“ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம், பளபளக்கும் வழுக்கைத்தலை, வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி, கனவு காணும் எடுப்பான மூக்கு, படபடவெனப் பேசத்துடிக்கும் மெல்லுதடுகள், கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி, காலர் இல்லாத முழுக்கைச் சட்டை, சட்டைப்பையில் மூக்குக் கண்ணாடி, பவுண்டன் பேனா, கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்திரீயம், இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை, இப்படியான தோற்றத்துடன் சென்னைக் கன்னிமரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே, அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி” - என்று எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்களால் போற்றப்படும் மயிலை சீனி.வேங்கடசாமி 16.12.1900ல் பிறந்தார்.

Mayilai-Srinivenkadasamy_40 தந்தை சீனிவாச நாயக்கர் ஒரு சித்த மருத்துவர். அவரின் இல்லத்தில் ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்களைச் சேகரித்து வாசிக்கும் பண்பு இருந்தது. வேங்கடசாமியின் தமையன் சீனி.கோவிந்தராசனிடம் தமிழ்ப்பயிற்சி பெற்றார். தமிழ்ப்பற்று இவருக்கு முன்னோர்கள் வழி கிடைத்த சீதனம் ஆகும். மயிலை புனித சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பை நிறைவு செய்தார். இருபதாவது வயதில் சென்னைக் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டார். பின்பு ஆசிரியப் பயிற்சி முடித்து நகராட்சித் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

 வேங்கடசாமி சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். நீதி கட்சியால் நடத்தப்பட்ட ‘திராவிடன்’ என்ற நாளேட்டின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணிபுரிந்தார். பின்னாளில் ‘குடியரசு’, ‘ஊழியன்’ போன்ற இதழ்களில் செய்திக்கட்டுரைகள் எழுதினார். ‘வேதம், புராணம், கடவுள், கோயில், விதி, வினை என்று சொல்லிக்கொண்டு நாளுக்கு நாள் முட்டாள்களாகப் போகிற வழக்கத்தைவிட்டு எந்த விசயத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராயும்படி கேட்டுக்கொள்கிறேன்’. (குடியரசு).

 ‘கௌதம புத்தர்’ என்ற நூலை எழுதினார். புத்தர் வரலாறு பள்ளி வரலாற்றுப் பாடத்தில் கற்கும் கதையாக எழுதப்பட்டுள்ளது. ‘புத்தர் ஜாதகக் கதைகள்’ என்ற நூலைத் தமிழில் முதன் முதலாக எழுதினார். இக்கதைகளில் புத்தமதக் கோட்பாடுகள் எளிமையாகக் கூறப்பட்டுள்ளன.

 வேங்கடசாமி 1950களின் இறுதிக் காலங்களில் கி.பி.3ஆம் நூற்றாண்டுத் தொடங்கி கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிப்புரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து மன்னர்களைப் பற்றிய நூல்களை உருவாக்கினார். ‘மகேந்திரவர்மன்’ என்ற நூலை முதன்முதலாக வெளியிட்டார்.

 மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட குகைக் கோயில்கள் பற்றிய விரிவான விவரங்களைத் தந்துள்ளார். மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றின் தன்மைகள் பற்றி எடுத்துரைக்கின்றார். மகேந்திரவர்மன் எழுதிய ‘மத்தவிலாசம்’ நாடகத்தை ஆங்கிலமொழி வாயிலாக மொழி பெயர்த்துள்ளார்.

 ‘வாதாபிகொண்ட நரசிம்மவர்மன்’ என்ற நூலில் நரசிம்மவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட பாறைக் கோயில்கள் குறித்தும், இம்மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்ப வடிவங்கள் பற்றியும் விரிவான தகவல்களைக் கொடுத்துள்ளார். இந்த நூல் தமிழக சிற்ப வரலாற்றை தெரிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன.

 சேரன் செங்குட்டுவன் ஆய்வில் தொடங்கி, சங்க காலம் குறித்த ஆய்வுகளை நிகழ்த்தி உள்ளார். அக்காலத்தில் தமிழகம் சோழநாடு ,பாண்டியநாடு, சேரநாடு, துளுநாடு (கொங்கணநாடு), கொங்குநாடு, தொண்டைநாடு என்று ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகத் தெளிவுப்படுத்துகிறார். இப்பிரிவிற்கான வரைபடத்தையும் இவர் உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு நாடு தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு துளுநாட்டு வரலாறு, கொங்குநாட்டு வரலாறு ஆகிய நூல்கள் எழுதியுள்ளார். தமது அனைத்து ஆய்வுகளிலும் இலங்கை தொடர்பான குறிப்புகளைக் கொடுப்பதை மரபாகக் கொண்டுள்ளார். “தமிழ்நாட்டு வரலாறு” என்ற நூலில் “இலங்கையில் தமிழர்” என்ற ஆய்வை மேற்கொண்டுள்ளார். தமிழக வரலாற்றை கட்டமைத்து ஒழுங்குபடுத்தியதில் வேங்கடசாமி அவர்களுக்குத் தனித்த இடமுண்டு.

 மகாபலிபுரத்துச் சிற்பங்கள் தொடங்கி பல்லவ மன்னர்கள் காலத்து பல்வேறு கட்டடம் மற்றும் சிற்பக்கலை தொடர்பான ஆய்வையும் மேற்கொண்டுள்ளார். இசைக் கூத்து குறித்தும் ஆய்வு செய்துள்ளார். “தமிழ் வளர்த்த அழகுக் கலைகள்” என்ற நூலில் தமிழர்களின் பழங்கால அழகுக் கலைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

 19ஆம் நூற்றாண்டின் தமிழ் சமூக வரலாற்றை அறிவதற்கான தொகுப்பாக “19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்” என்ற நூலை எழுதியுள்ளார்.

 வேங்கடசாமி கன்னடம், மலையாளம், பாலி, சமசுகிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவராக இருந்தார். மலையாளத்திலிருந்து சில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

 ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்த வேங்கடசாமி பல்லவர் காலத்து ஓவியங்கள், பிற்காலச் சோழர்கால ஓவியங்கள், பிற்கால ஓவியங்கள் எனப் பல்வேறு ஓவியங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். குறிப்பாக, கைலாசநாதர் கோவில் ஓவியம், சித்தன்னவாசல் ஓவியம், தஞ்சை பெரிய கோயில் ஓவியம், மதுரை நாயக்கர்கால ஓவியம் ஆகிய ஓவியங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.

 இசை நுணுக்கம், இந்திரகாளியம், குலோத்துங்கன் இசைநூல், பஞ்சமரபுஇசை, சிலப்பதிகாரத்தில் இசை, தமிழ் இராகங்கள், தமிழ் இசைக்கருவிகளின் வகைகள், அவைகள் செயல்படும் முறைமை ஆகியவை குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.

 1962ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் அறக்கட்டளை சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இவற்றை ‘சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்’ என்னும் பெயரில் பின்னர் அப்பல்கலைக் கழகம் நூலாக வெளியிட்டது.

 சென்னைப் பல்கலைக்கழகச் சொர்ணம்மாள் அறக்கட்டளை சொற்பொழிவை 1966ஆம் ஆண்டு வேங்கடசாமி நிகழ்த்தினார். இச்சொற்பொழிவு சென்னைப் பல்கலைக் கழக கீழ் திசையியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

 சங்ககால தமிழரின் வணிகம், சங்ககால விளைபொருட்கள் போன்றவை குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு “பழங்காலத் தமிழர் வாணிகம்” “சங்க காலத்து பிராமிக் கல்வெட்டு எழுத்துக்கள்” என நூல்களாக வெளியிட்டுள்ளார்.

 தமிழக அரசு உருவாக்கிய தமிழக வரலாறு எழுதும் தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவிலும் இடம் பெற்று இருந்தார். “தமிழ்நாட்டு வரலாறு” சங்க காலம், அரசியல் என்ற இரண்டாம் தொகுதியில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மன்னர்களைப் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

 நாட்டின் சரித்திரம் அந்நாட்டை அரசாண்ட அரசர்களுடைய வரலாறு மட்டுமன்று, அந்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே சரித்திரமாகும் என்பதை தனது ஆய்வின் அடிப்படையாகக் கொண்ட வேங்கடசாமி சங்ககால மக்களின் வாழ்க்கை, குறிப்பாக பண்டமாற்று, போக்குவரத்து சாதனங்கள், தமிழ் மற்றும் பிறநாட்டு வணிகர்கள், துறைமுகப் பட்டினங்கள் ஆகியன குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

 மேலும், இவ்வளவு ஆய்வுகளை மேற்கொண்ட ஆராய்ச்சிப் பேரறிஞரான வேங்கடசாமி தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும், தெளிவாகவும், சரியாகவும் இன்னும் எழுதப்படாமல் இருப்பது பெருங்குறையாகும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
  “அகல் வரலாறு அனைத்தும்
  மிஞ்சுதல் இன்றி கற்றோன்
  மேம்பாடு நூலாராய்ச்சி
  கெஞ்சிடும் தனைத் துலக்க
  கேண்மையோடு உயர்வு செய்வான் !”

- என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், வேங்கடசாமியின் ஆய்வைப் புகழ்ந்து பாடுகிறார்.

 திராவிடன், செந்தமிழ்ச்செல்வி, ஊழியன், ஆரம்பாசிரியன், செந்தமிழ், தமிழ்ப்பொழில் ஆராய்ச்சி, திருக்கோயில், நண்பன், கல்வி, லட்சுமி, ஆனந்தபோதினி, தமிழ்நாடு, சௌபாக்கியம், ஈழகேசரி, காலைக்கதிர் ஆகிய இதழ்களில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் 33 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

 நமது நாட்டுச் சிற்பக் கலைச்செல்வங்கள் மண்ணுள் மறைந்து கிடக்கின்றன. பல சிற்பக்கலைச் செல்வங்கள் பழைய கோவில்களைப் புதுப்பிக்கின்ற போது மண்ணில் போட்டு புதைக்கப்படுகின்றன. பல சிற்பக் கலைச்செல்வங்கள் ஐரோப்பியர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. சென்ற இருநூறு ஆண்டுக்கால ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இந்திய சிற்பங்கள் அயல்நாடுகளுக்கு விற்கக் கூடாது என்னும் சட்டம் இல்லை. அதனால் நம் சிற்பக் கலைப்பொருட்கள் அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து போன்ற மேல்நாடுகளுக்கு கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டன. இதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தார். நமது நாட்டுச் சிற்பங்களை, கலைப்பொருட்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

 1980ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தமிழ்ச் செம்மல்கள் பேரவை, ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்னும் பட்டத்தை வழங்கிப் பாராட்டியது.

 2001ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் சார்பாக வேங்கடசாமிக்கு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

 08.05.1981இல் வேங்கடசாமி இவ்வுலக வாழ்வை நீத்தார். வேங்கடசாமி இலக்கியக் கடல், வரலாற்றறிஞர், மொழிநூற்புலவர், சமயநூல் வித்தகர், நுண்கலைவாணர், வரிவடிவ வரலாற்று வல்லுநர், சொல்லாய்வுச் செம்மல், கல்வெட்டு, சாசனம், தொல்லியல் துறைகளில் தனிமுத்திரை பதித்தவர், பன்மொழிப்புலவர், மானிடவியல், சமூகவியல் அறிஞர் எனப் பல்வேறு பரிமாணங்களின் பெட்டகமாய்த் திகழ்ந்தவர்.

 வேங்கடசாமி அவர்களின் வழியில் தமிழகத்தின் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்வதும், தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்வதும், அவரின் உயர்ந்த கருத்துக்களை உள்ளத்தில் ஏந்திச் செயல்படுவதும் அனைத்து தமிழர்களின் கடமையாகும்.

குறிப்பு : 16-12-2010 அன்று மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் 110 வது பிறந்த தினமாகும்.

Pin It