கன்னியாகுமரி மாவட்டம் ஒரு காலத்தில் திருவிதாங்கூர் மன்னராட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி. பார்ப்பன சனாதனதர்மம் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி கொப்பும் – கிளையும் – விழுதுமாய் ஊன்றி நின்ற பூமி. தந்தை பெரியாரினுடைய வைக்கம் போராட்டத்தால் புத்தெழுச்சியும் – புதுமலர்ச்சியும் கொண்டு எழுந்த ஈழவ மக்கள் – கல்வியில் – தொழிலில் வானோங்கி நின்று வரலாறு படைத்த மண்.

குமரி மாவட்டத்தின் நாகர்கோவில் என்னை பொது வாழ்க்கை கலாச்சாரத்தால் – பண்பாடுகளால் – பழகும் முறையால் – கவர்ந்த பகுதி. போனவர்கள் போக இருக்கும் எஞ்சிய 90 வயதை தாண்டி விட்ட – பழைய தொண்டர்களால் ‘சாய்பு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட முகம்மதப்பா – நல்ல பெருமாள் டெக்ஸ்டைல்ஸ் – என்.ஆர்.சந்திரன் போன்றவர்களெல்லாம் பெரியாரின் இயக்கத்திற்கு கிடைத்த விலை மதிப்பற்ற சொத்துக்கள். என்னால் மறக்க முடியாத கழக வித்துக்கள்.

திராவிடர் கழகம் பொதுவாக நடுத்தர ஏழை மக்களை உறுப்பினராய் கொண்ட இயக்கம் தான். நீதிக்கட்சியிலே இருந்து திராவிடர் கழகத்திற்கு வந்தவர்கள் – நீதிக்கட்சி குடும்பங்களிலிருந்து வந்த உறுப்பினர்களில் சிலர் பெருநிலவுடமையாளர்களும் – பெரும் வணிகர்களும் இருந்திருக்கிறார்களே தவிர மற்றபடி எளியவர்களை உறுப்பினராய் கொண்ட இயக்கம் தான். ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் முற்றிலும் வேறானது. அங்கே விரல் விட்டு எண்ணத் தக்க சிலரை தவிர பெரியாரின் தொண்டர்கள் அனைவருமே கோடீசுவரர்கள். நீண்ட தூரம் பயணம் செய்ய ஒரு கார் – உள்ளூரில் பயணம் செய்த ஒரு கார் – வீட்டுப் பெண்கள் பயன்படுத்த ஒரு கார் – பிள்ளைகள் பள்ளி கல்லூரி செல்ல ஒரு கார் – இப்படி சராசரியாக மூன்று – நான்கு கார்கள் – அரண்மனையை நிகர்த்த மாளிகைகள் – என்று இருந்தவர்கள் நிறைய பேர். அவர்களில் பெரும்பாலோர் ஈழவர்கள் என்றும் – பணிகர்கள் என்றும் – நெல்லை மாவட்டத்தில் இல்லத்து பிள்ளைமார்கள் என்றும் அழைக்கப்பட்ட மன்னராட்சி காலத்தின் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களாய் இருந்தவர்கள். தங்கள் மான வாழ்வுக்குக் காரணம் பெரியார் நடத்திய வைக்கம் போர் என்பதை சென்ற தலைமுறை வரை மறவாதவர்கள்.

நாகர்கோவில் வழக்கறிஞர் கிருஷ்ணபிள்ளை – கோட்டாறு கணேசன் – கோட்டாறு சொர்ணம் – நல்ல பெருமாள் டெக்ஸ்டைல்ஸ் – லட்சுமண பெருமாள் – வடசேரி சந்திரஹாசன் போன்ற கோடீசுவர தொண்டர்கள் நாகர்கோயில் நாகராஜ திடலில் நடைபெறுகிற பொதுக்கூட்டங்களுக்கு வருவார்கள். எவ்வளவு அழைத்தாலும் மேடையில் அமர மாட்டார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் கேரளத்து பாணியில் அமைந்த ராஜரீகமான இருக்கைகளில் அமர்ந்திருக்கிறவர்கள். ஆனால் பொதுக்கூட்டங்களுக்கு வந்தால் தோளில் போட்டிருக்கிற பூத்துவாலையை எடுத்து (டர்க்கி டவல்) தரையில் விரித்து சம்மணமிட்டு அமர்ந்து கொள்வார்கள். கூட்டத்தின் துவக்கத்தில் வந்து உட்காருகிறவர்கள் கூட்டம் முடிந்து நன்றி சொல்லுகிற வரைக்கும் எழ மாட்டார்கள்.

பேசப்படுகிற கருத்துக்கள் – உணர்ச்சி கரமானதாக இருக்கிற போது கைதட்டி தங்கள் உற்சாகத்தை காட்டுவார்கள். மனம் விட்டு சிரிப்பார்கள். இது தலைவர் தந்தை பெரியார் பேசுகிற கூட்டத்தில் மாத்திரம் மட்டும் அல்ல. குமரி மாவட்டத்தின் மனம் கவர்ந்த பேச்சாளராய் இருந்த திருவாரூர் தங்கராசு பேசுகிற கூட்டமானாலும் பிற்காலத்தில் அவர்கள் அன்புக்குரியவனாய் இருந்த நான் (செல்வேந்திரன்) பேசுகிற கூட்டமானாலும் பெரிய மனித தோரணை காட்டாமல் தொண்டரோடு தொண்டராய் அமர்ந்து வரவேற்பார்கள்.

அன்றைக்கு கூட்டத்தில் பேசியது பெரியாராய் இருந்தால் அவர் கட்டிலைச் சுற்றி மேடையில் அரை வட்டமாய் நின்று “அய்யா ரொம்ப பெரிய பெரிய சங்கதி. எங்கள் மனசிலே பதிச்சுக்க வேண்டிய பழைய சங்கதி” என்று வணக்கமாகத் தங்கள் பாராட்டைத் தெரிவிப்பார்கள். பேசியது திருவாரூர் தங்கராசுவாக இருந்தால் “அய்யா அப்படியே எங்களை உலுக்கிட்டியே – இதை எல்லாம் இப்படிச் சொல்ல இப்ப யார் இருக்கா?” என்று இணக்கமாக பாராட்டுவார்கள்.

கடந்த 1960களில் தந்தை பெரியாரால் உடன் அழைத்து செல்லப்பட்டு குமரி தோழர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவன் நான். அவர்களிடம் ‘செல்வேந்திரனை தனியே பேசப் பயன் படுத்துங்கள்” என்று பெரியாரால் பரிந்துரையோடு அறிமுகம் செய்யப்பட்டவன். பிறகு என்னை அவர்கள் தனியே அழைத்து கூட்டங்கள் போட்டார்கள். எதையும் கடுமையாய் சொல்லாமல் மென்மையாக சில சமயங்களில் இரு பொருள்பட பேசி வார்த்தைகளை முடிக்காமல் அவர்களுடைய முடிவுக்கே விட்டு பேச்சை ஓரிரு மணித்துளிகள் நிறுத்துகிற எனது பாணி அவர்களுக்கு மிகப் பிடிக்கும். என்னை மற்றவர்களிடம் “எவ்வளவு கடுமையாக குத்துதான். ஆனா இரத்தம் இல்ல.... வலி இல்ல...” என்று பாராட்டியது என் காதில் இன்னும் ஒலிக்கிறது. பாராட்டுக்களோடு திறனாய்வையும் சேர்த்து என்னை ஊக்கப்படுத்தியவர் தான் இந்த கட்டுரை தலைப்பிற்குரிய வடசேரி சந்திரஹாசன்.

இந்தக் கட்டுரைத் தொகுப்பில் நாம் பார்த்த பலரிலும் இருந்த இவர் முற்றிலும் வேறுபட்டவர். பெரிய கோடீசுவரர். தன் முயற்சியால் உயர்ந்தவர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் தீவிரப் பற்றாளர். பாரதிதாசன் கவிதைகள் அத்தனையையும் கையில் புத்தகம் இல்லாமல் ஒப்பு விப்பார். அந்த ஈடுபாட்டின் காரணமாகவே தன் மகனுக்கு பொன்முடி என்று பெயரிட்டிருந் தார். பொன்முடி மருத்துவக்கல்லூரி மாணவர். பொன்முடி என்பது பாரதிதாசனுடைய ஒரு கதைத் தலைமகனின் பெயர். சந்திரஹாசன் சிறந்த பேச்சாளர். குமரி மாவட்டத்தினுடைய தமிழ் பேச்சாளர்களுக்கு என்று இன்றும் நாம் பார்க்கும் அழுத்தமான வார்த்தை பிரயோகங்களுக்கு உரியவர்.

இவர் ஒரு பெரிய அரிசி ஆலையின் உரிமையாளர். கடைவீதியில் அரிசி மொத்த வாணிபம் செய்து வந்தார். அதற்காக அவரிடம் நிறைய லாரிகள் இருக்கும். இவர் திருவாரூர் தங்கராசுவினுடைய அணுக்கத் தோழர். அவரிடம் பெரும் பற்று வைத்திருந்தவர்.

தமிழகத்திலேயே வேறு எங்கும் காணாத ஒரு அருமையான காட்சியை நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்திரம் பார்த்திருக்கிறேன. மற்ற மாவட்டத்துக்காரர்களுக்கு பொரியார் ஒரு கடவுள் மறுப்புத் தலைவர்! கன்னியாகுமரி மாவட்டத்தில் திராவிடர் கழகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் பலருக்கும் குறிப்பாய் ஈழவ – நாடார் சமூகத்து மக்களுக்கு பெரியாரே கடவுள்! ஈழவ மக்களினுடைய பெருவாழ்வுக்கு காரணமாய் இருந்த நாராயண குருவினுடைய படம் பலருடைய இல்லங்களில் குத்து விளக்கேற்றி வணக்கத்துக்குரிய பூசை அறை போன்ற இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். அந்த படத்திற்கு பக்கத்திலேயே தந்தை பெரியாரினுடைய படமும் மாட்டப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். முதலில் அதிர்ச்சி அடைந்தேன். காரணங்களை அவர்கள் சொன்னதற்கு பிறகு நான் அமைதி அடைந்தேன். மகிழ்ச்சியடைந்தேன்.

இன்றைக்கு பலர் நம்பக் கூட மறுப்பார்கள். ஆனால் இது கல்லு போன்ற உண்மை! நாகர் கோவில் சரவணப் பணிக்கர் தந்தை பெரியாரோடு வைக்கம் போரில் தொண்டராய் ஈடுபட்டவர். அவருடைய வீட்டில் தான் நாராயண குருவின் படத்திற்கு பக்கத்தில் பெரியாரின் படம் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தேன். அது அநேகமாய் 1963 அல்லது 1964-ஆம் ஆண்டாய் இருக்கலாம். சரவண பணிக்கர் திராவிடர் கழகத்தை சேர்ந்த கடவுள் மறுப்பாளர் அல்ல. ஆனால் பெரியார் அன்பர். இதைப் போன்றதொரு காட்சியை நாகர்கோவிலிலே இருந்து 20 மைல்களுக்கு அப்பால் மார்த்தாண்டத்தில் இருந்த பெரு வணிகரான அப்பாவு நாடார் வீட்டிலேயும் பார்த்திருக்கிறேன். சரவணப் பணிக்கரினுடைய மகன் அல்லது பெயரன் தி.மு.க.காரராய் இருந்தார். அப்பாவு நாடாருடைய மகன் அல்லது பெயரன் மதிமுகவில் இருப்பதாகச் சொன்னார்கள்.

சந்திரஹாசன் சிறந்த பேச்சாளர் மாத்திரம் மட்டும் அல்ல. வணிகர்கள் மத்தியிலேயும் – சாமன்யமான மக்கள் மத்தியிலேயும் பெரும் மரியாதைக்குரியவராய் இருந்தார்.

தலைவர் காமராசர் 1967-ல் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார். அப்போது நாகர்கோவிலுக்கு பாராளுமன்ற இடைத்தேர்தல் வந்தது. தலைவர் காமராசர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு அது ஜீவமரணப் போராட்டம். பெரியாரின் திராவிடர் கழகம் 1967 தேர்தலுக்குப் பிறகு தி.மு.க.வோடு இணக்கமாகி திமுகவை ஆதரித்த நேரம். நாகர்கோவிலில் திமுகவின் ஆதரவோடு டாக்டர் மத்தியாஸ் சுதந்திர கட்சி வேட்பாளராய் போட்டியிட்டார். காமராசர் – குமரி மாவட்டத்து மக்களின் போற்றுதலுக்குரிய தலைவன் மார்சல் நேகமணியினுடைய மகன் வில்சன் அப்போலஸ் வீட்டில் தங்கித் தேர்தல் பணிகளைக் கவனித்து வந்தார். தலைவர் பெரியாரும் திராவிடர் கழகமும் தி.மு.க.வின் கூட்டணி வேட்பாளரான மத்தியாசுக்கு எதிராகக் காமராசரை ஆதரித்தார்.

அன்றைய தேர்தல் பிரச்சார கூட்டங்களில் குமரி மாவட்டத்து மக்களின் மனம் கவர்ந்த பேச்சாளரான திராவிடர் கழகத்து திருவாரூர் தங்கராசுவும் – கம்யூனிஸ்டு கட்சியினுடைய பாலதண்டாயுதமும் நிறைய இடங்களில் பரப்புரை செய்தார்கள். போர் முரசங்கள் கொட்டிக் கொண்டிருந்த நேரம். குடுகுடுப்பைகளுக்கு அங்கே வாய்ப்பில்லை.

காங்கிரஸ் கட்சியில் பல முக்கியமானவர்களும் பெரும் கோடீசுவரர்களும் காமராசருக்காகக் களமிறங்கியிருந்தாலும் தேர்தலில் முழு பணப் பொறுப்பும் – பிரச்சார பொறுப்பும் சந்திரஹாசனிடம் தான் இருந்தன. பணப் பொறுப்பு பிறரிடம் இருப்பது காங்கிரஸ்காரர்களுக்குப் பொறுக்குமா? பொறுத்தால் அவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பதற்கு என்ன அடையாளம்? சட்டையை – வேட்டியை கிழித்து கொண்டு கோவணத்தோடு இல்லாமல் இருந்ததே பெரிய சாதனை! முணுமுணுத்தார்கள்! “சந்திரஹாசன் பெரியார் ஆள் பண விஷயத்தில் பொறுப்பாகவும் – நாணயமாகவும் இருப்பார்கள். போய் வேலையைப் பார்” என்று தன்னுடைய பாணியில் காமராசர் பதில் சொன்னார் என்பது அப்போது பெரிய செய்தி!.

பெரியாரின் கடைசிக் காலத்திலேயே சந்திரஹாசனுக்கு தலைமையோடு இருந்த நெருக்கத்தில் இடைவெளி ஏற்பட்டது. குட்டையாய் – சுருண்ட தலைமுடியோடு – கணீரென்ற குரல் - அந்தக் காலத்தில் நரசிம்மபாரதி என்று ஒரு நடிகன் இருப்பார். ஏறக்குறைய அவரை போன்ற கதாநாயகன் தோற்றத்தில் இருந்த சந்திரஹாசன் உடல் நலிவுற்றார். இயக்கத்தோடு அவருக்கு இருந்த தொடர்பு முழுவதுமாய் குறைந்து போனது. அவர் இறந்த செய்தி கூட பெரிதாய் வெளிவரவில்லை. 

(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)

சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை

Pin It