“இதோ..... மகாத்மா காந்தியினுடைய காதல் கடிதங்கள்! காங்கிரஸ்காரர்களே இவைகள் உண்மையில்லை என்று மறுக்கின்ற துணிச்சல் உங்களுக்கு உண்டா? குப்தன் நிரூபிக்கிறேன். இது காந்தி சபர்மதி ஆசிரமத்தில் இருந்த அவருடைய பெண் ஊழியர் ஒருவருக்கு எழுதிய கடிதம்”. இப்படிப்பட்ட ஒரு கம்பீரமான குற்றச்சாட்டை கேட்ட மாத்திரத்தில் திருச்சி டவுன் ஹால் மைதானமே முதலில் ஊசி விழுந்தால் சத்தம் கேட்கிற அளவுக்கு நிதப்சமாய் இருக்கும். “வாருங்கள் நிரூபிக்கிறேன்” என்று அறைகூவலை முடிக்கிறபோது கைத்தட்டல் வானுயர்ந்து நிற்கும் திருச்சி மலைக்கோட்டையை உலுக்கும். மலைக்கோட்டையில் உள்ள உச்சிப் பிள்ளையாரே அசைய முடிந்தால் அசந்து போவார்.

இன்றைக்கு மேடைகளிலேயும் – ஊடகங்களிலேயும் திராவிட இயக்கத் தலைவர்களைப் பற்றி வாரி வீசப்படுகின்ற புழுதிப் புயலோடு ஒப்பிடுகிறபோது இது சாதாரணமாகத் தோன்றும். எம்.கே.குப்தாவின் மேற்கண்ட அறைகூவல் விடுக்கப்பட்ட காலம், இப்போது உள்ளதைப் போல் அண்ணல் காந்தியடிகள் அனாதையாய் ‘அம்பேலென’ விடப்பட்டிருகின்ற காலம் அல்ல.

காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரைக்கும் வாழ்ந்த முப்பது கோடிக்கு அதிகமான இந்தியப் பாமரர்களால் காந்தியார் வெறும் மகாத்மாவாக அல்ல கடவுளாகவே கொண்டாடப்பட்ட காலம். பிரிட்டிஷ் வைசிராய்களும் – கவர்னர்களும் – ஏன், சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தின் பிரிட்டிஷ் சக்கரவர்த்தி கூட பக்கிங்காம் அரண்மனையின் நூற்றாண்டு கால சம்பிராயங் களையும் – மரபுகளையும் மீறி அரைகுறை ஆடையோடு காந்தியார் போய் நின்றதை அங்கீகரித் துக் கொண்ட காலம். காரணம் அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு மட்டும் அல்ல. மாற்றுக் கருத்து உள்ளவர்களினுடைய உணர்வுகளுக்கும் மரியாதை கொடுத்த பிரிட்டிஷ்காரர்களினு டைய பெருந்தன்மையே முக்கிய காரணம். கடவுளைக் கூட எதிர்த்து பேசலாம். காந்தியை எதிர்த்துப் பேசினால் அவர் உயிர் தப்ப முடியாது என்ற சூழ்நிலை இருந்த காலம்.

ஆனால், அந்தப் பெரிய ஆதிக்கத்தையும் தன் பிரச்சார வன்மையால் எதிர்கொண்டு நின்றவர்கள் இந்தியாவிலேயே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தான். காந்தியாரின் ஒவ்வொரு முடிவுகளையும் அது தமிழர்களுக்கு விரோதமாக இருந்தால் பெரியாரின் பச்சை அட்டை குடிஅரசு ஏடு மூர்க்கமாக எதிர்த்தது. மேடைகளில் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரகர்கள் அதனை ஆக்ரோஷமாக எதிர்த்துத் தாக்கினார்கள். புதுக்கோட்டை சத்தியமூர்த்தி அய்யர், வேலூர் உபயதுல்லா, கோவை சி.பி.சுப்பையா போன்றவர்களை எல்லாம் இன்றைக்கு தேசிய இயக்கத்தின் பிரச்சார பீரங்கிகள் என்று பெருமையோடு கொண்டாடுகிறார்கள். அவர் களுடைய அக்காலப் பேச்சின் தரம் எப்படி இருக்கும் என்பதை அவர்களுடைய சமகாலத்தவர் களாய் இருந்து 1970, 71, 73 வரை உயிர் வாழ்ந்த நீதிக்கட்சி எழுத்தாளர் நகர தூதன் திருமலைசாமி – அறிஞர் அண்ணாவால் “அத்தான்” என்று அன்போடு அழைக்கப்பட்ட மூத்த தொண்டர் எஸ்.வி.லிங்கம், நாகை.காளியப்பன், புதுக்கோடடை கல்யாண சுந்தரம் போன்றவர்கள் நேரடியாக சொல்ல கேட்கும் அரிய வாய்ப்பு எனக்குக் (செல்வேந்திரன்) கிடைத்திருக்கிறது.

நீதிக்கட்சியின் பெருந்தலைவர் சர்.முகம்மது உஸ்மான் இவருடைய பெயரால் தான் சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான்ரோடு உள்ளது. மரியாதைக்குரிய பெரிய அறிஞர். அவரை மாநில கவர்னராக பிரிட்டிஷ் அரசு ஆக்கிற்றாம். அதைக் கண்டித்துப் பேசிய – பண்பற்ற அநாகரீகமான பேச்சுகளுக்கு பேர் போன சத்தியமூர்த்தி அய்யர் “இந்த முகம்மது உஸ்மானுக்கு என்னுடைய கால் பூட்சின் நூலை அவிழ்ப்பதற்கு கூட யோக்கிதை கிடையாது. இவர் கவர்னரா” என்று மேடையில் பேசினாராம். இதைக் கேள்விப்பட்ட பெரியார் இயக்கத் தோழர்கள் ஆத்திர மடைந்தார்கள். சென்னை கடற்கரையில் அதே இடத்தில் சில நாட்களுக்குப் பின்னர் சத்திய மூர்த்திக்குப் பதிலளிக்கும் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் “சர்.முகம்மது உஸ்மானைப் பற்றி சத்தியமூர்த்தி பேசிய வார்த்தைகளை இன்னும் ஒரு வாரத்திற்குள் சத்திய மூர்த்தி வாபஸ் வாங்க வைப்பேன்” என்று அன்றைய கூட்டத்தில் திருவாளர் எம்.கே.குப்தாவும் – பட்டுக்கோட்டை அழகிரியும் முழங்கினார்கள். சத்தியமூர்த்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த செய்தியை எனக்கு (செல்வேந்திரன்) சொன்னவர் பெரியவர் எஸ்.வி.லிங்கம். என்னுடைய வழக்கப்படி அக்காலத்தைய பிரபல பத்திரிகையாளரும் – எங்கள் உறையூர்க்காரருமான திருமலை சாமியிடத்தில் கேட்டு நான் உறுதி செய்து கொண்டேன்.

மேடைகளில் சங்கரபாஷியம் – மனுஸ்மிருதி – பராசரஸ்மிருதி போன்ற வர்ணாசிரம தர்மத்தை போதிக்கும் சமஸ்கிருத நூல்களிலிருந்து குப்தா மேற்கோள் காட்டுவார். அப்படியே சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லுவார். அவருடைய அற்புதமான சமஸ்கிருத உச்சரிப்பைக் கேட்டுப் பார்ப்பனர்களான எங்கள் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களே ஆச்சரியமாகச் சொல்வார்கள். குப்தா கோமுட்டி செட்டியார் என்று அழைக்கப்படுகின்ற ஆரிய செட்டியார்கள் என்ற சாதியில் பிறந்தவர்கள். அவர்கள் பூணூல் அணிந்து கொள்வார்கள். இன்றைக்கும் தங்களை வைசீய பிராமணர்கள் என்றே அழைத்துக் கொள்வார்கள். பழைய தலைமுறையினர் இன்றும் பரிபூரண சைவம். அவர்களிலே பலர் பிராமணர்களாகி விடுகிற ஆசையில் சமஸ்கிருதம் பயின்றவர் களும் உண்டு. எனவே ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்த வைசீயரான குப்தாவுக்கு சமஸ்கிருதப் பயிற்சி இருந்ததில் ஆச்சரியமில்லை.

அண்ணாவின் அடுக்குமொழி ஒரு பாணி என்றால் குப்தாவினுடையது வேறொரு பாணி. பேச்சே கவிதையாக இருக்கும். “காலாடி பார்ப்பனர்கள் வாழும் வாளாடியில் குப்தன் கோலாடினால் என்னாகும்” என்பன போன்ற பேச்சு வரிகள் அவருடைய சொற்பொழிவுகள் நெடுகிலேயும் இருக்கும். குறைந்தது இரண்டரை மணி நேரம் பேசுவார். குப்தா இரண்டு மனிநேரத்தில் பேச்சை முடித்து விட்டால் கூட்டத்தில் அவருக்கு முன்னால் பேசி காலம் கடத்தியவர்களை கழகத் தோழர்கள் கரித்து கொட்டிக் கொண்டே வருவார்கள்.

திருச்சி நகராட்சி மன்றம் அரங்கில் அவருடைய பேச்சுக்கு பல சமயம் நபர் ஒன்றுக்கு இரண்டனா கட்டணம் (டிக்கட்) வசூலிப்பார்கள். அப்போதும் அரங்கம் நிரம்பி வழியும். பல ஊர்களில் குப்தாவினுடைய கூட்டத்தில் காங்கிரஸ்காரர்களும் பார்ப்பன அடிமைகளான சனாதன வெறியர்களும் கேள்விகள் கேட்டு கலவரம் செய்வார்கள். அவர்களை எதிர்கொள்ள சுயமரியாதை இயக்க – பிற்கால பெரியாரின் திராவிடர் கழகத் தோழர்களும் கொடியே தடியாகவும் – தடியே கொடியாகவும் வருவார்கள்.

குப்தா சொல்கின்ற சமஸ்கிருத ஸ்லோகங்கள் பொய்யானவை என்றும் அப்படி நூல்களில் எதுவும் இல்லை என்றும் பார்ப்பனர்களும் சில சற்சூத்திர அடிமைகளும் புரளிகளைக் கிளப்பி னார்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் திருச்சி நகர பெருவெளியில் (டவுன் ஹால் மைதானம்) கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. கேள்வி கேட்கிறவர்கள் தாராளமாக வரலாம் என்றும் – அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது. குப்தா புத்தகங்களோடு மேடையில் பேச்சைத் துவக்கினார். தமிழர்களை இழிவு செய்யும் சமஸ்கிருத ஸ்லோகப்பகுதியை குப்தா சொன்னதும் இது எந்தப் புத்தகத்தில் எந்தப் பகுதியில் வருகிறது என்று சீட்டு எழுதி கேட்டார்கள்.

குப்தா அந்த நூலின் பக்கத்தை – பகுதியைப் பாட்டின் எண்ணை சொல்ல கேள்வி கேட்க வந்தவர்கள் சரி என்று ஒப்புக் கொண்டார்கள். இப்படி நான்கே கேள்விகளோடு அவர்கள் ஓய்ந்து போனார்கள். ஒவ்வொரு கேள்விக்கு குப்தா பதில் அளித்தபோதும் கரவொலி எழுந்தது. அதை கேள்வி கேட்டவர்கள் சரி என்று ஒப்புக் கொண்டபோது கரவொலி விண்ணைத் தொட்டது. இதே திருச்சி நகர பெருவெளியில் தந்தை பெரியார் பேசுகிற ஒரு கூட்டத்திலும் இது போல் சம்பவங்கள் ஒன்று – இரண்டு நடந்தது உண்டு.

குப்தாவின் உடலெங்கும் வெள்ளைப் புள்ளிகள் இருக்கும். அது அந்தக் காலத்தில் ஒரு நோயாகக் கருதப்பட்டு பார்க்கப்பட்டது. குப்தா அவரே ஒரு சித்த வைத்தியர். சரியாக பக்குவம் செய்யப் படாத சித்த மருந்துகளை சாப்பிட்டு வந்ததால் குப்தாவினுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. வைசீயராகப் பிறந்தாலும் 'சூத்திரர்'களோடு தொடர்பு வைத்துக் கொண்டதற்காக அவருடைய உற்றார் உறவினர்களால் – வேறு பல சுயமரியாதை இயக்கத் தலைவர்களைப் போல அவரும் புறக்கணிக்கப்பட்டார். மாதக் கணக்கில் கழகத் தோழர்களினுடைய வீடுகளே குப்தாவுக்கு அரவணைப்பாகவும் – அடைக்கலமாகவும் இருந்தன. இவருடைய பூர்வீகம் குடந்தை என்று சொல்வார்கள். ஆனால் நெடுங்காலம் அவர் திருச்சி திருவரங்கத்தில் தென்னந்தோப்புகளுக்கு மத்தியிலே இருந்த ஒரு வீட்டிலேயே வாழ்ந்தார். அப்போதெல்லாம் அதை 'சௌக்கண்டி' என்பார்கள். இப்போது அவைகள் பண்ணை வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

பட்டுக்கோட்டை அழகிரியைப் போலவே குப்தாவுக்கும் முழுக்க முழுக்க தலைமையின் கட்டுபாட்டுக்கு அடங்கிப் போகின்ற இயல்பு இல்லாத காரணத்தினால் அவ்வப்போது பெரியா ரின் கோபத்திற்கு ஆளானார். திராவிடர் கழகத்திலிருந்து சற்று விலகி இருந்தார். பெரியாரின் அண்ணன் மகன் திரு.ஈ.வி.கே.சம்பத் அவர்கள் திமுகவிலே இருந்து விலகி தமிழ் தேசீயக்கட்சி என்ற அமைப்பைத் துவக்கினார். குப்தா சில காலம் தமிழ் தேசீயக் கட்சி மேடைகளிலே பேசியதை நானே கேட்டிருக்கிறேன்.

காந்தியாரைப் பற்றியும், வேறு பல தேசியத் தலைவர்களைப் பற்றியும் எம்.கே.குப்தா என்ன பேசுவார் என்று நாம் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். அந்த கால கட்டங் களில் குப்தா பொய் சொல்லுகிறார் என்று சொன்னவர்கள் உண்டு. ‘அந்த மகானைப் பற்றியா? இந்த பாவி இப்படிச் சொல்லுகிறான்' என்று சொன்னவர்களும் உண்டு. பெரியார் இயக்கத்தவன் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரைப் பற்றியும் அவதூறு பேசமாட்டான் என்பதற்கு அண்மையில் சில ஆண்டுகளாக காந்தியாரைப் பற்றி வெளிவந்திருக்கின்ற நூல்கள் குப்தாவின் கூற்றை மெய்ப்பித்திருக்கின்றன. காந்தியடிகளுக்கும் மிக நெருக்கமானவர் என்று சொல்லப்பட்ட எம்.வேத்மேத்தா, டி.எம்.பி.மகாதேவன் ஆகியோர் எழுதிய நூல்கள் சாட்சியம் சொல்கின்றன. காந்தியாரின் மகன் வழிப் பேரனும் இராஜகோபாலாச்சாரியின் மகள் வயிற்று பேரனும் ஆகிய ராஜ்மோகன்காந்தியின் கடித ஆதாரங்களோடு வெளிவந்த நூல் ஒன்று மேலும் வலு சேர்த்தது.

தமிழ்நாட்டின் குக்கிராமங்களிளெல்லாம் கூட சுழன்றடித்த சூறாவளி – எத்தனையோ மூடநம்பிக்கை ஆலமரங்களை வேரோடு கெல்லி எரிந்தது. அவருடைய இறுதிக் காலம் எப்படி முடிந்தது என்பது பற்றி குழப்பமான வேறு வேறு தகவல்கள் இருக்கின்றன.

(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)

சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை

Pin It