இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தமிழகத்தின் வலுவான அரசியல் சக்தியாகத் திராவிட இயக்கம் வடிவம் பெற்றது. பெரியார் ஈ.வெ.ராமசாமி (1879-1973), இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம் என்பது, அந்த நூற்றாண்டின் இடைக்காலத்தில் பல நெளிவுசுழிவுகளை உள்வாங்கிக் கொண்டு, சனநாயக இயக்கமாக வடிவம் பெற்றது. பொருளாதாரக் காரணங்களை முதன்மைப்படுத்தாது, பண்பாட்டு அடையாளங்கள் சார்ந்த கருத்துநிலைகளை முதன்மைப்படுத்தி, அரசியல் சக்தியாக உருவானது திராவிட இயக்கம். பண்பாட்டுத் தளத்தில் முதன்மையான சக்தியாக, மொழிசார்ந்த அனைத்துச் செயல்பாடுகளையும் முன்னெடுத்த இயக்கமாகத் திராவிட இயக்கத்தை நாம் கருத முடியும். திராவிட அரசியலின் பண்பாட்டுச் சட்டகமாக (Paradigm) மொழி சார்ந்த செயல்பாடுகள் முன்னின்றன. இதன்மூலம் இவ்வியக்கம் தமிழ்மொழி மீது உருவாக்கிய பல்வேறு ஊடாட்டங்களை, அவ்வியக்கத்தின் நூற்றாண்டு நிறைவில், மீள்நினைவுக்குட்படுத்தலாம்.

இந்தியாவில் உருவான அரசியல் பண்பாட்டு இயக்கங்களில், திராவிட இயக்கம் மொழிசார்ந்து உருவாக்கிய பல்வேறு மாற்றங்களைச் சுருக்கமாகப் பின்வரும் வகையில், புரிதலுக்காகத் தொகுத்துக் கொள்வோம்.

- வெகுசன வெளியில் பேச்சு சார்ந்து உருவாகும் தொடர்பாடல் ((Communication), அரசியல் இயக்கங்கள் காலூன்ற அடிப்படையாக அமைகின்றன. வெகுமக்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்குமான உறவு என்பது, அவ்வியக்கம் மக்களிடத்து முன்னெடுக்கும் உரையாடல் மொழியாகப் பேச்சு அமைகிறது. திராவிட இயக்க பேச்சுகள் குறிப்பாக மேடைச் சொற்பொழிவுகள் திராவிட இயக்கச் சனநாயகச் செயல்பாட்டின் சட்டகங்களாக (((Paradigm)) வடிவம் பெற்றன.  இவ்வகையான முறையில், இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் செயல் பட்டதாகக் கருதமுடியவில்லை. திராவிட இயக்கத்தின் இவ்வகையான செயல்பாடு களால் வெகுசனப் பரப்பில் தமிழ்மொழி வளமாகப் பரவிய வரலாறு மிக முக்கிய மானது. அதுவும் காலப்போக்கில் நீர்த்துப் போனதாகவும் கருதப்படுகிறது. திராவிட இயக்கத்தின் மொழி சார்ந்த இச்சட்டகத்தின் பண்புகளைப் புரிந்து கொள்ளும் தேவை நமக்குண்டு.

- நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தொடர்பாடல் துறையில் உருவாக்கிய தாக்கங்கள் பிரமாண்டமானவை. இதில் அச்சு ஊடகம் வழி உருவான அச்சுப் பண்பாட்டு மரபு வளமானது. திராவிட இயக்கம் அச்சு மரபை மிக வளமாகவே பயன்படுத்திய இயக்கம். இதழ்கள் சார்ந்த வாசிப்பு மரபு என்பது நாளிதழ்களில் வளர்ச்சி பெற பிரித்தானியர்க்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்கள் உதவின. சுதேசமித்திரன் (1894), இந்தியா (1905) போன்ற நாளிதழ்கள் இவ்வகையில் அமையும். ஆனால், நாளிதழ் வாசிப்பு மரபு வெகுசன வெளிக்கு வளர்த் தெடுத்த இயக்கமாகத் திராவிட இயக்கத்தைக் கருத முடியும். ஆனந்த விகடன் (1930), கல்கி (1940), குமுதம் (1954) ஆகிய பருவ இதழ்கள் வெகுசன வாசிப்பு மரபை உருவாக்கியவை; ஆனால், திராவிட இயக்கம் நாளிதழ்கள் மூலம் வெகுசன வாசிப்பை உருவாக்கியது. இதைப் போல் பருவ இதழ்களை மிக அதிகமாக நடத்திய இயக்கமும் திராவிட இயக்கமே. அச்சுப் பண்பாடு மரபு சார்ந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குத் திராவிட இயக்கப் பங்களிப்பு வளமானது. இம்மரபும் தொடரவில்லை. இத்தன்மைகள் குறித்த உரையாடலை நிகழ்த்தும் அவசியம் நமக்குண்டு.

- நவீனத் தொழில்நுட்ப மரபில், அச்சு ஊடகத்தைப் போலவும், சில வேளைகளில் அதனை விஞ்சும் வகையில் செயல்பட்டது காட்சி ஊடகமாகும். இவ்வூடகத்தில் பயன் படுத்தப்படும் மொழிக்கூறுகள் என்பவை அம்மொழி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. திராவிட இயக்கம் திரைப்படம், நாடக

அரங்க ஆற்றுகை ஆகிய காட்சி மரபில் தமிழ் மொழியை வளப்படுத்தியது. தமிழ் புதிய மொழியாக வெகுசன வெளியில் பரவுவதற்குத் திராவிட இயக்க காட்சி மற்றும் நிகழ்த்துக் கலை சார்ந்த பங்களிப்புகள் பிரமாண்ட மானவை. இத்தன்மையும் வெவ்வேறு பரிமாணங்களில் இன்றைக்கு மாற்றத்திற் குள்ளாகியுள்ளது.

இருபத்தோறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் வாழ்கிறோம். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூக இயங்குத் தளத்தில் மறுதலிக்க இயலாத இயக்க மாகத் திராவிட இயக்கம் உருவானது. இவ்வியக்கம் தொடர்பான அரசியல் கட்சிகள், அதன் செயல்பாடுகள் ஆகிய பிறவற்றை ஒரு நிலையில் பார்க்க வேண்டும். ஆனால் அவ்வியக்கம் மொழியை அரசியல் பண்பாட்டுச் சட்டகமாக வடிவமைத்த வரலாறு, பிற இந்திய மொழி களில் நிகழாத தமிழில் மட்டும் நிகழ்ந்த வரலாறாகக் கருத முடியும். அதற்கு உந்து சக்தியாக இருந்த அரசியல் - பண்பாட்டுச் செயல்பாடுகளை உருவாக்கியது திராவிட இயக்கம் என்று புரிந்து கொள்வது அவசியம். அதுவும் மொழி எனும் பண்பாட்டு ஊடகம் சார்ந்து திராவிட இயக்கச் சாதனைகள் பற்றிப் பதிவு செய்வது முக்கியம். மேற்குறித்தவாறு பேச்சு மரபு, குறிப்பாக மேடைப் பேச்சு, அச்சு மரபு, குறிப்பாக இதழியல் துறை, காட்சி மரபு, குறிப்பாக திரைப்படம், நாடக நிகழ்த்து மரபுகள் ஆகியவற்றில் தமிழ்மொழி பெற்ற வளங்கள் வேறெந்த மறுமலர்ச்சி இயக்கங்களால் நிகழாது, திராவிட இயக்கத்தால் மட்டும் நிகழ்ந்தது என்பது தமிழ்ச் சமூக வரலாற்று மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

பெரியார்  ஈ.வெ.ராமசாமி, கு.காமராஜ் (1903-1975) ஆகிய மக்கள் தலைவர்கள், தமிழ்ச் சூழலில் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடைவெளி இல்லாத மேடைப் பேச்சைக் கைக்கொண்டனர். தமிழ்மொழி இயல்பாக இரட்டை வழக்கை அடிப்படையாகக் கொண்ட மொழி. ஆனால், பெரியார் இம்மரபை உடைத்துப் பேசுவதைப் போல் எழுதினார். இதனால், கேட்போர் மிக எளிதாக அவரது உரையாடலுக்குள் செல்ல முடிந்தது. மேலும் கேள்வி - பதில் முறையில் அமைந்த பேச்சு பெரியாரின் பேச்சு. வெகுசன அரசியல் பங்கேற்பு, சனநாயகப்படுத்தல் ஆகிய நிகழ்வுகளுக்குப் பெரியாரின் மொழி உதவியது. இவ்வகையில் திராவிட இயக்கத்தின் மூலவரான பெரியார் மொழி அன்றைய மொழிப்புழக்கத்திலிருந்து முற்றிலும் வேறானது.

பெரியாரின் தொண்டர்களாகச் செயல்படத் தொடங்கிய சி.என்.அண்ணாதுரை (1909-1969), Ôஅறிஞர்Õ என்று அழைக்கப்பட்டார். பிரிதொரு சீடரான நெடுஞ்செழியன் (1920-2000) Ôநாவலர்Õ என்று அழைக்கப்பட்டார். இப்போது வாழும் கருணாநிதி (1924-) அவர்கள் Ôகலைஞர்Õ என அழைக்கப்படுகிறார். இத் தலைவர்களின் அடைமொழிக்கும், திராவிட இயக்க மேடைப் பேச்சு மரபுக்கும் தொடர்புண்டு. இம்மூவரின் மேடைப் பேச்சுகள் பலமணி நேரம், கேட்பவர்களுக்குப் பெருவிருந்தாக இருந்தது. இதற்குக் காரணம் பெரியார் மற்றும் காமராசர் கைக்கொண்ட மொழிமுறைமை களிலிருந்து வேறுபட்டு Ôசெந்தமிழ்Õ என்று சொல்லும் வகையில் அமைந்தது. இப்பேச்சுகளில் வரும் அரசியல் செய்திகள் மட்டும் முதன்மையானது அன்று; அதனை மீறி மொழியில் பயன்படுத்தும் சொற்கள், ஏற்ற இறக்க மொழி செயல்பாடுகள், உடல்மொழியும், பேச்சு மொழியும் இணைந்திருக்கும் தன்மைகள் எனப் பல்வேறு சட்டகங்களைத் தமிழ்மொழிக்குக் கொடுத்தார்கள்.

வெகுமக்கள் அம்மொழிக்குள் தேனில் விழுந்த வண்டு களாகிப் போனார்கள். இத்தன்மை வேறு எந்த இயக்கத் திற்கும் இல்லாமல் திராவிட இயக்கத்திற்கு மட்டும் கைவரப் பெற்றது ஏன்? இவ்வியக்கம் சார்ந்த கட்சி அரசியல், அதில் ஏற்பட்ட பல்வேறு முரண்கள், அத் தன்மை சார்ந்த சமூகப் பொருளாதார விளைவுகள் என்பவற்றை ஒரு நிலையிலும், பண்பாட்டுத் தளத்தில் மொழியைக் கொண்டு வினையாற்றிய மரபைத் தனித் தனியாகப் புரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் தமிழ் மொழியின் தொன்மை, சமசுகிருத மொழிக்கு இணையான வரலாறு, இந்தியத் துணைக் கண்டத்தில் வேறுபட்ட பண்பாட்டுக் கதையாடல்கள் கொண்ட இனத்திற்கான மொழி எனும் பல்வேறு கூறுகளைத் திராவிட இயக்கத் தலைவர்களின் பேச்சு மொழி அடிப் படையாகக் கொண்டிருந்ததை அறிய வேண்டும். இத் தன்மைகளில் பெரியாரிலிருந்து அவரது தொண்டர்கள் வேறொரு புதிய மொழியைத் தமிழ்ச் சூழலில் உருவாக்கினார்கள். இத்தன்மை மொழிக்குக் கிடைத்த வளமாகவே கருத வேண்டும்.

சமசுகிருதச் சொற்களை மிகுதியாகக் கொண்ட மணிப்பிரவாளத் தமிழ் கி.பி. பதினோறாம் நூற்றாண்டு முதல் தமிழ்ச் சூழலில் உருவானது. அம்மொழி இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை, மேடைப் பேச்சு மொழியாக இருந்து வந்தது. மேலும் சமூகத்தின் மேல்தட்டைச் சார்ந்தவர்களின் மொழி யாகவும் அது இருந்தது. இதனைத் தலைகீழாக மாற்றியது திராவிட இயக்கம். மணிப்பிரவாளம் மறைந்தது. பேச்சுவழக்கில், நிர்வாகத்தில், நாள்தோறும் நிகழும் நடைமுறைகளில் அம்மொழிமரபு செலுத்திய தாக்கம் ஆழமானது. அதனைத் திராவிட இயக்கம் வேரடி மண்ணோடு சாய்த்தது. ஒருவகைச் சாதி மொழியாக இருந்த மேடைத் தமிழை, மக்களின் செந்தமிழாக இவ்வியக்கம் மடைமாற்றம் செய்த சட்டகம் மிக முக்கியமானது. மக்களுக்கு அந்நியப்பட்ட மொழி மறைந்து, மக்களைக் கவர்ந்து உள்ளிழுக்கப்படும் மேடைத் தமிழ் உருவானது. இத்தன்மை தேச உருவாக்கம், சாதிய மேலாதிக்கம், இனம் சார்ந்த அடையாள மதிப்பீடுகள் ஆகிய பல அரசியல் சட்டக மரபுகளில் முக்கியமானவை. இத்தன்மையைத் திராவிட இயக்கக் கொடையாகவே கருத வேண்டும்.

திராவிட அரசியல் கட்சி சார்ந்த செயல்பாடுகளால் இன்றைக்கு உருப்பெற்றிருக்கும் நிலைமைகளுக்கும், அவர்கள் முன்னெடுத்த அரசியல் - பண்பாட்டுக் கருத்துப் பரப்புரையாக அமைந்த மேடைப் பேச்சு சார்ந்த மொழி வளத்துக்கும் ஏதேனும் தொடர்புண்டா? பண்பாட்டுத் தளத்தில் மொழி, செழுமையாகச் செயல்படுவது என்பது வேறு; பொருளாதாரத் தளத்தில் அரசியல் கட்சி செயல்பாடு வேறு. இதில் இரண்டா வதாகக் கூறியதில் உருவான பல்வேறு முரண்கள், சீரழிவுகள் ஆகிய பிற மொழி சார்ந்த பண்பாட்டு வளர்ச்சி சட்டகத்தையும் பாதித்திருக்கிறது என்று கூற முடியும். திராவிட இயக்கக் கருத்து நிலைகளை ஏற்றுக் கொள்ளாத சில அமைப்புகளும் இன்றையச் சூழலில் அம்மொழியைப் பயன்படுத்துகின்றனர். திராவிட இயக்க மொழிப் பயன்பாட்டிற்கும் அவர்களது கருத்து நிலைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆனால் தமிழ் மொழி, பண்பாடு ஆகியவை சார்ந்த பழமைக் கண் ணோட்டம், வைதீக மரபு ஆகியவற்றைப் பேசுவோரும் திராவிட இயக்க விளைவான மேடைப் பேச்சு வளமரபைக் கையில் எடுப்பது வரலாற்று முரண்.

மேடை மொழியைப் போலவே, திராவிட இயக்கம் நடைமுறைப்படுத்திய எழுத்து மொழி; குறிப்பாக இதழியல் சார்ந்த மொழி; தமிழ் அச்சுப் பண்பாடு; வரலாற்றில் பெரிதும் கவனத்திற்குரியது. திராவிட இயக்கமே மிக அதிகமான பருவ இதழ்களையும், நாளிதழ்களையும், சிறுவெளியீடுகளையும் வெளியிட்ட இயக்கமாகும். ஒவ்வொரு தலைவருக்கும் அவர் நடத்திய இதழே அடையாளமாக அமைந்தது. இவ்வகையில் 1940 -1970 காலகட்டங்களில் திராவிட இயக்கம்

சார்ந்து சுமார் 200 இதழ்கள் வெளிவந்தன என்ற ஒரு கணக்குண்டு. இவ்வளவு இதழ்களை வேறு எந்த இயக்கமும் வெளியிட்டதாக வரலாறு இல்லை. இதன்மூலம் இவ்வியக்கம், தொண்டர்களிடத்தில் உருவாக்கிய வாசிப்பு மரபு மிக வளமானது. நவீன தொழில்நுட்பத்தால் உருவாகும் புதிய நிகழ்வுகளைச் சமூகத்தில் செயல்படும் இயக்கங்கள் தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டும் அவ்வகையில் திராவிட இயக்கம் வளர்த்தெடுத்த அச்சுப் பண்பாட்டு மரபு என்பது வேறு எந்த இந்திய மொழிகளிலும் நிகழாத ஒன்று. எழுத்துப் பயிற்சிக்கும் வாசிப்பு மரபுக்கும் தொடர்புண்டு. தமிழ்ச் சூழலில் வளர்ச்சியடைந்த எழுத்துப் பயிற்சி அல்லது எழுத்தறிவு என்பது வாசிப்பு மரபாக வளம் பெறுகிறது.

இவ்வளத்தில் திராவிட இயக்கத்திற்கு முதன்மையான பங்குண்டு. இதன்மூலம் உருவான உடன்விளைவுகள், சமூக மாற்றங்கள் ஆகியவை குறித்த உரையாடல் ஒரு பக்கம்; ஆனால், நவீன தொழில்நுட்ப வளத்தைக் கைக்கொண்ட மரபு இன்னொரு பக்கம். அந்த வகையில் அச்சுப் பண்பாட்டு மரபில் பெரும் சாதனை நிகழ்த்திய இயக்கமாகத் திராவிட இயக்கத்தை மதிப்பிட முடியும். இதன் தொடர்ச்சி இன்றைக்கு இல்லாமல் போய்விட்டது. திராவிட இயக்க உருவாக்கம், அதற்கான அரசியல் - பண்பாட்டுச் சட்டகச் செயல்பாடுகள் மூலம் உத்வேகம் பெற்றிருந்த மரபு, அவ்வியக்கம் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற பின்பு மேற்குறித்த தேவைகள் இல்லாமல் போயின.  எனவே, திராவிட இயக்கம் தமிழ் மொழியில் முன்னெடுத்த அச்சுப் பண்பாட்டு மரபும் இன்றைக்குத் திசைமாறியுள்ளது. வரலாற்றுத் தேவை, சமூக இயங்குதளம், நவீன தொழில்நுட்ப செயல்பாடுகள் என்ற பல பரிமாணங்களில் திராவிட இயக்கம் நிகழ்த்திய அச்சுப் பண்பாட்டு வரலாற்றை நாம் மதிப்பிட வேண்டும். அதன்மூலம் அச்சுப் பண்பாட்டில், குறிப்பாக இதழியல் துறையில் அவ்வியக்கம் உருவாக்கிய மொழி வளம் விதந்துரைக்கத்தக்கது.

பராசக்தி (1952) திரைப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றின் திருப்புமுனை என, மறைந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் (1958-2014) போன்ற அறிஞர்கள் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டதைக் காணமுடிகிறது. அத் திரைப்படத்தின் மொழி குறிப்பாக வசனம் என்பது இதற்கு முன் இருந்த திரைப்பட மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. காட்சி ஊடகத்தில், காட்சி மரபை, பார்வையாளன் முழுமையாக உள் வாங்குவதற்கு, அதில் பயன்படுத்தப்படும் மொழி முதன்மையாக அமைகிறது. சொற்களின் ஒலி வழியாகவே, காட்சிப் படிமங்களுடன் பார்வையாளன் இணைந்து கொள் கிறான். காட்சியும் கேட்பும் இணையும்போது உருவாகும் விளைவுகள் ஆழமானவை. தமிழ்மொழியில் ஒரு புதிய காட்சி மொழியை வசனங்கள் எனும் கேட்பு மொழி மூலம் உருவாக்கியது பராசக்தி. தமிழ்த் திரைப் பட மரபில் மணிப்பிரவாள சாதி மொழி முதன்மை பெற்றிருந்த தருணத்தில், அம்மொழிக்கு மாற்றாக வளமான செந்தமிழ் மொழியைக் காட்சியாக வழங்கிய திரைப்படம் அது.

அதில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மொழிசார்ந்த வெளிப்பாடுகள் முதன்மை யானவை. இத்திரைப்படம் வெளிவந்த காலத்திற்குப் பின்பு, தமிழ்த் திரைப்பட வசன மரபுகள் மாற்றம் பெற்றன. இது தமிழ் மொழிக்கு காட்சி ஊடக மரபு சார்ந்த திராவிட இயக்கம் வழங்கிய கொடையாக அமைகிறது. 1930-1950க்கு இடைப்பட்ட தமிழ்த் திரைப்பட தமிழ் வசன மரபையும், 1951-1970க்கு இடைப் பட்ட தமிழ்த் திரைப்பட வசன மரபையும் ஆய்வுக்குட் படுத்தும்போது, திராவிட இயக்கம் வழங்கிய காட்சி சார்ந்த தமிழ் மொழி வளத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. 1970களுக்குப் பின் அம்மரபு மடைமாற்றம் பெறுகிறது. இவ்வகையில் ஊடக வரலாற்று மரபுகளில் திராவிட இயக்கம் நிகழ்த்திய பல்வேறு ஊடாட்டங் களைத் தமிழ் மொழி மீது அவ்வியக்கம் உருவாக்கிய வளங்களாகவே கருத முடியும். இவ்வகையான வளம், தொன்மை மரபுடைய மொழிக்கு நவீன மரபும் வளமாக இணைந்த வரலாறாகக் கருதலாம்.

குறிப்பாக, திராவிட இயக்கம் ஆற்றுகை மரபில், நாடக வசனங்கள், நாடகப் பாடல்கள் ஆகிய பல மொழி சார்ந்த செயல்களில் வளம் சேர்ந்த இயக்கமாகும். புராணிய கதைகளும், புராணிய மொழிவெளிப்பாடு களும், மணிப்பிரவாளப் பேச்சுமாக இருந்த தமிழ் நாடக நிகழ்த்து மரபைத் திராவிட இயக்கம் மாற்றியது. இதில் எம்.ஆர்.இராதா (1907-1979), கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் பங்களிப்பு முதன்மையானது. செம்மொழி மரபு சார்ந்த தமிழ் நாடக மரபில், மணிப்பிரவாளமே நாடக மொழியாக இருந்தது. தெலுங்கு, சமசுகிருத பாடல் மரபுகளே இருந்தன. இத்தன்மைகளைத் திராவிட இயக்க நாடக மொழி மாற்றியது. தமிழ் மொழிக்குக் கிடைத்த வளங்களில் இத்தன்மை முதன்மையானது.

நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் திராவிட இயக்க வரலாற்றில் தமிழ்மொழி சார்ந்த அரசியல் - பண்பாட்டுச் சட்டகங்களைத் திராவிட இயக்கம் எவ்வாறு உருவாக்கியது என்ற மீள்பார்வை தேவை யானது. இதில் மேடைமொழி, அச்சுப் பண்பாட்டு மொழி, காட்சி ஊடக மொழி ஆகியவற்றில் வளம் சேர்த்தது திராவிட இயக்கம். இவ்வியக்கம் சார்ந்த ஆட்சிமொழி, பயிற்றுமொழி ஆகியவை குறித்த உரை யாடலையும் மேற்கொள்ள வேண்டும். அரசியல் சார்ந்த பண்பாடு; சனநாயக மயமாக்கம், மொழி சார்ந்த செயல் பாடு என்ற பரிமாணங்களில் திராவிட இயக்கத்தை மதிப்பீடு செய்யும் தேவையுண்டு.

Pin It