஊறல்
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை
முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்
உடும்புஇழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறு செய்திடுமார்..” (புறம் 325:4-8)

சேறு நிறைந்த குழியில் தோண்டியதால் கிடைத்த கழங்கிய நீரினை முறையாகப் பகுத்து உண்ணும் வளமற்ற வாழக்கையினை உடைய குடியைச் சார்ந்த ஆண்மக்கள் வேட்டையாடிக் கொணர்ந்த உடும்பினை அறுத்து யாவருக்கும் பகுத்துத் தருவதாகத் தம் சிறிய வீட்டின் முன் சுடுவதால் உண்டான வாசம் அச்சிற்றூரின் தெருக்கள் எங்கும் வீசிற்று எனப் பொருள்படும் இப்பாடல் அக்காலத்தில் பங்கிட்டு உண்ணும் இனக்குழு வாழ்வின் மேன்மையைப் பறைசாற்றுவதாக உள்ளது. “தரநிலைச் சமுதாய அமைப்பில் அனைவருக்கும் சம தகுதியைப் பெற இயாலாத நிலையில் தலைவனே (Chief) உயர்ந்த தகுதியைப் பெற்றிருப்பான்; அவனே மக்கள் அனைவரையும் வழிநடத்தும் பொறுப்பைப் பெற்றவனாவான். பெரும்பாலான சமுதாயங்களில் குழுத்தலைவனே உணவுப் பொருட்களைப் பகிர்ந்து கொடுக்கும் உரிமையைக் கொண்டிருப்பான். விளை பொருட்கள், வேட்டையில் கிடைப்பவை இன்னும் பிற வழிகளில் கிடைப்பவை ஆகியவற்றை அவன் மக்களுக்குப் பகிர்ந்தளிப்பான். உணவுப் பொருட்களைத் தலைவன் மறுபங்கிடு (Redistribution) செய்யும் முறையானது சொத்துடமை அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்தைச் சுட்டிக் காட்டுகின்றது”2 எனும் இக்கருத்தினைப் பார்க்கும் போது சங்ககாலச் சீறூர் மன்னன் வழிநடத்திய சமூகக் குழுக்கள் தரநிலைச் சமூகமாக இருந்ததை அறிய முடிகின்றது.

“கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம் பாராட்டி
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்...” (அகம் 70:1-4)

மீன்வேட்டையில் சிறந்த நெய்தல் நிலத்துச் சிற்றூரில் வாழும் பரதவ மக்கள் வலைவீசிக் கிடைத்த மீன்களைத் தம் சிறிய குடியில் உள்ள அனைவருக்கும் பகுத்துக் கொடுக்கும் நெய்தல் நிலத் தலைவன் குறித்துப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தியின் மூலம் திணைச் சமூக மக்கள் தாம் வாழ்ந்தப் பகுதிகளில் கிடைத்த பொருட்களைத் தம் குடியினரோடு முறையாகப் பங்கிட்டு வாழ்க்கை நடத்தினர் என உணர முடிகிறது. தாம் வேறு தம் குடியினர் வேறு என இக்குழுவினை வழிநடத்திய தலைவன் எண்ணியதில்லை என்பதை மேற்கண்ட சங்க இலக்கியப் பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதே கருத்தினைக் குறிப்பவையாக; அகம்: 10, 12, 89, 97, 237, 280, 311, 393, 167, 284, மற்றும் புறம்: 46, 118, 319, 320, 326, 330, 331, 332, 333, 334 போன்ற பாடல்களும்; சிற்றூர் தலைவர் ஆநிரைகளை கவர்ந்து அவற்றைப் பாதீடு செய்த நிகழ்வுதனை புறம்: 257, 258 நற்:336, 388 பதிற்: 38, 59 கலி: 103-54 போன்ற பாடல்களிலும் காணமுடிகின்றது.

மேற்கோள்:

1. பொ.வெ. சோமசுந்தரனார்(உ.ஆ), புறப்பொருள் வெண்பாமாலை நூற்-13, ப-19
2. பக்தவத்சலபாரதி, பண்பாட்டு மானுடவியல் ப- 553

Pin It