தமிழகத்தில் தேர்தல் நேரம் நெருங்கியாயிற்று.இனி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஓட்டு பிச்சையெடுக்க தெருவுக்கு வரப்போகிறார்கள்.சுவர் எங்கும் கட்சி சுவரொட்டிகள்,ஆடு மாடுகளுக்கு செழிப்பான உணவு தயார்.ஒவ்வொரு செய்தி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கருத்து கணிப்பு,அடிவருடுதல்,பகுத்தாய்வு என மக்களை குழப்ப ஆரம்பிக்க போகிறது.நடிகர்,நடிகைகள் அவருக்கு ஆதரவு,இவருக்கு ஆதரவு என தனது எதிர்காலத்தை கெடுத்துக்கொள்ள போகிறார்கள்.

மாற்றம் வேண்டாமா,வேண்டாமா என கூவி கூவி விற்க ஆட்களும் ஊழல் பணமும் தயாராக இருக்கும்.அந்த கட்சி 500ரூ,இந்த கட்சி 200ரூ என கணக்கு போடுவான் எம் தமிழன்.செய்வீர்களா என மேடையில் முழங்க ஹெலிகாப்டரை பழுதுபார்த்து கொண்டு இந்நேரம் பிரச்சார உரையை ஒருவர் தயார் செய்து கொண்டிருப்பார்.ஆம் இது தமிழக சட்டமன்ற தேர்தல்.

திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சியமைத்து,ஒருவரை ஒருவர் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறையும் புனிதராக்கி கட்சியையும்,குடும்பத்தையும் மகிழ்வித்தனர்.ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களுக்கு நல்லது செய்ய என்பதை மறந்து ஒருவரை ஒருவர் குறை சொல்லி,தானும் நல்லது செய்யாமல் அடுத்தவனையும் நல்லது செய்யவிடாமல் சுய ஆட்சி நடத்தினர்.

ஒரு கட்சி,ஊழலின் ஒட்டுமொத்த பிறப்பிடம்,2ஜி மெகா ஊழல் போல உலக பிரசித்தி பெற்ற ஊழல் கட்சி,மேலும் அரசர்,ஆசைநாயகி,பல இளவரசர்கள் என ஒரு குடும்ப மன்னராட்சி முறையை அமல்படுத்திய கட்சி,மதுரையில் கனிம வளங்களை சுரண்டி பெயர் எடுத்த கட்சி,"ஐயா மலையை காணோம்" என்ற அளவுக்கு மலையை பணமாக்கிய பிரபலமானவர்கள்.இந்த அறிமுகம் அந்த கட்சிக்கு போதும்.பெயரை எல்லாம் சொல்ல விருப்பமில்லை.ஏற்கனவே பல மிரட்டல் மின்னஞ்சல்கள்.அடுத்தது

எம்.ஜி.ஆரின் அரசியல் பிரதிநிதியாக தன்னை முன்னிலை படுத்திக்கொண்டு,நடிகை என்ற அந்தஸ்தில் இருந்து முதல்வரானவர்.கல்யாண கதை கேளு பாடலின் பிரபலம்.போயஸ் கார்டன்,கொடநாடு என ஓய்வு பெற உல்லாச அரண்மனைகள்,பார்ப்பணிய ஆதரவு மற்றும் பெரும்பாலும் தலீத் எதிர் என்ற நிலைப்பாட்டுடைய கட்சி.

ஊழல் செய்வதில் இவர்களும் சளைத்தவர்கள் அல்ல என்றே சொல்ல வேண்டும்.அவர்கள் மாட்டிக்கொள்கின்றனர் செய்திகளில்,இவர்கள் குண்டர்படை உதவியுடன் செய்திகளை மிரட்டி தப்பிவிடுகின்றனர்.பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கு மற்றும் ஒரு புதிய கணித மேதையை பற்றியெல்லாம் நாம் அறிவோம்.பின்பு இந்த அளப்பரிய கணித சாதனையை வெளிப்படுத்திய சவுக்கு இணையதளத்திற்கு எதிராக நடைபெற்ற வழக்குகளையும் அறிவோம்.மேலும் அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க ஆள் குறைகிறது என தெரிந்ததும் மனம்வருந்தி கரசேவைக்கு ஆள் அனுப்ப முற்பட்ட கட்சி.மதச்சார்பின்மை என்ற திராவிட அரசியலின் சாரம்சத்தை மறந்து இந்து அறநிலையத்துறையின் வழியாக பல பிற மத வழிபாட்டுதளங்களை ஆக்கிரமித்து வரும் கட்சி.இலவசமாக தங்க தாலி கொடுத்து அதை திரும்பி வாங்க தெருவுக்கொரு மதுபான கடையையும் திறந்து குடியை ஊக்குவித்த கட்சி.மதுக்கு எதிராக பாட்டு பாடியவர் தேசத்தூரோக வழக்கில் கைது,விமர்சனம் செய்தவர் கைது.என முடிந்தவரை கருத்து சுதந்திரத்துக்கு எதிராக அனைத்தையும் செய்த கட்சி.இந்த அறிமுகம் போதும்.இந்த இருகட்சிகளே மாறிமாறி தமிழகத்தை ஆண்டு வருபவை.நம் மக்களுக்கு வேறு யாரையும் தெரியாது.

மதச்சார்பின்மையை ஆதாரமாக கொண்ட திராவிட கட்சிகள் இன்று மதவாதிகள் ஆதரவை கேட்டு அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலில் களம் காண்பதும்.திராவிட கட்சிகளின் கைகள் மதக்கறை படிய தொடங்கிவிட்டது.சாதிக்கு எதிரான கொள்கை உடைய திராவிட கட்சிகள் இன்று கேவலம் ஓட்டுக்காக சாதிக்கட்சிளின் கால்களை பிடித்தது.இவ்வாறு பெரியார் வழியை பின்பற்றுகிறேன் என சொன்னவர்கள் சாதியை வழக்க தூபம் போட்டனர்.இலங்கையிலே நம் ரத்தச்சொந்தங்கள் சிங்கள இனவெறியர்களால் வேட்டையாடப்பட்டுகொண்டிருந்த போது வெறும் வேடிக்கையையோடு நாடகத்தை தானே நடத்தினர்.தமிழர் நலவாழ்வு எனும் கொள்கையை உடைய திராவிட கட்சிகள் அதிலிருந்து விலகி கட்சி நலவாழ்வு என மாறிப்போனது.ஆனால் திராவிட கட்சிகள் தமிழகத்தில் வேறு எந்த மாற்றுக்கருத்தையும் வேறுண்ற விடவில்லை.

இப்படிப்பட்ட அரசியல் வெற்றிடம் பல காலமாக தமிழகத்தில் இருந்து வருகிறது.ஆனால் நம் மக்கள் முடிந்த வரை மத,சாதிய கட்சிகளை தவிர்த்தே வருகின்றனர்.இது பாராட்டத்தக்கது.ஆனால் அவர்கள் அந்த கட்சிகளை முற்றிலும் வெறுக்கவும் இல்லை.மறைமுகமாக கெளரவ பிரச்சினை காரணமாக சில சமயம் தங்களுக்கே தெரியாமல் சாதி,மத கட்சிகளை ஆதரிக்க வேண்டிய நிலை வரத்தான் செய்கிறது.இப்படி ஒரு நிலையில் இங்கு திராவிட கட்சிகள் தங்கள் கொள்கையை மீறி சாதிய,மதக்கட்சிகளின் உதவியை நாட வேண்டிய நிலைவந்தது.இவ்வாறு சாதி அரசியல் திராவிட அரசியலுடன் கலந்தது.பெரியாரின் கொள்கைகள் இங்குள்ளவர்களால் கொலைசெய்யப்பட்டன.

திராவிடம் மற்றும் சாதி அரசியலே பெரும்பகுதியாக தமிழகத்தை ஆட்சி செய்கின்றன.ஆனாலும் ஒரு மாற்றமும் இல்லை.அவர்கள் நல்லது செய்தால் இவர்கள் எதிர்பதும்,இவர்கள் நல்லதை சொன்னால் அவர்கள் எதிர்ப்பதும் தொடர்கதை ஆகி இங்கு ஒரு மாற்றமும் இல்லை.திடீரென இங்கு சகாயம் முதல்வராக வேண்டும் போன்ற கோரிக்கைகள் எழுகிறது ஆனால் அவர் ஒரு வேளை முதல்வரானாலும் இவர்கள் அவரை செயல்பட விடுவார்களா என்பது சந்தேகமே! இந்த ஒரு நாள் முதல்வர் கதை போல மாறிவிடுமோ என்ற பயம் எழுகிறது.ஈழத்தமிழர் பிரச்சினை,கச்சத்தீவு பிரச்சினை ,மீனவர் பிரச்சினை,கூடங்குளம் அணுஉலை பிரச்சினை,முல்லை பெரியார் அணைக்கட்டு பிரச்சினை,மீத்தேன் எரிவாயு பிரச்சினை,மதுவிலக்கு,சாதிய மோதல்கள்,கருத்து சுதந்திரம்,கிரானைட் சுரங்க முறைகேடு,எதிலும் ஊழல்,எந்த வேலைக்கும் சிபாரிசு என தமிழகத்தில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க இது வரை ஆட்சியமைத்தவர்களாலும் ஆட்சியமைக்க போகிறர்வகளாலும் முடியாது என்பதே உண்மை.

இங்கு மாற்றம் நடக்க வேண்டுமெனில் ஆட்சியாளர்கள் மாற்றம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மக்களும் திருந்த வேண்டும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

ஒரு இந்தியன், சிங்கபூரில் சாலையில் குப்பையை போடுவதில்லை, அவர்கள் விதிமுறைக்கு கட்டுப்படுகிறோம்.ஆனால் இந்திய மண்ணை மிதித்த உடன் நாம் குப்பையை தரையில் கொட்டுகிறோம். சிறு வாய்ப்பு கிடைத்தால் ஏமாற்றுகிறோம். ஏன் அந்நிய நாட்டை மதிக்கும் நாம், நாம் பிறந்த நாட்டை நமக்கு இருக்க இடமளித்து,எல்லையில்லா சுதந்திரம் அளித்த நம் தாய் நாட்டை ஏன் மதிப்பதில்லை.

நாம் நம் மீது நம்பிக்கை வைக்காததும், எதற்காகவும் பிற நாட்டுடன் ஒப்பீடுவதும் காரணமாக உள்ளது. நம் சாதனைகளை நாம் சரியாக பாராட்டாததால் ஏற்பட்ட குற்றம் இது. பணம் வாங்கி கொண்டு வாக்களிப்பதும்,எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன மனப்போக்கும், சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லாததும் என்று மாறுகிறதோ அன்றே சமூக மாற்றம் ஏற்படும்.

எனக்கு பெரும்பாலும் பொதுவுடமை கொள்கையின் மீது ஆழமான காதல் உண்டு.நான் சோவியத் பொருளாதார மாதிரியில் நம்பிக்கை உள்ளவன்.அங்கு உள்ளவாறு தமிழகத்தில் ஒரு பொதுவுடமை கொள்கையுள்ள ஆட்சி வந்தால் , எனக்கு தெரிந்த வரை பொதுவுடமை எந்த சாதியையோ,மதத்தையோ,வர்க்கத்தையோ சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.மூலதனங்களை பயனுள்ளவைகளாக மாற்றப்பயன்படும் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானால் யோசித்து பாருங்கள் அந்த ஆட்சி முறையை.பணக்காரர்கள் கிடையாது.ஏழையும் கிடையாது.பணக்காரனிடம் உள்ளது ஏழைகளிடமும் இருக்கும்.இதுவே சமத்துவம்.சமத்துவம் பிறந்தால் சாதிக்கு அர்த்தம் இருக்காது.ஏழையும் பணக்காரனும் சமமாகி விடுவான்.ஆதிக்க வர்க்கத்தினர் என்ற அளவுகோல் தகர்க்கப்படும்.உழைக்கும் மக்கள் உள்ளவரை பொதுவுடமை கொள்கை காலாவதி ஆகப்போவதில்லை.இன்னும் அந்த பொதுத்துறை நிறுவனங்களை ஒழிக்கும் முயற்சிக்கு எதிரான போராட்டம்,குறுந்தொழில்களில் அந்நிய முதலீட்டை தடுக்கும் போராட்டம் போன்றவை இன்னும் இங்கே அந்த பொதுவுடமை இயக்கங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக நடந்து வருகிறது.

இத்தனை காலமாக தமிழக திராவிட கட்சிகளால் ஆளப்பட்டது இந்த 2016 தேர்தலில் ஒரு வேளை பொதுவுடமைவாதம் வென்றால் ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றம் வரலாம் என்பது என் கருத்து.ஆனால் இறுதியாக நான் பகிர நினைப்பது மக்கள் திருந்த வேண்டும்,மறதியை மறக்கவேண்டும்,மனசாட்சியின் படி நேர்மையாக வாக்களிக்கவேண்டும் இது சாத்தியம் எனில் எத்தகைய மாற்றமும் சாத்தியமே.பிறக்குமா அந்த மாற்றம் ???

Pin It